முதல் தடவை கேட்கும்போது “பாட்டாடா இது? பாட்டே இல்ல. எனக்கிந்த பஞ்சாயத்துல மரியாதை இல்ல. கேட்டா யூத்துக்கு பிடிக்கும்பாங்க” என நாற்காலியை விசிறிவிட்டே போனேன்.
ஒத்துக்கறேன். தாய் பத்தினிங்கிறதை ஒத்துக்கறேன். ஆனா நெக்ஸ்ட்டு மீட் பண்ண பண்ண, பாடல் நாக்குப்பூச்சி போல் நாடி,நரம்பெல்லாம் ரட்சகன் நாகார்ஜுனா போல் ஊடுருவியது. இப்போதெல்லாம் “அம்ம பாட்டுதேன்” என இதையே முதலில் போடுகிறேன்
எது? டங்காமாரி.
ஏன்? பார்த்துருவோம் மச்சி..
முதலில், ஹாரிஸ் ஜெயராஜ். ஹாரிஸை திட்டுவது காந்தியை திட்டுவது போல் ஒரு ஃபேஷனாகவே ஆகிவிட்டது. என்னவோ யாருக்குமே அவர்களுக்கென ஒரு பாணி இல்லாதது போல் “எல்லாம் ஒரே மாதிரி இருக்குபா” என ஒரே மாதிரி சொல்வார்கள். இந்தியில் இப்போது சார்ப்பான மீசிக் புள்ள அமித் த்ரிவேதி. ரேண்டமாய் அவரின் ஒரு பத்து இந்திப்பாட்டை கேளுங்கள். இல்லை ஒரு இந்திக்கார “அமித்”துக்கு 10 தமன்/இமான்/அனிருத் பாட்டை போட்டு காட்டுங்கள். இன்னாபா எல்லாம் ஒரேமாதிரிக்கீது என்று தான் கமெண்ட் வரும். மற்றவர்கள் ஒரே டைப்பில் போட்ட ஆறு பாட்ட்டை சேர்த்து கோர்த்து பாடினால் ’மெட்லி’யென்பார்கள். ’டெட்லி சாங் கும்ஸ்” என்பார்கள். ஆனால், ஹாரிஸென்றால் ஜெட்லியாகிவிடுவார்கள். காப்பி விஷயத்தில் ஹாரிஸ் ஒன்றும் படிதாண்டா பத்தினியும் அல்ல. மற்றவர்கள் முற்றும் துறந்த முனிவர்களும் அல்ல என்பதே நிஜம். மறுப்பீர்களேயானால், ட்ரிப்ளிகேன் கூகிள் ராவுத்தரிடம் வெத்தலையில் மை போட்டு பாருங்கள்.
சரி, பாட்டுக்கு வருவோம். “அஞ்சல” எல்லாம் மெட்ரிகுலேசன் ஸ்கூல் ஆண்டுவிழாவில் மைலாப்பூர் பையன்கள் ஆடுவது. கானா என்றோ குத்து என்றோ ஒத்துக்கவே மாட்டேன். உண்மையில் ”திருனெல்வேலி அல்வாடா”வுக்கு பிறகு இப்பாடலில் தான் அக்மார்க் குத்து குத்தியிருக்கிறார் ஹாரிஸ். ஃபீல்டில் ஃபேட் ஆகிறார் என்பவர்களையும் சேர்த்து ஊமக்குத்து குத்தியிருக்கிறார். வெகு கேட்ச்சியான ட்யூன், சரியான பீட்ஸ், நேர்த்தியான ஆர்கெஸ்ட்ரேஷன், ஆடிக்களைத்தவர்கள் மூச்சு வாங்குவதற்காகவே ராக்கம்மா கையத்தட்டு “ம்ம்ம்” ஹம்மிங் போல் நடுவில் வரும் நாதஸ்வரம் என எல்லாம் நாதஸ்வரம் சீரியல் லைவ் எபிசோட் போல கனகச்சிதம்.
அடுத்த முக்கியமான காரணம், பாடல் வரிகள். ஜாலியாய் எழுதுறேன் என பலர் இப்போது கோவம் வருவது போல் காமெடி செய்கிறார்கள். அதில் முதன்மை பா.விஜய். ஜாலி எல்லாம் வாலியோடு போச்சு. இப்போதைக்கு சுகுர்ராய் ஓரளவு ஸ்மைல் வரவைப்பதை போல் எழுதுவதில் விவேகா தேறுவார். இந்தப்பாடலை எழுதியது ரோகேஷ் என்ற அசிஸ்டண்ட் டைரக்டர். கே.வி.ஆனந்தின் ஒன் ஆஃப் தி சிஷ்யப்புள்ள. அனேகன் ஆடியோ விழாவில் தனுஷ் நடிகர்களின் தேசிய குணமான தன்னடக்கத்தோடு கூப்பிட அசோசியேட்களின் தேசிய உடையான ஜீன்ஸில் அதைவிட தன்னடக்கத்தோடு மேடையேறினார்.
கானா பாடல்களுக்கு என ஒரு தராசு உண்டு. தொழுதூர் மோட்டல் “மாம்பழம் விக்குற கண்ணம்மா’ லெவலுக்கு தரைடிக்கட்டா இருக்கனும், ஆனால் அரைடிக்கட்களுக்கு மட்டுமாய் titillating-ஆக இருக்கப்படாது. OMRக்கு ஹெட்ஃபோனிக்கொண்டே போகும் ஜெண்டில்மென் தலைவாசுக்கும் பிடிக்கனும். என்னை போன்ற ராஜாவோடு பால்யம், ரகுமானோடு பதின்மம் என வளர்ந்த புள்ளைங்களுக்கு சற்று சுத்தபத்தமாக புழங்குவது போலவும் இருக்கனும். கே.வி.ஆனந்தின் சிஸ்யப்புள்ள இதை நன்கு பேலன்ஸ் செய்திருக்கிறார். “அயுக்கு மூஞ்சி மீனாச்சி, மூஞ்சை கழுவி நாளாச்சி..ஆடப்போறேன் மங்காத்தா, தொர்த்தின் வருது எங்காத்தா..” எல்லாம் கேர்ள்ஃப்ரெண்டோடு காபி ஷாப்பில் வரம்பு மீறாது குறும்பு செய்வது போல் நின்று விளையாடுகிறது.
“பலான கை ரேகா..அது லுக்கு விடும் ஷோக்கா..உன்ன ஆக்கிடும்டா பேக்கா..நீ கழட்டிக்கடா நேக்கா’ போன்றவை மேலே சொன்ன மைல்டு ஸ்மைலை வரவழைத்தால், அடுத்த வரியில் ”பொண்ணுங்களை கேவலமா எண்ணாத மச்சி..உன் கூட வந்து பொறக்கலையா அக்கா தங்கச்சி” என தத்துவத்தையும் தூவி பேலன்ஸ் செய்கிறது பாடல். கிட்டத்தட்ட எல்லா வரிகளுமே, ஜெயா டிவி ‘தேன்கிண்ணத்தில்’ போடப்படும் கண்ணதாசன் - விசு காலத்து பாடல்கள் போல் மீட்டருக்கும், மேட்டருக்கும் கச்சிதமாய் விழுந்திருக்கிறது.
ஒரு விருந்தின் டெசர்ட் போல், I saved the best for the end.
அது, பாடகர்கள். 3 பாடகர்கள் சேர்ந்து பாடிய பாடல் இது. பல்லவி போன்ற மெயினான வரிகளுக்கு மரணகானா விஜி, ஏவிஎம்ராஜன் சிவாஜிக்கு ஒத்து ஊதுவது போல் தொடரும் வரிகளுக்கு தனுஷ், சரணத்தில் DSP,மணிசர்மா க்ரூப்பின் நிலைய வித்வான் நவீன் மாதவ் என மூவரணி.
இப்பாடலின் வைல்ட்கார்ட் மரணகானா விஜி தான்.
ஹாய் மதன் போல் ’இன்ஃபாக்ட் பார்த்தீங்கன்னாக்க’, இப்பாடலில் விஜியின் வரிகள் மட்டும் உயர்ந்த சுருதியில்,ஏழரை கட்டையில் இருக்கும். தனுஷ் வரிகள் எல்லாம் சேஃபாய் லோ பிட்ச்சில் அமைய, நவீன் மாதவ் எல்லாம் தனுஷால் சரணம் சமாளிக்கமுடியாமல் இறக்கப்பட்ட லோ-ஆர்டர் பேட்ஸ்மென். தனுஷும், நவீன் மாதவும் ஒன்றும் சும்மா இல்லை. விஜி வரிக்கு வரி சிக்சாய் பறக்க விட, இருவரும் பாந்தமாய் ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்கின்றனர். குறிப்பாய் நவீன் தன் 4 வரிகளை ஸ்லாக் ஓவர் ஜடேஜா போல் அடித்தே ஆடியிருக்கிறார்.
இரண்டாம், மூன்றாம் இடத்தை பிடித்த தனுஷையும், நவீனையும் போதுமான அளவு அலசிவிட்டதால் மரணகானா விஜிக்கு வருவோம்.
கானா பாடகர்கள் என எடுத்துக்கொண்டால் முன்பு தேவாவின் தம்பி சபேஷ் சரியாய் கானாவுக்கான குரல், உச்சரிப்பு மீட்டரை பிடிப்பார். இப்போது கானா பாலா, அந்தோனிதாசன் என பலருண்டு. இவர்களுக்கெல்லாம் நன்கு பாட வரும். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் குரல் ஓரளவுக்கு மேல் பேசாது. ஹோம் ‘பிட்ச்’ தாண்டி வெளியில் சோபிக்காது. பிட்ச் பிரச்சனையின்றி ஏழரை கட்டையில் பாடக்கூடிய வேல்முருகன் போன்றவர்களுக்கு சென்னை வழக்கில் சொடக்கு பால் ஆட தெரியாது.
இங்கு தான் எந்த பால் போட்டாலும் அடிக்கிறார் மரணகானா விஜி. விஜியை நாம் (நாம்னா நான் ஒருத்தன் தான். பன்மைல எழுதினாத்தான் ஒரு புதியதலைமுறை கட்டுரை எஃபக்ட் இருக்கும்) முன்பே கவனித்ததுண்டு. சொல்வதெல்லாம் உண்மைக்கு முன்பே “இப்படி பண்றீங்களேம்மா” என கதையல்ல நிஜம் செய்தாரல்லவா லட்சுமி? அதில் விஜி பிணத்தோடு வாழ்பவர் என விஜய்டிவி ‘பிதாமகன்’த்தனமாய் ஒரு எபிசோட் செய்தது. அதில் ‘கரைமேல் பிறக்க வைத்தானி’ல் எம்ஜியார் உபயோகித்த தப்பட்டையை அடித்துக்கொண்டு ’என்ன இழவுடா’ என சில இழவு கானா பாடல்கள் பாடினார்.
விஜியின் பெரிய பலம், அனந்த் வைத்தியநாதன்கள் சொல்லும் ‘டைனமிக்ஸ்’. தெர்மோ டைனமிக்ஸ் அல்ல, கொடுத்த காசுக்கு மேல் கூவும் தர்ம டைனமிக்ஸ். அதாவது “மச்சானை திண்ணையில மூடிப்படுக்கச்சொல்லு” என எஸ்பிபி giggleவாரே கடைசியில்? “எங்க அதை பண்ணு” என மனோ கேட்க பரத்கள் பாடி ஷவர் வாங்குவார்களே..அந்த மிக்ஸ். இந்தப்பாடலுக்கு தேவையான சென்னை ஸ்லாங், உச்சரிப்பு, பாடும் விதம் என எல்லாமே கச்சிதமான (டைன)மிக்சிங்கில் கொடுத்திருப்பார் விஜி.
இல்லேம்பீங்களா? பாடலின் 4.07 மார்க்கரில் “பொட்டு பூவு வெஸ்ஸுகினு புடவய தான் கட்டிகினு”வை கவனியுங்கள். அவரை போல் அக்மார்க்காய் “வெஸ்ஸுகினு” பாடும் இன்னொருவரை காண்பியுங்கள். என் ஒரு paycheque-ஐ தருகிறேன். ஆச்சா, அடுத்து கடைசி “ஆடப்போனேன் மங்காத்தா, தொர்த்தின் வருது எங்காத்தா”வுக்கு வாருங்கள். 4.47இல் மைக்ரோவினாடியில் எங்காத்தாவில் வரும் கிக்லிங்கை கண்டுகொண்டீர்களா? இதை வரவழைக்க சூப்பர்சிங்கர்கள் தடவப்போகிறார்கள். அப்படி பாட முடிந்தால், முடிந்தவுடன் ஒரகடம் வீட்டை TDS இல்லாமல் கொடுத்து விடுங்கள் விஜய் டிவிக்காரர்களே.
அட ஆளே நார்த் மெட்ராஸ், கானா பாடுறது கஸ்ட்டமா ‘எல்லாம் ஐவாஸ்’ என தில்லுமுல்லு ஷார்ட்நேம் சுப்பி போல் சொன்னீர்களேயானால், நோ நெவர். ஒவ்வொரு பல்லவியின் முடிவிலும் விசுவின் சம்சாரம் கேசரி போல் டகுடகுவென வழுக்கிச்செல்லும் “உன்ன அட்ச்சிடுவேன் மெரள” போன்ற கடைவரிகளை கவனியுங்கள். ப்ளாக்தண்டரில் லொங்குலொங்குவென ட்யூபை மேலேறி எடுத்துச்சென்று, அங்கிருந்து கீழே தள்ளிவிட ட்யூப் வழுக்கிக்கொண்டு குபுக்கென முதல் பள்ளத்தில் விழும் போது ஜெர்க் ஆவோமே, அதை அவர் குரலில் கொண்டு வந்திருக்கிறார் விஜி. இதான் கர்னாடிக்ல கமகம், சினிமாப்பாட்டுல சங்கதி, ஹிந்தில சித்தாரேய்..
மொத்தத்தில் மரணகானா விஜி மரண மாஸ்.
பொதுவாய், இப்பாடல் பல வயது கடந்த, கடப்பவர்களுக்கு கடுப்பாவதை கவனிக்கிறேன். இப்பாடலை இடக்கையால் தட்டிவிடுவது எளிது. யூத்ஸை திட்டுவதும் எளிது. கவனித்தீர்களேயானால், யூத்துகள் எல்லாவற்றையும் கொண்டாடிவிடுவதில்லை. இது கூட வந்த “அதாரு உதாரு” தல பாடலென்றாலும் இந்த அளவுக்கு கொண்டாடிவிடவில்லை. அவர்களும் தெரிந்தோ தெரியாமலோ ஒரு அரையடி ஸ்கேல் வைத்தே தான் இருக்கிறார்கள். கலவை சரியாய் இல்லாவிடில் மொக்கை என ஒரு வார்த்தையில் ஜோலியை முடிக்கிறார்கள்.
இதை சொல்லியே ஆகனும். “அறம் செய்வோம் புறம் செய்வோம்” என இன்று டீசண்ட்டாய் சொன்னாலும், நாமும் இதை விட மோசமான வரிகளை எய்ட்டீஸ், நைண்ட்டீஸில் கடந்து தான் வந்திருக்கிறோம். நமக்கெல்லாம் ‘பலான’ என்ற பதத்தையே அறிமுகப்படுத்தியது நாயகன் தான். ’வாராவதி இறக்கம்’ என்றால், “அமரன் வந்து நின்னா கிறக்கம்” என அடுத்த வரியை உங்கள் மனது ஆட்டோமேட்டிக்காய் இறக்குவதை நானறிவேன். ’இந்து’வை தாண்டி வந்து விடவில்லை எதுவும்.
நாமும் எல்லாம் கடந்துதான் வந்திருக்கிறோம். நம் பசங்களையும் கடக்க விடுவோம்.
ஜாலியாய் கவலையில்லாது ஊதாரியாய் இருப்பது ஒரு வயது வரை தான்.
அதுவரை டங்காமாரி ஊதாரியை ரசித்துவிட்டுத்தான் போவோமே.
+++++++++++
(இது பிடித்திருந்தால் இதுவும் பிடிக்கலாம் -> (நாகிர்தனா திரனனா - ஒரு மார்க்கமான இசைப்பார்வை)
இந்தப் பாட்ட நான் பாத்ததில்ல. இத வெச்சி எம்.ஜி.ஆர் வீடியோல ரீமிக்ஸ் பண்ணி வாட்சப்ல வந்தது. நல்லாத்தான் இருந்தது.
ReplyDeleteஆனா.. நீங்க இப்படி ரசிப்பீங்கன்னு எதிர்பாக்கல :)
அருமை. உமது விவரணைகள் அழகு. :))
ReplyDeleteசெம்ம தோழா... Part-1.??!
ReplyDeleteஅருமை..விமரிசனம்..அருமை
ReplyDeleteஅஹா இதுவல்லவோ ரசனை...! உங்களுடைய நாகிர்தனா பார்ட்-1 படிச்சதுக்கு. அப்புறம்தான் அந்த பாடலே தெரியும்....அடிக்கடி அதை படிப்பேன்....இப்போது பார்ட் -2 வேறு.
ReplyDeleteஅஹா இதுவல்லவோ ரசனை...! உங்களுடைய நாகிர்தனா பார்ட்-1 படிச்சதுக்கு. அப்புறம்தான் அந்த பாடலே தெரியும்....அடிக்கடி அதை படிப்பேன்....இப்போது பார்ட் -2 வேறு.
ReplyDeleteஅருமையான ரெவ்யூ! இனிதான் முழுப்பாடலும் கேட்கணும்!
ReplyDeleteஅருமையான பதிவு ! இப்படி ரசிச்சு ரசிச்சு எழுதறீங்க :)
ReplyDeleteஅடுத்து கடைசி “ஆடப்போனேன் மங்காத்தா, தொர்த்தின் வருது எங்காத்தா”வுக்கு வாருங்கள். 4.47இல் மைக்ரோவினாடியில் எங்காத்தாவில் வரும் கிக்லிங்கை கண்டுகொண்டீர்களா? இப்போதெல்லாம் அந்த கிக்லிங் வரை பாட்டைக் கேட்டுவிட்டுதான் சேனலை மாற்றுகிறேன்! ரசனை👌👍
ReplyDelete