Tuesday, December 24, 2013

பீலிபெய் சாகாடும்



எங்கெங்கோ நாள்முழுக்க கால்வலிக்க சுற்றிவிட்டு, எப்படியோ சரியாக அங்கு வந்துவிட்டிருந்தோம். இரவு ஒன்பது மணி இருக்கும். சுற்றிலும் ஜனத்திரள். உலகின் மிகமுக்கியமான, மிகப்பெரியதுமான ஒரு தீம்பார்க்கின் மைய இடம் அது. அங்கு ஒரு பெரிய கோட்டை வெள்ளையும்,பின்க்குமான நிற கிருஸ்மஸ் விளக்குகளால் தகதகத்தது. கோட்டைக்கு முன்னால் ஒரு மேடை. ஒம்பது மணிக்கு ஏதோ கிருஸ்மஸ் ஷோவாம்.

கிடைத்த இடத்தில் துண்டை விரித்து ஜனம் உட்கார்ந்திருந்த விதம் சபரிமலையை ஏனோ ஞாபகப்படுத்தியது. அடுத்தமுறை இந்தியா செல்கையில் கண்டிப்பாய் மலைக்கு போகவேண்டும். ஒரு எதிர்பாராத தருணத்தில் மேடையில் காட்சி ஆரம்பித்தது. மேடை நன்கு தெரியவேண்டுமென மக்கள் எழ ஆரம்பிக்க, கல் விழுந்த குளமாய் சடசடவென ஒவ்வொரு வரிசையாக எல்லோரும் எழுந்து நின்றுவிட்டனர்.

“அப்பா” மகள் சன்னமாய் கூப்பிட்டாள். இருட்டில் சுற்றிலும் உயரமாய் ஜனத்தலைகளை கண்ட மிரட்சி அவள் கண்ணில். அப்பனை போல் claustrophobicஆக இருக்கலாம்.

“என்னடா?”

“Would you mind holding me so that I can watch the show too?"

அப்பனிடம் கூட would you mind, thanks for doing this என அலுவல் தொனியில் பேசும் மேற்கத்திய சூழலில் வளர்பவள். டாடி இல்லாது அப்பா மட்டும் எப்போதும் தமிழில். அந்தமட்டுக்கு சந்தோஷம்.

“ஷ்யூர் டா" என தூக்கிக்கொண்டேன். குஷி கடந்த சிலமாதங்களில் ரொம்பவும் வளர்ந்துவிட்டாள். 60 பவுண்டு இருப்பாள் என நினைக்கிறேன். கொஞ்சம் பளுதூக்குவது போல் என்னை நிலைநிறுத்தி அவளை இறுக்கமாய் தூக்கி இருகைகளையும் அவள் விழுந்துவிடாது கட்டிக்கொள்கிறேன். அவள் என் கழுத்தை இறுக்குகிறாள்.

நான் அடியார்க்கு அடியன், ஐந்தரை அடியன். என் உயரம் பத்தவில்லை போல குழந்தைக்கு. பக்கத்தில் ஒரு ஆஜானுபாக அமெரிக்கன் தன் மகனை தோளில் தூக்கி வைத்திருக்கிறான். குஷி அதை திரும்பிப்பார்க்கிறாள்.

“Can you hold me like that on your shoulders?" கேள்வி வருமென தெரியும்.

“ஓகே டா" என அவளை முடிந்தளவுக்கு தம் கொடுத்து தூக்கி, அவள் முதலில் ஒரு காலை தோளில் வைத்து, பின் தடுமாறி இருகாலையும் மாலையாக என் தோளில் போட்டுக்கொள்கிறாள். இனியெல்லாம் சுகமே..இல்லை. பின்னங்கழுத்தில் கைவைத்தால் சற்றுப்புடைத்துக்கொண்டு ஒரு எலும்பு தென்படுமே. அது எனக்கு விண்ணென்று வலிக்கத்தொடங்குகிறது. எடை, தூக்கியவிதம் எங்கோ பிசகு. அந்த வலி கீழே முதுகுத்தண்டில் தரையில் கொட்டிய தண்ணீர் போல் பரவுகிறது. சற்று எக்கி குஷியை பார்க்க எத்தனிக்கிறேன். இறக்கிவிடவேண்டியது தான்.

“Jingle bells Jingle bells, Jingle all the way.."

அவ்வளவு தூரத்திலும் மேடையில் மிக்கியும், டொனால்டுமாய் வேடம் போட்டிருக்கும் மனிதர்களின் ஈடுபாடு,உற்சாகம் தெரிகிறது.  குஷியும் என் தோளில் உற்சாகமாய் பாடிக்கொண்டிருக்கிறாள். வேண்டாம்,இப்போது இறக்கிவிட்டால் ஏங்கிப்போய்விடுவாள். என்ன செய்தால் வலி குறையும் என மூளை தனிச்சையாக யோசிக்கிறது. தலையை, தோளை முடிந்தளவு சரிசெய்யப்பார்க்கிறேன். தலையை குனிந்தால் கொஞ்சம் வலி குறைந்தாற்போல் உள்ளது. குனிந்துகொள்கிறேன். ஒரு குதிரை சுற்றியிருப்பது பற்றி எந்த பிரக்ஞையும் இல்லாது கீழே குனிந்து ஒரு வித மோனநிலையில் இருப்பது போல் இருக்கிறேன். இனி நான் மேடையை பார்க்க முடியாது. பரவாயில்லை.

”Feliz Navidad.."

மேடையிலிருந்து ஒலிக்கிறது. என் கண்கள் கீழே இருட்டைப்பார்க்கிறது. கீழே தென்படும் ஒரு சிறிய வெளிச்சப்புள்ளியில் என் கண்கள், மனதை குவிக்கிறேன். மனது அப்புள்ளியிலும் வலியையே குவிக்கிறது. வலிசார்ந்தே என்னன்னவோ யோசிக்கிறது. ஒரு படத்தில் ரவீந்தர் சிலுக்கு சுமிதாவை தோளில் வைத்துக்கொண்டு ஆடுவாரே. என்ன பாட்டு அது? மேகம் கொட்டட்டும்..சே அதில்லை, வேற ஒன்று அதே போல.. எப்படி ஆடியிருப்பார், எத்தனை டேக்கு போயிருக்கும்? எவ்வளவு வலித்திருக்கும்? ஒரு எஸ்ரா வாக்கியம் உண்டே “வாழ்க்கைங்கிறது வலி. அதுல சந்தோஷம் அப்பப்போ வந்துட்டு போகும்” பாபா தானே அது? இந்த ஷோ எப்போது முடியும்?  மனம் எங்கெங்கோ அலைகிறது.

தலையை குனிந்தே வைத்திருப்பது அசூயையாக இருக்கிறது. ஆனால் வலி பழகிவிட்டது இப்போது. இப்போது வலி வலியாக தனியாக வலிக்கவில்லை. வலி என் இயல்பாய், என் உடம்பின் ஒரு அங்கமாய்,தன்னிருப்பை வெளிக்காட்டாத ஒரு அவயம் போல் ஆகிவிட்டது.

“We wish you a Merry Christmas and a happy new year"

பொதுவாய் இப்பாடல் வந்தால் முடியப்போகிறது என அர்த்தம். ஆனால், ஷோ முடியவேண்டும் என மனம் இப்போது நினைக்கவில்லை. மனம் வலியோடு வலிந்து ஒரு இருத்தலியல் சினேகம் செய்துகொண்டதாகவே பட்டது. ஷோ சிலவாணவேடிக்கைகளோடு முடிந்தது. குனிந்து குஷியை தோளிலிருந்து மெல்ல இறக்கினேன்.

“Thanks a lot ppa"

எப்போதும் செய்வது போல் அவள் தலையில் கலைப்பது போல் செய்து சிரித்தேன். ஒரு கட்டத்துக்கு மேல் பெண் குழந்தையை ரொம்ப கொஞ்ச முடிவதில்லை.

வலி பெரிதில்லை. என் வலியை குஷி உணர்ந்திருக்கவும் மாட்டாள். சிலர் தரும் வலியை அவர்கள் உணர்வதில்லை. போகட்டுமே, அவர்களுக்கு தெரியவேண்டுமா என்ன? பலநேரம் வலியை நாம் விரும்பியே சுமக்கிறோம். கொட்ட கொட்ட தேளை கரையில் விடும் முனிவனின் மிச்சம் நம் எல்லோரிடமும் உண்டு. வலி சுமப்பது இயல்பு. என் அடிப்படை இயல்புக்கான கர்வம். கெடுதல் வரும் என தெரிந்தும் குருவின் தூக்கத்துக்காக தேளின் குடைச்சலை தாங்கும் கர்ணனின் வைராக்கியம். சில வலிகளால் மன அச்சு முறிவதில்லை. மாறாய் இன்னும் உரம் பெறுகிறது.

சற்றுத்தள்ளி நின்றிருந்த மனைவி அருகே வந்தாள். குஷியை தோளில் வைத்திருப்பதை பார்த்திருப்பாள் போலும். வாஞ்சையாய் சிரித்தாள்.

இருவரையும் அணைத்துக்கொண்டு நடந்தேன்.

இப்போது வலிக்கவில்லை.