பிறகு 80ஸ் இன்றுபோய்நாளைவா காலக்கட்டத்தில் “மேன் இப்டில்லாம் வரக்கூடாது..அரைடவுடர் மாட்டிக்கிட்டு அதென்னாது சார்ட்ஸ் அப்புறம் கால்ல போடுவாங்களே கேன்வாஸ் கேன்வாஸ்” என கல்லாப்பெட்டி சிங்காரம் அட்வைஸ் செய்ய ஒரு ஷூவும் சேர்ந்துகொண்டது.
கடந்த பத்தாண்டுகளில் இசையும் சேர்ந்துகொண்டது. சோஷியல் மீடியாவில் இருந்தால் “Walking in pleasant morning with Sangar Ganesh's kondai cheval koovum neram" என ம்யூசிக் நோட்ஸில் இருக்கும் அத்தனை சிம்பல்களையும் பின்சேர்த்து ஸ்டேடஸ் போடுவது உசிதமணி.
இதில் எம்போன்ற பக்கோடா காதர்களுக்கு சாரி குட்டிக்காதர்களுக்கு இயர்ஃபோன் திருமணம் என்னும் நிக்கா. லெஃப்ட்டை கோபி நீயாநானாவில் ஆண்டனி இன்ஸ்ட்ரக்ஷன் வாங்குவது போல் அஜ்ஜிஸ் செய்தால், ரைட்டு வயர் தரையில் தொங்கும். இரண்டையும் காதில் கரகாட்டக்காரன் கனகா போல் பேலன்ஸ் செய்து ரெண்டடி நடந்தால், பாக்கெட்டில் வைத்திருந்த ஐபாட்/ஃபோனில் கனெக்ஷன் பட்டென தெறித்து காது சூன்யமாகும். இல்லை டப்பென்று தண்டுமாரியம்மன் கோவில் லவுடுஸ்பீக்கர் கட்டியது போல் 70 டெசிபலில் அலறி கேக்’காது’. டச்ஸ்க்ரீன் வந்த பிறகு சுத்தம். அதுவாகவே உத்தமவில்லன் திரைக்கதை போல் ஷஃபிலுக்குள் ஷஃபில் செய்து “மலர்கள் கேட்டேன்..ஏ ஆத்தோரமா வாரியா..மஹான் காந்தி மஹான்..” என சொந்த மெட்டில் மெட்லி க்ரியேட் செய்யும்.
இந்த இழவுக்காகவே ஒரு ப்ளூடூத் ஹெட்ஃபோன் வாங்கியது. ஒரு தடவை என் மகள் கூட காஸ்ட்லி என தரையில் படுத்து தடுத்தாளே, நான் அதைப்பற்றி ஃபீல் செய்து எழுத, நீங்கள் ஃபீல் செய்து கமெண்ட் போட, ஃபேஸ்புக் ஆபீசே அழுததே..அதே. பிறகு தன்மானத்துடன் அவள் இல்லாதபோது கமுக்கமாய் போய் வாங்கி விட்டேன். அது வந்தபிறகு (ஐ)பாடு தேவலை. இயர்ஃபோன் வயர் தடுக்கி புல்லில் விழாத பயில்வான் ஆகிவிட்டேன்.
இப்போது சமீபத்தில் இன்னொரு லாகிரி கேட்ஜட்டும் சேர்ந்துகொண்டது. ஃபிட்னஸ் வாட்ச். பாவித்திராதவர்களுக்கு, இது பழைய சல்லீசு எலக்ட்ரானிக் வாட்ச் போல் இருக்கும். ”இவன் உசுரு அவன் கைல” என்பது போல் வாட்சுக்கு எஜமானனாய் ஒரு ஸ்மார்ட்ஃபோன் app இருக்கும். செட் செய்துவிட்டால் ”சொல்லிட்டீங்கள்ள, இனி என் மூவ்மெண்ட்டை பாருங்க” என நாடியோடு ஒட்டிக்கொண்டு நம் மூவ்மெண்டுகளை வாட்ச் பண்ணும். சிலது டிஸ்ப்ளே இல்லாது அருணாச்சலம் ரஜினி ப்ரேஸ்லெட் போல். சிலது தக்குணூண்டு டிஸ்ப்ளேயில் நடந்த ஸ்டெப்ஸ், எரித்த கலோரிக்கள் காட்டும். அதில் நமக்கு ஒரு அல்ப திருப்தி கிடைக்கிறது என்பதால், ஆ..பீஸ் போவது முதற்கொண்டு கவசகுண்டலமாய் கூடவே சுத்துகிறது.
இப்போது பிரச்சனை என்னவென்றால், இந்த வஸ்துக்களோடு வாருக்கு இது வாக்கிங் கிளம்புவது தான். மனிதன் க்ளைமாக்சில் ரஜினி ரெடியாவது போல் ஒவ்வொன்றாய் மாட்டிக்கொள்ளும்போது தான் சார்ஜ் பிரச்சனை உறைக்கும். ஃபோனில் சார்ஜ் இருந்தால், ப்ளூடூத் ஹெட்ஃபோனில் இருக்காது. ஹெட்ஃபோனில் இருந்தால் ஃபிட்னஸ் வாட்சில் இருக்காது. வாட்ச்சில் சார்ஜ் இருந்தால், அது ஃபோன் app கூட ப்ளூடூத்தில் சின்க் ஆகாது. வாட்ச் ப்ளூடூத் கனெக்ஷனில் இருந்தால், பாடல்கள் ப்ளூடூத் ஹெட்செட்டுக்கு போகாமல் படுத்தும். எல்லாம் வேலை செய்தால், நேற்றைய ஐட்யூன்ஸ் அப்டேட்டில் மொத்த பாடல்களும் சுவடின்றி அழிந்திருக்கும். பல நாட்கள் ”ஆணியே புடுங்க வேணாம்” என எல்லாவற்றையும் கழட்டிப்போட்டு காந்திதாத்தா போல் தண்டியாத்திரை கிளம்பிவிடுவது வழக்கம்.
இன்று பரவாயில்லை. ஃபோனில் பாட்டு இருந்தது. சார்ஜ் இருந்தது. ப்ளூடூத் ஹெட்ஃபோனில் கேட்டது. ஃபிட்னஸ் வாட்ச் வேலை செய்தது. தினமும் 10000 ஸ்டெப்ஸ் நடக்கவேண்டும் என்ற உன்னத குறிக்கோளில் கள்ளிகாட்டு இதிகாசம் எழுதிய வைரமுத்து போல் நடக்க ஆரம்பித்தேன். எப்போதும் போல் ஆபோசிட்டில் வரும் சைனீஸ் கிழவர் இடுங்கிய கண்ணை இன்னும் இடுக்கி சிரித்தார். ‘ஒற்றகாலில் கொலுசொந்நு தொலந்நு போயி’ என கோபிகா காதில் ஒலிக்க,”அது தப்பு இல்ல பயப்பட தேவையில்ல’ என சேரன் அசந்தர்ப்பமாய் நினைவுக்கு வர ஆல் இஸ் வெல்.
வாக்கிங் முடிந்து வாட்சை பார்த்தேன். அடடே காலை 7.30க்குள்ளாகவே 4000 ஸ்டெப்ஸ் நடந்துவிட்டோமே என்ற திருப்தியில் வீடு நுழைந்து சட்டையை தலைவழியே கழட்டுகையில்..
ஃபிட்னஸ் வாட்ச் சட்டை கையில் சிக்கி, ஏதோ பட்டனை அமுக்கி, டிஸ்ப்ளே அலைபாய்ந்து, முற்றிலும் ரீசெட்டாகி “0 steps, 0 calories" என சமர்த்தாய் எனை பார்த்து கண்ணை சிமிட்டியது.
எனக்கு கண்ணை கட்டியது.
+++++++++++