Friday, March 7, 2014

பெய்யெனப் பெய்யும் மழை

ஏதோ அவசர மீட்டிங்கென ஆறேமுக்காலுக்கு அனு கிளம்பிவிட்டாள். ”நீ இன்னைக்கு வீட்ல இருந்து வேலை பாரு, குஷியை கிளப்பி ஸ்கூல்ல விடு, ஏதும் சொதப்பிடாத” கடைசி வார்த்தையில் எக்ஸ்ட்ரா அழுத்தம். ஏழரைக்கு பெண்ணரசியை எழுப்பச்சென்றால், ஏழரையை கூட்டினாள். அசைத்தாலே உறுமினாள். வடக்குப்பட்டி ராமசாமியின் கடன் வசூலிக்க எழுப்பப்பட்ட செந்திலின் முகபாவனை. ஒரு மைக்ரோசெகண்டில் கையில் இருந்த அலைபேசியை கண்டாளோ, எழுந்தாளோ? 2 நிமிடம் நோண்ட விட்டேன்.  பாத்ரூமுக்கு போ என்றால் லஜ்ஜையோடு “நீ வராத, போப்பா”. மகள்கள் வளர அப்பாவை விட்டு விலகிக்கொண்டே இருக்கிறார்கள்.

”சரி,சீக்கிரம் ப்ரஷ் பண்ணிட்டு வா, போர்ன்விட்டா போடறேன்” சொல்லி 10 நிமிடம் ஆனது ஆளை காணோம். பார்த்தால் பேஸ்ட் பிதுக்க வராது, பேசினில் விரயமான பேஸ்டுடன், சிறுபயத்துடன் எனை பார்க்கிறாள். ”மணி எட்டாச்சு குஷி” என அரக்கபரக்க தேய்த்துவிட்டு,முகம் அலம்பி (காலையில் ஏனோ குளிப்பாட்டுவதில்லை), துணி மாற்றி,”நானே போட்டுக்கிறே”னுக்கு காத்திருந்து போர்ன்விட்டாவை கையில் திணித்தால் சூடாம். ஆத்துவதற்குள் ஸ்னோ பேண்ட்,ஜாக்கெட்,பூட்ஸ்,க்ளவ்ஸ், தொப்பி போட்டு இறுக்கினால் அங்கு குஷி காணாமல் போய் ஒரு எஸ்கிமோ நின்றாள். தொப்பிக்குள் தெரிந்த சொப்புவாய்க்குள் போர்ன்விட்டாவை இறக்கினால் மணி 8.15. அய்யோ, எட்டரைக்கு என் கான்ஃபரன்ஸ் கால். அவசரமாய் கதவை பூட்டி வெளியே வந்தால் ஒரே “புது வெள்ளை மழை”. அரவிந்தசாமியையும், மதுபாலாவையும் பனியில் புள்ளப்பெத்த பின் காட்டாதது மணிரத்ன துரோகம். உள்ளே நிறுத்த இடமில்லாத இந்த பண்ணையாரின் பத்மினி, மனுஷ்யபுத்ரனுக்கு முடி நரைத்தது போல் பனிமூடி இருந்தது. “வழுக்கிடாம வா குஷி” என அவளை பின்னிருக்கையில் போட்டுவிட்டு ஸ்னோ சுரண்டியை தேடினால் காணோம். கையாலேயே பரபரவென காரை பிரதட்சணமாய் வந்து ஐஸ் தட்டிவிட்டதில் சொல்லாத இடம் கூட குளிர்ந்தது. நல்லவேளை பள்ளி அருகில் தான். ஆனால் அரை கிமீ.க்கு முன் கார்களின் வரிசை. பீக் ஹவர் கிண்டி மேம்பாலம் போல் ஊர்ந்துதான் போகமுடிந்தது.  வெள்ளைக்கார ஊரில் ஆத்திரம் தீர ஹாரனாவது அடிக்கமுடிகிறதா? முடிந்தவரை பள்ளி வாயிலருகில் இறக்கிவிடலாமே என்றால் பேட்ரோலுக்கு நிற்கும் ‘மிஸ்’ ஜாடையில் முன்னமே இறக்கிவிடச்சொன்னாள். களேபரத்தில் குஷிக்கு டாட்டா காட்டமுடியவில்லை. சைடுமிர்ரரில் பொதுபொதுக்கென ஐசில் மெல்ல நடக்கும் குஷி தெரிந்தாள். பாவம் குழந்தை.




வீட்டுக்கு வந்து ஆபீஸ் நிகருலகுக்கு VPN வாயிலோனை கடந்து புகுந்து புறப்பட்டு நிமிர்ந்தால் 3 மணிக்கூர் ஆகிவிட்டிருந்தது. பசித்தது. காலையில் சாப்பிட்ட 2 விள்ளல் ப்ரெட் ஆயுளை எப்பவோ விட்டிருந்தது. சமைத்தால் என்ன? அதிசயத்துக்கு 2.30 வரை மீட்டிங் இல்லை. முள்ளங்கி சாம்பார், காலிஃப்ளவர் பொரியல் என எனக்கு பிடித்த,செய்யவரும் உணவில் நின்றது மனம். பருப்பை வைத்தேன். வேகுவதற்குள் முள்ளங்கியை நறுக்கினேன். புளிக்கரைத்து காய்,சாம்பார் பொடி போட்டு கொதிக்கவிட்டாயிற்று. காலிஃப்ளவரை வெட்டதுவங்கினால் மலையளவு சேர்ந்துவிட்டது. பாதியை இரவுக்கு குருமா செய்தால் என்ன? பொரியலுக்கு கடாய் (நாகரிகத்தில் தமிழர்கள் தொலைத்த வார்த்தை சட்டி) வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் வதக்கி, காலிஃப்ளவர் போட்டு, காரப்பொடி போட்டு தண்ணிவிட்டு வதங்கவிட்டு, இன்னொரு பக்கம் குருமாவுக்கு விழுது அரைத்து, அதை சோம்பு,பட்டை குருமா துணைநடிகர்களுடன் வெங்காயம்,தக்காளியுடன் சேர்த்து வதக்கி, கெட்டிப்பட ஒரு உருளை போட்டு, பட்டாணி சேர்த்து கொதிக்கவிட்டு, இதற்குள் விசில் விட்டிருந்த குக்கர் வெயிட் நீக்கி, வெந்த பருப்பினை சாம்பாரில் சேர்த்து, கொத்தமலை தழை தூவி இறக்கினால், சாம்பார்,பொரியல்,குருமா மூன்றும் துர்கா பட இண்டர்வல் ப்ளாக் ஷாம்லி,நாய்,குரங்கு போல் ஒன்றுகூடி ஒற்றுமையாய் நின்றுகொண்டிருந்தன.

அதற்குள் மணி ரெண்டாகிவிட்டதா என அவசரமாய் குளித்து,சாப்பிட்டுவிட்டு திரும்பினால், மணி மூன்று. அய்யோ, Day care அம்மணியிடம் சொல்லவே இல்லையே என அவசரமாய் ஃபோன் செய்து “குஷியை வீட்லயே விட்டுடுங்க, நான் வீட்ல தான் இருக்கேன்” என சொல்லி வாயை மூடுவதற்குள் மூனேகாலுக்கு குஷி வாசலில். வரும்போதே அகோரப்பசியோடு வந்தாள். சோதனையாய் எதைக்கேட்டாலும் வேண்டாமென முறைத்தாள். இவள் சாப்பிடவில்லையெனில் அவள் முறைப்பாள். அப்பங்காரன் பிழைப்பு. முட்டையை ஆம்லட்டாய் போட்டுக்கொடுத்து, நீயா விளையாடு என மிச்சசொச்ச வேலைக்குள் மூழ்கினால் “குஷி என்ன பண்றா” என SMS. ஒன்னும் பிரச்சனையில்லை, ஆனா சரியா ஏதும் சாப்பிடலை என முன்ஜாமீன் வாங்கினால் “பரவாயில்லை” என சௌஜன்யமாய் பதில். நிசமாத்தான் சொல்றியா என யோசிக்கையில் “கேளு..நான் வர ஆறு,ஆறரை ஆகிடும், இங்க பிசி” என பதிலுக்கு முன்ஜாமீன். அதானே பார்த்தேன்..

ஆறு மணிக்காய், ஆபீஸ் கடையை சாத்தி, பாவம் களைத்து வருவாளே என இஞ்சி டீ போட்டு, குஷிக்கு இன்னொரு போர்ன்விட்டா போட்டு நிமிர்வதற்குள் மனைவி வந்தாகிவிட்டது. மூவரும் ஆளுக்கொரு கப்புடன்  10 நிமிடம் மாடிப்படியில் அமர்ந்து How was your day கதையடிப்பதற்குள் 7 மணி பரதகிளாஸுக்கு நேரமாகிவிட்டிருந்தது. 60 கிமீ ஓட்டிக்கொண்டு வந்திருக்கும் அனுவை தொந்தரவு செய்ய மனமில்லாது நான் கூட்டிக்கொண்டு போய், தேவுடு காத்து எட்டரைக்கு திரும்பினால், காலையிலிருந்து பனி தள்ளாதது உறைத்தது. ஓர் இரவு அப்படியே விட்டாலும் பனி கெட்டிப்பட்டு வழுக்க ஆரம்பித்துவிடக்கூடும். க்ளவுசையும்,முண்டாசையும் அணிந்து -15 டிகிரியில் பனி தள்ளும் மம்பட்டியும், மோகன்லாலும் கொண்டு அள்ளிப்போட்டு, மேலதிகமாய் உரம் போல ஸ்னோ உப்பை தூவிவிட்டு நிமிர்ந்தால் மேலுக்கும் கீழுக்குமாய் புஸ்சுபுஸ்சுவென மூச்சிறைத்தது. நாற்காலியை விசிறிய தேவர்மகன் சிவாஜி போல் குறுக்கில் வலித்தது. கார்போஹைட்ரேட்டுக்கும், காலரிக்கும் வயிறு நாயாய் பறக்க ஆரம்பித்திருந்தது. அதற்குள் மணி ஒன்பதா என யோசித்துக்கொண்டே சப்பாத்தி ரெடியா என கேட்க யத்தனிக்கையில்..

“எனக்கொரு ஈமெய்ல் அனுப்பனும் அவசரமா, கொஞ்சம் சப்பாத்தி போட்டுடேன்”

என்னவோ பெண்ணீயம்,பெண்ணீயம் என கதைக்கிறீர்களே..இதான்யா பொன்னகரம்..