Tuesday, June 9, 2015

தங்க்லீஷ் என்றோர் இனமுண்டுஆங்கில காமிக்ஸ் உலகில் The Bizarro World என ஒரு பாப்புலரான சிரீஸ் உண்டு. அதாவது நமது உலகை போலவே, ஆனால் வேறு முகம் கொண்டு இயங்கும் தனி உலகம். ஒரு தலைகீழ் Parallel Universe என சொல்லலாம்.

போலவே தமிழ்நாட்டில் இருந்து சோஷியல் மீடியாவில் இயங்குபவர்களில் இரண்டு உலகம் உண்டோ என தோணும். அதாவது, நம்மை போல் தமிழில் எழுதுபவர்கள். இன்னொரு வகை தங்க்லீஷ் க்ரூப்புகள். தமிழ்ச்சூழலில் இயங்குவார்கள். தமிழ்ச்சினிமா, இசை, பிரச்சனைகளை பேசுவார்கள். ஆனால் தமிழில் டைப்படிக்காத தங்க்லீஷ் க்ரூப்புகள்.

சரி, இருவரும் தமிழர்கள் தானே, டைப்படிக்கும் மொழி தானே வேறு என நினைத்தால் அது தான் இல்லை. ரசனை, விருப்பு வெறுப்பு சார்ந்து பல நுண்ணிய வேறுபாடுகள் உண்டென தெரிகிறது. சுருக்கமாய் தங்க்லீஷ் என ஒரு இனமுண்டு, தனியே அவருக்கோர் குணமுண்டு.

1. Macha என டைப்புவார்கள் மச்சானுக்கு. இந்த ‘மச்சா’ கலாச்சாரம் எங்கிருந்து வந்ததென புரியவில்லை. நானும் தமிழகத்தின் தென்பகுதியிலிருந்து பல ஊர்களில் சென்னை வரை வசித்திருக்கிறேன். ’மச்சா’ என யாரும் விளித்து கண்டதில்லை. (ஐ)ஐடி என வந்து செட்டிலான வட இந்திய க்ரூப்களிருந்து வந்ததென நினைக்கிறேன்..

2. பொதுவாய் சென்னையை தாண்டி (அதுவும் மத்திய,தென்சென்னை) கண்டுகொள்ளமாட்டார்கள். பத்து நாட்களுக்கு ஒருமுறை ‘Chennai is a city. Madras is an emotion' பகிர்வார்கள். 10 things Chennaiites should not miss போன்ற Buzzfeed, Scoopwhoop லின்க்குகளை பகிர்வார்கள். அதில் ஃபில்ட்டர் காப்பி, மெரினா பீச், ஸ்ட்ரீட் கிரிக்கெட் படங்கள் கட்டாயம் இருக்கும்.

3. NRI என்றால் ஊருக்கு லீவுக்கு போன முதல் வாரம் “Reading The Hindu with filter coffee in Balcony. #Bliss" இல்லை பெசண்ட் நகர் பீச்சில் பானிபுரி, கரும்புஜூஸ், பன்னீர் சோடாவோடு ஸ்டேடஸ் போடுவதன் சாத்தியக்கூறுகள் அதிகம்.

4. கிரிக்கெட்டில் இங்கிலாந்து - கென்யா டெஸ்ட் மேட்ச்சை தேடிப்பிடித்து ஸ்கோர் பகிர்வார்கள். இல்லை கங்குலி காலத்தில் க்ரெக் சேப்பலோடு வந்த சண்டை பற்றிய cricinfo கட்டுரையை அலசுவார்கள். IPL என்றால் ’விசில் போடு’ போன்ற அரதப்பழசான ஸ்லோகன்களோடு CSKவை சப்போர்ட் செய்வார்கள்.

5. விளம்பர தட்டிகளில் உள்ள ஆங்கிலப்பிழைகளை ஃபோட்டோ எடுத்து வைரலாக பரப்புவார்கள். “Satish BEDS Deepika" ஷேர் செய்து கெக்கெபிக்கே ஸ்மைலி போடுவார்கள். ஊர்ப்பக்க ஹோட்டல் மெனுக்களில் உள்ள பிழைகளை (Gopi Manjuri) எடுத்துப்போடுவார்கள். ஹிந்தியும் தெரிந்தவர்களாக இருந்தால், எப்படி அது GoPi இல்லை GoBi என ரகுதாத்தாவாக கிளாஸ் எடுப்பார்கள்.

6. ஊர்ப்பக்கம் ஏதும் ட்ரைவ் போனால் திருமண வாழ்த்து, காதுகுத்து ஃப்ளெக்ஸ் போர்டுகளை ஃபோட்டோ பிடித்துவைத்துக்கொள்வார்கள். அதில் வரும் “Super Boy's" "Lover Boy's" ”Thala Army" போன்ற டெர்மினாலஜிகளை ஷேர் செய்து கிகிள் செய்வார்கள்.

7. பொதுவாய் எல்லா கமல் படங்களையும் Classic, WhyKamalIsGod என கொண்டாடுவார்கள். அதுவும் மைக்கேல் மதனகாமராஜன், நாயகன் காலம் தான் விருப்பம். வயது சற்றே கம்மி இல்லை யூத்தாக காண்பிக்க வேண்டுமென்றால் “THALAIVAR ROCKS IN LINGAA" என்பார்கள். அஜீத், தனுஷை ஏற்றுக்கொள்வார்கள். அதென்னவோ விஜய்யை ரொம்ப சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்.

8. ரஜினியை கொண்டாடினாலும், நார்த்தீஸ் பரப்பும் Chuck Norris வகை ரஜினி குறட்டை விட்டால் பூகம்பம் வரும் டைப் மொக்கை காமெடி, கார்ட்டூன் படங்களை பரப்பி அகமகிழ்வார்கள்.

9. காமெடியை ரசிப்பார்கள். ஆனால் கவுண்டரை தாண்டி வரமாட்டார்கள். #WhyGounderIsGod ஒரு உசிதமணி டேக். அதிலும் கவுண்டரின் ரேர் காமெடிக்குள் எல்லாம் புகுந்து புறப்படமாட்டார்கள். மேலோட்டமாய் வாழைப்பழ காமெடி, சத்தியசோதனை என்பதற்குள் முடித்துக்கொள்வார்கள். கொஞ்சமாய் வடிவேலுவை சேர்த்துக்கொள்வார்கள். கிரேசிமோகனை எவர்க்ரீனாய் கொண்டாடுவார்கள்.

10. சமீப காலங்களில் இவர்களுக்கு தக்காளி தொக்காய் இருப்பது விஜயகாந்த். அவரின் சமீபத்திய வீடியோக்களை விட நரசிம்மா காலத்து சீன்கள், ஃபைட்டு வீடியோக்களை #Gaptun என மறவாது டேக் போட்டு மகிழ்வார்கள். டீ.ஆர் மீம்கள், gifகளும் மேலதிக விருப்பத்தோடு பகிர்வார்கள்.

11. திடீரென சனிக்கிழமை காலை Chennai Streetfood culture என SLRஉடன் கிளம்பிவிடுவார்கள். மயிலாப்பூரில் ரோஸ்மில்க் விற்கும் கடை, கற்பகாம்பாள் மெஸ், ராயர் மெஸ், அடையாரில் பஜ்ஜி போடுமிடம் என தென்சென்னைக்குள்ளேயே  ஜோலியை முடித்து ஃபில்ட்டர் காபி ஆவியுடன் இன்ஸ்டாகிராமில் படம் போடுவார்கள்.

12. அவ்வபோது Am at Landmark quiz, Singer Karthik rocks at #IITSaarang, Amish Tripathi at CrossWord என ஸ்டேடஸ் போடுவார்கள். ஜஸ்டின் டிம்பர்லேக், ப்ரூனோ மார்ஸ், டெய்லர் ஸ்விஃப்ட்டின் புதிய சிங்கிள்ஸ் வந்தால் Vevo லின்க் ஷேர் செய்து சிலாகிப்பார்கள்.

13. வகிடெடுத்து வாரிய, புட்டிக்கண்ணாடி போட்ட பீட்டர் என நினைத்துவிடக்கூடாதே, நாங்களும் தரைலோக்கலு என காட்டவேண்டுமென #WuthaDei என கொஞ்சம் பேட்வர்ட்ஸ் பேசுவார்கள் (அர்த்தம் புரிந்தோ, புரியாமலோ).

14. அநாதையான நாய்க்குட்டிகள் சாரி Puppies தத்தெடுத்துக்கொள்கிறீர்களா ஒன்லி 25000 என சின்ன காக்காய் முட்டை போல் நெட்டில் கடைவிரிப்பார்கள். ஆனால் ஒருவர் கூட அவர்களே தத்தெடுத்து நான் பார்த்ததில்லை.

15. அரசியல் என்றால் மோடியை சிலாகிப்பார்கள். ராகுலை பப்பு என்பார்கள். பிஜேபிக்கு எதிரி ஆனதிலிருந்து கேஜ்ரிவாலை வைவார்கள். பொதுவாய் கலைஞரை தாத்தா என அழைப்பார்கள். பொதுவாய் ஈழம், இடஒதுக்கீடு, கூடங்குளம், காவிரி, முல்லைப்பெரியாறு, ஊழல் வழக்கு எந்த சமூக, அரசியல் பிரச்சனையானாலும் சரி, ’அம்மா சரி, கலைஞர் தவறு’ என்ற ஒற்றைவரி நிலைப்பாடுக்குள் அடக்கிவிடுவார்கள்.

+++++++

1 comment:

  1. அருமையா... அருமையா!!!

    ReplyDelete

பிடித்தால் சொல்லுங்கள்..பிடிக்காட்டியும் சொல்லுங்கள்..;)