தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் பாத்திரம் அலம்ப தொடங்கினான்.
என் சின்னவயதில் பெட்டிக்கடை வைத்து நாள்பூரா இலந்தவடை சாப்பிடவேண்டும்
என்பதே என் career goal. அதைவிட்டால் பாலமித்ரா, அம்புலிமாமாவில் பூவண்ணன்,
அரு.ராமநாதன் பாணி கதாசிரியர் ஆகவேண்டும் என்பது அடுத்தது. அப்படி
ஆகியிருந்தால் விக்கிரமாதித்தன் - வேதாளம் கதையை மேலேயுள்ள வரியில் தான்
தொடங்கியிருப்பேன்.
அந்தளவுக்கு ஒரு தினசரி ஆக்ட்விட்டியாய் என்
டிஎன்ஏவில் ஏறிவிட்டது. ஒரு நாவலில் பாலகுமாரன் ”தூங்கினா கனவுல பின்னாடி
மரம் ஓடுது” என ஓட்டுநர் சொல்வதாய் சொல்வார். அது போல் கனவில் எல்லாம்
சைஸ்வாரியாக ரகவாரியாக பாத்திரங்கள் வர ஆரம்பித்துவிட்டது. டிஷ்வாஷர்
இருந்தாலும் அதென்னவோ ஆரம்பித்திலிருந்தே அதோடு ஒட்டும் இல்லை, உறவும்
இல்லை. அதுவும் நம்மூர் சமையல் எண்ணெய்ப் பிசுக்கு பாத்திரங்களுக்கு
டிஷ்வாசர் அவுட்புட் நம்மை துர்வாசர் ஆக்கிவிடும் என்பதால் நானே டிஷ்வாஷர்.
இந்த இடத்தில் என் வீட்டு கிட்சனை பற்றி ஒரு வார்த்தை.
இருப்பது மூன்றே பேர். குழந்தை தயிர்சாதம், பருப்புசாதம்
வேகவைத்த(அ)பச்சைக்காய்கறி மட்டுமே நம் உணவில் சாப்பிடுவாள். நோ காரம்
சாம்பார்,குழம்பு இன்னபிற. வாரநாட்களில் டின்னருக்கு ஒரு பேட்டர்ன்
வைத்திருக்கிறாள். பாட்டு கிளாஸ் முடிந்தால் பக்கத்தில் சப்வே, பரதம்
முடிந்த அன்று பீட்சா என சிறு indulgenceகள். கிட்டத்தட்ட அதுக்காகவே
கிளாஸுக்கு போகிறாள்.
நானும், மனைவியும் இன்னொரு விதம்.
ஃபுல்மீல்ஸ் என்பது வாரயிறுதிக்கென ஆகிவிட்டது. சமைப்பது என்பது “நாளைக்கு
லன்ச்சுக்கு என்ன” என்ற கேள்விக்கு பதிலாக மட்டுமே. அதுவும் ஞாயிறு மாலை
பல்க்காய் சமைத்துவிடுவது. காலையில் பதிவாய் ஓட்ஸ் கஞ்சி,வாழைப்பழம்.
மதியம் கொண்டு போன அரைகப் சாம்பார்சாத டப்பாவை கள்ளிக்காட்டு இதிகாசம்
எழுதிய வைரமுத்துவின் மிடுக்கோடு கேஃப்டேரியாவுக்கு எடுத்துக்கொண்டுபோய்,
எனக்கு முன்பு சைனீஸ்காரன் நாறநாற விட்டுச்சென்ற மைக்ரோவேவில் மிகச்சரியாக
ஒன்றரை நிமிடம் ஹீட் செய்து சீட்டிலேயே கம்ப்யூட்டரில் ஒரு கண்ணாய்
ஸ்பூனால் முழுங்கிவிட்டால் 3 மணி காப்பி வரை தாங்கும். லன்ச்சுக்கு
சப்பாத்தி செட்டாகாது. கையில் ஈஷிக்கொள்ளாமல் சப்பாத்தியை ஸ்பூன் போல்
ஆக்கி, சன்னாவை முக்கி வாயில் சைடில் அதக்கிக்கொள்ளும் நார்த்தீஸ் கலை
நமக்கு வரா. சப்பாத்தி குருமா சாப்பிட்ட ஒரு மதிய மீட்டிங் கைகுலுக்கலில்
வெள்ளைக்காரன் “Wow you had curry food?" எனக்கேட்ட அன்று காசியில்
கொத்தவரங்காய் விடுவது போல் சப்பாத்தி கொண்டுபோவதை நிறுத்தினேன். மனைவி
எனக்கு சாதமே வேண்டாம் என ஒரு சாலட் இல்லை சூப்பில் பெரும்பாலும்
ஓட்டிவிடுவாள்.
டின்னரை பற்றி பேசுவதற்கு முன் எங்கள் ஊரை
(டொராண்ட்டோ) பற்றி ஒரு வார்த்தை. பார்க்க ரோடும், பில்டிங்கும் ஒரு
ஃபாரின் எஃபக்ட்டோடு இருக்கும். ஆனா பக்கா லோக்கலு. ஊர்ப்பட்ட (வட/தென்)
இந்திய உணவகங்கள், தமிழர் உணவகங்கள், சாட் கடைகள், சமோஸா/ஸ்வீட் கடைகள் என.
குறிப்பாய் என் வீட்டிலிருந்து 3 கிமீ ரேடியஸ்சில் சரவணபவன், அஞ்சப்பரில்
ஆரம்பித்து எக்கச்சக்க கடைகள். குஷியை ஒவ்வொரு நாள் ஒவ்வொரு கிளாஸுக்கு
விட்டுவிட்டு பாய்ஸ் செந்தில் போல் எங்க என்ன கிடைக்கும் என டைரியில்
குறித்துக்கொண்டு வாங்கிவர எனக்குத்தான் தெரியும். குறிப்பாய் பேட்டையில்
ஒரு பஞ்சாபி உணவகத்தில் மிகச்சல்லீசான விலையில் தினமும் ஒரு டேக்-அவுட்
டீல். 2$க்கு சன்னா பட்டூரா என்றால் ஆளுக்கொரு பூரியை
”ஷேரிங்..கேள்விப்பட்டதில்ல” என ஜோலியை முடிப்போம். இல்லை தோசைமாவு
இருந்தால் வீட்டிலேயே ஆளுக்கு 3 தோசை. சட்னி கூட டப்பாவில் விற்பான்.
நிற்க, வீட்டில் சின்க்கில் எப்படி இத்தனை பாத்திரம் விழுகிறதென்பது
கே.எஸ்.ரவிக்குமாருக்கே புரியாத புதிர். எனக்கு குழந்தையை கிளப்புதல்
இன்னபிறவில் பெரிய பொறுமை இல்லாததால் கிச்சன் ட்யூட்டியை பெருந்தன்மையோடு
ஏற்றுக்கொண்டுள்ளேன். சமைக்கவும் பிடிக்கும். பைப்பை திறந்துவிட்டாலே
“விடும்மா, டிஷஸ் நான் பண்ணிடுறேன்” என வந்துவிடுவேன் (அதற்காகத்தான் அவள்
பைப்பையே திறக்கிறாள் என்றாலும்).
எனக்கு ஒரு காரியத்தில்
செய்நேர்த்தி ரொம்ப முக்கியம். முதலில் கத்தி விஜய் போல் சின்க்கை
மேலே,கீழே என ப்ளூப்ரிண்ட் பார்ப்பேன். எத்தனை பெரிய பாத்திரம், சிறிது,
எவர்சில்வர், பீங்கான், ஸ்பூன், கரண்டி, கையைக்கிழிக்கும் கத்தி, கிரைண்டர்
போன்ற ஸ்பெஷல் சாதாக்கள் எல்லாம் ஒரு பேட்ஸ்ட்மென் ஃபீல்டர்களை
அவதானிப்பது போல் பார்த்துவைத்து கொள்வேன். ஏற்கனவே நேற்று அலம்பி காய்ந்த
பாத்திரங்களை முதலில் அதது இருக்கும் இடங்களுக்கு கிச்சனின் 360
டிகிரியில் விரட்டுவேன். இந்த செஞ்சுரி அடித்த பேட்ஸ்மென் எந்தெந்த
டைரக்ஷனில் அடித்தார் என மேப் போடுவார்களே, எனக்கும் அப்படி போட்டால்
சுத்துப்பட்டு பதினெட்டு செல்ஃப்பும் காண்பிக்கும்.
அடுத்தது
தேவையான டூல்ஸ். எனக்கு பிடித்த ப்ரெஷ் கைப்பிடியுள்ள பழைய பேனாவுக்கு
மைபோடுவது போல் பின்னால் டிஷ் liquid ஊற்றிக்கொள்ளக்கூடியது.
சிலக்கடினக்கறைகளுக்கு மெட்டல் ஸ்க்ரப். பிடித்த டிஷ் லிக்விட் பால்மோலிவ்க்காரனின் க்ரீன் ஆப்பிள் திரவம்.
வேறெதும் மனைவி வாங்கிவைத்தால் அறச்சீற்றத்தில் ”ஏம்மா இதுல நுரையே
பொங்காதே” என அதற்கு பதிலாய் நான் பொங்கிவிடுவேன்.
சின்க்கில்
பாத்திரத்தை sort செய்வது ஒரு கலை. தேய்க்கவேண்டியது எல்லாம் ஒரு பக்கம்,
அதில் இடத்தை அடைத்துக்கொண்டிருப்பதற்கு VIP பாஸ், சோப் போட்டு முடிந்து
பிசுக்கு போக ஊறுபவை 300 ரூபா கூண்டுடிக்கெட், கரண்டி,ஸ்பூன் வகையறாக்களை
ஒன்னுசேர்த்து ஒரு தர்ம தரிசனம், இவைகளை தண்ணியை திறந்துவிட்டு சோப்புபோக
அலசி ஒரு “ஜருகண்டி ஜருகண்டி” என பாத்திரம் தேய்ப்பதும் ஒரு பெருமாள் சேவை.
அலம்பிய பாத்திரங்களை அடுக்கிவைப்பதும் எனக்கு ராணுவ ஒழுங்கோடு
இருக்கவேண்டும். எது உடனடியாய் தேவைப்படும், எது அடியில் போகலாம் என
கவிழ்த்துப்போடுவதிலும் கணக்குப்போடுவேன். கப்பு போக கழுவிய கப்புகளின்
கைப்பிடிகள் பரேடுக்கு தூக்கிக்கொண்டுநிற்கும் துப்பாக்கிகள் போல் ஒரே
டைரக்ஷனில் நின்றால் தான் திருப்தி. பாத்திரம் தேய்ப்பதில் ப்ராசஸ்
இம்ப்ரூவ்மெண்ட், CMM லெவல் 5, சிக்ஸ் சிக்மா, நக்மா வரைக்கும் கொண்டுவந்த
முன்னோடி நான்.
அடுத்த முக்கியமான விஷயம் எண்டர்டெய்ன்மெண்ட்.
பாத்திரம் அலம்ப 400$க்கு Beats Studio Wireless headphones வாங்கிய ஆசாமி
யா இட்ஸ் மீ. என்னனவோ wired headphoneகள் முயற்சித்து அது சின்க் கீழ்
செல்ஃப் கைப்பிடியில் மாட்டி, ஃபோனில் தண்ணிபட்டு பேஜாராகி கடைசியாய்
இதற்கு வந்தேன். முதலில் ஒரு நல்ல பெப்பியான ப்ளேலிஸ்ட்டை
போட்டுக்கொள்வேன். பாத்திரம் தேய்க்க பாலமுரளி கிருஷ்ணாவோ, வானலிக்கு
வாணிஜெயராமோ வேலைக்காவாது. நல்ல தரைக்குத்தாக விஜய் ஆண்டனி பாடல்களோ,
“டங்காமாரி ஊதாரி”யோ தான் சரி. அதுவும் சுற்றி என்ன நடக்கிறதென்று
தெரியாமல், காது பாட்டை கேட்க, கை பழகினவேலையை செய்ய, வாய் மைன்ட்வாய்சில்
பாடுவதாய் நினைத்து சத்தமாய் “புட்டுக்கின நீ நாறி” பாட, “சத்தம் போடாத”
எதிர்க்குரலை “என்னம்ம்மா” என 70 டெசிபல் எதிர்க்குரலில் அடக்கி,
அடடா..சுக்ஹானுபவம்.
இப்படி ஒரு trance நிலையில் பாத்திரம்
தேய்ப்பதால், மனைவி செய்யும் அழிச்சாட்டியங்களுக்கு அளவேயில்லை. முதலில்
சின்க்கை பார்த்தால் சாதுவாய் ஏழெட்டு பாத்திரங்களுடன் “அடடே இதான்
தண்டாலா..ஈசியா இருக்கறதே” என தோன்றும். ஆனால், பட்ஜெட் பத்மனாபனில்
துவைத்த துணிகளை வேண்டுமென்றே விவேக் லாண்டிரிக்கு போடுவதை போல்,
எங்கிருந்துதான் பிடிப்பாளோ, சடசடவென ஃப்ரிட்ஜை ஒழித்து, செல்ஃபுகளை
ஒழித்து, லன்ச்பாக்ஸ், ஓட்ஸ் கஞ்சி கலையங்கள், ஆங்காங்கே விட்டுவைத்த காபி
மக்குகள் என ஒரு லோடு பாத்திரம் சேர்க்க எனக்கு ஆத்திரம் சேரும்.
அதையெல்லாம் பாத்திரத்தில் காட்டி அலாவுதீன் அற்புதவிளக்கை தேய்ப்பது போல்
தேய்,தேய் என தேய்க்க ஒரு கட்டத்தில் பூதமே வந்துவிடும்.
இப்போதெல்லாம் நண்பர்கள் வீட்டில் கூட பார்ட்டியெல்லாம் முடிந்தபிறகு “ஏம்மா வீட்ல ஏதாச்சும் பாத்திரம் அலம்பனுமா, நான் பண்றேன்” என்று தன்னிசையாக சதையாடினால் மனைவி ஆடிவிடுகிறார். இதில்
எப்போது பாத்திரம் அலம்பனும் என ரூல்ஸ் & ரெகுலேஷன்ஸ் வேறு உண்டு.
குறிப்பாய் மற்றவர்களுக்கு முன் நான் செய்யப்படாது. போன வாரம் பக்கத்துவீட்டு அம்மா வந்து
மனைவியோடு அரட்டை. லேசில் கிளம்புவதாயில்லை. எனக்கு அடுத்த வேலை இருந்ததால்
(அடுத்த வேலைன்னா இதுபோல் ஃபேஸ்புக் வருவது) இது ஆவுறதில்ல என கேப்டன்
தலையில் டார்ச்சோடு டெரரிஸ்ட் வேட்டைக்கு கிளம்புவது போல் ஹெட்ஃபோனோடு
பாத்திரம் தேய்க்க ஆரம்பித்துவிட்டேன். கிளம்பியபிறகு “அவங்க முன்னாடி தான்
இதெல்லாம் செய்யனுமா”. இச்சமயங்களில் “இந்த அப்பள கம்பெனில மாவு பிசையக்கூட எனக்கு
உரிமையில்லையா” என தார்மீக கோபத்தை டப்பர்வேரில் காண்பிப்பேன்.
எல்லாம் முடிந்து, தொப்பலாய் தொப்பை நனைந்த பனியனோடு கையை துடைத்து
எதேச்சையாக திரும்பிப்பார்க்க, அங்கு “போதும், வா” என்று கனிவாய் மனைவி
பார்க்கும் ஒரு நொடி பார்வைக்காக..
இந்த கட்டுரையின் முதல்வரியை மறுபடியும் படியுங்கள்.
++++++++++++++