Saturday, December 8, 2012

நாகிர்தனா திரனனா..: ஒரு மார்க்கமான இசைப்பார்வை


சிலசமயம் சிலரை, சிலதை காரணமேயில்லாமல் பிடிக்கும். அல்லது பிடித்தபின் காரணத்தை தேடுவோம். எனக்கு இப்பாடல் அவ்வகை.
இப்பாடல், ராஜாவின் எந்த கிளாசிக் லிஸ்டிலும் வராது. ட்விட்டர்க்காரர்கள் சிலாகிக்கும் ’ரேர்’ லிஸ்டிலும் வராது. தாரை தாரையாக நீரெல்லாம் வரவைக்காது (கண்ணில்). இசையருவி, சன்மியூசிக்கில் வராது. அவ்வளவு ஏன், ராஜாவின் கச்சேரியிலேயே பாடப்படுவதில்லை.

அட, இப்பாடல் ‘நீங்க நான் ராஜா சார்”ல கூட வரலை சார்..

”அப்படியென்ன பாட்டு சார், அவ்வளவு நல்லா இருக்குமா” என ஜாக்கிசேகர் ப்ளாகில் வரும் ‘நானே கேள்வி நானே பதில்’ வாசகர் போல் கேட்டீர்களேயானால், அதற்கு ஜாக்கியின் உலகப்புகழ்பெற்ற வார்த்தையை தான் பதிலாக சொல்லவேண்டும். இப்பாடலை விளக்க அந்த ஒத்த வார்த்தையை ஒத்த வார்த்தை இல்லை.

சின்னவீடு படத்தின் ‘அட மச்சமுள்ள’ பாடலே பற்றியே இப்பதிவு. அது வெளிவந்த நாளிலிருந்து எல்லாம் என்னை தொடரவில்லை, படரவில்லை. படம் வந்தபோது நான் பிறந்துவிட்டிருந்தேன் தான். மங்கலாக யார் மடியிலோ தியேட்டரில் பார்த்த ஞாபகம். சாரு அடிக்கடி ‘டயனோசியன் ஸ்பிரிட்’ என ஒரு வெறித்தனமான உற்சாகத்தை சொல்வார். அதை இப்பாடல் எனக்கு வாரிவாரி வழங்குகிறது. என்னை துரத்தி துரத்தி அடிக்கிறது. சுழட்டி சுழட்டி வீசுகிறது. படுத்தி படுத்தி எடுக்கிறது. இப்பாட்டை கேட்கும் போதெல்லாம் சுறுசுறுன்னு வரும். பரபரன்னு இருக்கும். ஜிவுஜிவுன்னு ஏறும்.

அடுக்குத்தொடர், இரட்டைக்கிளவி பில்ட்-அப்புகள் ஓவர். ஈறுகெட்ட.. என எதிர்மறையாய் நீங்கள் திட்ட ஆரம்பிப்பதற்குள் பாட்டுக்குள் போவோம்.

இப்பாடலின் premise மிக சிம்பிள். பாக்யராஜ், கவனிக்க, பாக்யராஜ் ‘சின்னவீடு’ என ஒரு படம் எடுக்கிறார். சப்ஜெக்ட்? சின்னவீடு தான். சிச்சுவேசன்? பாக்யராஜுக்கு ஒரு மார்க்கமாக கனவு வருகிறது (பின்ன சுத்தசமரச சன்மார்க்கமாகவா வரும்?). அதில் நான்கு நடன நாரீமணிகளுடன் ஜலமில்லா கிரீடை. ‘மேட்டர்’ அவ்வளவே. இப்படி ஒரு சிச்சுவேஷனுக்கு ராஜா சிம்பொனி படைத்துவிட முடியாது. இசையை மார்க்கமாக கொண்டவர், ஒரு மார்க்கமான இசையை தரவேண்டிய சூழல். ஆனால் அதிலும் கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார் பாருங்கள்.. ஒவ்வொரு அதென்னாது இந்த இதும்பாய்ங்களே.. சவுண்டுகிளவுடுல வருமே..ஆங், ’மார்க்கருக்கும்’ அராஜகமான இசை கொடுத்திருக்கிறார்.சில பாடல்கள் மெட்டமைக்கப்படும் போதே அதன் படமாக்கமும் இணைந்தே பயணிக்கும். இப்பாடல் அவ்வகை. ”சார், பாட்டுல என்ன சமாசாரம்ன்னா அத்தினி,பத்தினி,பத்மினி,சங்கினின்னு நாலு கேர்ள்சை ஆடவிடுறோம்” என பாக்யராஜ் கரகர குரலில் சொல்லியிருக்கக்கூடும். ஒரு சிறிய வசன போர்ஷனுடன் சன்னமாக ஆரம்பிக்கும் பாடல்,  அது முடிந்தவுடன் ரமணனே எதிர்பாராத ஒரு சென்னை பெருமழையாய் சடசடவென அடித்து தீர்த்துவிடும்!!


கண்டிப்பாக இது மெட்டுக்கு போடப்பட்ட பாட்டு தான்.  ”அட மச்சமுள்ள மச்சான்..நான் புது வித ரகம்..கைய வெச்சா உள்ளே..நீ நினைக்கிற சுகம்” என பல்லவி. இதை யாரும் முன்கூட்டியே கவிதை தொகுப்பில் “நெஞ்சுக்குள்ள உம்ம” அல்லது “கண்ணுக்கு மை அழகு” ரேஞ்சுக்கு எழுதி வைத்திருக்க முடியாது. ட்யூன் போடுகையில் போட்ட டம்மி பல்லவியாக கூட இருக்கலாம். போதுமே, என்ன தேவாரமா பாடுகிறோம்.. வாங்கிய பேமெண்டுக்கு கவிஞர் முத்துலிங்கத்தின் ஓவ்வொரு வார்த்தை மூவ்மெண்டும் மீட்டருக்கும் சிச்சுவேஷனுக்கும் கனகச்சிதம்.

இசை/ஆர்க்கெஸ்ட்ரேஷனுக்கு வருவோம். எனக்கு இசையை விளக்குவதில் நம்பிக்கையில்லை. ட்ரம்பெட் துடிக்க, வயலின் வழுக்க, கஞ்சிரா கதற, ட்ரம்ஸ் தறிகெட்டு ஓட, ஹைவேல மேலே போயி,கீழே வந்து விளக்கங்கள் அலர்ஜி.  சுருங்கச் சொல்கிறேன்.

இண்டர்ல்யூட் முழுக்க ராஜாவின் டிரம்மர் ’புரு’ அங்கிள் ராஜாங்கம். (என் அங்கிள் எல்லாம் இல்லை, இசை விமர்சனம்ன்னா உரிமையா இப்படி சொல்லோனும்) .  ”பூமாலை ஒரு பாவையானது”இல் “லலலா லலலா..ஆஆஅ..ஆஆ” என எஸ்பிபி முடிக்கையில் ஒரு காட்டடி அடித்திருப்பாரே..அதற்கு சற்றும் குறைவில்லாமல் இதிலும் அடித்திருப்பார். கூடவே ட்ரம்பெட்,வயலின் எல்லாம் LICயில் சிக்னலை பச்சைக்குள் தாண்டிவிடும் வாகனங்களாய் பேயோட்டம் ஓடும்.

சரணத்திற்கான எண்ட்ரியில் தான் ராஜா என்ற ரசவாதியை காணலாம்.

பெரிய ப்ரிட்ஜை “கடகட படபட கடகட படபட”வென சபாபதி T.R.ராமச்சந்திரன் போல் கடந்து முடிந்தவுடன், ட்ரெய்ன் “டிடிக் டிடிக்..டிடிக் டிடிக்” என தன் ஆதார தாளத்துக்கு திரும்புமே..அந்த திரும்பல் போல் அவ்வளவு seamlessஆக, ஐந்தே செகண்டுக்கு ஒரு வயலின் பிட் போட்டு சரணத்துக்கு லீடு அமைத்து கோர்த்திருப்பார் ராஜா..He's an Alchemist, No doubt about it!!

இப்பாடலில் சரணம் ஒரு ப்யூட்டி. சில சரணங்கள், பல்லவிக்கும் அதுக்கும் ஸ்னானப்ராப்தியே இருக்காது. ’சினேகிதனே’வின் “சின்ன சின்ன அத்துமீறல் புரிவாய்” போல.. (மன்னிக்க, வேறு உதாரணம் கிடைக்கவில்லை. ரஹ்மான் காண்டு எல்லாம் கிடையாது என்றால் நம்பனும் :)). ஆனால், இப்பாடல் சரணம், பல்லவிக்கு பின்னால் வெகுபாந்தம், கனபொருத்தம், பல்லவியையும் மிஞ்சிய அழகு, சதாசிவம் பின் நிற்கும் எம்.எஸ் போல்.


இதுவரை பாடகர்களை பற்றி சொல்லவில்லை. சொல்ல சரணம் நல்ல தருணம் (நோட் பண்ணுங்கப்பா..). எஸ்.ஜானகி-SP.சைலஜா என இரு பாடகிகள் காம்பினேஷன். “என்னைக்கும் இல்லாம இன்னைக்கு உன்மேல அஆசை” என ’ஆசை’யில் மேலதிகமாய் அரைமாத்திரை போட்டு போதைமாத்திரையாய் ஆரம்பிப்பார் ஜானகி. அதுக்கே ஹெட்ஃபோன் காசு போச்சு!  அடுத்தவரியில் சன்னமாக ”எப்பப்ப வந்தாலும் அப்பப்ப கல்யாண பூசை” என SP.சைலஜா தொடர்வார். பாடல் முழுவதும் எஸ்.ஜானகி பேயாய் அடிக்க, சைலஜாய் அழகாய் ஸ்ட்ரைக் ரொடேட் செய்து காஜி விட்டுத்தருவார். இந்த ஆசை,பூசைக்கு பிறகு ஒரு சின்ன ம்யுசிக் வரும். அதில்லாமல் அவ்வரி முழுமையடையாது என்பதை போல். ராஜாவின் பாடல்களில் வரிகளையும்,இசையையும் பிரிக்கவே இயலாது. நீங்கள் ஹம் செய்தால் ம்யூசிக்கோடு சேர்ந்தேதான் செய்யவேண்டும்.


முதல் சரணம் முடிந்துதான் எஸ்பிபி எண்ட்ரியே. ஒரு சமீப பேட்டியில் பாடகர் ஹரிசரண் சொன்னார் ’ஒரு காலக்கட்டத்தில் எஸ்பிபி சாருக்கு குரல் பட்டுமாதிரி வழவழன்னு இருக்கும்’ என. அக்காலக்கட்டம் இதுவாய்த்தான் இருக்கவேண்டும். உண்மையில் சொல்கிறேன். இப்பாடல் போல் இனிமையாக நான் எஸ்பிபியை எதிலுமே கேட்டதில்லை. அவரின் எல்லாப்பாடல்களைப் போலவும் இதில் டைனமிக்ஸ்/குரல்சேட்டைகள் சிறப்பு தான். ஆனால் இதில் குரல்தான் ஹைலைட்.

இப்பாடலில் இந்த மூன்று பாடகர்கள் தவிர இன்னொரு மகானுபாவர் உண்டு. அவர் இல்லாவிடில் இப்பாடலுக்கு தனித்துவம் இல்லை என்பது என் துணிபு. அவர் டிவிஜி. கர்னாடக வித்வான் டி.வி.கோபாலகிருஷ்ணன். இப்பாடலுக்கான விசிட்டிங் கார்டான ‘நாகிர்தனா திரனனா” என்ற மறக்கவே முடியாத ஜதிக்கோர்வையை பாடியவர். வெங்கட்பிரபு கோவாவில் மறுபடி பிரபலமாக்கியது. ராஜபார்வை அந்திமழை முதற்கொண்டு பல ராஜா பாடல்களில் இவருண்டு. நாகிர்தனாவும் புதிதல்ல. டிக் டிக் டிக்கில் ‘இது ஒரு நிலாக்காலம்’  பாடலில் மாதவி ஆட்டத்தில் இன்னொரு அமர்க்களமான நாகிர்தனாவும் உண்டு. அதை இங்கு காணலாம்.


சிலசமயம் பவுலர்கள் ஒன் டவுன் இறங்கி கலக்குவார்களே..அதுபோல் பல்லவியிலேயே பாட்டின் மூடை புரிந்தோ, புரியாமலோ “நாகிர்த்னா திரனா.. தகதிமிதா” என்பதுபோல் பல்லவியின் ஒவ்வொரு வரிக்கும் கவுண்ட்டர்களாக அடி வெளுப்பார். பல்லவி முடிந்தவுடன் “நாகிர்தனாஆஆ.. திரனனா” என இழுத்து ஆரம்பிப்பார் பாருங்கள், வாவ்வ்..அதற்கு கூடவே மோர்சிங்,மிருதங்கம் என தொடரும் குறும்பான இசை..தலப்பாக்கட்டில ரவுண்ட்கட்டின கேபிள்சங்கர் சொல்வது போல் ம்ம்ம் டிவைன் !!

எனக்கு இதுதான் சந்தேகம். இதில் டிவிஜி அவர்களை உள்ளே நுழைக்கவேண்டும் என்ற எண்ணம் எங்கே வந்தது? ஏன் வந்தது? எப்படி வந்தது? எப்போது வந்தது?

டிவிஜியின் ஜதிகள் இல்லாமலும் இப்பாடலுக்கு ஒரு முழுமை உண்டுதான். ஆனால், டிவிஜி இல்லாது இப்பாடல் இல்லை. இதென்ன முரண்?

இங்கு தான் ராஜாவின் ஜீனியஸ்சை உணர்கிறேன்.

இப்பாடல் ஹீரோ கனவில் காணும் ’சமாசாரமான’ பாடல். அதே சமயம் ஒரு psychedelic அனுபவத்தை, கிட்டத்தட்ட சொப்பனஸ்கலித அனுபவத்தை மிக பாலீஷாய் இசையில் தரவேண்டும். இப்போது டிவிஜியின் ஜதிகளை பொருத்திப்பாருங்கள். இதைவிட கிளாசாய் இவ்விஷயத்தை வெளிக்கொணர முடியாது. குஷியின் ‘கட்டிப்புடி’ வரை இப்பாணி கடைப்பிடிக்கப்படுகிறது.

என்னைப்பொருத்தவரை இது ஒரு கல்ட் பாடல். ’அம்மா என்றழைக்காத’, ‘கண்ணே கலைமானே’,’அஞ்சலி அஞ்சலி அஞ்சலி’ போன்ற வாகான சிச்சுவேஷன் பால்கள் வராவிட்டால் என்ன, எந்த பாலையும் ஃபோருக்கு விரட்டும் மாயம். ராஜமாயம்.

அமரன் சமீபத்தில் சொன்னார் “நாங்க பார்க்காத பார்ட்டியா? ஒரு கட்டத்துல்ல அண்ணன் குடி,பார்ட்டி,கொண்டாட்டம் எல்லாத்தையும் விட்டுட்டார்”.

இப்பாடலை ராஜா கொண்டாட்டமாய் வாழ்ந்த காலத்தில் தான் போட்டிருப்பார்.


பி.கு: இப்பாடலின் கேசட் கவர் இங்கே காணலாம். தந்துதவிய எழுத்தாளர் சொக்கனுக்கு நன்றி. முதல் ராஜா படமும் அவரிடமிருந்து சுட்டது தான் :-)
http://musicalaya.net/imgviewer.php?mod=lpcovers/157/3/1/1
டிக்டிக்டிக் நாகிர்தனாவை ஞாபகப்படுத்தி லின்க் தந்த நண்பர் @vinaiyookiக்கும் நன்றி..