”பாலகுமாரன்”
தெளிவான, கனகச்சிதமான குரல்.
அவர் தொலைபேசியை எடுக்கவில்லை, வாய்ஸ்மெயிலுக்கான ஒலிப்பதிவேற்ற பெயர்
ஒலிக்கிறது என்றே நினைத்தேன். மெசேஜ் விடலாமா, கேட்பாரா, யாரென புரியுமா..
“பாலகுமாரன்..சொல்லுங்க யாரு?”
அவர் தான் பேசுகிறார் எனத்தெரிந்து என் பதற்றம் இன்னமும் அதிகமானது. இரு
நண்பர்கள் மூலம் அவரை சந்திக்கலாமா என அனுகியிருந்ததால் சட்டென யாரென
புரிந்து கொண்டார்.
“நாளைக்கு ஒரு 11.30 மணி வாக்குல வாங்களேன்..ரைட்டு”
சரி.
என்ன ஒரு இருபது வருடங்களாக அவரை வாசிக்கிறேனா? கல்லூரி சமயத்தில் சென்னை
நகர்ந்து, வேலை சேர்ந்து, பின் திரைகடலோடி 3 வருடங்களுக்கொரு முறை
சென்னைக்கு அவர் வீட்டிற்கு அடுத்த தெருவுக்கே வந்தாலும், அவரை ஒருபொழுதும்
சந்திக்க முயன்றதில்லை.
பல காரணங்கள். தயக்கங்கள். எழுத்தாளனை
வாசகன் சந்தித்தேயாக வேண்டும் என்பதில்லை. படைப்பின் மூலமாகவே உரையாடல்
நிகழ்ந்துவிடுகிறது என்ற கூற்று. அது சரியே. அடுத்து பலர் என்னிடம் சொன்னது
“நீ வைத்திருக்கும் பிம்பம் நிச்சயம் உடையும்” அதுவும் சரியாக இருக்கலாம்.
“எதையும் எதிர்ப்பார்க்காதே, எதற்கும் தயாராகவே இரு”.
எல்லாவற்றுக்கும் தயாராகவே போனேன். காலையில் க்ரோம்பேட்டை போய்விட்டு
நேராய் அவர் வீட்டுக்கு போவதாய் திட்டம். 7.30க்கு வரவேண்டிய சாரதி
எட்டரைக்கு டாண் என ஆஜர். போன இடத்திலும் தாமதமாக, சனிக்கிழமையன்றும்
டிராஃபிக் நெட்டித்தள்ள, பாலாஜி ஸ்ரீனிவாசன் அவர்களிடமிருந்து அழைப்பு.
அவர் கூட போவதாய் தான் திட்டம்.
“லேட்டாறதான்னா அவரை கூப்பிட்டு
சொல்லிடுங்க. பெட்டர்”. Made sense.
கூப்பிட்டு சொன்னேன். புரிந்துகொண்டு,
பரவாயில்லையெனவும் நிம்மதி. நடுவில் பழம் வாங்க நிறுத்தல், பாலாஜியின்
சிறுகுழந்தைக்கு போக்குக்காட்டி அவரையும் அழைத்துக்கொண்டு பாலகுமாரன்
வீட்டின் முன் நிற்கும்போது நல்ல தாமதம். தப்பு மகா தப்பு என இப்போது
புரிகிறது.
பதட்டத்தோடு பாலாஜியை தொடர்ந்து படியேறுகிறேன். வீட்டு
ஓனர்ஸ் பெயர்ப்பலகையில் பாலகுமாரன். வீட்டுக்குள் நுழைகிறேன். அது அதன்
மனிதர்களோடு, அதன் வாசனையோடு, அதன் இயல்பில் இருக்கிறது. என்னை “யார்
புதுசாய்” என்பது போல் பார்க்கிறது.
எத்தனை கட்டுரைகளில் வந்த
வீடு? எத்தனை படங்களில் பார்த்த வரவேற்பறை? ஒரு திரைப்படத்தையோ, வீடியோ
கேமையோ பார்த்துக்கொண்டிருக்கையில், சடாரென நாமும் அக்காட்சிக்கு நடுவிலேயே
நுழைந்துவிட்டது போல மனதில் தோன்றுகிறது. சுற்றும் முற்றும் ஆச்சர்யமாய்
பார்க்கிறேன். பாலாஜி என் பதட்டத்தை தணிக்கும் வகையில் “உக்காரு உக்காரு”
என கைக்காட்டுகிறார்.
பாலகுமாரன் அவர்கள் என் கண்ணில் படவில்லை.
“தூங்கறார்” என்கிறார் ஷாந்தாம்மா. ஒரு வினாடி திக். என்னுது
கைக்கெட்டியது வாய்க்கெட்டாத ஜாதகம் என்பதால் வாய்ப்பு நழுவிவிடுமோ என
பயம். ”ஆனா வந்தா எழுப்ப சொன்னார்” என உடனே என் பதட்டமறிந்து சொல்கிறார்.
அவரின் செல்ல தாரிணிப்பாப்பா என்னை ஏறிட்டு பார்த்துவிட்டு அவள் அன்னையோடு
வெளியே கிளம்பினாள். ‘உன்னை தெரியும்டி செல்லம் எனக்கு’ என சொல்ல
எத்தனித்து சொல்லவில்லை. சோபாவில் நாசூக்காய் அமர்கிறேன். என் எதிரே அவரின்
பல புகைப்படங்களில் தெரிவது போன்ற அலமாரி அமைப்பு, பலதரப்பட்ட கேடயங்கள்,
புத்தகங்கள். நடுநாயகமாய் யோகி, பல கடவுளர், குடும்பத்தினர் புகைப்படங்கள்.
எனக்கு பின்னால் டைனிங் அறை. ஷாந்தாம்மா ஏதோ செய்கிறார். எதிரில் இரு
படுக்கையறை இருப்பது போன்ற அமைப்பு.
திடீரென அந்த அறைகளில்
ஒன்றிலிருந்து வருகிறார். அவரின் ப்ரத்யேக வெள்ளை வெளேரென்ற வேட்டி,சட்டை.
புகைப்படத்தை விட நேரில் வெகு தேஜஸாய் கம்பீரமாய் இருக்கிறார். அவசரமாய்
எழுகிறேன். வணக்கம் என்பது போல் பணிவுடன் ஏதோ செய்கிறேன். ஒரு
மென்புன்னகையோடு அமரச்சொல்கிறார். பாலாஜி பக்கம் திரும்புகிறார்.
“ரொம்ப நாளாச்சுல்ல நாம பார்த்தே”
“கல்யாணத்தப்ப பார்த்தது”
“எப்படி நடந்துது, உனக்கென்ன பட்டது?”
“நான் எதிர்ப்பார்த்ததுக்கு நீங்க ரொம்பவே ஆக்டிவா இருந்தீங்க”
பாலாஜி சமர்த்தர். இது அவரின் சம்பாஷணைக்கான நேரமல்ல என உணர்ந்து என்னை
அறிமுகம் செய்து வைக்கிறார். நானும் உரையாடலில் நுழைகிறேன். சூர்யா
திருமணத்திற்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்.
“ஒன்னு சொல்லனும். பையன் கல்யாணத்துக்கு அப்புறம் பெரிய ரிலீஃப் தெரியுது உங்கக்கிட்ட. முகத்துல களைப்பு நீங்கி ரிலாக்ஸ்டா..”
என்ன உரிமையில் இதை முதலிலேயே சொன்னேன் என தெரியவில்லை. எனக்கு
அவையஞ்சுதல் உண்டு. அதை அவையடக்கம் என்ற பெயரில் மறைத்துக்கொள்வேன். அதை
நானே வலிந்து முறியடிக்க ஒரு உரையாடலின் ஆரம்பித்திலேயே ஐஸ்ப்ரேக்கிங் போல்
எதையாவது சொல்லிவிடுவேன். இதொரு அலுவலக மீட்டிங் உத்தி.
இப்போது
தான் பாலகுமாரன் மெல்ல என்னை அவதானிக்கிறார். ஆழமாய் பார்க்கிறார்.
வாழ்நாள் முழுதும் எத்தனையோ பேரையோ சந்தித்து, அது தந்த அனுபவத்தில் இவன்
தேறுவானா என என்னை கணக்கிடுவது போல் எனக்கு தோன்றுகிறது.
“ஆமா அது உண்மை தான். பெரிய ரிலீஃப் தான் அது முடிஞ்சது”
பல பேட்டிகளில் கேட்ட, கண்ட அதே கனமான, எதையோ கடித்துக்கொண்டு பேசுவது போன்ற த்வனி.
பாலகுமாரன். என்னோடு. பேசி. கொண்டிருக்கிறார். நம்ப. முடியவில்லை.
ஷாந்தாம்மா பழரசம் கொண்டு வருகிறார். “என் வைஃப்” என அறிமுகப்படுத்தினார்.
மணமக்கள் எங்கு செட்டில் ஆகியிருக்கிறார்கள் என அபத்தமாய் கேட்டேன். “தோ
எதுத்த ஃப்ளாட் தான்” என சிரித்தார்.
“என்னுதுல்லாம் படிச்சிருக்கீங்களா, என்னை யாருன்னு?” அடுத்த அபத்த கேள்வி.
“தெரியும் ’ரசனை’ ஸ்ரீராம், நிறைய பார்த்துருக்கேனே”
எனக்கு பயம் கொஞ்சம் விலகிவிட்டது. உரையாடல் நின்றுவிடக்கூடாதே என சற்றே
தந்திரமும் எட்டிப்பார்த்தது. பாலகுமாரன் சொல்வது போல் இங்கு எல்லாமே
தந்திரம். எழுத்து உட்பட.
அவரின் எழுத்தை படிக்க ஆரம்பித்த நண்பன்
வீட்டு “தலையணை பூக்கள்” வாரமலர் பைண்டிங், தொடர்கதையாக தாயுமானவன்,
பயணிகள் கவனிக்கவும் வாசித்தது, பள்ளியிறுதி லீவில் பழைய புத்தக கடைகளில்
தேடித்தேடி பல்சுவை நாவல் சேகரித்தது, கல்லூரி காலத்தில் லெண்டிங்
லைப்ரரியில் பழியாய் கிடந்தது, எனக்கு மிகவும் பிடித்த ‘கடலோர
குருவிகள்’..எல்லாம் இதே போல் வேகமாய் சொன்னேன்.
“புரியறது..அந்த வயசுல அப்படித்தான் தோணும்”
ஒரே வரியில் அத்தனை பாராட்டுக்களையும் ஏற்று, ‘அதற்கு நான் காரணமல்ல’
என்பதை போலியான அடக்கமின்றி, சரியான சொற்களால் மென்மையாய் மறுதலித்து
முடித்துக்கொண்டார்.
பேச்சை என் பக்கம் திருப்பினார். ”டொராண்ட்டோ
ஊர் எப்படி”, “ஒரு குழந்தையா” “அங்க லைஃப் எப்படி?” “நம்மாட்கள் நிறைய
இருக்காங்களா?” ”இலங்கைத்தமிழர்கள் நிறையல்ல” பலதும் கேட்டறிந்தார். நிறைய
சொன்னேன். இப்போது யோசித்தால் நிறைய உளறியிருக்கிறேன். என்னை பேசவிட்டு
பார்த்தார்.
இந்த முக்கியமான கேள்வியையும் கேட்டுவிட்டு என் முகம் பார்த்தார்.
“இங்க திரும்பி வர்றதுக்கான ஏக்கம் இருக்கா உங்களுக்கு?”
என் பேச்சு சட்டென நின்றது. இதற்கான சரியான பதிலை சொல்லத்தெரியவில்லை.
ஒவ்வொரு நாளும் எனை நானே கேட்கும் கேள்வியல்லவா இது. ”வந்திருவேன் சார்.
பொண்ணை காலேஜ்ல தள்ற வரைக்கும் அங்க இருந்துட்டு இங்க வந்துருவேன் சார்”
என்றேன். மென்மையாக சிரித்தார்.
“ஏய்ய், 2 நாளா போராடி சிக்கை எடுத்துட்டேன் பாருங்க”
அவர் உதவியாளர் பாக்யலட்சுமி அங்கிருப்பதை அப்போது தான் கவனித்தேன். ஒரு
chimeஇன் சிக்குகளை விடுவித்துக்கொண்டிருந்தவர். அவர் வேலை கெடுகிறதோ?
முதலில் தூக்கத்தை கெடுத்தோம்.
“சரி நான் கெளம்பறேன் சார்”
சந்திப்பில் முடிவில் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நோக்கம் இருந்தது.
என்னை அவரருகில் அமரச்செய்தார். புரிந்து பாலாஜி என் ஃபோனை
வாங்கிக்கொண்டார். பாக்யலட்சுமியை திரும்பிப்பார்த்து என்னவோ சொன்னார்.
உள்ளேயிருந்து எனக்கு கொடுக்க புத்தகம் வந்தது.
”சார் உங்க கையெழுத்தும் வேணும் அதுல”
”எதுக்கு ஸ்ரீராம்” என எழுத ஆரம்பித்தார். சற்று நேரம் எடுத்துக்கொண்டது
போல் தோன்றியது. முடித்துவிட்டு பார்த்தால் ஒன்றில் குதிரைப்படம். எனக்கு
மிகவும் பிடித்த குதிரையை எப்படி வரைந்தார் என்ற வியப்பெனக்கு. தர்க்க
அறிவு தாண்டிய விஷயமாய் உணர்ந்த தருணம் அது. இன்னொரு புத்தகத்தில்
கையெழுத்திட்டு ஒரு மலையடிவார கோவில். அதற்கு அர்த்தம் கேட்க தோன்றவில்லை.
வாழ்வில் சில விஷயங்களுக்கு உடனடி விளக்கம் கிடையாது. ஒருநாள்
புரியக்கூடும்.
சந்தோஷமாய் என்னை அவரோடு புகைப்படம் எடுத்துக்கொள்ள
செய்தார். என் குரு அவர் குருவின் புகைப்படத்துக்கு முன் நிற்கவைத்தும்
புகைப்படம் எடுத்தார். நமஸ்கரித்தேன். அவர் கையை பிடிக்கத்தோன்றியது. கையை
குறிப்பாய் நாடியை, உள்ளங்கையை பிடித்து மெல்ல அழுத்தினார். அத்தனை
மிருதுவான பிடி. அதன் உட்கூறு என்ன தெரியாது. ஆனால் சற்றே நெகிழ்ந்திருந்த
என்னை ’ரிலாக்ஸ்’ என ஆசுவாசப்படுத்தியது போல் இருந்தது.
பாலகுமாரனை
நான் ஒரு உயரத்தில் வைத்து கும்பிட ஆசைப்படவில்லை. இதை எழுதும்
தருணத்திலும் “’பாலகுமாரன் அவர்களை’ன்னு போடு, ’குரு’ என எழுது” என மனது
கட்டளையிட்டாலும் பாலகுமாரன் என பெயர் விளிக்கிறேன். Because, he's a
friend more than anything.
புதிய கல்லூரி, தெரியாத ஊர், +2வில்
நினைத்த மார்க் வராததிலிருந்து அப்பாவோடு உரசல்கள், என்னை, என்
தன்னம்பிக்கையை உருக்குலைத்துக் கொண்டிருந்த ஒரு நோய்ம்மை, படிச்சாலும்
மார்க் வரலை எதுக்கு படிக்கனும் என குழம்பிய மனது, வயதுக்கே உரிய
மனவிகாரங்கள், வீட்டின் சில தொடர்நெருக்கடிகள்,சாவுகள், நல்ல பேண்ட் சட்டை
கிடையாது, நல்ல நட்பு கிடையாது என துன்ப வருடங்கள் அப்போது. அப்போது என்
கைப்பிடித்து அழைத்துச்சென்றது பாலகுமாரன்.
பாலகுமாரனுக்கு எல்லாம்
எழுத வரும். காதல், ஒரு பதின்ம வயது இளைஞனை மூழ்கடிக்கும் காமம்,
கம்யூனிசம், சமூகக்கோபம் என எல்லாம் எழுதவரும். அதோடு போயிருக்கலாம்.
கைப்பிடித்து இதான் வாழ்க்கை, உன்னோடு பேசு, செய்வது சரியா என நீயே
கேட்டுணர், உழைத்தால் தான் எதுவும் சாத்தியம், கற்பனையில் மூழ்குவதில்
பயனில்லை. ரௌத்திரம் பழகு, கோபத்தை வைராக்கியமாய் மாற்று என சொல்லவேண்டிய
தேவையில்லை. சொல்லாவிட்டாலும் அவரை கொண்டாடியிருப்பார்கள். எழுத்து அப்படி.
ஆனால் எதற்கோ சொன்னார்.
இன்று நம்மில் பலரும் நகர்ந்துவிட்டோம்.
சுஜாதா, பாலகுமாரனில் தேங்காமல் அடுத்து பலதும் படிக்கிறோம் என்கிறோம்.
விமர்சிக்கிறோம். ஆனால், நம்மில் பலரை வாசிப்பு சிலேட்டில் கைப்பிடித்து
’அ’ போட வைத்தவர். வாழ்வென்னும் பெருங்கடலில் ‘கடலோர குருவிகள்’ முட்டையாய்
அடித்துச்செல்லப்பட்டு கொண்டிருக்கையில், சரக்கென்று ஒரு கைப்பிடித்து
கரையேற்றியவர்.
இந்த நன்றி மட்டுமே நிரந்தரம். அவரிடம் கற்றதனால் ஆய பயன். நான் செய்தது எனக்கான, சுயநலமான நன்றி நவிலல். It's a thanksgiving.
”அவர் இல்லன்னா என்னவா ஆகியிருப்பேன்” தெரியாது.
ஆனால் இப்போதிருக்கும் வாழ்க்கையாய் மட்டும் அது இருந்திருக்காது என்பது மட்டும் தெரியும்.
வெளியே வந்ததும் பாலாஜி “திருப்தியா” என்றார்.
பரம.
++++++++++++