Saturday, April 18, 2015

பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை
ஊர் கிளம்பும் நாள் ஒரு கடைசிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் போல தான். அத்தனை ஓட்டம் இருக்கும்.

குறிப்பாய் ஸ்வீட்ஸ் வாங்குதல் கடைசிநாள் சம்பிரதாயம். அப்போது தான் முடிந்தவரை அதன் லைஃபை நீட்டிக்கலாம். இதயம் நல்லெண்ணெய் போல் பாரியாள் மறக்காமல் வாங்கிவரச் சொன்ன சில இனிப்புகளுக்காக ஸ்ரீமித்தாய், கிருஷ்ணா,அதென்ன ஏ ஸ்கொயர் + பீ ஸ்கொயர் இல்லை A2B என புகுந்து புறப்படல்.

”அது 850 சார் கிலோ”
“இது?”
“960”
“ஓ இது?”
“1100”
கடைசி பதில் நீ வாங்குவியா என்ற பார்வையோடு.

எனக்கு விலை ஒரு கிலோவுக்கு சொல்கிறானா, இல்ல கல்யாண ஆர்டருக்கு சொல்கிறானா என சம்சயம். ஒரு கிலோ ஸ்வீட் எப்போ 1000 ரூபா ஆச்சு? நூறுகிராம் மிக்சர் எப்போது விலை 120 ரூபா ஆச்சு?

எனக்கு இந்திய விலைவாசி சத்தியமாய் புரியவில்லை.

3 வருடங்களுக்கு ஒருமுறை வருகிறேன் தான். பணவீக்கம்,விலைவாசி ஏற்றம் எல்லாம் உண்டு தான். ஆனால் விலைவாசி என்னவோ எக்கச்சக்கத்துக்கு ஏறியது போல் தோன்றுகிறது. அதுவும் குறிப்பாய் சென்னை ஒரு தனி உலகமாய் இயங்குகிறது.

ஒரே ப்ராண்ட் சோப்போ, ஷாம்ப்பூவோ, டிவியோ, காரோ, செல்ஃபோனோ, கோக்ககோலாவோ வெளிநாட்டை விட இந்தியாவில் விலை அதிகம். ஒரு டாலர் = 60 ரூபாய் என இருந்தாலும், ஒரு டாலர் அல்லது 60 ரூபாய்க்கு வாங்கக்கூடிய ஒரு பொருள் சமமாகவும், அல்லது இந்தியாவில் காஸ்ட்லியாக படுகிறது. அமெரிக்காவில் ஓரளவு வளர்ந்த ஒரு நகரத்தில் தோட்டம்,துரவுடன் தனிவீடு 250,000 டாலருக்கு வாங்கிவிடலாம். இங்கு 3BHK 1.5 க்ரோர் என்கிறார்கள்.

குறிப்பாய் சர்வீசஸ் துறை தான் இன்னமும் ஆச்சர்யம். அப்பா சென்னைக்கு ரயில் டிக்கட்டுக்காக முட்டி மோதிக்கொண்டிருந்தார். ரயில் டிக்கட் வாங்குவதை ஸ்ட்ராடஜி போட்டு 3 மாதங்களுக்கு முன்பே ஒரு குழுவாக என் அப்பா,பெரியப்பாக்கள் செய்கிறார்கள். ஏம்ப்பா, ஆம்னி பஸ்ல போகமுடியாதா? ஒருத்தருக்கு ஆயிரம் ரூபா கேப்பாம்ப்பா, அதும் வீக்கெண்டுன்னா இன்னும் மேல. ரயில் தான் சௌரியம்+சீப் என்கிறார். சென்னை - திருச்சி வெறும் டோல் மட்டும் 450 ரூபாய். நான் அப்போது 45 ரூபாய்க்கு சென்னையிலிருந்து போவேன். வாஷிங்டன் ஒபாமா வீட்டருகில் உள்ள மாரியாட்டில் 50$க்கு ஒரு ரூம் எடுக்கமுடியும். சென்னையில் பாடாவதி ஹோட்டலிலும் 3000 ரூபாய்.

வந்து இறங்கிய அன்று வெறுமன 2 இட்லி வடை,காப்பி சாப்பிட்டேன். 100 ரூபாய் ஒரு சாதாரணமான ஹைவே ஹோட்டலில். தங்கை மருமகன் நெய்ரோஸ்ட்டை மீதம் வைத்தால் அப்பாவுக்கு கோபம் வருகிறது. 200 ரூபாப்பா என அங்கலாய்க்கிறார். இதுவே ஒரு நல்ல பஃபே என்றால் ஈச் 1500 + வாட் + சர்வீஸ் டாக்ஸ் என்கிறார்கள். என் ஊரில் 8 டாலருக்கு 40 ஐட்டத்தோடு சாப்பாடு போடுவான். ஒரு டெம்போ ட்ராவலர் வைத்துக்கொண்டு 100-150 கிலோமீட்டர் போய்விட்டு வந்தால் 6000 காலி. காருக்கு டிரைவர் மட்டும் போட்டாலே ஒரு நாளுக்கு கிட்டத்தட்ட 2000 ரூபாய். சலூனில் தாடி ட்ரிம்மிங்க்கு போனால் ‘சார் மசாஜ், ஃபேசியல்? ஒன்லி 2000 சார்’. ஒன்றுமில்லை, மதுரை கோவில் அருகே கட்டண கழிப்பிடத்தில் யூரின் தான்பா என்றால், நீ ஃபாரினுக்கு வேண்ணாலும் போ, 10 ரூபா என்கிறார்கள். ஆத்திரத்தை மட்டும் அடக்கிக்கொண்டேன்.

ஃபாரின் என தெரிந்து கோவில் டொனேஷனுக்கு நீட்டுபவர்களுக்கு குறைந்தது ஆயிரம் போடாவிட்டால் மதிப்பில்லை. சிறப்பு தரிசனம் 150 சார். என்கிட்ட 1000 குடுங்கோ. நானே அழைச்சுட்டு போயி தரிசனம் செஞ்சுவைக்கிறேன். குட்டிப்பசங்களுக்கு 500 ரூபாய் வெச்சுக்கொடுத்தால் எடுபடுவதில்லை. ஆயிரமாவது கொடுத்தால் தான் ‘1000 பக்ஸ்’ என பசங்களிடம் சிரிப்பு எட்டிப்பார்க்கிறது. இதில் சில இடங்களில் தெரியாமல் கம்மியாய் கொடுத்துவிட்டோம் என பிறகு தான் உறைக்கிறது. லைனாய் அத்தை,பெரியம்மாக்களுக்கு புடவை வாங்கிக்கொடுக்கலாம் என்றால் என்ன 1000 ரூபாய்க்கு பார்க்கிற என்கிறார்கள். கூடிய சீக்கிரம் 1000 ரூபாய் 100 ரூபாய் ரேஞ்சில் புழங்கப்படுமென தோன்றுகிறது.

முன்பெல்லாம் இந்தியாவில் பணம் சேர்க்க, சொத்துவாங்க ஃபாரின் போகவேண்டியுள்ளது. இப்போது இந்தியாவில் செலவழிக்கவே ஃபாரின் போகவேண்டுமென நினைக்கிறேன்.

ஆனால் பொதுவாய் அங்கிருப்பவர்கள் இந்த விலைவாசியை கண்டுகொள்ளாது சுபிட்சமாய்த்தான் இருக்கிறார்கள். 3 டாஞ்சூர் ஆர்ட் 1L ஆச்சு என தன் வீட்டு ஹாலை காட்டுகிறார்கள். கிச்சன்லாம் Ikea இம்போர்ட்டட். 10 லாக்ஸ்ஆச்சு என்கிறான் கசின். என் பையன் ஸ்கூல் ஆட்டோவுக்கு மந்த்லி 9000 ஆகிறது என்கிறார்கள். இங்க டொனேஷன் கம்மி தான் என 75000 கட்டுகிறார்கள்.

கிளம்புமுன் ஒன்றுவிட்ட சகோதரன் ‘OMRல ஹீரநந்தானி 70L தான். நான் ஒன்னு போட்டுருக்கேன். நீயும் இன்வெஸ்ட் பண்றியா’ என்றான். என் வெஸ்ட்டை கழட்டி கோவில் வாசல்ல தான் உட்காரனும் என நினைத்துக்கொண்டேன்.

2002-ல் டெலிவரி மேனேஜர் அமெரிக்கா போறியா என்றபோது பல்லிளித்திருக்கப்படாது.

+++++++++++++

3 comments:

 1. // முன்பெல்லாம் இந்தியாவில் பணம் சேர்க்க, சொத்துவாங்க ஃபாரின் போகவேண்டியுள்ளது. இப்போது இந்தியாவில் செலவழிக்கவே ஃபாரின் போகவேண்டுமென நினைக்கிறேன். //

  உண்மையோ உண்மை..

  ReplyDelete
 2. திருச்சி எப்பிடி ? இதே போல்தானா ?

  ReplyDelete
 3. நநல்ல எழுத்து நடையுடன் கோர்வையான பதிவு. ஆனால் இது நம்மூரின் விலைவாசி நிலவரத்தை விடவும், உங்கள் வட்டத்தில் மக்களின் செலவழிக்கும் திறன் கூடி இருப்பதையே அதிகம் காட்டுவதாகத் தோன்றுகிறது. அல்லது அவசரத்தில் இருக்கும் ஆப்ஷன்களை ஆராய்ந்து பார்க்க நேரம் இல்லாததும் காரணமாய் இருக்கலாம். இன்றும் A2B யில் கிலோ 400-500 விலையில் நல்ல இனிப்புகள்/ காரங்கள் உள்ளன. சாதாரண ஹோட்டல்களில் டிபன் 50-60 க்குள் முடிக்கலாம். சரவண பவன் buffet 300-400 க்குள் தான். ஆம்னி பஸ்களில் நிஜமாகவே பெரும்கொள்ளை தான் நடக்கிறது. மக்கள் வேறு வழி இன்றி சகித்துக் கொள்கிறார்கள். 40-50 லட்சத்தில் 3 BHK கிடைக்கத் தான் செய்கிறது.
  இங்கே உள்ள விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணம் ஒரு டாலர் *60 + ரூபாயில் வெளிநாடுகளில் சம்பாதித்து இங்கே கொண்டு வரப் படும் பணமே! இங்கே தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் இந்திய ரூபாயில் (நேர்மையாக!) சம்பாதிப்பவர்கள் ஒரு ரூபாய்க்கு 60+ மடங்கு சம்பாதிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் போட்டி இட முடியாமல் சில பல ஆடம்பரங்களை அனுபவிக்காமலேயே வாழ்ந்து முடிக்கிறார்கள்..
  ஆக 2002 இல் நீங்கள் அமெரிக்க சென்றது சரியான முடிவே.
  நல்ல எழுத்து நடைக்கு வாழ்த்துகளுடன் :))
  கமல்..

  ReplyDelete

பிடித்தால் சொல்லுங்கள்..பிடிக்காட்டியும் சொல்லுங்கள்..;)