Friday, October 25, 2013

உயிர்நீப்பர் மானம் வரின்

எண்பதுகளின் கடைசி. நான் எடடாங்கிளாஸ் என நினைவு. பேண்ட்டுக்கும் டிராயருக்கும் இடையில் அல்லாடிய பருவம். நாளமில்லா/உள்ள சுரப்பிகள் ஓவர்டைம் பார்க்க ஆரம்பித்திருந்த, கொஞ்சம் உயர ஆரம்பிருத்திருந்த நேரம். அக்கால நியூஸ் ரீலில் வரும் “பீகாரில் பஞ்சம்” போல் திடீரென எனக்கு ஒரு டிராயர் பஞ்சம் வந்தது. அதை நிக்கர் என தான் சொல்வது வழக்கம். எண்ணி ரெண்டோ,மூனோ தான் போடுமளவுக்கு சைஸ்,கிழிசல்கள் இல்லாமல் தேறியது.

ரொம்பவும் ஏழ்மையான குடும்பம் இல்லைதான். 3 பிள்ளைகள், பள்ளிச்செலவுகள், தாத்தா பாட்டி மருத்துவச்செலவுகள், வேறு ஊரில் வேலை,அங்கு தங்கல் செலவுகள் என அப்பா சிரமதிசையில் இருந்திருப்பார் என இப்போது புரிகிறது. அப்போதெல்லாம் தீபாவளிக்கு தான் கடைக்கென்று போய் துணி எடுத்ததாய் நினைவு. அப்படி எடுக்கையிலும் அந்த வருடம் சட்டை பிட் எக்ஸ்ட்ராவாய் எடுத்தவன், ட்ராயர் ஒன்றோடு நிறுத்திக்கொண்டதன் பேரிடர்ப்பிழை பட்டென உறைத்தது. ஆகமொத்தம், எனக்கு டிராயர் பஞ்சம்.

எப்பவும் இல்லாது, அந்த கோடைலீவுக்கு அப்பா வசதியான பாண்டிச்சேரி அத்தை வீட்டுக்கு அனுப்புகிறார். உள்ளதில் எங்கள் குடும்பம் தான் கொஞ்சம் ஏப்பைசாப்பை, கிட்டத்தட்ட விக்ரமன் பட சூழல் என வைங்களேன். அத்தைப்பெண்ணுக்கு முன் 2 டவுசரை மாத்திப் போடுவதான்னு என இருத்தலியல் பிரச்சனை. அப்பாவிடம் புதுசு கேட்கவும் பயம். பயம் என்பதைவிட உடையெல்லாம் கேட்கும் வழக்கம் என்றைக்கும் இருந்ததில்லை. வெற்றிவிழா போக அனத்தி அடிக்கு பயந்து பாத்ரூமில் போய் ஒளிந்தது போல் ஆகிவிடக்கூடும். வாங்கித்தந்தால் அணிவது. அப்பாவுடையதோ, பெரியப்பா பையனதோ ஞாபகமில்லை, பழைய உடைகள் கொண்ட பெட்டி ஒன்று அகப்பட்டது. அதில் பெல்பாட்டம் வகையறாக்களை தவிர்த்து தேடியதில் பெல்பாட்டமுக்கும், பேகிக்கும் இடைப்பட்ட டைட்ஃபிட் பேண்ட் ஒன்று,ரெண்டு தேறியது. ஆனால் சைஸ் வேறு.  ”பேண்ட்டை பாதியா வெட்டிக்கிட்டா அது ட்ராயர் தானே” என ஒரு ஐன்ஸ்டைன் தியரி ஸ்ட்ரைக் ஆனது. உடனே என் அம்மாவை பிடுங்கி வீட்ல இருந்த தையல் மிசினிலேயே வெட்டி (எங்கம்மா என்ன ஜேசீஸ் டைலரா, பக்காவா கலர் சாக்பீஸ்ல கோடு கிழிச்சு,வெட்டி தைக்க). சுமாராக மடித்து தையல் போட்டு (வெள்ளை பேண்டுக்கு கருப்பு நூல் வேறு) டிராயர் போல் தேறியது.

இதில் தொழில் ரகசியம் என்னவென்றால், ஆல்டர் செய்தபிறகுதான் புரிந்தது, பேண்ட்டை வெட்டினால் அது ட்ராயர் ஆவதில்லை. ஒருமாதிரி தில்லானா மோகனாம்பாளில் மனோரமா போட்டுக்கொண்டு வரும் ”தில்லான் டோம்பரி டப்பாங்குத்து” ட்ராயர் போல் தொடை டைட்டாக, பின்பக்கம் மட்டும் பெரியதாய்..சரி விடுங்கள், உங்களுக்கு புரியும்.




இப்படியாக தேற்றிய டிராயர்களை ஒரு ரெக்சின் பேகில் அடைத்து பாண்டிக்கு டே எக்ஸ்பிரஸ் பிடித்தாகி விட்டது. போன சில தினங்களில் என் பேண்ட்டை சுருக்கின டிராயரை அத்தைப்பெண் கண்டுபிடிக்கவில்லை என்பதுபோலவே நினைத்துக்கொண்டேன். திடீரென ஒரு நாள் பீச்சுக்கு போகலாம் என கூட்டிக்கொண்டு போனார்கள். இருந்த ஒரு சபாரி செட்டை போட்டுக்கொண்டு போனேன் (அதில் தான் பேண்ட் உண்டு, என் சிறந்த உடை அப்போது). போன இடத்தில் செம ஆட்டம். இருட்டும்வரை ஓடிப்பிடித்து மண்ணில் விளையாடியதாய் நினைவு. மிகவும் இருட்டிவிட, மாமா ஒரு ஆட்டோவை நிறுத்த, நீ டிரைவரோடு உட்காரு என சொல்லப்பட, சைடில் ஒருக்களித்து உட்கார குனிகையில், ஆட்டோ ஹெட்லைட்டில் பேண்ட் ஜிப்புக்கு கீழிருந்து கால் வரை பாலம் பாலமாய் கிழிந்திருப்பது தெரிந்தது. துணியா, தையல் விட்டதா என்ன எழவோ தெரியல்லை.

இப்பவும் அக்கணம் நினைவிருக்கிறது. குப்பென வியர்த்தது. என்ன செய்யவென்றே தெரியாத தருணம். உடை கிழிந்ததை விட, உடை கிழிந்தது தெரியப்போகிறதே என பதறினேன். ஆட்டோவில் ஏறும் களேபரத்தில் யாரும் கவனிக்காத நினைவு. சோதனையாக அதை அப்போது கண்டுகொண்ட ஒரே ஆள் என் அத்தை மகள். நிறுத்தி நிதானமாய் என்னை சிலநொடிகள் பார்த்தாள். ஒன்றும் சொல்லவில்லை, என்னிடமோ, யாரிடமோ. உடல் முழுவதுமாய் கூசினேன். ஆட்டோ பயணம் அரைமணிக்கூர் என நினைக்கிறேன். ஒரு யுகம்போல் சென்றது. காலை அகட்டினால் வேட்டி விலகியது போல் கால் தெரிந்தது. கால்களில் முடி மெல்ல முளைக்க ஆரம்பித்த வயது. காலையும், மனதையும் குறுக்கி வீடு வந்து சேர்ந்தேன். வீடு திறந்த வேகத்தில் உள்ளே ஓடினேன். அம்மா “என்னடா இப்ப வாங்கினதை இப்படி கிழிச்சு வெச்சுருக்க” என பிறகு கேட்டாள்.

வாழ்க்கையில் இந்த மானக்கேடு என்ற விஷயம் மட்டும், எதற்கு எப்போது, யாரால், எதால் வருமென கணிக்கமுடிவதில்லை. பின்னால் யோசிக்கையில் அவை பெரிய அவமானமாக இல்லாது கூட இருக்கலாம். ஆனால், அந்த அந்த நிமிடம் தரும் வலி வாழ்வுக்கானது. ஒரு தழும்பை போல் மனதில் அது தங்கியே விடுகிறது.

அது இன்று 20 வருடங்கள் கடந்து என்னை எழுதவும் வைத்திருக்கிறது.

உணவு,உடை,உறையுள் என்பதில் பசியை முகம் காண்பிக்காது மறைத்துவிடலாம். நம் வீட்டை பலருக்கும் காட்ட வேண்டியதில்லை. ஆனால் உடை வெட்டவெளிச்சம். அது கண்ணுக்கு தெரியாத தராசாய் நம்மை மனிதர்கள் எடைபோட ஒரு பக்கம் இருந்துகொண்டே தான் இருக்கிறது. உங்களை எடைபோட உங்கள் சட்டையின் ஒரு சேஃப்டி பின் போதும். சராசரி மனிதர்களால் மயிர்நீப்பின் வாழா கவரிமானாய் உயிரையெல்லாம் விடமுடிவதில்லை. ஆனால் கண்ணுக்கு தெரியாது உதிரும் ரோமமாய் உயிரும் இச்சிறு அவமானங்களால் கொஞ்சம் உதிர்ந்துதான் போகிறது இல்லையா?

துணி இப்போதும் வியப்பு தான். என் முதல் சம்பளத்தில் வாங்கிய சட்டை இன்னும் என்னிடம். தூக்கிப்போட மனம் வருவதில்லை. பெரியப்பா அவர் அணிந்து, ரிடையராகி காலேஜுக்கென எனக் கொடுத்த சட்டை இன்றும் பத்திரமாய். அதன் பாக்கெட்டில் உள்ள ஆயிரமாயிரம் நினைவுகள் எனக்கு பொக்கிஷம். இப்போதும் காசை விசிறி வாங்கமுடிவதில்லை. விலைச்சீட்டை திருப்பிப்பார்க்கிறேன். தள்ளுபடி தேடுகிறேன். கடையில் நுழைந்தால் க்ளியரன்ஸ் இடத்திற்கு முதலில் போகிறேன். தொட்டில் பழக்கம் போல் எனக்கு டிராயர் பழக்கம் போலும்.

இப்போது என்னிடம் பெட்டி முழுக்க புதுத்துணி. என்னவோ ஒரு பழிவாங்கல் போல் வாங்கி வைத்திருக்கிறேன்.

புதுத்துணி உடுத்த, ஒரு நல்ல டிராயர் உடுத்த பேராசைப்பட்ட அந்த சிறுவனை தான் இழந்திருக்கிறேன்.

நிற்க, இன்றளவும் என் அத்தைப்பெண்ணிடம் இயல்பாய் பேசமுடிவதில்லை.

87 comments:

  1. Took me back to my childhood:) things that change us, things we carryfrom those days. Awesome writing, as usual. Congrats.

    ReplyDelete
  2. உங்க லெவலுக்கு கொஞ்சம் 'சுருக்கமான' பதிவோ? பாண்ட்டை வெட்டி டிராயராக்கி போடறது, பெரியப்பா சட்டையை (என் கேஸ்ல மாமா சட்டை) காலேஜுக்கு போட்டுட்டு போறது... எல்லாம் நம்ம செட்டுதானா நீங்களும். :-)

    நல்லா இருக்கு. அடிச்சு தூள் பண்ணுங்க.

    ReplyDelete
    Replies
    1. நன்றி தலைவரே..ஆமா கொஞ்சம் அவசர அடி :) நீங்களுமா பாண்ட்டை வெட்டி டிராயர் ஆக்கினீங்க..உலகத்துலயே அதை செஞ்சது நான் தான்னு நினைச்சேன் :))

      Delete
    2. இதெல்லாமே எனக்கும் நடந்துச்சு நட்ஸ்... ஆனா ஒரே ஒரு சின்ன வருத்தம்... சொல்லிக்கிறதுக்கு கூட ஒரு அத்த பொண்ணு இல்ல... ;)

      Delete
  3. எனக்கு வாசிக்கிர பழக்கம் ரொம்ப குறைவு இப்போதான் கொஞ்ச நாட்களா பழகுறேன், என்னமோ தெரியலணா உங்க எழுத்து ரொம்ப புடிச்சிருக்கு...!

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி..நீங்க ட்விட்டரா?

      Delete
  4. Facebook 80's குழுவுல சேந்தாச்சா? இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. அதுக்காக எழுதித்தான் பதிவாச்சு..

      Delete
  5. ////துணி இப்போதும் வியப்பு தான். என் முதல் சம்பளத்தில் வாங்கிய சட்டை இன்னும் என்னிடம். தூக்கிப்போட மனம் வருவதில்லை////
    ////உங்களை எடைபோட உங்கள் சட்டையின் ஒரு சேஃப்டி பின் போதும் மனிதர்களுக்கு.////

    சூப்பர் அண்ணாச்சி..... எந்த அலங்காரமும் அனாவசிய வார்த்தைகளும் இல்லாம அவமானமா இல்லையானு யோசிக்க விடாம ஆமா அப்டிதான் இருந்திருக்கும்னு நம்ப வச்சு இருக்கீங்க சூப்பர் சூப்பர் :))

    ReplyDelete
    Replies
    1. நன்றிய்யா இந்திரா..;))

      Delete
  6. Your writing style is like 33% Sujatha, 33% jeyakanthan and 33% rajanleaks. In my life, I admire these three writers.

    ReplyDelete
  7. மறக்க முடியுமா பதிவு... ஒரு நிகழ்ச்சி எவ்வளவு தூரம் ஒங்க மனசுல ஆழமாப் பதிஞ்சிருக்கு பாருங்க.

    பசியை மறைக்கலாம்.. ஆனா உடைய... நியாயமான உண்மை. நீங்க நிக்கர்னு சொல்றீங்க. தூத்துக்குடில கால்சட்டைன்னு சொல்வோம். அதுவும்.. அந்த எடத்துல கிழிஞ்சு வைக்கும். அதை மறைக்கப் பட்ட பாடுகள் எல்லாம் பெருங்கதைகள்.

    மதுரைல ஒரு வாட்டி... சகோதரியோட கூடப் படிக்கும் தோழி வீட்டில் பிறந்தநாள். எனக்கும் அழைப்பு. அவங்க கொஞ்சம் பெரிய வீடு. தட்டுல எதையோ போட்டுக் கொடுத்தாங்க. சின்னப் பையன் தானே.. கை தவறி கீழ போட்டுட்டேன். சீவலோ முறுக்கோ.. ஏதோ ஒன்னு.. தரையில் சிந்திருச்சு.

    அந்தப் பொண்ணோட அம்மா அதை எடுத்து தட்டுல போட்டுக் கொடுத்தாங்க. அத்தோட சும்மாயிருந்திருக்கலாம் அவங்க. “எங்க வீட்டுத் தரையெல்லாம் சுத்தமாத்தான் இருக்கும்”னு சொல்லிட்டுப் போனாங்க. ஒரு அசிங்க அவமானம் மாதிரி அது மனசுக்குள்ளயே இன்னும் இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. நினைச்சுப் பார்க்கமுடியாததெல்லாம் நடந்துருதுல்ல வாழ்க்கைல :) எனக்கிந்த கமெண்ட் ரொம்ப பிடிச்சிருக்கு :)

      Delete
  8. அண்ணே, ஜென்டெக்ஸ் டைலர் நேத்திக்கு குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கிட்டாரு :(

    ReplyDelete
    Replies
    1. ஓ..மேல்விவரங்கள் இருக்குமா?

      Delete
  9. இளம் பிராயத்தில் (impressionable age) சில அவமானங்களை சந்திக்காமல் யாரும் வளர்ந்திருக்க முடியாது. அவற்றின் சில மனதின் ஆழத்தில் பதிந்து நாம் பின்பு உலகத்தைப் பார்க்கும் பார்வையையே மாற்றும் வல்லமையை உடையது. சில நிகழ்ச்சிகள் பொது அரங்கில் பகிரக் கூட முடியாத அவமான சுவடுகளாக இருக்கும். எப்பவும் போல நல்ல பதிவு.

    amas32

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமா..அவமானங்களை கடந்துவிடுகிறோம். கரைக்க முடிவதில்லை.

      Delete
  10. /அந்த அந்த நிமிடம் தரும் வலி வாழ்வுக்கானது./

    /பசியை முகம் காண்பிக்காது மறைத்துவிடலாம். நம் வீட்டை பலருக்கும் காட்ட வேண்டியதில்லை. ஆனால் உடை வெட்டவெளிச்சம். அது கண்ணுக்கு தெரியாத தராசாய் நம்மை மனிதர்கள் எடைபோட ஒரு பக்கம் இருந்துகொண்டே தான் இருக்கிறது. உங்களை எடைபோட உங்கள் சட்டையின் ஒரு சேஃப்டி பின் போதும் மனிதர்களுக்கு./

    /புதுத்துணி உடுத்த, ஒரு நல்ல டிராயர் உடுத்த பேராசைப்பட்ட அந்த சிறுவனை தான் இழந்திருக்கிறேன்./

    Thumbs up

    ReplyDelete
  11. // பின்னால் யோசிக்கையில் அவை பெரிய அவமானமாக இல்லாது கூட இருக்கலாம். ஆனால், அந்த அந்த நிமிடம் தரும் வலி வாழ்வுக்கானது. ஒரு தழும்பை போல் மனதில் அது தங்கியே விடுகிறது.//

    அருமையாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி பிரேம்குமார்..:)

      Delete

  12. /அந்த நிமிடம் தரும் வலி வாழ்வுக்கானது/ அருமை.

    ReplyDelete
  13. நானும் அண்ணன்களும் வேறு வேறு கலரில் ட்ரெஸ் தச்சுக்கலாமேன்னு நினைக்கிறதே ஆடம்பரமாகத்தான் இருந்த காலம் அது.எல்லாருக்கும் ஒரே துணியில் உடைகள்(மலிவு என்பதால்).நமக்கும் வருசத்துக்கு ஒரே உடை என்பதால் சந்தோஷமாகவும் வாங்கிய காலம்தான். கடைசி பையன் என்பதால் பழைய உடை,பழைய பாடபுத்தகம் எல்லாம் பயன்படுத்தவேண்டிய காலக்கொடுமையும் வரும். நான் புது லுங்கி கட்டின அனுபவம் அப்படியே நினைவிருக்கிறது.என் அக்காவின் கணவர் வாங்கிக் கொடுத்ததே இரண்டாக வாங்கித்தந்ததில் பெருமகிழ்ச்சி.இன்னும் அவரை அதுக்காகவே அதிக மரியாதை தருகிறேனோ என்று தோணுது(!) சின்ன பையனுக்கு லுங்கி வாங்கிதந்து பெரிய மனுசனாக்கினவரு ஆச்சே... நல்லா எழுதி இருக்கீங்க

    ReplyDelete
    Replies
    1. அக்கா கணவர் மரியாதை நல்ல பாய்ண்ட். அவங்க தெரியாம நமக்கு சிலர் ஏதோ செஞ்சிருப்பாங்க. அதை மறக்கமுடியாது.

      Delete
  14. RT: உங்களை எடை போட உங்கள் சட்டையின் ஒரு சேப்டிபின் போதும் மனிதர்களுக்கு !

    அருமையான வரிகள் ...

    ReplyDelete
    Replies
    1. நன்றி..அடுத்தமுறை பெயரையும் சொல்லலாமே..

      Delete
  15. அட்டகாசம்..! எந்த நாடகத்தன்மையும் இல்லாமல் நேர்த்தியான எழுத்து நடை.பால்யத்துக்கே அழைத்துப் போன உணர்வு..!
    வாழ்த்துக்கள் பாஸ்.

    ReplyDelete
  16. அருமையான பதிவு // 80கள் முதல் 95 வரையில் வளர்ந்த பிள்ளைகள் நிச்சயம் இது போன்ற ஒரு வலியை நிச்சயம் அனுபவித்திருப்பார்கள் //

    ReplyDelete
    Replies
    1. நன்றி..அடுத்த முறை பெயரை சொல்லலாமே :)

      Delete
  17. சட்டை கிழிஞ்சிருந்தா தச்சி முடிச்சிடலாம் நிக்கர் கிழிஞ்சிருச்சே எங்க முறையிடலாம்!...

    ReplyDelete
    Replies
    1. டமுக்கு டப்பான் டமுக்கு டப்பான் ;))

      Delete
  18. செம... நல்லா எழுதியிருக்கீங்க.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாலகுமார் :)

      Delete
  19. சூப்பரா எழுதியிருக்கீங்க அண்ணே.... இதேபோல் மானக்கேடு எனக்கும் ஏற்பட்டிருக்கு....

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்கூல் பையன் :))

      Delete
  20. மிக இயல்பானதொரு நிகழ்வை வெகு அழகாக பதிவு செய்துள்ளீர்கள்.
    வாழ்த்துகள்....கீப் கோயிங் :)

    ReplyDelete
  21. அருமை. இந்த மாதிரி பதிவு எழுத ஒரு ஆள் இனி பிறக்கனும் , நிறைய கத்துக்கனும் உங்க கிட்டே இருந்து , இனி அடிக்கடி வாசிப்பேன்

    ReplyDelete
    Replies
    1. அய்யோ சிபி சார்..3000 பதிவு கண்ட அசுர உழைப்பாளிக்கிட்டருந்து பெரிய வார்த்தை..தகுதிதான் இல்ல எனக்கு :))

      Delete
  22. அருமையான அனுபவ பகிரல்... வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. நன்றி கதாசிரியர்.

      Delete
  23. "புதுத்துணி உடுத்த, ஒரு நல்ல டிராயர் உடுத்த பேராசைப்பட்ட அந்த சிறுவனை தான் இழந்திருக்கிறேன்" class

    ReplyDelete
    Replies
    1. நன்றி..அடுத்தவரை பெயரையும் சொல்லலாமே :)

      Delete
  24. //என்னவோ ஒரு பழிவாங்கல் போல் வாங்கி வைத்திருக்கிறேன்.// இந்த வரி தான் பதிவுக்கு முழு அர்த்தத்தையும் கொடுத்தது. வழக்கம்போல அருமையான எழுத்துநடை. வாழ்த்துக்கள் நட்டு அண்ணா :))

    - Manoj @vandavaalam

    ReplyDelete
  25. அருமை , நடுத்தர குடும்பத்தில் பிறந்த அனைவருக்கும் இந்த அனுபவம் நிச்சயம் இருந்திருக்கும் , பழைய நினைவுகளை அசைப்போட வைத்த ஒரு பதிவு . வாழ்த்துகள் K7CLASSIC

    ReplyDelete
    Replies
    1. நன்றி கேசவன்..எப்படி இருக்கீங்க :))

      Delete
  26. அருமை , நடுத்தர குடும்பத்தில் பிறந்த அனைவருக்கும் இந்த அனுபவம் நிச்சயம் இருந்திருக்கும் , பழைய நினைவுகளை அசைப்போட வைத்த ஒரு பதிவு . வாழ்த்துகள் K7CLASSIC

    ReplyDelete
  27. அரிதாக இது போன்ற ”உள்ளத்திலிருந்து நேர்த்தியாக வெளிவரும்” எழுத்துக்கள் வாசிக்கிக் கிடைக்கிறது. நாஸ்டால்ஜியா எப்போதுமே ஒரு சுகமான (சற்றே வலித்தாலும்) உணர்வு...

    நானும் அந்தக்காலத்தில் சில இவ்வகை இடுகைகளை எழுதியிருக்கிறேன், சமயம் கிடைக்கும்போது பாருங்கள்...

    http://balaji_ammu.blogspot.in/search/label/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%28Nostalgia%29

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாலா சார்..உங்கள் பதிவுகள் படிச்சுத்தான் எழுத ஆரம்பிச்சது :) நிச்சயமா படிக்கிறேன் :)

      Delete
  28. ரசனையான பதிவு... தொடர்ந்து பதிவேற்றுங்கள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி சண்டைக்கோழி ;)

      Delete
  29. இன்னும் கொஞ்ச நாட்களுக்கு கிழிஞ்சுபோன டிரஸ்ஸ பாக்கும்போதெல்லாம் பாத்திரக்கடைகாரன் ஞாபகம் வருதோ இல்லியோ நீங்க கண்டிப்பா ஞாபகத்துக்கு வருவீங்க சார்

    ReplyDelete
    Replies
    1. ஹஹா..பெயரை சொல்லலாமே :)

      Delete
  30. சென்ற தலைமுறை ஒவ்வொரு நடுத்தர வர்க்க குடும்ப பையன்களுக்கும் கால்சட்டை கிழிந்து சங்கடப்பட்ட அனுபவம் இருக்கும். அதை பதிவு செய்த விவரம் அருமை

    ReplyDelete
  31. அருமை அருமை! இப்போதுகூட புதிய உடைகள் அலமாரியில் இருந்தும் அதை ஒரு சாதாரண நாளில் போட உறுத்தும். ஒரு வீஷேஷத்தை தேடி அன்று போட்டுக்கொண்டால் தான் ஒரு நிம்மதி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி லக்‌ஷ்மன். அய்யோ, நான் எக்சாக்ட்லி அப்படித்தான். அது சரஸ்வதி பூஜை, கோகுலாஷ்டமியாவது இருக்கனும் எனக்கு புது டிரஸ் போட..இல்லாட்டி உறுத்தும் :)

      Delete
  32. எப்பவாச்சும்தான் எழுதினாலும் முத்துபோல எழுதிடறீங்கண்ணே..
    இதுபோல எனக்கும் ஒரு நிகழ்வு.. பள்ளிக்கூடத்துல நடந்ததை ஞாபகப்படுத்தி அதை எழுதணும்ன்னு யோசிக்க வச்சிட்டீங்க..

    ReplyDelete
    Replies
    1. எழுதுய்யா..ஃபேஸ்புக்ல போடுய்யா :))

      Delete
  33. நட்டு அண்ணா..

    அட்டகாச பதிவு.
    உணர்சிகளின் கடல் என்பதை பதிவுக்கொரு முறை நிரூபிக்கிறீர்கள். :))
    நாம் பழைய சோறு தின்றுவிட்டு பர்கர் தின்றேன் என்று சொல்லி விடலாம். ஆனால், உடையும், உறைவிடமும் தேவைக்கு என்று மட்டுமல்லாமல் ஆடம்பரமாகவும் இருக்கவேண்டும்.
    எனக்கும் பல அனுபவங்கள் உள்ளன. பழைய உடையுடன் இருக்கும் போது முன்னறிவிப்பாமல் சில அறிவாளி உறவினர்கள் வந்துவிடும் போது மிக தாழ்வு மனப்பான்மையாக இருக்கும். ரொம்ப சுமாரான உடை அணிந்திருக்கும் போது மிக்கியமான நபர்களை சந்திக்க நேர்ந்து விட்டால் என்ன பேச வேண்டும் என்றே மறந்து விடும்.
    சின்ன வயதில் சாணி மெழுகி இருக்கும் தரை எங்களுக்கெல்லாம் பிடித்து தான் இருந்தது. எங்கள் சித்தி பைய்யன் ஒருவன், ரொம்ப அலட்டுவான், பாவம் அவனும் ரொம்ப சின்னவன். வீட்டுக்கு வந்திருக்கையில், உங்க வீடு நல்லாவேயில்லைன்னு சொன்னது இன்னும் நினைவிருக்கிறது.

    இப்போதெல்லாம், எனக்கு. என் உடை தாண்டி மரியாதை தருபவர்கள் என்று எண்ணுவதால், தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாவதில்லை (அதிகமாய்). :))

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் ரேணு..தாழ்வு மனப்பான்மை எதுக்கு? உன் படிப்புக்கு, ரசனைக்கு, வாசிப்புக்கு, குணத்துக்கு :))

      Delete
    2. தாழ்வு மனப்பாண்மைன்னு இல்லை. கொஞ்சம் தாழ்வது போல் ஒரு உணர்வு, அரிதாகத் தான். :)) குன்றிப் போறதுன்னு சொல்வாங்கள்ள அது மாதிரி.

      Delete
  34. நல்லாருக்கு ப்ரோ.

    ReplyDelete
    Replies
    1. படித்ததுக்கு நன்றி ப்ரோ :)

      Delete
  35. Excellent; பொதுவாக நம்மில் பலர் கடந்து வந்த பாதை தான் இது

    Typed with Panini Keypad

    ReplyDelete
  36. நானும் பாண்ட வெட்டி டவுசர் தச்சி போட்டு வளந்தவன் தான், 80s. நடுத்தர குடும்பங்கள் அனைத்திலும் இது சகஜம் தான்....

    ReplyDelete
    Replies
    1. நன்றி முருகன்..ஆம் சகஜம் போல் தான் தெரிகிறது :)

      Delete
  37. நானும் பாண்ட வெட்டி டவுசர் தச்சி போட்டு வளந்தவன் தான், 80s. நடுத்தர குடும்பங்கள் அனைத்திலும் இது சகஜம் தான்....

    ReplyDelete
  38. 80 களில் அனுபவித்ததை அப்படியே பதிந்துள்ளீர்கள். அப்போதெல்லாம் பொங்கலுக்கு -1செட்; தீபாவளிக்கு 1-செட்; யுனிபார்ம் 2 செட் அவ்வளவே; இன்று எத்தனை புதிய துணிகளை போடாமல் அப்படியே இருக்கிறது. ''இப்போதும் காசை விசிறி வாங்கமுடிவதில்லை. விலைச்சீட்டை திருப்பிப்பார்க்கிறேன். தள்ளுபடி தேடுகிறேன். கடையில் நுழைந்தால் க்ளியரன்ஸ் இடத்திற்கு முதலில் போகிறேன்"- இதை நானும் செய்து கொண்டிருக்கிறேன். மனதிற்கு நெருக்கமான நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  39. super.your article drives me to my teens

    ReplyDelete
  40. nostalgic memories. wish can write like you

    ReplyDelete

பிடித்தால் சொல்லுங்கள்..பிடிக்காட்டியும் சொல்லுங்கள்..;)