Tuesday, September 3, 2013

காக்கா வந்து சொல்ச்சாவும், ஒரு அப்பனும் பின்னே ஞானும்..


பொதுவாய் சினிமா விமர்சனம் எழுதுபவனில்லை. இது விமர்சனமுமில்லை.
நாளை நான் இல்லாது போகலாம். தங்கமீன்களை பார்த்த ஒரு அப்பன்காரன் இருந்தான், அத்திரைப்படம் அவனை என்ன செய்தது என உரக்கச் சொல்லவே இப்பதிவு.

கூடடைதலே வாழ்க்கை.எல்லா பயணங்களும் வீடு திரும்பலுக்காகவே என்பதென் நம்பிக்கை. எனக்கு இரவு வீடு திரும்பவேண்டும். மனைவி என் தோளில் பொதிந்து கோழிக்குஞ்சாய் உறங்கவேண்டும். அன்றைய கந்தாயத்துக்கு என் மகளின் உச்சந்தலையில் முத்தமிட்டுவிட வேண்டும்.

2008 கடைசி என நினைவு. அமெரிக்க இந்தியர்கள் வாழ்வில் பாலும்,தேனும் ஓடாத காலக்கட்டம் அது. ரிசஷன், ஐடி டவுன் என்றார்கள். எனக்கு ப்ராஜக்ட் போனது. ‘தம்பி,உனக்கு சம்பளம் வேணும்னா வேற ஊருக்கு போய்த்தான் ஆகனும்’ என மிரட்டியது கம்பெனி. அதுவும் ஒருமாத,இருமாத அலைச்சல் சிறு கன்சல்டிங் ப்ராஜக்டுகள். வேலை பார்க்கும் மனைவி, 2 வயது மகளை -30 டிகிரி போகும் ஊரில் தனியே விட்டு பொட்டியை தூக்கினேன். ஓரிரு வாரத்துக்கு ஒரு முறை ஊருக்கு வந்துவிடுவேன் தான். ஆனால், அதற்கும் இருப்புக்கொள்ளாது.

போன ஊரில் ஏதோ ஒரு இந்தியன் ரூம்மேட்டுடன் சிக்கனக்குடித்தனம். “வாங்க பாஸ்”த்தன நண்பரில்லாத நண்பர்களுடன் அளவளாவல்,தரையில் நியூஸ்பேப்பர் விரித்து சாப்பாடு என்றானது வாழ்க்கை. ஒரு வெள்ளிக்கிழமை என நினைக்கிறேன். அறையில் பெட்டியை எடுத்துக்கொண்டு ஃப்ளைட் பிடிக்கும் அவசரத்தில் நான். கையில் தனியே 2 ப்ளாஸ்டிக் பேகுகள்.

“என்ன பாஸ் அது தனியா ப்ளாஸ்டிக் பேக்ல?” ப்ராஜக்ட் இல்லாது வெறுமனே படுத்துக்கொண்டிருந்த ரூம்மேட் கேட்டான்.

“அது வந்து..சும்மா ஸ்னாக்ஸ் பாஸ். குழல் வடகம்..என் பொண்ணுக்கு பிடிக்கும், இங்க இண்டியன் ஸ்டோர்ல கிடைக்குது, எங்கூர்ல கிடைக்கறதில்ல”

நம்மூர் பெட்டிக்கடைகளில், மஞ்சள் நிறத்தில்,விரக்கடை அளவில் பொறித்து பாக்கெட்டில் விற்கப்படுவதை பார்த்திருப்பீர்கள்.

“அதையும் தான் பேக்ல வைங்களேன், தனியா எதுக்கு ப்ளாஸ்டிக் பேகை போய் ஏர்போர்ட்ல தூக்கிக்கிட்டு?”

“இல்ல, எம்பொண்ணு அஞ்சுவிரல்லயும் மோதிரம் போல போட்டுக்கிட்டு சாப்பிடுவா. பைல, பொட்டில வெச்சா நொறுங்கிருது, கைலயே எடுத்து போயிருவேன் பாஸ்”

அப்போது அந்த ரூம்மேட் பார்த்த பார்வையில் வியப்பா, குழப்பமா, பரிதாபமா என தெரியவில்லை.  பட்டென்று எதுவோ அறுந்தது உள்ளுக்குள். என்னவோ தொண்டையடைக்கும் துக்கம். கரைபுரண்ட கழிவிரக்கம். பாத்ரூமுக்குள் சன்னமாய் அழுதேன். வாராவாரம் அமெரிக்காவின் கிழக்கு,மேற்கு முனைகளுக்குமாய், இரண்டு ஃப்ளைட் பிடித்து, டைம்சோன்கள் மாறிமாறி உடலும், மனமும் களைப்புமாய், மகள் இரவு தூங்குவதற்குள் ஊர்ப்போய் சேரவேண்டும் என்பது புரியாது “இன்னும் லேட்டாய் தான் போயேன்” என்ற மேனேஜரை சமாளித்து, 2 வயது குழந்தையோடு தனியே மனைவி சிரமப்படுகிறாளே என்ற தவிப்புமாய் எல்லாம் சேர்ந்த அழுகை.

அந்த அழுகையை,தவிப்பை எனக்கு மீட்டெடுத்துக் கொடுத்திருக்கிறது தங்க மீன்கள்.

அடிப்படையில் தங்கமீன்கள் ஒரு தோற்றவனின் கதை. “செய்யவேண்டிய வயதில் ஒன்னையாவது ஒழுங்கா செஞ்சிருக்கியா” என கேட்கப்படுவனின் கதை. இங்கு எல்லா தேடல்களும்,வேட்டைகளும்,அப்பன்காரன்களின் பயணங்களும் தன் பெண்டு,பிள்ளைகளுக்கான சோத்துக்கும்,பாதுகாப்புக்கும் தான். நிதானமான வேலை,நேரத்தில் வீடுதிரும்பல் என்ற வாழ்க்கையை தான் பலரும் விரும்புகிறோம். அப்படியான comfort zone-இல் வாழும் ஒருவனை, வாழ்வு அதற்கு வெளியே நெட்டித்தள்ளுகிறது. அவனது உயிருக்குயிரான மகளை பிரியவைக்கிறது. அதை அவனும், மகளும் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதே தங்கமீன்கள்.

எங்கேயும் எப்போதும்-க்கு பிறகு இதை தமிழின் உருப்படியான படமாக பார்க்கிறேன். இப்படி ஒரு களத்தை எடுக்கத் துணிந்ததற்காக, எடுத்த முயற்சிக்காக, ஹேட்ஸ் ஆஃப் ராம், கௌதம் மேனன் & டீம் !

படத்தின் முதல் காட்சியிலிருந்தே நான் கரையத் தொடங்குகிறேன் (சொல்லப்போனால் இயல்பான புகைப்படங்கள் கொண்ட டைட்டிலில் இருந்தே). சிலகாட்சிகளில் என் கண்ணாடியை தாண்டி மீசை வரை கண்ணீர் வழிய, வழியும் கண்ணீரை துடைத்தால் மனைவி பார்த்துவிடுவாளோ என துடைக்காது விடுகிறேன். மனைவிக்கு முன் அழமுடியாது போகும் ஆம்பளை சோகங்கள்.  

ஒரு நல்ல படம் இன்னதென்று எனக்கு சொல்லத்தெரியவில்லை. என்னை முழுதும் உள்ளிழுத்தால், நான் என்னை மறந்தால், என்னை திரையோடு ஒரு கண்ணுக்கு தெரியாத கயிறோடு பிணைத்தால், என் மனதை கரைத்தால், என்னை கொஞ்சம் நல்லவனாக்கினால் அப்படம் பிடிக்கிறது. இப்படத்தின் கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம்,எடிட்டிங்,லைட்டிங்,ஷாட் கம்போசிஷன்,குறியீடுகள்,இசை, BGM, நடிப்பு எதுவுமே எனக்கு தனியாக புலப்படவில்லை. கல்யாணி, செல்லம்மா என்ற இருவருக்கான வாழ்வில் இரண்டரை மணிக்கூர் ஒரு அங்கமாகிப்போனேன். 

இப்படத்தின் கடைசியில் கல்யாணி சொல்வதாய் ஒரு வசனம் வரும். “எல்லாருமா சேர்ந்து அவகிட்ட இருந்த குழந்தையை கொன்னுட்டீங்களே”
பொதுவாய் அப்பன்காரர்கள் குழந்தைக்கு பெரிதாய் ஏதும் செய்வதில்லை. உணவு ஊட்டுவதில்லை. ஆய் அலம்புவதில்லை, தூங்கப்பண்ணுவதில்லை.ஹோம்வர்க் செய்ய உதவுவதில்லை. நானும் தான். 

ஆனால் ஒன்றை மட்டும் செய்கிறார்கள்.  தன் குழந்தைக்கு முதல் தோழனாக இருக்கிறார்கள், அது மகனாக இருப்பினும், மகளாக இருப்பினும்.  
தன் குழந்தையை குழந்தையாய் வைக்க குழந்தையாகவே மாறுகிறார்கள்.

அப்படி வாழ்ந்த ஒரு அப்பனின் வாழ்க்கையே தங்கமீன்கள். 

அப்படி ஒரு அப்பனே நானும். 

குஷியிடம் இன்னும் கொஞ்சம் நல்ல அப்பாவாய் இருப்பேன். படம் எனக்கு சொல்வதும், செய்ததும் அதை தான். 

என் விமர்சனம் அவ்வளவே.

*

நிற்க, இத்திரைப்படத்துக்கான சில கருத்துக்களுக்கான என் 2 நயாபைசா. 

  • இத்திரைப்படம் melodrama, மிகை,அதீதம் என்ற விமர்சனங்களை காண்கிறேன். நினைவுகள் (memories) என்பதே நம் வாழ்வில் நடந்த மிகைசம்பவங்களின் கோர்த்தல் தானே? நேற்றைய டிபன் என்ன என்பதில்லையே? என்றுமில்லாத செவ்வானமும், பளீர் நிலவும் தானே உங்கள் இன்ஸ்டாகிராமுக்குள் போகிறது? செல்லம்மாவும், கல்யாணியும் எவ்வித கவித்துவமுமின்றி,கரைதலுமின்றி பல நாட்களை கடந்துபோயிருக்கக்கூடும். அவைகளை ராம் திரையில் காட்டவேண்டிய அவசியமில்லையே? எனக்கு தெரிந்து படத்தில் ஒரு கலைப்படத்துக்கான பாசாங்கோ, உங்களை அழவைத்தே ஆகவேண்டும் என்ற வலிய முனைப்போ இல்லை.  
  • ”இப்படி ஒரு அப்பன்காரன் இருப்பானா? பொண்ணு ஒன்னு கேட்டுச்சுன்னா இப்படியா அலைவான்” என்ற கேள்வி. உங்களுக்கான சிம்பிளான பதில், ஆம் நல்ல அப்பன் தன் சத்துக்கு முடிந்தவரை அலைவான். இயலாமையை மனைவியிடம் சொல்லலாம், குழந்தையிடம் முடியாது. அது பெரிய வலி. இப்படத்தின் இரண்டாம் பாதியை கடத்தும் மகள் ஆசைப்படும் அப்பொருள், வெறும் பொருளல்ல. அதனை தன் அத்துணை பள்ளி பிரச்சனைகளுக்கான ஒரு escape routeஆக, ஒரு சர்வரோக நிவாரணியாகத்தான் அக்குழந்தை பார்க்கிறது. 
  • கல்யாணியாக வரும் ராம், செல்லம்மாவாக வரும் சாதனாவின் நடிப்பு கொஞ்சம் மிகை என்பது. செல்லம்மா போல் இரண்டாம் கிளாஸ் படிக்கும் மகள் எனக்குண்டு. மிகை குழந்தைக்கான இயல்பு. அதீத முகபாவங்கள், வெடிச்சிரிப்புகள் கொண்டதே குழந்தை. அது மட்டுப்பட தொடங்கும் நொடியில் அவர்கள் குழந்தைகள் இல்லை. போலவே, ராமினுடைய நடிப்பும் மிகையில்லை. காசில்லாதவனின் கெஞ்சல்,கையறுநிலை அழுகைகள் அப்படித்தான் இருக்கும். 
  • பரோட்டா மாஸ்டருக்கு 18000 கிடைக்கிறது, வெறும் 4000 ரூபாய் செக்யூரிட்டி வேலைக்கு வெளியூர் போகிறான் என்ற இணைய கருத்துக்கள். உங்கள் வேலை போனால், நீங்கள் பரோட்டா தட்டுவீர்களா, அராத்து? இவ்வருடம் BE முடித்த இளைஞர்கள் ஏன் 6000ரூ கால் செண்டர் வேலைக்கு போகிறார்கள்? பரோட்டா தட்டலாமே? எது வருமோ, முடியுமோ அதைத்தான் செய்யமுடியும். இன்றைய தேதியில், எவ்வித பெரிய பயிற்சியும் தேவைப்படாத, ஓரளவுக்கு எளிதில் கிடைக்கும் வேலை செக்யுரிட்டி வேலை தான். 
  • ”டேய், உனக்கு பொண்ணுடா, நீ ’அப்பா’வா படத்தை ரசிச்சிருக்க” என்றார் ஒரு சகோதரி. இல்லைக்கா, அப்படியில்லை. தாரே சமீன் பர் இஷான் அவஸ்தி பெண் இல்லையே. அவனுக்கு இதைவிடவும் கண்ணீர் உகுந்தேன். அப்பனாகும் தகுதி கூட இல்லாத வயதில் அஞ்சலி பாப்பாவுக்கும் அழுதேன். இப்படம் ஒரு அனுபவம். அவரவர் கண்ணீர் அவரவர்க்கு. அவரவர் இளகுதல் அளவு அவரவர்க்கு. ஒரு இழவுக்கு எல்லாருமா ஒரே அளவு அழுகிறார்கள்?

கொசுறு: இப்படத்தை படம் வெளிவந்த சனிக்கிழமை மாலை டொராண்ட்டோ நகரின் பெரிய இந்தியத்திரைப்பட காம்ப்ளெக்சில் வெறும் நான்கு பேரோடு பார்த்தேன். அனைத்து வெகுஜன படங்களுக்கும் கெட்ட கூட்டம் வரும் ஊர் இது. இதுபோன்ற முயற்சிகளை பார்த்துவிட்டாவது திட்டுங்கள் தமிழர்களே :-(