பொதுவாய் சினிமா விமர்சனம் எழுதுபவனில்லை. இது விமர்சனமுமில்லை.
நாளை நான் இல்லாது போகலாம். தங்கமீன்களை பார்த்த ஒரு அப்பன்காரன் இருந்தான், அத்திரைப்படம் அவனை என்ன செய்தது என உரக்கச் சொல்லவே இப்பதிவு.
கூடடைதலே வாழ்க்கை.எல்லா பயணங்களும் வீடு திரும்பலுக்காகவே என்பதென் நம்பிக்கை. எனக்கு இரவு வீடு திரும்பவேண்டும். மனைவி என் தோளில் பொதிந்து கோழிக்குஞ்சாய் உறங்கவேண்டும். அன்றைய கந்தாயத்துக்கு என் மகளின் உச்சந்தலையில் முத்தமிட்டுவிட வேண்டும்.
2008 கடைசி என நினைவு. அமெரிக்க இந்தியர்கள் வாழ்வில் பாலும்,தேனும் ஓடாத காலக்கட்டம் அது. ரிசஷன், ஐடி டவுன் என்றார்கள். எனக்கு ப்ராஜக்ட் போனது. ‘தம்பி,உனக்கு சம்பளம் வேணும்னா வேற ஊருக்கு போய்த்தான் ஆகனும்’ என மிரட்டியது கம்பெனி. அதுவும் ஒருமாத,இருமாத அலைச்சல் சிறு கன்சல்டிங் ப்ராஜக்டுகள். வேலை பார்க்கும் மனைவி, 2 வயது மகளை -30 டிகிரி போகும் ஊரில் தனியே விட்டு பொட்டியை தூக்கினேன். ஓரிரு வாரத்துக்கு ஒரு முறை ஊருக்கு வந்துவிடுவேன் தான். ஆனால், அதற்கும் இருப்புக்கொள்ளாது.
போன ஊரில் ஏதோ ஒரு இந்தியன் ரூம்மேட்டுடன் சிக்கனக்குடித்தனம். “வாங்க பாஸ்”த்தன நண்பரில்லாத நண்பர்களுடன் அளவளாவல்,தரையில் நியூஸ்பேப்பர் விரித்து சாப்பாடு என்றானது வாழ்க்கை. ஒரு வெள்ளிக்கிழமை என நினைக்கிறேன். அறையில் பெட்டியை எடுத்துக்கொண்டு ஃப்ளைட் பிடிக்கும் அவசரத்தில் நான். கையில் தனியே 2 ப்ளாஸ்டிக் பேகுகள்.
“என்ன பாஸ் அது தனியா ப்ளாஸ்டிக் பேக்ல?” ப்ராஜக்ட் இல்லாது வெறுமனே படுத்துக்கொண்டிருந்த ரூம்மேட் கேட்டான்.
“அது வந்து..சும்மா ஸ்னாக்ஸ் பாஸ். குழல் வடகம்..என் பொண்ணுக்கு பிடிக்கும், இங்க இண்டியன் ஸ்டோர்ல கிடைக்குது, எங்கூர்ல கிடைக்கறதில்ல”
நம்மூர் பெட்டிக்கடைகளில், மஞ்சள் நிறத்தில்,விரக்கடை அளவில் பொறித்து பாக்கெட்டில் விற்கப்படுவதை பார்த்திருப்பீர்கள்.
“அதையும் தான் பேக்ல வைங்களேன், தனியா எதுக்கு ப்ளாஸ்டிக் பேகை போய் ஏர்போர்ட்ல தூக்கிக்கிட்டு?”
“இல்ல, எம்பொண்ணு அஞ்சுவிரல்லயும் மோதிரம் போல போட்டுக்கிட்டு சாப்பிடுவா. பைல, பொட்டில வெச்சா நொறுங்கிருது, கைலயே எடுத்து போயிருவேன் பாஸ்”
அப்போது அந்த ரூம்மேட் பார்த்த பார்வையில் வியப்பா, குழப்பமா, பரிதாபமா என தெரியவில்லை. பட்டென்று எதுவோ அறுந்தது உள்ளுக்குள். என்னவோ தொண்டையடைக்கும் துக்கம். கரைபுரண்ட கழிவிரக்கம். பாத்ரூமுக்குள் சன்னமாய் அழுதேன். வாராவாரம் அமெரிக்காவின் கிழக்கு,மேற்கு முனைகளுக்குமாய், இரண்டு ஃப்ளைட் பிடித்து, டைம்சோன்கள் மாறிமாறி உடலும், மனமும் களைப்புமாய், மகள் இரவு தூங்குவதற்குள் ஊர்ப்போய் சேரவேண்டும் என்பது புரியாது “இன்னும் லேட்டாய் தான் போயேன்” என்ற மேனேஜரை சமாளித்து, 2 வயது குழந்தையோடு தனியே மனைவி சிரமப்படுகிறாளே என்ற தவிப்புமாய் எல்லாம் சேர்ந்த அழுகை.
அந்த அழுகையை,தவிப்பை எனக்கு மீட்டெடுத்துக் கொடுத்திருக்கிறது தங்க மீன்கள்.
அடிப்படையில் தங்கமீன்கள் ஒரு தோற்றவனின் கதை. “செய்யவேண்டிய வயதில் ஒன்னையாவது ஒழுங்கா செஞ்சிருக்கியா” என கேட்கப்படுவனின் கதை. இங்கு எல்லா தேடல்களும்,வேட்டைகளும்,அப்பன்காரன்களின் பயணங்களும் தன் பெண்டு,பிள்ளைகளுக்கான சோத்துக்கும்,பாதுகாப்புக்கும் தான். நிதானமான வேலை,நேரத்தில் வீடுதிரும்பல் என்ற வாழ்க்கையை தான் பலரும் விரும்புகிறோம். அப்படியான comfort zone-இல் வாழும் ஒருவனை, வாழ்வு அதற்கு வெளியே நெட்டித்தள்ளுகிறது. அவனது உயிருக்குயிரான மகளை பிரியவைக்கிறது. அதை அவனும், மகளும் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதே தங்கமீன்கள்.
படத்தின் முதல் காட்சியிலிருந்தே நான் கரையத் தொடங்குகிறேன் (சொல்லப்போனால் இயல்பான புகைப்படங்கள் கொண்ட டைட்டிலில் இருந்தே). சிலகாட்சிகளில் என் கண்ணாடியை தாண்டி மீசை வரை கண்ணீர் வழிய, வழியும் கண்ணீரை துடைத்தால் மனைவி பார்த்துவிடுவாளோ என துடைக்காது விடுகிறேன். மனைவிக்கு முன் அழமுடியாது போகும் ஆம்பளை சோகங்கள்.
ஒரு நல்ல படம் இன்னதென்று எனக்கு சொல்லத்தெரியவில்லை. என்னை முழுதும் உள்ளிழுத்தால், நான் என்னை மறந்தால், என்னை திரையோடு ஒரு கண்ணுக்கு தெரியாத கயிறோடு பிணைத்தால், என் மனதை கரைத்தால், என்னை கொஞ்சம் நல்லவனாக்கினால் அப்படம் பிடிக்கிறது. இப்படத்தின் கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம்,எடிட்டிங்,லைட்டிங்,ஷாட் கம்போசிஷன்,குறியீடுகள்,இசை, BGM, நடிப்பு எதுவுமே எனக்கு தனியாக புலப்படவில்லை. கல்யாணி, செல்லம்மா என்ற இருவருக்கான வாழ்வில் இரண்டரை மணிக்கூர் ஒரு அங்கமாகிப்போனேன்.
இப்படத்தின் கடைசியில் கல்யாணி சொல்வதாய் ஒரு வசனம் வரும். “எல்லாருமா சேர்ந்து அவகிட்ட இருந்த குழந்தையை கொன்னுட்டீங்களே”
பொதுவாய் அப்பன்காரர்கள் குழந்தைக்கு பெரிதாய் ஏதும் செய்வதில்லை. உணவு ஊட்டுவதில்லை. ஆய் அலம்புவதில்லை, தூங்கப்பண்ணுவதில்லை.ஹோம்வர்க் செய்ய உதவுவதில்லை. நானும் தான்.
ஆனால் ஒன்றை மட்டும் செய்கிறார்கள். தன் குழந்தைக்கு முதல் தோழனாக இருக்கிறார்கள், அது மகனாக இருப்பினும், மகளாக இருப்பினும்.
தன் குழந்தையை குழந்தையாய் வைக்க குழந்தையாகவே மாறுகிறார்கள்.
அப்படி வாழ்ந்த ஒரு அப்பனின் வாழ்க்கையே தங்கமீன்கள்.
அப்படி ஒரு அப்பனே நானும்.
குஷியிடம் இன்னும் கொஞ்சம் நல்ல அப்பாவாய் இருப்பேன். படம் எனக்கு சொல்வதும், செய்ததும் அதை தான்.
என் விமர்சனம் அவ்வளவே.
*
நிற்க, இத்திரைப்படத்துக்கான சில கருத்துக்களுக்கான என் 2 நயாபைசா.
- இத்திரைப்படம் melodrama, மிகை,அதீதம் என்ற விமர்சனங்களை காண்கிறேன். நினைவுகள் (memories) என்பதே நம் வாழ்வில் நடந்த மிகைசம்பவங்களின் கோர்த்தல் தானே? நேற்றைய டிபன் என்ன என்பதில்லையே? என்றுமில்லாத செவ்வானமும், பளீர் நிலவும் தானே உங்கள் இன்ஸ்டாகிராமுக்குள் போகிறது? செல்லம்மாவும், கல்யாணியும் எவ்வித கவித்துவமுமின்றி,கரைதலுமின்றி பல நாட்களை கடந்துபோயிருக்கக்கூடும். அவைகளை ராம் திரையில் காட்டவேண்டிய அவசியமில்லையே? எனக்கு தெரிந்து படத்தில் ஒரு கலைப்படத்துக்கான பாசாங்கோ, உங்களை அழவைத்தே ஆகவேண்டும் என்ற வலிய முனைப்போ இல்லை.
- ”இப்படி ஒரு அப்பன்காரன் இருப்பானா? பொண்ணு ஒன்னு கேட்டுச்சுன்னா இப்படியா அலைவான்” என்ற கேள்வி. உங்களுக்கான சிம்பிளான பதில், ஆம் நல்ல அப்பன் தன் சத்துக்கு முடிந்தவரை அலைவான். இயலாமையை மனைவியிடம் சொல்லலாம், குழந்தையிடம் முடியாது. அது பெரிய வலி. இப்படத்தின் இரண்டாம் பாதியை கடத்தும் மகள் ஆசைப்படும் அப்பொருள், வெறும் பொருளல்ல. அதனை தன் அத்துணை பள்ளி பிரச்சனைகளுக்கான ஒரு escape routeஆக, ஒரு சர்வரோக நிவாரணியாகத்தான் அக்குழந்தை பார்க்கிறது.
- கல்யாணியாக வரும் ராம், செல்லம்மாவாக வரும் சாதனாவின் நடிப்பு கொஞ்சம் மிகை என்பது. செல்லம்மா போல் இரண்டாம் கிளாஸ் படிக்கும் மகள் எனக்குண்டு. மிகை குழந்தைக்கான இயல்பு. அதீத முகபாவங்கள், வெடிச்சிரிப்புகள் கொண்டதே குழந்தை. அது மட்டுப்பட தொடங்கும் நொடியில் அவர்கள் குழந்தைகள் இல்லை. போலவே, ராமினுடைய நடிப்பும் மிகையில்லை. காசில்லாதவனின் கெஞ்சல்,கையறுநிலை அழுகைகள் அப்படித்தான் இருக்கும்.
- பரோட்டா மாஸ்டருக்கு 18000 கிடைக்கிறது, வெறும் 4000 ரூபாய் செக்யூரிட்டி வேலைக்கு வெளியூர் போகிறான் என்ற இணைய கருத்துக்கள். உங்கள் வேலை போனால், நீங்கள் பரோட்டா தட்டுவீர்களா, அராத்து? இவ்வருடம் BE முடித்த இளைஞர்கள் ஏன் 6000ரூ கால் செண்டர் வேலைக்கு போகிறார்கள்? பரோட்டா தட்டலாமே? எது வருமோ, முடியுமோ அதைத்தான் செய்யமுடியும். இன்றைய தேதியில், எவ்வித பெரிய பயிற்சியும் தேவைப்படாத, ஓரளவுக்கு எளிதில் கிடைக்கும் வேலை செக்யுரிட்டி வேலை தான்.
- ”டேய், உனக்கு பொண்ணுடா, நீ ’அப்பா’வா படத்தை ரசிச்சிருக்க” என்றார் ஒரு சகோதரி. இல்லைக்கா, அப்படியில்லை. தாரே சமீன் பர் இஷான் அவஸ்தி பெண் இல்லையே. அவனுக்கு இதைவிடவும் கண்ணீர் உகுந்தேன். அப்பனாகும் தகுதி கூட இல்லாத வயதில் அஞ்சலி பாப்பாவுக்கும் அழுதேன். இப்படம் ஒரு அனுபவம். அவரவர் கண்ணீர் அவரவர்க்கு. அவரவர் இளகுதல் அளவு அவரவர்க்கு. ஒரு இழவுக்கு எல்லாருமா ஒரே அளவு அழுகிறார்கள்?
கொசுறு: இப்படத்தை படம் வெளிவந்த சனிக்கிழமை மாலை டொராண்ட்டோ நகரின் பெரிய இந்தியத்திரைப்பட காம்ப்ளெக்சில் வெறும் நான்கு பேரோடு பார்த்தேன். அனைத்து வெகுஜன படங்களுக்கும் கெட்ட கூட்டம் வரும் ஊர் இது. இதுபோன்ற முயற்சிகளை பார்த்துவிட்டாவது திட்டுங்கள் தமிழர்களே :-(
டெஸ்ட்..
ReplyDeleteithu oru thagappanin vimarsanam aagave mariyathaikuriyathu...
Deletetake care ur daughter..
-sathish
ஒட்டு மொத்த ரசனைகளின் உச்சம்..!
Deleteவெகு இயல்பான எழுத்துக்களால் உமது பகிர்தலும் ஆனந்த யாழை மீட்டுகிறது ...!
Deleteஎல்லா பதிவுகளுக்கும் உடனே கமெண்ட் எழுத தோணாது.இந்தப் படம் ட்ரைலர் என்னை ஈர்க்கவே இல்லை என்பதை ட்ரைலர் வந்த இரண்டு நாட்களிலேயே பதிவு செய்தேன். காரணம் அனைவரும் சொல்கின்ற அதீதம் தான் . ஈர்க்காததற்கு இன்னும் ஆழ்ந்த காரணம் இது போன்ற friendly தகப்பனை இங்கே நிறைய பேர் அறிந்ததே இல்லை . என் தந்தையிடம் இறுதியாக எப்பொழுது முத்தம் வாங்கினேன் என்று இன்று வரை நினைவில் இல்லை .ஐந்து வயதில் இருந்து நடந்தவை ஒரு விதமாக நினைவில் இருக்கத் தான் செய்கிறது எனினும் .
ReplyDeleteஅதனால் தானோ என்னவோ அதிகம் கொஞ்சும் அப்பாக்களைப் பார்க்க நேரும் பொழுது இது யதார்த்தம் அல்ல என்று மனம் சமாதானம் செய்து கொள்கின்றது .பூசி மெழுகுகிறது .இந்தப் பதிவுக்கு கமெண்ட் எழுதத் தூண்டியது கதையில் நீங்க குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் அல்ல .மகளுக்காக உடையும் மோதிரத்தை பத்திரமாகக் கொண்டு சென்ற உங்கள் நெகிழ வைக்கும் அன்புதான். பல தடவை கவனித்து இருக்கிறேன் .நீங்கள் ஒரு எமோஷனல் இடியட் .ஆனால் அதையும் ரசிக்கும் வகையில் செய்து வாழ வேண்டியதன் அர்த்தத்தை உருவாக்கிக் கொண்டதால் எப்பவுமே இப்படியே இருந்துடுங்க :) அவருக்கென்னப்பா பாரின் சம்பளம் என்று எளிதாகச் சொல்வதுண்டு .ஆனால் எதுவும் அவ்வளவு எளிதில் கிட்டி விடுவதில்லை என்பதை வெகு எளிமையான வார்த்தைகள் அப்பட்டமாக காட்டி இருக்கீங்க .இந்தப் படத்தை அதீத உணர்ச்சி என்ற பார்வையோடே பார்க்க இருந்தேன். இனி உங்க பார்வையிலும் பார்க்கறேன் . இதுக்கு மேல எழுதினா பதிவை விட நீளமாகிடும் கமெண்ட் .. ரசனையான பதிவு ரசனைக்காரரே :)
எமோஷனல் இடியட்..பிர்ர்ர்ர்ர், ரொம்ப ரசிச்சேன் பின்னூட்டத்தை..இதுமாதிரி கமெண்ட் வரும்னா இன்னும் 4 பதிவு போட்லாம் :))
Deleteநல்ல பதிவு! நல்ல வேளை சென்னையில் பிக் அப் ஆகியுள்ளது. சின்ன சின்ன குறைகளை எல்லாம் நிறைய பேர் பெரிசு படுத்தி விமர்சனம் செய்கிறார்கள். மிகவும் அழகானப் படம். இதே வேற்று மொழியில் வந்திருந்தால் சிலாகித்திருப்பார்களோ என்னவோ?
ReplyDeleteamas32
ரொம்ப நன்றிம்மா..ஆமா, ஹிந்தி இல்ல மராட்டில வந்திருந்தா தமிழ்ல பிரகாஷ்ராஜ் ரீமேக் பண்ணிருப்பாரு :(
Deleteகலக்கல் அண்ணா :-) கொன்னுட்டீங்க :-)
ReplyDelete//அதை அவனும், மகளும் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதே தங்கமீன்கள்.//இந்த வரிகளுடன் இப்பதிவு முடிந்து விட்டதென நினைக்கிறேன்!உளப்பூர்வமான எழுத்து!நிற்க.என் மகன் கேட்டதையெல்லாம் நான் வாங்கித் தருவதில்லை.ஆனால் ஏன் என்பதை அவனுக்குப் புரிய வைக்க முயற்சிக்கிறேன்!அவன் ஒடிந்து விடக் கூடாது என்பதற்காக!சில நேரங்களில் பொன் இருக்குமிடத்தில் பூ வைக்கவாவது தவறுவதில்லை!இதைத் தான் என் அப்பாவும் எனக்கு செய்தார்!இன்னும் நிறைய எழுதத் தூண்டுகிறது இந்தப் பதிவு!வாழ்த்துகள் நட்ராஜ்!
ReplyDeleteரசனைக்காரர் என்பதை மறுபடியும் நிரூபித்திருக்கிறீர்கள். காதலில், ஒருவன் பத்து பேரை அடிக்கும் சண்டையில் காட்டப்படும் அதீதத்திற்கு பதறாதவர்கள்தான் அன்பின் அதீதத்திற்கு அலறுகிறார்கள். நீங்கள் சொன்னதுபோல் மிகை உணர்வுகளின் நினைவுக் கோர்வைதான் வாழ்க்கை. எல்லா அப்பாக்களுக்கும் இருக்கும் உணர்வுதான். நீங்கள் எழுதிவிட்டீர்கள்.
ReplyDelete// காதலில், ஒருவன் பத்து பேரை அடிக்கும் சண்டையில் காட்டப்படும் அதீதத்திற்கு பதறாதவர்கள்தான் அன்பின் அதீதத்திற்கு அலறுகிறார்கள்//.
Deleteஆமாங்க ... ரெம்ப சரியா சொல்றீங்க ...!
சொல்றேன்னு தப்பா நினைக்காதிங்க. ரசனைக்காரனோ, நடரஜானோ இந்த பதிவை எழுதவில்லை. அந்த படத்தை பார்க்கவில்லை. குஷியின் தகப்பன் ஒவ்வொரு எழுத்திலும் அழுதிருக்கிறான். ஒவ்வொரு பிரேமையும் வாழ்ந்திருக்கிறான். :)
ReplyDeleteபொதுவாக அப்பாக்கள் உணர்ச்சிகளைத் தள்ளி வைப்பவர்களாயிருக்க,ரசனை,உணர்ச்சி மிகுந்தவராக குஷியின் அப்பா இருப்பதால்தானே இந்தப் பதிவு!
Deleteநல்ல பதிவு அண்ணா.. என்னோட viewம் உங்களோட viewம் ஒண்ணா இருப்பதில் மகிழ்ச்சி -Shiva
ReplyDeletetwitter.com/naan_shiva
nice
ReplyDeleteவாரே வாவ்!! செம உணர்வுப்பூர்வமான ரைட்டிங்.. ஒரு அப்பனா எனக்கும் படம் பாக்கனும்னு ஆர்வத்தத் தூண்டுது.
ReplyDeleteஅட்டகாசம்.. நெறைய கமெண்ட் அடிச்சு போஸ்ட்டிங்ல போயிடுச்சு. எல்லாம் டிஎம்ல சொன்னதுதான்.
ReplyDeleteஇதான் இலக்கியம். மிக்க நன்றி.
நல்லதொரு விமர்சனம்
ReplyDeleteஇன்னுமொரு விடயத்தை கவனித்தீர்களா இப்பொதெல்லாம் சமூக தளங்களில் பகிரப்படும் சில யதார்த்தமான கருத்துகளை தமிழ் சினிமா அங்கீகரிக்கிறது என்பதனை அண்மைய சில படங்களில் காண முடிந்ததை அவதானித்தீர்களா
I don't know about the movie but your writing shines. Sensitive, thoughtful, lyrical writing. Congrats:) I see this post as a reflection of you as a father.
ReplyDeleteபேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்று எல்லாப் பருவங்களிலுமே பெண் அழகுதானென்றாலும் அந்த பேதைப் பருவம் அப்பனுக்கு வரப்பிரசாதம்.
ReplyDeleteநம் அலைவரிசை ஒன்றாகவே இருப்பதாலோ என்னவோ உங்கள் உணர்வுகளை என்னால் மிக நன்றாகவே புரிந்துகொள்ள முடிகிறது. சான் ஹோசேவுக்கு அலைந்து திரிந்த காலகட்டத்தில் நானும் இப்படிப்பட்ட மன உளைச்சல்களுக்கு உள்ளானவன்தான்.
"என் பிஞ்சுப்பெண்ணே" (தலைப்பே மறந்து விட்டது, தேடவேண்டும்) என்று என் பிஞ்சுப்பெண்ணைப்பற்றி நான் ராகாகியிலோ மரத்தடியிலோ ஒரு கவிதை போட்டிருந்தேன்.
வளரும் பெண்ணின் தற்காலிக உதாசீனம் பற்றியது அது!
தங்க மீன்கள் பார்க்கவில்லை இன்னும் என்றாலும் மிகவும் ரசித்தேன்!
அட்டகாசம்..very well written...
ReplyDeleteஇன்னும் படம் பாக்கலை. முன்னோட்டமும், சில காட்சிகளும் பார்த்தேன். ராம் படங்களை பாக்கும் பொழுது பல சமயங்களிலே எரிச்சல் வரும். அதாவது, முக்கியமான கான்ஃபரன்ஸ் அழைப்பிலே ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது, சமய சந்தர்ப்பமில்லாமல் ' ப்ளீஸ், இங்க பாருப்பா இங்க பாருப்பா ' என்று தாடையைப் பிடித்து வலித்து தான் வரைந்த படத்தை காண்பிக்க, கவன ஈர்ப்பு செய்து நச்சரிக்கும் மகள் மேல் ஏற்படும் எரிச்சல் போல. ஆனால் அவ்வளவேதான். மற்றபடிக்கு ராம் நம்ம ஆளு என்கிறதிலே எந்த மாற்றமுமில்லை.
whattey example Prakash.. அட்டகாஷ்!
DeleteNice Write up!!
ReplyDeleteஅற்புதம் குஷி அப்பா!
ReplyDeleteசூப்பரப்பு...
ReplyDeletegood one from a dad!!!
ReplyDeleteநடராஜ்
ReplyDeleteரொம்பவும் அனுபவித்து சிலாகித்து எழுதி இருக்கிங்க - மனதை மிகவும் உருக்கியது - உங்கள் மேல் மேலும் மதிப்பை அதிகப்படுத்தி உள்ளது - குஷி மிகவும் அதிர்ஷ்டசாலி - நீங்கள் கல்யாணி போல அவள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் தந்தை - உங்கள் இருவருக்கும் என் ஆசிகள் - வாழ்க வளமுடன்.
எழுத்துக்கு எழுத்து உடன்படும் விமர்சனம் அண்ணாச்சி :))) ////பொதுவாய் அப்பன்காரர்கள் குழந்தைக்கு பெரிதாய் ஏதும் செய்வதில்லை. உணவு ஊட்டுவதில்லை. ஆய் அலம்புவதில்லை, தூங்கப்பண்ணுவதில்லை.ஹோம்வர்க் செய்ய உதவுவதில்லை//// மாத்துறோம் இத மாத்துறோம் குறுக்கே எவனாச்சும் வந்தா அவனையும் செம மாத்து மாத்துறோம்
ReplyDeleteLoved your post...As a father of a girl child - i can completely agree with you & Thangameengal...
ReplyDeleteஅருமையாக எழுதியுள்ளீர்கள் நண்பா
ReplyDeleteAn excellent write up on the Movie....though I've not seen the movie....I am eagerly waiting to see it. I am sad to see the movies and songs like "Uudha color ribbon, yaaru unga appan" being promoted extensively than a fantastic movie like "Thanga Meengal". Awesome thought Nataraj.
ReplyDelete//படத்தின் முதல் காட்சியிலிருந்தே நான் கரையத் தொடங்குகிறேன்// ப்ளாக்கின் முதல் பத்தியிலிருந்தே நானும் கரையத் தொடங்கிவிட்டேன்..
ReplyDeleteஅருமை அருமை, வேறென்ன சொல்ல :-)
விமர்சனம் எழுதுறேன்னு டைட்டில் கார்டுலேருந்து எண்டு கார்டு வரைக்கும் சீன் பை சீன் எழுதி படைப்பை படுத்தும் விமர்சனங்களுக்கு மத்தியில , அனுபவத்தையும் , பிரியத்தையும் , உங்களது ரசனையான பார்வையையும் ரெம்ப ரெம்ப அழகாக சிறப்பாக எழுதி இருக்கீங்க ...!
ReplyDeleteநன்றி நடராஜ் ஜி ...!
மிகவும் அருமையான பதிவு. எனக்கு என் அப்பாவும், என் கணவருமே நினைவுக்கு வந்தார்கள் படிக்கும்போது.
ReplyDeleteநேரம் கிடைத்தால் என் பழைய பதிவை 'தெய்வத்திருமகள்' படியுங்கள். http://www.sudhazscribbles.blogspot.in/2011/07/theivathirumagal-excellent-movie.html
Sudha (@Jananis_mom)
ஒரே நாட்டில் ஓரிரு வாரம் பிரிந்து வாழ்ந்ததையே ரசனையாக சொல்லியிருக்கிறீர்கள் , என் போன்றவர்கள் வருடத்திற்கொருமுறை கூடுவந்தடைய முடியும் நிலை , சொல்ல வார்த்தைகளில்லை கண்ணீரை தவிர.
ReplyDelete''இப்படி ஒரு அப்பன் இருப்பானா? பொண்ணு ஒண்ணு கேட்டான்னு இப்படியா அலைவான்? '' அற்புதமான அப்பா,அதிஅற்புதமான கணவராயும் இருப்பார். மிக அழகாக உள்ளத்து உணர்வுகளைப் பதிந்துள்ளீர்கள்.
ReplyDeleteஅருமை வழக்கம் போல. இந்த தடவை மனசுக்கு ரொம்பவே நெருக்கம் இந்த பதிவு. குஷிக்கு இது புரியற வயசுல இதை படிச்சு வந்து ஒரு கமெண்ட் போடுவான்னு எதிர்பாக்குறேன் . படத்துக்கு கிடைக்குதோ இல்லையோ இதுக்கு ஒரு தேசிய விருது உங்களுக்கு ஒரு சர்வதேச தகப்பன் விருது பார்ஸல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் :-)
ReplyDeleteதங்க மீன்கள் இன்னும் பார்க்கவில்லை தியேட்டரில் பார்த்தால் அழுவிடுவேன் என்றால் அச்சத்தினால் மட்டுமே இன்னும் தள்ளி போடுகிறேன் .. உங்கள் பார்வை என்னை மேலும் பயம் கொள்ள வைக்கிறது தோழர். நன்றி ஒரு அப்பனுக்கு இன்னொரு அப்பனிடம் இருந்து
ReplyDeleteஇதுபோன்ற முயற்சிகளை பார்த்துவிட்டாவது திட்டுங்கள் தமிழர்களே :-(
ReplyDeleteஇதுவரை படம் ஓவர் பில்டப் பண்றாங்களோன்னுதான் நினைச்சுக்கிட்டு இருந்தேன்..ராஜா சார்ரோட மேகா சாங் மாதிரி:-))))...ஆனா உங்கள் எழுத்து படத்தை பார்க்க தூண்டுது..அருமையான பதிவு,,,
ReplyDeleteThis morning I read the review in AV. Just wondering how much you wanted to see the movie. Your review and comment is so nice..enakkum parkanum pola irukku. :)
ReplyDeleteகுழந்தை கேட்பதை வாங்கித் தருவது அல்லது மறுப்பது என்பதை ஒரு எமோஷனல் டெசிஷனாக வைத்துக்கொள்ளும் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை..ஆனாலும் உங்கள் எழுத்துக்களுக்கு நானும் ஒரு ரசிகை என்பதில் ஒரு மாறுதலுமில்லை..
ReplyDeleteஒவ்வொரு முறை உங்கள் பதிவை படிக்கும் போதும், அடுத்த வீட்டில் இல்லை, இல்லை நம் வீட்டு வரவேற்ப்பறையை CCTV கேமராவில் பார்த்துக்கொண்டிருப்பது போல உணர்வு வருவது மட்டும் நிச்சயம்..
:)
ReplyDeleteநடராஜ்..உங்களோட ஆரம்ப கால பதிவுகள் எல்லாம் வரி விடாம படிச்ச ஆட்களில் அடியேனும் ஒருத்தன்... (அதிலும் குறிப்பா நாகிர்தானா, விஜயசாந்தி, இதுதாண்டா ப்ப்ப்ப்போலீஸ்ஸ்ஸ்..., ராஜா சார் பற்றிய பதிவுகள்..) அப்போ எல்லாம் உங்களுக்குள்ள ஒரு லொள்ளு மன்னன் இருக்காருனு நெனச்சுக்குவேன்.. ஆனா இந்தப் பதிவு அத அப்படியே பொரட்டி போட்ருச்சு...
ReplyDeleteரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு படிக்கும்போதே...
BTW, நீங்க ஐக்ரிஷா அப்டின்னு கேட்ட க்ரிஷ் நான் தான்...சமயம் கெடைக்கும்போது நம்ம கடைப்பக்கமும் வந்து போங்க... இதான் அட்ரஸ்...
http://krishronline.blogspot.com
ஹாய் குஷி அப்பா...
ReplyDeleteஇதயம் கனத்தது, கண்கள் பணித்தது..
எல்லாருமே சொல்லிருக்க மாதிரி கொஞ்சம் அதீத உணர்வுகள். பாப்பாக்கு சிப்ஸ் கவர்ல வாங்கிட்டு போனப்பயே உங்க மனைவி உங்களப் பத்தி நல்லா தெரிஞ்சுகிட்டிருப்பாங்களே? அவங்களுக்கு தெரிஞ்சு அழுதாதான் என்ன? தகப்பனா இருக்கற நீங்க கணவனாவும் நடந்துக்கறீங்க? அதான?
ஹஹா சும்மா:)))))
நல்ல பதிவு!! நிறைய எழுதுங்க. நிறைய எதிர் பாக்குறோம். :)))