Tuesday, May 29, 2012

தொண்ணூறுகளின் டப்பிங் படங்கள் ( பாகம் 1)


அடுத்து என்ன எழுதுவது என மண்டையை பிய்த்துக்கொண்டது விஜய் டிவிக்காரனுக்கு எப்படி தெரிந்ததென தெரியவில்லை. நேற்று (திங்கள்) இதுதாண்டா போலிஸ் போட்டிருப்பது செட்டாப் பாக்சை மேய்கையில்  கண்ணில் பட்டது. ரைட், கிடைச்சுடுச்சு..யோகி பி போல ஃபண்டாஸ்டிக், எக்சலண்ட், சூப்பர், பலே என மடைதிறந்து போகலாம்.

தொண்ணூறுகளின் ஆரம்ப காலம் தெலுங்கு மொழிமாற்ற (டப்பிங்) படங்களின் பொற்காலம் என சொல்வேன்.

தமிழ் ரசிகர்களின் கலையார்வத்துக்கு அப்போதைய ‘பிக் சிக்ஸ்’ ரஜினி, கமல், பிரபு, கார்த்திக், விஜயகாந்த், சத்யராஜ்களின் ’சப்ளை’ போதவில்லையோ, அல்லது ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ போன்ற மொக்கைப்படங்களில் ராமராஜன் நடிக்க ஆரம்பித்துவிட்டதாலோ, என்ன எழவோ, அந்தக்காலக்கட்டத்தில் அவ்வளவு டப்பிங் படங்கள் வரும். அப்போதைய தமிழ்சினிமா மார்க்கெட் டைனமிக்சை பதிந்துவைக்க பிளாகோ, கேபிள் சங்கர் போன்றவர்கள் இல்லாததால் காரணம் தெரியவில்லை. ஆனால், இன்று முப்பதுகளின் முற்பாதியில் (சொன்னா நம்பனும்) இருக்கும் என் தலைமுறையின் பதின்ம வயதுகள், டப்பிங் படங்களின் தாக்கம் இல்லாது வளரவில்லை என்பது நிதர்சனம்.

 இன்றும் நினைவிருக்கிறது தஞ்சை ராஜா கலையரங்கத்தில் ஹவுஸ்ஃபுல்லில் வியர்வை கசகசக்க வைஜயந்தி ஐபிஎஸ் பார்த்தது. டப்பிங் படங்களை பொறுத்தமட்டில் வைஜெயந்தி ஐபிஎஸ் ஒரு ட்ரெண்ட் செட்டர் என அறுதியிட்டு சொல்லலாம்.

தமிழன் அதற்கு முன்பும் தெலுங்கு டப்பிங் படங்களுக்கு தன் பேராதரவை நல்கியிருக்கிறான். சலங்கை ஒலி, (நான் ரொம்ப காலத்துக்கு நேரடி தமிழ்ப்படம் என நம்பிக்கொண்டிருந்த) சிப்பிக்குள் முத்து என பலவும் டப்பிங் தான். அதற்கும் முன்னால் சென்றால், ஜெயமாலினி,ஜோதிலட்சுமி போன்ற பேரிளம் பெண்கள்,கருப்புச்சட்டிக்குள் காலைவிடும் குட்டிச்சாத்தான், பூஞ்சையான ராஜா கவுன் ஹீரோ என விட்டலாச்சார்யா கல்லா கட்டலாச்சார்யாவாக கோலோச்சின காலமும் உண்டு. ஆனால், ஜெயமாலினி/ஜோதிலட்சுமிகள் மோட்டாரு என்றால் விஜயசாந்தி,ராஜசேகர்கள் காட்டாறு என்பதை ஃபிலிம்நியூஸ் ஆனந்தனே தன் குங்குமப்பொட்டின் மீது சத்தியமாக ஒத்துக்கொள்வார்.

இந்த இடத்தில் விஜயசாந்தி என்ற ஆளுமையை பற்றி விவரிக்காவிடில், “அம்மாடி அம்மோவ்” என்ற வார்த்தை இல்லாத டப்பிங் படம் போல, இந்த கட்டுரை முழுமை பெறாது. பூ ஒன்று புயலானது தான் அவர் ராஜபாட்டையை ஆரம்பித்தது என அவதானிக்கிறேன். அது வரும்போது நான் பால்குடி பாலகன் என்பதால் மேலதிக விவரங்கள் இல்லை.  கம்பன் வழியில் சொன்னால் தென்னிந்திய ஐந்து மொழிகளில், ஐந்தில் ஒன்றில் (தமிழில்) அறிமுகமாகி, ஐந்து படம் நடித்து/ ஊத்தி மூடி, ஐந்திலே ஒன்றை (தெலுங்கு) தாவி,  (இருபத்)ஐந்து பாலகிருஷ்ணா படங்களில் ஊர்க்கார மாமன் பொண்ணாக, ராஜமுந்திரி ஏரியா திராட்சை தோட்டத்தில் டூயட் பாடும்போது அவருக்கு சலிப்பு தட்டியிருக்கவேண்டும்.

இந்த இடத்தில் ஒரு உண்மையை நீங்கள் உணர வேண்டும். வைஜெயந்தி IPSக்கு முன்பும் அவர் சக்சஸ்ஃபுல் தான். கிட்டத்தட்ட தலா 20 படங்களில் ராகவேந்திர ராவ், கோதண்டராமி ரெட்டி போன்ற ஸ்டார் டைரக்டர்களின் கொடூர மசாலா, மழை சாங் வெறிக்கு ஆளாகி,  சிரஞ்சீவி, பாலகிருஷ்ணாவோடு தெலுங்கானா ஸ்லாங்கில் பேசி, டூயட் பாடி வெற்றிகரமாக இருந்தவர் தான்.

விஜயசாந்தியின் கிளாமர்(?) இனி எடுபடாது போகக்கூடும் என்ற பேருண்மை ஒரு தெலுங்கு S.A.சந்திரசேகருக்கோ, அல்லது அவருக்கே புரிந்துதான் வைஜெயந்தி IPS வரலாற்றில் நிகழ்ந்திருக்க வேண்டும்.


எந்த பெரிய சத்தமோ, ஓப்பனிங்கும் இன்றி தான் 1990யில் வைஜெயந்தி IPS வந்தது. ஏற்கனவே கர்த்தவ்யம் என்ற பெயரில் தெலுங்கில் ஹிட்டான படமே. எனக்கு தெரிந்து இப்படத்திற்கு முதல் ஓரிரு வாரங்களில் பெரும் வரவேற்பு எல்லாம் இல்லை. ஆனால் அதற்கு பிறகு கிட்டத்தட்ட சம்சாரம் அது மின்சாரத்திற்கு பிறகு தமிழ்ச்சினிமாவில், ஒரு வைரல் ஃபினாமினாவாக பார்த்தேயாக வேண்டிய ஒரு படமாக உருமாறியது. போட்ட இடமெல்லாம் கூட்டம் அம்மியது, கலெக்‌ஷன் அள்ளியது.

இன்று யோசித்து பார்த்தால், வைஜெயந்தி IPS ஒன்றும் பெரிய அப்பாடக்கர் திரைப்படமல்ல. அதன் வெற்றிக்கு காரணிகள் எனப்பார்க்கப்போனால் எனக்கு தோன்றுபவை இவை.

1. முதலில், ஒரு போரடிக்காத திரைக்கதை. ஒரு வீரமுள்ள Protagonist வெகுண்டெழும் மிகச்சுலபமான கதை தான். ஆனால், சரியான விகிதத்தில் செண்டிமெண்ட், சமூகக்கொடுமைகள் கலந்த ரேசி ஸ்க்ரிப்ட். இளம்நடிகை மீனாவின் ரேப் இன்றும் ரத்தக்கண்ணீரை வரவழைக்கும் (கவனிக்க, கண்ணீர் என்றேன்) . எஞ்சோட்டு வாலிபர்கள்(?), வீறுகொண்டு இன்னொரு விண்டோவை ஓப்பன் செய்து அந்த ஜெயப்பிரகாஷ்-மீனா சீனை யூட்யூபில் தேடுமுன், ஒரு வார்த்தை. அது யுட்யூபில் இல்லை !

2. இரண்டாவது, முதன்முதலாக ஒரு பெண் போலீஸ் திரையில் போடும் சண்டைகள் பார்க்க கொடூரமாக இல்லாது இருந்தன. வெய்ட், சண்டை அளவுக்கு போகவேண்டாம். முதன்முதலில், ஒரு பெண் போலிஸ் திரையில் பார்க்க கொடூரமாக இல்லாது இருந்தார். போலீஸ் அகாடமிக்கும், தமிழ் நடிகைகள் அனாடமிக்கும் ஏழாம் பொருத்தம். அம்பிகா, ஜீவிதா (நான் தேடும் செவ்வந்தி போலிஸ் ட்ரெஸ் ஞாபகம் இருக்கா) போன்ற பாடியோ, லேங்குவேஜோ, பாடி லேங்குவேஜோ சுத்தமாக இல்லாத நடிகைகளை போலீஸ் ட்ரெஸ்ஸில் பார்த்து டரியலான ரசிகனுக்கு, டர்ரான ரியலான போலீசாக விஜயசாந்தியை திரையில் பார்த்தபோது விசிலடித்தே திரையை கிழித்தான். அதற்கு அவரின் இயற்கை உடல்வாகா, பின்னிருபதுகளின் மெல்லிய முதிர்ச்சியா என துல்லியமாக காரணம் சொல்ல முடியவில்லை.

அந்தக்கால ஜாகுவார் தங்கம்,சூப்பர் சுப்பராயன் “சார், 1..2..நீங்க அடிக்கிறீங்க, மேடம் ப்ளாக் பண்றாங்க” டைப் சண்டைகளிலும் ஒரு பெர்ஃபக்‌ஷன் காண்பிப்பார். காவல் நிலைய ரைட்டர் டேபிளின் மீது சிறு குட்டிக்கரணங்கள், இரு அடியாட்கள் இவரை அடிப்பதை விட்டுவிட்டு பாங்காய் லெஃப்ட், ரைட்டில் பிடித்துக்கொள்ள, சம்மர்சால்ட் அசால்ட்டாய் அடிப்பார். இந்த குதி குதிக்கிறாரே..பேண்ட் கிழிந்துவிடுமோ என்ற ’கிலி’கிளுப்பு ரசிகனுக்கு ஏற்படாத வகையில் இருக்கும் அவரது உடல்வாகும், சண்டைகளும். பத்தாததுக்கு அவர் படப்பிடிப்புத்தளத்தில் கையை கிழித்துக்கொண்ட செய்தியை ஃபிலிமாலயா சிறப்பு நிருபர் 2 பக்கங்களில் கவர் செய்து ரசிகனுக்கு பெப் ஏற்றுவார்கள்.

3. குரல். ஒரு முரட்டு போலீஸ் கதாபாத்திரத்துக்கு சாஃப்ட்டான நடிகை சரிதாவின் குரல் செட்டாகும் என கண்டுப்பிடித்தவனுக்கு தாதா சாஹேப் விருதோ, உயிர்ம்மை சுஜாதா விருதோ கொடுக்கப்படாமலிருப்பது காலக்கொடுமை. விஜயசாந்தி வாயில் இருந்து தேனாய் “இல்லாட்டி போனா, உன்ன இங்கியே அடிச்சு மர்டர் செஞ்சு” என சரிதா பேசினால், அவ்வளவு பாங்காய் ஒத்துப்போகும்.

விஜயசாந்தியின் போலீஸ், சண்டைப்படங்கள் எல்லாமே கிட்டத்தட்ட ஒரே டெம்ப்ளேட் தான். முதல் 4 ரீலில் அவர் ஒரு விக்ரமன் டைப் குடும்பத்தில் குதூகலமாக இருப்பார். காலேஜ் போவார், அல்லது IAS/IPS தேர்வுக்கு படிப்பார். உடற்பயிற்சி தேர்வுக்கு ஜாகிங் போவார். குனிந்து நிமிர்ந்து எக்சர்சைஸ் செய்வார்.

ஒரு முக்கிய இடைச்செருகல் இங்கே. போலீஸ் ட்ரெஸ்சை விடுவோம். இந்த ட்ராக் சூட் என்று ஒரு வஸ்திரம் இருக்கிறதே, அதில் அவ்வளவு பாங்காய் இருப்பார். வெளிர்மஞ்சள் ட்ராக் சூட்டில், முழுக்கையை முக்கால் கைக்கு தள்ளிவிட்டுக்கொண்டு, ஒரு குதிரைவால் (அதான் ponytail) போட்டுக்கொண்டு, அல்லக்கை ஹீரோவோடு ஜாகிங் போகும் அழகிலேயே ரசிகன் சொக்கிப்போவான். ட்ராக் சூட் வீரியம் அறிந்தோ என்னவோ, டைரக்டர் ஒரு சண்டையை ட்ராக் சூட் காஸ்ட்யூமில் வைத்திருப்பார். காலை அகட்ட இன்னும் வாகான ட்ரெஸ் ஆனதால், விஜயசாந்தியும் ஃபைட்டர்ஸ்களை பறக்க விடுவார்.

நிற்க, சாவதற்கென்றே பிறவி எடுத்த பேக்கு புரபசர்/நீதிபதி அப்பாவுக்கு, தன் மகள் ஒரு அல்லக்கை ஹீரோவை லவ்வப்போவதும் தெரியாது, நாலாவது சீனில் வில்லன்அவரை கவ்வப்போவதும் தெரியாது. செத்தும் கொடுத்தான் சீதக்காதி போல செத்து, சிலபல குடும்ப,சமூக பிரச்சினைகளை விஜயசாந்தி தலையில் திணிக்க, அவர் சட்டத்தை கையில் எடுத்தோ, லத்தியில் அடித்தோ, காலில் பிரட்டியோ ஆந்திரவாடுகளின் மத்தியில் நியாயத்தை நிலைநாட்டுவார்.

விஜயசாந்தி படத்தில் ஹீரோவாக நடிப்பது, ஒருவர் தன் சினிமா கரியரை கந்துவட்டிக்கு அடமானம் வைப்பதற்கு ஒப்பானது. போனது போனது தான். படையப்பாவில் வருவது போல, ப்ரொட்யூசர்கள் “படத்துல ஹீரோ நீங்க தான். ஆனா போடற ஃபைட்டு உங்களது இல்ல” என்ன சொல்லியே ஹீரோக்களை புக் செய்வார்கள் என நினைக்கிறேன்.

அல்லக்கை ஹீரோ ரோலுக்கென்றே பிறவி எடுத்த வினோத்குமார் என்ற நடிகர் உண்டு. வைஜெயந்தி IPS முதற்கொண்டு பலப்படங்களில் ”ஹீரோ” அவர்தான். விஜயசாந்தி டீஃபால்ட்டாய் இவரை காதலித்து விடுவார். என்னத்துக்கோ தன் பெண்மையை நிரூபிக்க இவரோடு ராஜ்கோட்டி இசையில் ஒரு டூயட்டும் பாடிவிடுவார்.
ஒன்று, விஜயசாந்தி சண்டை போடவேண்டுமே என லாஜிக்காய் டைரக்டர்கள் ஹீரோவை ஜெயிலுக்கு அனுப்பிவிடுவார்கள், இல்லை கையை காலை உடைத்து ஆஸ்பத்திரியில் படுக்க வைத்து விடுவார்கள். வினோத்குமார் 1999 வரை இந்த ஹீரோ பொழப்பை ஓட்டியிருக்கிறார் என விக்கிப்பீடியா சொல்கிறான்.அவரின் ஒரு புகைப்படம் கூட இணையத்தில் கிடைக்காதது அவர் கரியர் கிராஃபின் பதத்துக்கு ஒரு சோறு.

சத்ரு படத்தில் விஜயசாந்திக்கு செகண்டு ஹீரோ இப்போதைய தெலுங்கு சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான விக்டரி வெங்கடேஷ். எப்படியோ சுதாரித்து, இன்னும் ஒரு படமோ என்னவோ கூட நடித்து (சூரியா IPS என நினைக்கிறேன்) கழண்டு கொண்டாரோ  ’விக்டரி’ வெங்கடேஷ் ஆனார்..இல்லை, ஈநாடு டிவி கலக்கப்போவது யாருடுவில்  ’மிமிக்ரி’ வெங்கடேஷாக இன்று இருந்துருக்கக்கூடும். நம் சரத்குமார் கூட ராஜஸ்தான் என்ற தமிழ்/தெலுங்குப்படத்தில் செகண்ட் ஃபிடில் வாசித்திருக்கிறார் விஜயசாந்திக்கு. படத்தின் ரிசல்ட் மன்னன் நீரோ ஃபிடில் வாசித்த கதையாக போனது வேறு விஷயம். உடல் பெருத்த ராம்கியும், தடயம் படத்தில் பம்மென்ற தன் ஹேர்ஸ்டைல் கலையாது சண்டை போட்டு, விஜயசாந்திக்கு ஆதரவு கொடுத்ததை வரலாற்றில் பார்க்கிறோம்.

வைஜெயந்தி IPSஐ தொடர்ந்து சத்ரு, லட்சியம், போலீஸ் லாக்கப், லேடி பாஸ் என விஜயசாந்தி மொழிமாற்றப்படங்கள் வரிசை தொடர்ந்தது. குண்டா கர்தி என ஹிந்திக்கும் போய்ப்பார்த்தார். போனி கபூரை கல்யாணம் செய்துகொண்டு தங்களை அம்போவென விட்டுவிட்டுப்போன ஸ்ரீதேவிக்கு ஈடாக இன்னொருவரை சவுத் சைடை சப்புக்கொட்டிக்கொண்டு சப்பாத்தி பையாக்கள் பார்க்க,  சப்ஜாடாக அத்லெட்டிக் விஜயசாந்தியை நிராகரித்தனர். இந்த கூத்துக்களுக்கு இடையில், மன்னனில் சாந்தி தேவியாக, கெத்து குறையாமல், ரஜினியை சஜஸ்ஷன் ஷாட்டாக பின்னாடியிலிருந்து அறைந்து எல்லாம் வெயிட்டு காட்டினார் விஜயசாந்தி.

பெர்சனலாக விஜயசாந்தி எரா படங்களில் என் ஃபேவரைட் சத்ரு, லட்சியம் தான்.என் நினைவடுக்குகளில் பட கதை,வசனங்கள் ‘இல்லாட்டி போனாலும்”, அப்படங்கள் கொடுத்த கிளர்ச்சி, சமூகக்கோபம், அறச்சீற்றம் இன்றும் நினைவில்.

வைஜெயந்தி  IPS அளவுக்கு ஏனைய படங்கள் வெற்றி இல்லையென்றாலும், ஆருர்தாசுக்கு வசனத்துக்கும், மருதகாசிக்கும், மனோ-சித்ராவுக்கும் தெலுங்கு மீட்டரில் பாட்டு எழுத/பாட கொடுத்த பணத்துக்கும் பழுதில்லை. All good things have to end என்பது போல அவரை வயதும், அரசியலும் பீடிக்க கிட்டத்தட்ட கிபி இரண்டாயிரத்தோடு தெலுங்கிலேயே முடிந்தது அவர் சகாப்தம்.


எது எப்படியோ, இன்று அரசியலில் ரோஜா அளவுக்கு விஜயசாந்தி டம்மியாகாமல்  தாக்குப்பிடிக்க, அவரது வைஜெயந்தி ஐபிஎஸ் கால ரசிகன் ஒரு தூணாக இருக்கிறான் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

(இந்த சீரீசின் அடுத்த பதிவுகளில் ராம்கோபால் வர்மா-நாகார்ஜுனா ஜானர் படங்கள், சிரஞ்சீவியின் அல்லுடு மஜாக்காக்கள் என போக நினைக்கிறேன்..உங்கள் நல்லாதரவை பொறுத்து..)

நன்றி நன்றி நன்றி..

சத்தியமாக இவ்வளவு வரவேற்பை எதிர்ப்பார்க்கவில்லை என் முதல் பதிவுக்கு, ஆயிரத்துக்கும் மேல் ஹிட்டுமாய், சிலபல மோதிரக்குட்டுமாய், பற்பல ட்விட்டுமாய்...நன்றி நன்றி நன்றி..முடிந்தவரை அடுத்த பதிவுகளில் உங்கள் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்கிறேன் என மட்டும் சொல்லி..

Friday, May 18, 2012

கார்த்திண்ணா


”நம்ம மூத்தமவன் சார்..பேரு மாக்சிம் கார்த்தி, லீவுக்கு வந்துருக்கான்” என்றார் செல்லப்பா.

கார்க்கி எப்படி கார்த்தி ஆனது என கேள்விகள் வராத, அறிஞர் அண்ணாவை தவிர வேறு அறிஞரை அறியாத வயது, காலக்கட்டம் அது. 

கேட்ட ரெண்டாவது நொடி என் அப்பாவிடமிருந்து “நீங்க க்ரிஸ்டீனா சார்?” என்ற கேள்வி வந்தது.

மூனாவது நொடியில் “உங்களுக்கு எய்ட்ஸா” என்று கேட்டது போல “அய்யிய்யோ, இல்ல சார், அது கம்முனிஸ்ட் நேமுங்க. நாங்க சைவப்பிள்ளமார். கவுச்சில்லாம் இல்லைங்க எங்கூட்ல”எனப் பதறிய செல்லப்பா எங்கள் புது ஹவுஸ் ஓனர்.

செல்லப்பாக்கு தோராயமா 55 வயசு இருக்கலாம். எம்பதுகளின் நீள/கட்டை கிருதா, எழுபதுகளின் பெல்பாட்டம். அறுபதுகளின் செதுக்கிய மீசை. வழுக்கையை மறைக்க ஒரு பாலுமகேந்திரா கேப் என ஒரு மார்க்கமாக இருந்தார். கறம்பக்குடி மிடில் ஸ்கூலில் சயின்ஸ் வாத்தியார்.

நிற்க, இது செல்லப்பாவின் கதை அல்ல.

பிறகு?

கார்த்தியின் கதை. எனக்கு கார்த்திண்ணா. இந்த சம்பாஷணை நேரத்தில் கார்த்திண்ணா ஒரு ஹைஹிப் பேண்ட்டும், விஜய் “ஊர்மிளா” பாட்டில் போட்டுவருவது போன்ற ப்ரவுன் டிசைன் சட்டையும், என் அப்பா “அதுல்லாம் உழைக்காது” என்று மறுத்த பாலியஸ்டர் இழை வெள்ளை பெல்ட்டும், வெள்ளையும் சிவப்புமாய் ஒரு ஃபீனிக்ஸ் ஷூவுடன் என் ஆதர்ச உடையில் நின்று கொண்டிருந்தது. “ஆத்தங்கர மரமே”வில் ஊர் திரும்பும் விக்னேஷ் கணக்காய் நடுவகிடு எடுத்து ஸ்டைலாக இருந்தது. கண்ணில் ஒரு குறும்பும் கூடவே.

பார்த்த நொடியில் கார்த்திண்ணாவை எனக்கு ரொம்ப பிடித்துவிட்ட்து. மீசை வராமல் வந்தும், பருக்கள் வந்தும் வராமலும், வாழைமரத்து ஜவுளிக்கடையில் 1.60 கட்பீசில் எடுத்த குதிகால் தெரியும் கால் சராயுடன் என் நிலையைக்கண்டு கூச்சமும், அப்பா மேல் இனம்புரியா கோவமும் வந்தது.

“கார்த்தி பொன்னமராவதில ITI முடிச்சிருக்கு. இப்ப டீவியெஸ்ல அப்ரண்டிசா மெட்ராஸ்ல இருக்கு”.

ஃப்ரெண்ட்ஸ் வடிவேலு அப்பரசண்டி என அதை கேலி வழக்காக கொண்டு வராத காலம். கட்டினா இந்த புள்ளைய கட்டுவேன் என்று சபதம் எடுப்பது போல், என்ன ஏது என தெரியாமல், பெருசாகி சென்னையில் அப்ப்ரசண்டிஸ் ஆவேன் என சபதம் எடுத்தேன்.

“தம்பி பேரு என்ன” என்னை நினைவுக்கு கொண்டு வந்தார் செல்லப்பா.

“ஸ்ரீராம் சார். பிரகதாம்பால இங்க்லீஷ் மீடியத்துல டென்த்து போட்டுருக்கேன்” அப்பா.

“சிர்ராமா..நல்ல பேரு..நல்லா படிக்கோணும், கார்த்திட்ட கேட்டு நடந்துக்க”ன்னார் செல்லப்பா. இதை எதுக்கு சொன்னார் என இன்று வரை தெரியவில்லை. ஆனால் கார்த்தியை கேட்டு நடக்கவேண்டும் என இரண்டாம் சபதம் எடுத்துக்கொண்டேன்.

“ஹாய் சிர்ராம்” என்று வாயை முதன் முதலாய் இந்த சம்பாஷணையில் தொறந்தது கார்த்திண்ணா. நம்பினால் நம்புங்கள். அந்த நாள் வரை என்னிடம் யாரும் “ஹாய்” சொன்னதில்லை. ஹல்லோ ஓண்ணு ரெண்டு உண்டு, ”வணக்கம் பாஸு” “வாங்க ஃப்ரெண்டு” உண்டு. ஆனால் ஹாய் இல்லை. பம்மிப்பதறி “ஹ ஹாய்ண்ணா” என் வரலாற்றில் முதல் ஹாயை பதிவு செய்தேன். செல்லப்பாவும், எங்கப்பாவும் பிறகு அட்வான்சை பற்றிக்கதைக்க தொடங்க கார்த்திண்ணா உள்ளே போய்விட்ட்து.

இந்த இடத்தில் வீட்டைப்பற்றி சொல்லவேண்டும். ஒரு பழையகாலத்து ரேழி,கொல்லை வெச்ச வீட்டை, முன்பக்கத்தை மட்டும் கிளிப்பச்சை கலரில் மச்சுவீடு போல் எழுப்பி, உச்சியில் விகாரமான ஃபாண்ட்டில் “வீனஸ் இல்லம்”என்று எழுதி (செல்லப்பா ஒரு ஜோசியப்பிரியர்) , மொசைக், நாலு டீப்லைட்,ஃபேன் போட்டு எங்களிடம் ஆயிரம் ரூவா வாடகைக்கு விட்டிருந்தார். பின்பக்க ஓட்டு வீட்டு போர்ஷனில் ஓனர்.

அப்பாக்கு திரும்பினா கீழராஜவீதி காங்கிரஸ் ஆபிஸ் எதிரே பேங்க்கு என்பதை தவிர பெரிய சவுகரியம் இல்லாத ஒரு வீடு.
இருந்தும் எனக்கு வீடு பிடித்துவிட்ட்து. காரணம், எனக்கே எனக்கேயென்று ஒரு ரூம். அப்பா போனஸ் ஆஃபராக “புள்ளை படிக்கனும் சார்..பப்ளிக் எக்சாம்” என பிட்டை போட்டு மச்சில் இருந்த ரெண்டு ரூம்பில் ஒன்றை எனக்கு துண்டு போட்டு பிடித்திருந்தார். ஒரு க்ரில் கேட்டு போட்டுத்தடுத்த பக்கத்து ரூம் ஒனருக்கு.

வீட்டுக்கு குடிவந்த முதல் 3 மாசம் கார்த்திண்ணா ஊரில் இல்லை. திடீரென்று ஒருநாள் தொட்டியில் இறங்கி நல்லதண்ணி பிடித்துக்கொண்டிருந்த அதிகாலையில் ரெக்சின் பேக்,சூட்கேசோடு வந்திறங்கி, அரை இருட்டிலும் 2 செகண்டு என்னை பார்த்து “நல்லாருக்கியா ஜெயராமு” எனப் புன்னகைத்தது. “நான் ஸ்ரீர்..” என சொல்வதற்குள் உள்ளே போய்விட்டது. மதியம் ஸ்கூல்விட்டு வந்து சாப்பாடு பரிமாறுகையில் அம்மா “கார்த்திக்கு கெரகம் சரியில்லையாம். தூரத்துல கஷ்டப்படவேணாம்ன்னு டீச்சரு இங்க வரசொல்லிட்டாங்களாம், இனிமே இங்கயே இருக்குமாம்” என சொன்னதை கேட்டு ஏனோ ஒரு சின்ன சந்தோஷம்.

கார்த்திண்ணாவுக்கு நண்பர்கள் அதிகம். பால்கார ராஜகோபாலு முதல் எதிர்த்தவீட்டு கண்ட்ரக்டர் மாமா வரை எல்லோரும் சினேகிதம்.
யாருடனோ, எதுக்கோ கையத்தட்டி சத்தமா சிரிக்கும் வாசலில். கக்குவான் இருமல் டாக்டர் வீட்டு விஜிக்கா டைப்ரைட்டிங் கிளாஸ் போக மாலை 6 மணிக்கு வீட்டை கடக்கையில் மட்டும் சைலண்டாகிவிடும். தன் சில்வர் ப்ளசை சைடு ஸ்டேண்டு போட்டு நிறுத்தி அதில் சாய்ந்து நின்று தினத்தந்தியை புரட்டும். கார்த்திண்ணா விஜிக்காவை நோக்க, விஜிக்கா கார்த்திண்ணாவை நோக்க, நான் சயின்ஸ் புஸ்தகத்தை நோக்காமல் இவர்களை நோக்குவேன். மத்தநேரம் முச்சூடும் கார்த்திண்ணா மாடி ரூமிலேயே கிடக்கும். எப்பவும் டேப்ரிக்கார்டரில் பாட்டு. அதென்னவோ “மயங்கினேன் சொல்ல தயங்கினேன்”,“வெள்ளி கொலுசுமணி” ரெண்டும் ரொம்ப இஷ்டம். எத்தேச்சையாக இருவரும் ரூமை விட்டு வெளியே வரும்போது சினேகமாய் சிரித்து, கொஞ்சம் என் படிப்பைப்பத்தி கேக்கும்.

கார்த்திண்ணா வேலைக்கெல்லாம் போனதாய் தெரியவில்லை. செல்லப்பா வாத்தியார் எங்கப்பாவிடம் பேன்க்குல பியூனாவது கிடைக்குமா என கேட்டது ஞாபகம் இருக்கிறது. உழைப்பாளி முதல்நாள் ரசிகர் மன்ற டிக்கட் செல்லையா டீஸ்டாலில் கிடைக்கும் என்றறிந்து அங்கு போக, வெளியே கார்த்திண்ணா சிகரட் பிடித்துக்கொண்டிருந்தது. முதல் தடவை பார்க்க ஒருமாதிரியாக இருந்தாலும், பிடிப்பதிலும் ஒரு ஸ்டைல் இருந்தது. “செல்லா, நம்மூட்டு பையன், என் அக்கவுண்ட்ல எழுதிக்க” என எங்கூட வந்த அஞ்சு பேருக்கும் சேர்த்து டீ சொன்னது. வீட்டுக்கு எதிரில் முள்ளுக்காடாய் இருந்த அய்யங்குளத்தை தெருப்பசங்களை விட்டு வெட்டச்செய்து கிரிக்கெட்டு விளையாட வைத்தது. “டெந்த்துல இது தேவையாண்ணேன்” என்ற அப்பாவின் உறுமலையும் மீறி அவ்வபோது ஓடுவேன் அய்யங்குளத்துக்கு. மிகசுமாராய் விளையாடும் நான், ஒருநாள் கார்த்திண்ணா பவுலிங் என்றதும் எதையோ நிரூபிக்க வீறு கொண்டு அய்யங்குளம் கரையில் வெட்டப்படாத முள்ளுச்செடிக்கு தூக்கியடித்து கிராண்ட்டட் சிக்ஸ் அடித்து, அண்ணா “பரவால்லியே, விள்ளாடறியே” என சொன்னதும் அவ்வளவு பெருமிதம்.

“இனிமேட்டு வியாளக்கெளமை பிருந்தாவனம் ஆஞ்சநேயர் கோயிலுக்கு போவோமுடா. சாமி கும்பிடுறோம், அந்த வாரத்துக்கு படிக்க டைம்டேபிள் போடுறோம்” என திடீரென்று என் உயிர்நண்பன் ஒரு தீர்மானத்தை முன்வைத்தான். ஒரு சிறிய ஆஞ்சநேயர் சன்னிதியும், பின்னாடி பிருந்தாவனம் என்ற பெயரில் நந்தியாவட்டை,செம்பருத்தி செடியுமாய் ஒரு சிறு தோட்டமும் நிறைந்த கோயில். ஒரு வியாழக்கிழமையில் பிரகாரத்தை சுற்றுகையில் கார்த்திண்ணாவை விஜிக்காவோடு பார்த்தேன். நல்லவேளை இருட்டில் என்னை பார்க்கவில்லை, அல்ல, நான் அப்படி நினைத்தேன். நார்த்தாமலை பூச்சொரிதலை முன்னிட்டு சூப்பர்பாய்ஸ் நடனக்குழுவுக்காக காத்திருக்கும் ஒரு பின்னிரவில், கார்த்திண்ணாக்கும் விஜிக்காக்கும் எப்படி லவ்வு என கார்த்திண்ணாவின் பங்காளிப்பய ஜோதி விவரித்ததை கிளுகிளூப்பாக கேட்டோம். திடீரென்று ஒரு நாள் விஜிக்காக்கு அறந்தாங்கியில் மாமன் உறவில் கல்யாணம் எனப்போய்விட்டது. அன்று ஏன் செல்லப்பா வீட்டில் இருந்து எங்களுக்கு பாயாசம் வந்தது என அன்று புரியவில்லை.

சயின்ஸ் டூசனில் கூடவரும் ராணிஸ்கூல் கோமதி எங்களுக்கு அடுத்த தெரு எனத்தெரிந்த பிறகு சும்மானாச்சிக்கு குறுக்கும் நெடுக்கும் அத்தெருவில் சைக்கிளில் போக ஆரம்பித்தோம். அந்த தெருவில் இருக்கும் மூவேந்தர் ஒயின்சின் உள்ளே ஒரு நாள் கார்த்திண்ணாவை பார்த்தேன். பக்கென்று இருந்தது. நான் கவனிக்குமுன் அது என்னை கவனிக்கக்கூடாதேயென்று என சைக்கிளை ஏறி மிதித்தேன். தர்மரின் தேர்ச்சக்கரம் டக்கென்று தரையில் விழுந்ததுபோல், கார்த்திண்ணாவின் மேல் இருந்த ஆதர்ச பிம்பம் உடைய ஆரம்பித்தது அன்றே. அதன்பிறகு, இரவு மட்டும் கார்த்திண்ணா ரூமில் இருந்து வரும் ஒரு மாதிரியான தம் வாசனை வருவதன் காரணத்தை யூகிக்க முடிந்தது.

அந்த நாளை என்னால் மறக்க முடியாது. அப்பா எட்டரை மணிக்கு நியுஸ் பார்த்துவிட்டு சாப்பிடலாமான்னு கேட்டுவிட்டு உட்கார்ந்த நேரம். எங்கள் பின்கதவில் நங்கென்று ஒரு பாத்திரம் இடித்து விழும் சத்தம். அப்பாவுக்கு முன்பே விஷயம் தெரியுமோ என்னவொ, ஏனோ கதவை திறக்கவில்லை. ஆனால் ஒரு ஒட்டுக்கேக்கும் தோரணையில் கதவின் அருகில் நின்றார். அவர் பின்னே நாங்கள். சீரிய இடைவெளியில் இன்னும் சில பாத்திரங்கள் வந்து விழுந்தன. செல்லப்பா வாத்தியார் “கார்த்தி, டேய்..கேசியர் வூட்ல இருக்காருடா..வேண்டாம்டா” என கெஞ்சலாக சொல்லிக்கொண்டிருந்தார். திடீரென்று உரத்தகுரலில் கார்த்திண்ணாவின் ஓலம். “மெட்ராஸ்லயே இருக்கன்னு சொன்னேன் கேட்டியா..இந்த வரப்பட்டிக்காட்டுல ஒரு வேல கிடைக்கல. நான் பாட்டுக்கு செவனேன்னு அங்கன கிடந்தேன்” என்று ஒரு அழுகையான குரல். புலம்பல் சற்று எல்லை மீற, அப்பா “மாடிக்கு போய் படிங்க சொல்றேன்” என எங்களை விரட்டிவிட்டார். அடுத்த நாள் காலை செல்லப்பா வாத்தியார், அப்பாவிடம் சன்னமான குரலில் “சாரி சார், லவ்ஃபெய்லியர்ல இப்படி பண்றான்” என மன்னிப்பு கேட்க, அப்பா “அதெல்லாம் சரி சார், ஃபேமிலி இருக்குற இடமா இல்லியா”என்பதும் நடந்தது.

பகலில் கார்த்திண்ணா அவ்வளவு பாங்காய் போகும், வரும். என் அப்பா, அம்மாவை கூச்சத்தில் ஏறெடுத்தும் பார்க்காது. ஆனால் ராத்திரியில் வேறு முகம் காட்டும். நைட்டு ஒன்னுக்கிருக்கலாம் என ரூமை விட்டு வெளியே வந்த ஒரு நாள் என்னைப்பிடித்துக்கொண்டது. அன்றைய கோலம் பார்க்க அவ்வளவு சிலாக்கியமாக இல்லை.”சிர்ராமு, உனக்கு புடிச்சதை படி, புடிச்ச வேலைக்கு போ, அப்பா,அம்மா யார் பேச்சையும் கேட்டுறாதே” என்றது. பயத்தில் ஒன்னுக்கிருக்காமல் ரூமுக்குள் திரும்பி போய்விட்டேன்.

ஒரு வேலை செய்தால் தெளிந்துவிடும் என ரெண்டு மாட்டை வாங்கி பின்னாடி கட்டிப்போட்டு, பால்கார ராஜகோபாலுடன் பார்ட்னர்சிப்பில் இரு என்றார்கள். அது கார்த்திண்ணாக்கும் வலித்தது, எனக்கும் வலித்தது. பலூன் பேகிஸ், ஃபன்க் விட்டு, ஸ்போர்ட் ஷூ போட்ட என் கார்த்திண்ணா இப்போது கொல்லைப்புற மாட்டுச்சந்து வழியாக மடித்துக்கட்டிய லுங்கியோடு மாட்டை தள்ளிக்கொண்டு வருவது காணச்சகிக்கவில்லை. பின்னிரவில் “இப்படி மாட்ட மேய்க்க விட்டுட்டீங்களேடா” என புலம்பும்.

சோசியல் பப்ளிக் பரிட்சைக்கு கிளம்பிக்கொண்டிருந்த ஒரு புதன்கிழமை கார்த்திண்ணாவை திருச்சி காஜாமலை டீயடிக்சன் செண்ட்டருக்கு கூட்டிக்கொண்டு போனார்கள். ”அங்கன ட்ரீட்மெண்ட்டு 3 மாசம்” என வூட்டுக்காரம்மா சொன்னதாக அம்மா சொன்னார்கள்.

அப்பாவுக்கு மாற்றல்,வேறு ஸ்கூல் என அதன்பிறகு நான் கார்த்திண்ணாவை பார்க்கவேயில்லை.

போன வருடம் லீவுக்கு ஊருக்கும் போகும் வரை.

குலதெய்வம் கோயிலுக்கு போகும் வழியில் ஊருக்கு போனோம். வடக்குராஜவீதி ராதா கபேயில் டிபனுக்கு நின்றோம். நாங்கள் இருந்த வீட்டுக்கு அடுத்த தெரு அது. ”சாப்பிட்டுட்டே இரும்மா, தோ வர்றேன்” என நாங்கள் இருந்த வீட்டுப்பக்கம் ஓட்டமாய் நடந்தேன். வீட்டு வாசல் தெரியும்போதெ வாசலில் சற்று கனத்த உருவமாய் ஒருவர். அது கார்த்திண்ணா என பார்த்தவுடன் யூகிக்க முடிந்தது. என்னை பார்த்தவுடன் லுங்கியை இறக்கிவிட்டு “சிர்ராமு தானே” என்று கண்கள் சிரிக்க சொன்னது. உள்ள வா என்றது. இல்லண்ணா இருக்கட்டும், வீட்டை ஆசையா பாக்கவந்தேன் என்றேன். முடி பரவலாய் கொட்டியிருந்தாலும், உடல் கனத்திருந்தாலும், கண்ணில் அந்த குறும்பு, spark போகவில்லை. கூட்டுறவு பேன்க்கில் பியூனாக இருப்பதாகவும், தனக்கு திருமணமாகி ரெண்டு குழந்தைகள் என்றும், செல்லப்பா வாத்தியார் சொந்த கிராமத்துக்கு சென்றுவிட்டார், தங்கச்சி ஈசுக்கு கல்யாணம் ஆனது பலவும் சொன்னது.

”நேரமாச்சுண்ணா, கெளம்புறேன்” என்றேன். சரி என்றது கார்த்திண்ணா.

வாசல் தெருவுக்கு வந்தபிறகு கார்த்திண்ணாவின் “ஒரு நிமிசம்” என்ற குரல். திரும்பி என்ன என்பது போல பார்த்தேன்.

“இப்ப எல்லாத்தையும் விட்டாச்சு சிர்ராமு”

கார்த்திண்ணா முகத்தில் எதையோ நிரூபித்த திருப்தி.

“சரிண்ணா” எனப் புன்னகைத்தேன். அதன் பிறகு வார்த்தை வராமல் திரும்பி நடக்க ஆரம்பித்தேன்.

உண்மையில் மனம் சற்று நிம்மதியாக உணர்ந்தது.

டிபனை முடித்து, சாந்தாரம்மன் கோயிலில் பூசை சாமான் வாங்கிட்டு போவோம் என வண்டியை திருப்பினோம். மூவேந்தர் ஒயின்ஸ் இருந்த இடத்தில் இப்போது கரும்பச்சை நிற போர்டில் டாஸ்மாக். சைடு சந்தில் கர்ட்டன் போட்டு பார் போல இருக்கும் போல.

கர்ட்டன் திறந்த ஒரு நொடியில் உள்ளே கார்த்திண்ணா போல ஒரு உருவம்.

சடாரென்று பார்வையை திருப்பினேன். அது கார்த்திண்ணாவாக இல்லாமலே போகட்டும்.

சிலசமயம் நமக்கு பிடித்தவர்களை, பிடிக்காத கோலத்தில் பார்க்க மனசுக்கு பிடிப்பதில்லை.

++++++++++++++