Saturday, December 8, 2012

நாகிர்தனா திரனனா..: ஒரு மார்க்கமான இசைப்பார்வை


சிலசமயம் சிலரை, சிலதை காரணமேயில்லாமல் பிடிக்கும். அல்லது பிடித்தபின் காரணத்தை தேடுவோம். எனக்கு இப்பாடல் அவ்வகை.
இப்பாடல், ராஜாவின் எந்த கிளாசிக் லிஸ்டிலும் வராது. ட்விட்டர்க்காரர்கள் சிலாகிக்கும் ’ரேர்’ லிஸ்டிலும் வராது. தாரை தாரையாக நீரெல்லாம் வரவைக்காது (கண்ணில்). இசையருவி, சன்மியூசிக்கில் வராது. அவ்வளவு ஏன், ராஜாவின் கச்சேரியிலேயே பாடப்படுவதில்லை.

அட, இப்பாடல் ‘நீங்க நான் ராஜா சார்”ல கூட வரலை சார்..

”அப்படியென்ன பாட்டு சார், அவ்வளவு நல்லா இருக்குமா” என ஜாக்கிசேகர் ப்ளாகில் வரும் ‘நானே கேள்வி நானே பதில்’ வாசகர் போல் கேட்டீர்களேயானால், அதற்கு ஜாக்கியின் உலகப்புகழ்பெற்ற வார்த்தையை தான் பதிலாக சொல்லவேண்டும். இப்பாடலை விளக்க அந்த ஒத்த வார்த்தையை ஒத்த வார்த்தை இல்லை.

சின்னவீடு படத்தின் ‘அட மச்சமுள்ள’ பாடலே பற்றியே இப்பதிவு. அது வெளிவந்த நாளிலிருந்து எல்லாம் என்னை தொடரவில்லை, படரவில்லை. படம் வந்தபோது நான் பிறந்துவிட்டிருந்தேன் தான். மங்கலாக யார் மடியிலோ தியேட்டரில் பார்த்த ஞாபகம். சாரு அடிக்கடி ‘டயனோசியன் ஸ்பிரிட்’ என ஒரு வெறித்தனமான உற்சாகத்தை சொல்வார். அதை இப்பாடல் எனக்கு வாரிவாரி வழங்குகிறது. என்னை துரத்தி துரத்தி அடிக்கிறது. சுழட்டி சுழட்டி வீசுகிறது. படுத்தி படுத்தி எடுக்கிறது. இப்பாட்டை கேட்கும் போதெல்லாம் சுறுசுறுன்னு வரும். பரபரன்னு இருக்கும். ஜிவுஜிவுன்னு ஏறும்.

அடுக்குத்தொடர், இரட்டைக்கிளவி பில்ட்-அப்புகள் ஓவர். ஈறுகெட்ட.. என எதிர்மறையாய் நீங்கள் திட்ட ஆரம்பிப்பதற்குள் பாட்டுக்குள் போவோம்.

இப்பாடலின் premise மிக சிம்பிள். பாக்யராஜ், கவனிக்க, பாக்யராஜ் ‘சின்னவீடு’ என ஒரு படம் எடுக்கிறார். சப்ஜெக்ட்? சின்னவீடு தான். சிச்சுவேசன்? பாக்யராஜுக்கு ஒரு மார்க்கமாக கனவு வருகிறது (பின்ன சுத்தசமரச சன்மார்க்கமாகவா வரும்?). அதில் நான்கு நடன நாரீமணிகளுடன் ஜலமில்லா கிரீடை. ‘மேட்டர்’ அவ்வளவே. இப்படி ஒரு சிச்சுவேஷனுக்கு ராஜா சிம்பொனி படைத்துவிட முடியாது. இசையை மார்க்கமாக கொண்டவர், ஒரு மார்க்கமான இசையை தரவேண்டிய சூழல். ஆனால் அதிலும் கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார் பாருங்கள்.. ஒவ்வொரு அதென்னாது இந்த இதும்பாய்ங்களே.. சவுண்டுகிளவுடுல வருமே..ஆங், ’மார்க்கருக்கும்’ அராஜகமான இசை கொடுத்திருக்கிறார்.சில பாடல்கள் மெட்டமைக்கப்படும் போதே அதன் படமாக்கமும் இணைந்தே பயணிக்கும். இப்பாடல் அவ்வகை. ”சார், பாட்டுல என்ன சமாசாரம்ன்னா அத்தினி,பத்தினி,பத்மினி,சங்கினின்னு நாலு கேர்ள்சை ஆடவிடுறோம்” என பாக்யராஜ் கரகர குரலில் சொல்லியிருக்கக்கூடும். ஒரு சிறிய வசன போர்ஷனுடன் சன்னமாக ஆரம்பிக்கும் பாடல்,  அது முடிந்தவுடன் ரமணனே எதிர்பாராத ஒரு சென்னை பெருமழையாய் சடசடவென அடித்து தீர்த்துவிடும்!!


கண்டிப்பாக இது மெட்டுக்கு போடப்பட்ட பாட்டு தான்.  ”அட மச்சமுள்ள மச்சான்..நான் புது வித ரகம்..கைய வெச்சா உள்ளே..நீ நினைக்கிற சுகம்” என பல்லவி. இதை யாரும் முன்கூட்டியே கவிதை தொகுப்பில் “நெஞ்சுக்குள்ள உம்ம” அல்லது “கண்ணுக்கு மை அழகு” ரேஞ்சுக்கு எழுதி வைத்திருக்க முடியாது. ட்யூன் போடுகையில் போட்ட டம்மி பல்லவியாக கூட இருக்கலாம். போதுமே, என்ன தேவாரமா பாடுகிறோம்.. வாங்கிய பேமெண்டுக்கு கவிஞர் முத்துலிங்கத்தின் ஓவ்வொரு வார்த்தை மூவ்மெண்டும் மீட்டருக்கும் சிச்சுவேஷனுக்கும் கனகச்சிதம்.

இசை/ஆர்க்கெஸ்ட்ரேஷனுக்கு வருவோம். எனக்கு இசையை விளக்குவதில் நம்பிக்கையில்லை. ட்ரம்பெட் துடிக்க, வயலின் வழுக்க, கஞ்சிரா கதற, ட்ரம்ஸ் தறிகெட்டு ஓட, ஹைவேல மேலே போயி,கீழே வந்து விளக்கங்கள் அலர்ஜி.  சுருங்கச் சொல்கிறேன்.

இண்டர்ல்யூட் முழுக்க ராஜாவின் டிரம்மர் ’புரு’ அங்கிள் ராஜாங்கம். (என் அங்கிள் எல்லாம் இல்லை, இசை விமர்சனம்ன்னா உரிமையா இப்படி சொல்லோனும்) .  ”பூமாலை ஒரு பாவையானது”இல் “லலலா லலலா..ஆஆஅ..ஆஆ” என எஸ்பிபி முடிக்கையில் ஒரு காட்டடி அடித்திருப்பாரே..அதற்கு சற்றும் குறைவில்லாமல் இதிலும் அடித்திருப்பார். கூடவே ட்ரம்பெட்,வயலின் எல்லாம் LICயில் சிக்னலை பச்சைக்குள் தாண்டிவிடும் வாகனங்களாய் பேயோட்டம் ஓடும்.

சரணத்திற்கான எண்ட்ரியில் தான் ராஜா என்ற ரசவாதியை காணலாம்.

பெரிய ப்ரிட்ஜை “கடகட படபட கடகட படபட”வென சபாபதி T.R.ராமச்சந்திரன் போல் கடந்து முடிந்தவுடன், ட்ரெய்ன் “டிடிக் டிடிக்..டிடிக் டிடிக்” என தன் ஆதார தாளத்துக்கு திரும்புமே..அந்த திரும்பல் போல் அவ்வளவு seamlessஆக, ஐந்தே செகண்டுக்கு ஒரு வயலின் பிட் போட்டு சரணத்துக்கு லீடு அமைத்து கோர்த்திருப்பார் ராஜா..He's an Alchemist, No doubt about it!!

இப்பாடலில் சரணம் ஒரு ப்யூட்டி. சில சரணங்கள், பல்லவிக்கும் அதுக்கும் ஸ்னானப்ராப்தியே இருக்காது. ’சினேகிதனே’வின் “சின்ன சின்ன அத்துமீறல் புரிவாய்” போல.. (மன்னிக்க, வேறு உதாரணம் கிடைக்கவில்லை. ரஹ்மான் காண்டு எல்லாம் கிடையாது என்றால் நம்பனும் :)). ஆனால், இப்பாடல் சரணம், பல்லவிக்கு பின்னால் வெகுபாந்தம், கனபொருத்தம், பல்லவியையும் மிஞ்சிய அழகு, சதாசிவம் பின் நிற்கும் எம்.எஸ் போல்.


இதுவரை பாடகர்களை பற்றி சொல்லவில்லை. சொல்ல சரணம் நல்ல தருணம் (நோட் பண்ணுங்கப்பா..). எஸ்.ஜானகி-SP.சைலஜா என இரு பாடகிகள் காம்பினேஷன். “என்னைக்கும் இல்லாம இன்னைக்கு உன்மேல அஆசை” என ’ஆசை’யில் மேலதிகமாய் அரைமாத்திரை போட்டு போதைமாத்திரையாய் ஆரம்பிப்பார் ஜானகி. அதுக்கே ஹெட்ஃபோன் காசு போச்சு!  அடுத்தவரியில் சன்னமாக ”எப்பப்ப வந்தாலும் அப்பப்ப கல்யாண பூசை” என SP.சைலஜா தொடர்வார். பாடல் முழுவதும் எஸ்.ஜானகி பேயாய் அடிக்க, சைலஜாய் அழகாய் ஸ்ட்ரைக் ரொடேட் செய்து காஜி விட்டுத்தருவார். இந்த ஆசை,பூசைக்கு பிறகு ஒரு சின்ன ம்யுசிக் வரும். அதில்லாமல் அவ்வரி முழுமையடையாது என்பதை போல். ராஜாவின் பாடல்களில் வரிகளையும்,இசையையும் பிரிக்கவே இயலாது. நீங்கள் ஹம் செய்தால் ம்யூசிக்கோடு சேர்ந்தேதான் செய்யவேண்டும்.


முதல் சரணம் முடிந்துதான் எஸ்பிபி எண்ட்ரியே. ஒரு சமீப பேட்டியில் பாடகர் ஹரிசரண் சொன்னார் ’ஒரு காலக்கட்டத்தில் எஸ்பிபி சாருக்கு குரல் பட்டுமாதிரி வழவழன்னு இருக்கும்’ என. அக்காலக்கட்டம் இதுவாய்த்தான் இருக்கவேண்டும். உண்மையில் சொல்கிறேன். இப்பாடல் போல் இனிமையாக நான் எஸ்பிபியை எதிலுமே கேட்டதில்லை. அவரின் எல்லாப்பாடல்களைப் போலவும் இதில் டைனமிக்ஸ்/குரல்சேட்டைகள் சிறப்பு தான். ஆனால் இதில் குரல்தான் ஹைலைட்.

இப்பாடலில் இந்த மூன்று பாடகர்கள் தவிர இன்னொரு மகானுபாவர் உண்டு. அவர் இல்லாவிடில் இப்பாடலுக்கு தனித்துவம் இல்லை என்பது என் துணிபு. அவர் டிவிஜி. கர்னாடக வித்வான் டி.வி.கோபாலகிருஷ்ணன். இப்பாடலுக்கான விசிட்டிங் கார்டான ‘நாகிர்தனா திரனனா” என்ற மறக்கவே முடியாத ஜதிக்கோர்வையை பாடியவர். வெங்கட்பிரபு கோவாவில் மறுபடி பிரபலமாக்கியது. ராஜபார்வை அந்திமழை முதற்கொண்டு பல ராஜா பாடல்களில் இவருண்டு. நாகிர்தனாவும் புதிதல்ல. டிக் டிக் டிக்கில் ‘இது ஒரு நிலாக்காலம்’  பாடலில் மாதவி ஆட்டத்தில் இன்னொரு அமர்க்களமான நாகிர்தனாவும் உண்டு. அதை இங்கு காணலாம்.


சிலசமயம் பவுலர்கள் ஒன் டவுன் இறங்கி கலக்குவார்களே..அதுபோல் பல்லவியிலேயே பாட்டின் மூடை புரிந்தோ, புரியாமலோ “நாகிர்த்னா திரனா.. தகதிமிதா” என்பதுபோல் பல்லவியின் ஒவ்வொரு வரிக்கும் கவுண்ட்டர்களாக அடி வெளுப்பார். பல்லவி முடிந்தவுடன் “நாகிர்தனாஆஆ.. திரனனா” என இழுத்து ஆரம்பிப்பார் பாருங்கள், வாவ்வ்..அதற்கு கூடவே மோர்சிங்,மிருதங்கம் என தொடரும் குறும்பான இசை..தலப்பாக்கட்டில ரவுண்ட்கட்டின கேபிள்சங்கர் சொல்வது போல் ம்ம்ம் டிவைன் !!

எனக்கு இதுதான் சந்தேகம். இதில் டிவிஜி அவர்களை உள்ளே நுழைக்கவேண்டும் என்ற எண்ணம் எங்கே வந்தது? ஏன் வந்தது? எப்படி வந்தது? எப்போது வந்தது?

டிவிஜியின் ஜதிகள் இல்லாமலும் இப்பாடலுக்கு ஒரு முழுமை உண்டுதான். ஆனால், டிவிஜி இல்லாது இப்பாடல் இல்லை. இதென்ன முரண்?

இங்கு தான் ராஜாவின் ஜீனியஸ்சை உணர்கிறேன்.

இப்பாடல் ஹீரோ கனவில் காணும் ’சமாசாரமான’ பாடல். அதே சமயம் ஒரு psychedelic அனுபவத்தை, கிட்டத்தட்ட சொப்பனஸ்கலித அனுபவத்தை மிக பாலீஷாய் இசையில் தரவேண்டும். இப்போது டிவிஜியின் ஜதிகளை பொருத்திப்பாருங்கள். இதைவிட கிளாசாய் இவ்விஷயத்தை வெளிக்கொணர முடியாது. குஷியின் ‘கட்டிப்புடி’ வரை இப்பாணி கடைப்பிடிக்கப்படுகிறது.

என்னைப்பொருத்தவரை இது ஒரு கல்ட் பாடல். ’அம்மா என்றழைக்காத’, ‘கண்ணே கலைமானே’,’அஞ்சலி அஞ்சலி அஞ்சலி’ போன்ற வாகான சிச்சுவேஷன் பால்கள் வராவிட்டால் என்ன, எந்த பாலையும் ஃபோருக்கு விரட்டும் மாயம். ராஜமாயம்.

அமரன் சமீபத்தில் சொன்னார் “நாங்க பார்க்காத பார்ட்டியா? ஒரு கட்டத்துல்ல அண்ணன் குடி,பார்ட்டி,கொண்டாட்டம் எல்லாத்தையும் விட்டுட்டார்”.

இப்பாடலை ராஜா கொண்டாட்டமாய் வாழ்ந்த காலத்தில் தான் போட்டிருப்பார்.


பி.கு: இப்பாடலின் கேசட் கவர் இங்கே காணலாம். தந்துதவிய எழுத்தாளர் சொக்கனுக்கு நன்றி. முதல் ராஜா படமும் அவரிடமிருந்து சுட்டது தான் :-)
http://musicalaya.net/imgviewer.php?mod=lpcovers/157/3/1/1
டிக்டிக்டிக் நாகிர்தனாவை ஞாபகப்படுத்தி லின்க் தந்த நண்பர் @vinaiyookiக்கும் நன்றி..

Tuesday, October 2, 2012

காந்தி-ஜெயந்தி (சிறுகதை)

காந்தியை மறுபடி சந்திப்பேன் என கனவிலும் நினைக்கவில்லை. கனவில் நினைத்துப் பார்க்குமளவுக்கெல்லாம் அவன் ஒன்றும் விசேஷம் இல்லை என்பது வேறு விஷயம். வாழ்வில் சிலர் இருப்பார்கள், நமக்கு நண்பனாகவும் இல்லாமல், எதிரியாகவும் இல்லாமல். விட்டகுறை, தொட்டகுறையாக கூடவே வருவார்கள். காந்தி எனக்கு அந்த வகை. 

புதுக்கோட்டையின் ஒரே ஊட்டி கான்வெண்ட், மாடல் ஸ்கூல். அரசு முன்மாதிரி மேனிலைப்பள்ளி என்ற அஃபிசியல் பெயரை பொதுவாக யாரும் சொல்வதில்லை. டென்த்தில் தக்கிமுக்கி 400 எடுத்தால் போதும். பையன்கள் நுரைதப்ப மச்சுவாடி மேட்டில் சைக்கிள் மிதித்து மாடல் ஸ்கூலில் +1 சேர்வார்கள். 

அப்படி பதினொன்னாவது சேர்ந்த ஒரு சுபயோக சுபதினத்தில் அசுபமாய் காந்தியை சந்தித்தேன். பொருத்தமாய் இனிசியலோடு எம்.காந்தி. மோகன்தாஸ் இல்லை. மல்லையன் பெத்த காந்தி.

“டேய் நீ ஸ்டீராம் தான?, காந்தி டா, கீழ ரெண்டாம் வீதி, சைல்ட் ஜீசஸ்ல நாலாவது படிச்சமே” என கிட்டக்க வந்தான். கோபம் வந்தால் நோட்டின் நடுவில் எச்சி துப்பிவைக்கும் கெட்டப்பழக்கத்தை இப்போது விட்டிருக்கக்கூடும். நம்பிக்கையாய் சிரித்தேன். அப்போதே நல்ல கட்டையாய் மீசை. கருப்பாய் களையாய் புதுநெல்லு புதுநாத்து ஹீரோ ஜாடையில் இருந்தான். தலையை தூக்கி பம்மென்று சீவி, அம்சமாய் ஒரு விபூதி-குங்குமம் வைத்திருந்தான். ஆங்கில மீடியம் கம்ப்யூட்டர் க்ரூப்பில் எண்ணி 12 பையன்கள். அதில் காந்தியும் ஒருவன். பிடிக்கிறதோ இல்லையோ கூட பழகவேண்டிய சூழல். 

காந்தி அடிப்படையில் ஒரு extrovert. பேச்சு, நடவடிக்கை எல்லாமே ஆர்ப்பாட்டம். ஜவுளிக்கடையில் ஜாக்கெட்பிட் கிழிக்கும் அப்பாவை நம்பி கஷ்டஜீவனம். அதை காண்பித்துக்கொள்ளக்கூடாது என்பதற்காகவே அதட்டலாய், அலட்டலாய் இருப்பான். பாக்கெட்டில் 1 ரூபா ஐஸ் வாங்கக்கூட காசு இருக்காது. ஆனால் உரிமையாக “மாப்ள” என பிடுங்கித் திண்பான். ரொம்ப எல்லாம் படிப்பு வராது. ஆனால், படிக்கும் கோஷ்டியான எங்களுடனே சுத்துவான். ட்யூசன் எல்லாத்துக்கும் கூட வருவான். ஒன்றையும் கவனிக்கமாட்டான், முன்பென்ச் ராணிஸ்கூல் பிள்ளைகளை தவிர. 

இந்த இடத்தில் கதை சூழலுக்குள் வருவது முக்கியமாக ஆகிறது. உலகத்திலேயே காய்ந்து போன பையன்கள் புதுக்கோட்டையில் தான் இருக்கவேண்டும். ஊரில் பையன்களுக்கு இரண்டே ஹைஸ்கூல்கள். பெண்களுக்கு ராணி ஸ்கூல் மட்டும். ஊருக்கு புதிதாக வரும் சப்-இன்ஸ்பெக்டர்கள் செய்யும் முதல் வேலை ராணிஸ்கூல் தெருமுனையிலேயே பாராவுக்கு கான்ஸ்டபிள் போடுவது. இல்லாவிடில் பையன்களை கட்டுப்படுத்த இயலாது. சீட்டியடித்து விடுவான்கள். ரேப், கையைப்பிடித்து இழுத்தல் க்ரைம்ரேட்டுகள் பீகார்/உபியை தாண்டிவிடும். பொதுவாகவே நாளமில்லா சுரப்பிகள் ஓவர்டைம் பார்க்க, பையன்கள் ஒரு வெறியிலேயே இருப்பான்கள். சரோஜாதேவி புத்தகங்களுக்கு கூட ஒருமணிக்கூர் திருச்சி ஜங்சனுக்கு போகவேண்டிய துர்நிலைமை. புதுமைப்பித்தன் மொழியில் சொன்னால் “என்னவோ கோ-எட், டேட்டிங் என்று கதைக்கிறீர்களே, இதான்யா புதுக்கோட்டை !!”.

நிற்க, இக்கொடூர சூழலிலும் காந்தி முடிந்தவரை அடித்து ஆடுவான். காலை ட்யூசனில், சார் மனைவி ராணிஸ்கூல் பிள்ளை மூலம் டம்ளர் பால் கொடுத்து விட, இவன் “சாருக்கு பால் கொடும்மா” என கொடூரமாய் குரல் கொடுப்பான். பையன்கள் பேய்த்தனமாய் சிரிப்பான்கள். சரவணாவில் 11 மணி காட்சி பார்த்துவிட்டு ’சீன்’வாரியாக கதை சொல்வான். அம்மன் பூச்சொரிதல் சமயம் சூப்பர்பாய்ஸ் நடனக்குழுவில் பெண்களை தொட்டெல்லாம் ஆடுவான்.

எங்கள் பள்ளி ஒரு யூகலிப்டஸ் காட்டின் நடுவே ஏகாந்தமாய் இருந்தது. ஸ்கூலையும் தாண்டி அரை ஃபர்லாங் தூரத்தில் ஒரு டீச்சர் ட்ரைனிங் பள்ளி. இந்த டீச்சர் ட்ரைனிங் என்பது பள்ளியும், கல்லூரியும் இல்லாத ஒரு ரெண்டுங்கெட்டான் என கொள்க. 

அதில் தான் ஜெயந்தி படித்தாள்.ஜெயந்தி அழகி. புதுக்கோட்டைக்கு பேரழகி.  மிக திருத்தமான முகம். சற்றே பூனைக்கண்கள். எவ்வித மேக்கப்பும் முகத்தில் இருக்காது. சமயத்தில் பொட்டு கூட. ஆனால் முகத்தில் ஒரு அமைதியும்,ஜொலிப்பும் எப்பவும். அப்போது பத்தொன்பது இருபது வயசு இருக்கலாம். க்ரே கலர் யுனிஃபார்ம் தாவணியில் மிக பாந்தமாய் வருவாள் போவாள். பார் இல்லாத லேடிஸ் BSA சைக்கிளில் மூச்சுமுட்ட மச்சுவாடி மேடு ஏறுவாள். நாங்கள் கர்மசிரத்தையாய் பத்தடி கேப்பில் பின்னாடி போவோம். 

அப்போது ஜெயந்தியின் பெயர் ஜெயந்தி எனக்கூட தெரியாது. பேர் தெரியாவிட்டால் என்ன, என்னவோ ஒரு பரவசத்தில் எதுக்கோ பின்னாடி போவோம். அப்படி தொடர்ந்து கொண்டிருந்த ஒரு நன்னாளில், காந்தி திடீரென “மாப்ள, இப்ப கவனி” என ஏறி மிதிக்க ஆரம்பித்தான். நாங்கள் ஒரு சேஃப்டிக்கு இன்னும் மெதுவாக மிதிக்க ஆரம்பித்தோம். வள்ளியப்பன் ”மாப்ள, நாம வேணா இந்த சந்துக்குள்ள வண்டிய விட்டுருவோம்” என உஷாரானான். 

காந்தி அவள் கிட்டே நெருங்கினான். அவள் வேகத்திலேயே அவன் சைக்கிளையும் மிதித்தான். பதபதைப்பிலோ, இல்லை பொதுவாய் சைக்கிளை மேட்டில் விடுவதாலோ, எங்களுக்கு மூச்சு வாங்கத்துவங்கியது. தலையை திருப்பி என்னவோ சொன்னான் அவளிடம். ஜெயந்தி என் ஞாபகத்தில் சுமார் 20 செகண்டுகளுக்கு திரும்பவேயில்லை. திடீரென அவளும் திரும்பி அவனைப் பார்த்தாள். என்னவோ சொன்னாள். அது காதில் விழாத தூரத்தில் நாங்கள் இருந்தது ஒரு துன்பியல் சம்பவம். 

சுமார் 2 நிமிடத்துக்கு பிறகு காந்தி வண்டியை நிதானமாக்கி எங்களுடன் இணைந்தான். ஒன்னுமில்ல மாப்ள, பேர் கேட்டேன், சொன்னா, வேறொன்னுமில்ல என முடித்துக்கொண்டான். 

அன்றிலிருந்து மிக மெதுவாக, கெமிஸ்ட்ரி லேபில் டைட்ரேஷன் சோதனை செய்வது போல், ஜெயந்தியை நெருங்கத்தொடங்கினான். என்ன எழவு மாயம் செய்தானோ, அவளும் இவனுடன் பேசத்துவங்கியிருந்தாள். சைக்கிளில் சேர்ந்தே போவான் அவளுடன். பொறாமையில் வெந்தே செத்தோம் நாங்கள். 

”டேய் லவ்ஸாடா” என கேட்பதிலேயே ஒரு கிளுகிளுப்பை உணரத்துவங்கியிருந்தோம். காந்தியும் அசராது “ஃப்ரண்சிப் டா மாப்ள” என்பான். என்னவோ ரிலேடிவிடி தியரியை அவன் விளக்கியது போல பொம்பளப்புள்ள கூட எப்டிடா ஃப்ரன்சிப்புங்கிறான் என ஆச்சர்யத்தில் வாயைப் பிளப்போம்.  ஜெயந்தி காந்தியுடன் திருக்கோகர்ண கோவிலில் பரீட்சைக்காக அர்ச்சனை செய்ததாக செய்தி வர, கார்த்தி “..க்காளி, எங்கப்பன் கூட எனக்காக வேண்டிக்கிட்டதில்லடா” என பொருமினான். 

ஒருவழியாய்  +2 முடிய, பொறியியல், மெடிக்கல்,டெண்டல் என அவரவர் சத்துக்கு படிக்கப்போக, காந்தி வாங்கிய 690 மார்க்குக்கு புதுகை ராஜாசிலேயே ஆர்ட்ஸ் சேர்ந்தான். அதன்பிறகு அவனை சந்திக்கவேயில்லை. காந்தி ஞாபக அடுக்குகளிருந்து மறைந்தே போனான், போனவருடம் சுந்தரம் ஃபேஸ்புக்கில் இழுத்துவிடும்வரை. சிங்கப்பூரில் கட்டுமான கம்பெனியில் குவாலிடி டிப்பார்ட்மெண்ட் என வாழ்வில் தாக்குப்பிடித்துவிட்டான்.

போனமாதம் புதுக்கோட்டைக்கு போன அதே சமயம் அவனும் ஊரில். வீட்டுக்கு வந்தேயாக வேண்டும் என வற்புறுத்தினான். சிங்கப்பூர் காசில் புதுகை அவுட்டரில் ஆலங்குடி ரோட்டில் சற்று எடுத்துக்கட்டிய வீடு. நாலைந்து கோழிகள் திரிய, வாசலில் வயசாளி அப்பா ஈசிசேரில் சிரிக்க, உப்பிய கன்னத்தோடு, பெரிய கண்ணாடியோடு “டேய் மாப்ள” என கட்டிக்கொண்டான். 

அவன் மனைவி எங்கே என்பது போல உள்ளே பார்க்கையில்...

அவள் வீட்டின் உள்ளேயிருந்து காபித்தட்டோடு வந்தாள்.

---------------------

முடிவு 1:

சற்று வயசான, உடல் பெருத்த, அன்று பார்த்த அழகும், வசீகரமும் சிறிதும் குறையாத ஜெயந்தி. 


நியாயமாய் இதோடு முடித்திருக்க வேண்டும். ஆனால், வாழ்வின் நிதர்சனங்கள் கதை முடிவைப்போல அழகியலோடு இருப்பதில்லை என நினைப்பீர்களேயானால் இது.


சற்று வயசான, உடல் பெருத்த, எந்தவொரு  அழகும், வசீகரமும் இல்லாத வசந்தி. 

இதில் எந்த முடிவை நீங்கள் தேர்ந்தெடுத்தாலும் கதாசிரியனாக எனக்கு பிரச்சனையில்லை. 

---------------------

முடிவு 2:

அச்சு அசலாய் காந்தியின் சாயலும், வசீகரமும் கொண்ட பத்து வயதுக்குள் சொல்லக்கூடிய ஒரு சிறுமி. 

பேரு ஜெயந்தியாம்.

---------------------

Monday, September 24, 2012

மூக்கால பாடும் ராஜா சார்..


இண்டு இடுக்கில்லாமல் நிறைந்திருக்கும் அரங்கம். ஆரம்ப முஸ்தீபுகள் முடிகிறது. வெள்ளுடை தரித்த உருவம் மெல்ல நடந்து மேடை நடுவில் இருக்கும் ஹார்மோனியம் முன்பு உட்காருகிறது. முன்னே ஒரு மைக். ஒரு வார்த்தை பேசவில்லை. வணக்கமில்லை. ஹாலில் “சிவசக்த்யா யுக்தோ யதிபவதி” என சன்னமான குரல் கேட்கத் துவங்குகிறது. காத்திருந்தாற்போல் ஆர்ப்பரிக்கிறது அரங்கம்.

இதை ராஜாவின் எந்த கச்சேரி/விழாவுக்கும் நீங்கள் தொடர்புப்படுத்திக் கொள்ளலாம்.

6 மணிநேர டெலிகாஸ்ட்டை “தென்றல் வந்து” வருது வருது வந்துடுச்சு என நம்மை ஏங்கவைத்தே சம்பாதிக்கின்றன சேனல்கள்.  தோனியின் “தாவித்தாவி” கேட்டால் +2வில் மார்க் குறைந்ததெல்லாம் ஞாபகம் வந்து கண்ணீர் முட்டுகிறது. NEPV ’வானம் மெல்ல’வில் ராஜா குரல் கேட்கும்போது தான் ஆல்பம் முழுமை பெற்று “என்ன குரலுய்யா” என சிலாகிக்க முடிகிறது.

”என்னய்யா குரல் இது” எனவும் சொல்லப்பட்ட காலம் ஒன்றுண்டு என அறிவீர்களா?

அப்பாவின் சிங்கப்பூர் நண்பர் கொடுத்த சோனி 90 A,B ரெண்டு சைடும் ராஜா பாடின பாட்டாய் பதிவு செய்து, அதற்கு நான் 90 நிமிடம் அப்பாவிடம் பாட்டு வாங்கினேன் என அறிவீர்களா?

 (அதில் நான் நினைவுச்சின்னத்தில் ராஜா பாடிய “சிங்காரச்சீமையிலே” கேட்டிருக்க, கடைக்காரன் கரெக்டாய் தப்பாய் சுசிலா வெர்ஷன் பதிவு செய்த கொடுமை வேறு)

எண்பதுகளின் பின்னிறுதிகளில் ராஜா குரலுக்கான பொதுப்புத்தி கமெண்ட் ’மூக்கால பாடுறாருய்யா..இதை எஸ்பிபி பாடிருந்தா..” என அறிவீர்களா?

இத்தனைக்கும் பாட்டை ராஜா கூட பாடியிருக்கமாட்டார்.  அமரன், இல்லை இன்னொரு சகோதரர் பாஸ்கர் கூட பாடியிருக்கலாம்.

ஆனாலும், அது ராஜா வாய்ஸ் தான். மூக்கால தான்.

இப்படி ஒரு கருத்தாக்கம் இருந்ததா, எந்தளவுக்கு அக்காலத்தில் இருந்தது என்பது இக்கட்டுரையின் கருப்பொருள் அல்ல. இசையமைப்பாளர்கள் பாடினால் அது உடனடியாக கொண்டாடப்படுவதில்லை, சிலசமயம் சமகாலத்தில் ரசிக்கக்கூடப் படுவதில்லை என்ற ஆதங்கமே இப்பதிவு.

பாடுவதற்கு என்ன வேண்டும்? குரல்வளமா? ஆமெனில், நுஸ்ரத் ஃபதே அலிகான் உருவாகியிருக்க முடியாது. முறையான பயிற்சியா? ஆமெனில், SPB முதல் வேல்முருகன் வரை உருவாகியிருக்க முடியாது. பாடுவதில் உயிர் இருக்கனும். ஒரு கம்போசிஷனை தன் குழந்தையை போல் எண்ணுவதாலோ என்னவோ,  இசையமைப்பாளர்கள் பாடுகையில் தங்கள் குரல் ஒத்துழைப்பையும் மீறி ஒரு இனம்புரியா ஜீவனை பாட்டில் செலுத்துகிறார்கள் என்பது என் துணிபு.

நான் காலக்கிரமமாக எல்லாம் போகவில்லை. ஜி.ராமநாதனின் ‘எஜமான் பெற்ற செல்வமே’யில்  ஆரம்பித்தால் விண்டோவை மூடிவிட்டு போய்விடுவீர்கள். எம்மெஸ்வி, ராஜா, ரஹ்மான் போன்ற Established entities பக்கமும் போகவேண்டாம். ஜிராசொக்கபிரபாமயில்கள் நடமாடும் வனத்தில் வான்கோழியாகவோ,ஈமூவாகவோ விருப்பமில்லை.

மற்றவர்களிடம் போவோம். The God is in the details. Or with the minnows.


அக்காலத்தில் ராஜாவுக்கு டஃப் கொடுத்த (அடிக்க வராதீர்கள், டஃப் கொடுக்க ஏவிஎம் போன்றோரால் வளர்க்கப்பட்ட ) சந்திரபோசின் மொத்த கரியரையும் ‘மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு’க்குள் அடக்கிவிடுவேன். அவர்க்கும் சிலபல unique ஹிட்டுகள் உண்டு. அதில் அவர் பாடிய ’பூஞ்சிட்டு குருவிகளா’வும் ஒன்று. (டூர் போன இடத்தில் ஹேண்டிகேமில் எடுத்த கொடூர ரீமிக்சே யூட்யுப் வசம்) . டிடியின் கொடைக்கானல் ஓளிபரப்பு துவங்கிய வருடத்து தீபாவளியில் போஸ் சார் முகமெல்லாம் சிரிப்பாய் “பூஞ்சிட்டு குருவிகளா” பெர்ஃபார்ம் செய்தது இன்றும் நினைவில்.சிலசமயம் குரல்களின் புதுமை ஒரு பாட்டுக்கு assetஆகவும் முடியும். அசடாகவும் முடியும். இங்கு சைடில் சற்று முடி இழந்த பாரா போல் இருக்கும் மரகதமணியை ஞாபகமிருக்கா? ராஜாவை முறைத்துக்கொண்ட பாலசந்தரை தன் சத்துக்கு முட்டுக்கொடுத்தவர். எப்போது கேட்டாலும், இப்போது கேட்டாலும் ‘கீரவாணி’ தெலுங்கில் ரொம்ப பாப்புலர் என்பார்கள். அவர் குரலில் இந்த வானமே எல்லை கம்பங்காடே எனக்கு மிகவும் இஷ்டம். இப்பாடலை அவர் ரொம்பவும் டைனமிக்ஸ் இல்லாது ஃப்ளாட்டாக தான் பாடியிருப்பார். ஆனால் ட்யூனின் அழகினால் உறுத்தாது.

ஆமா டைனமிக்ஸ்ங்கிறீங்களே..அதென்ன மெடிமிக்ஸ் என கேட்பவர்களுக்கு என் 2 நயா பைசா. புதிதாக கீபோர்ட் கற்றுக்கொண்ட ஒருத்தர் வெறும் ட்யூன்/நோட்சை மட்டும் அறிந்துகொண்டு 'நலந்தானா’ வாசிக்கிறார் என வைத்துக்கொள்வோம் :) ஒரு மாதிரி வெறும் நோட்சாக, டொட்டடொடடொய்ங் என மொக்கையாக கேட்குமே..எது குறைகிறது என நினைக்கிறோமோ, அந்த மசாலாவே டைனமிக்ஸ்..


அப்படியே S.A.ராஜ்குமாருக்கு வருவோம். USSR என இனிசியல்களை சேர்த்து ஏழாங்கிளாசில் நான்கு பேர் முடிந்த அழும்புகளை செய்துகொண்டிருந்தோம். கிளாசில் 3 கேர்ள்சில் ஒரே பேரழகியான ராதாவை கூட்டுச்சேர்த்து இன்றோடு ஐவராகி ’ஃப்ரேன்சீப்’ வளர்க்கலாம் என புரியவைத்த காவியம் புதுவசந்தம். அப்போது எங்கு கேட்பினும் ஜேசுதாஸ் வாய்சில் “பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா” தான். ஆனால், எனக்கு மட்டும் S.A.ராஜ்குமாரின் குரலில் “இது முதல் முதலா வரும் பாட்டு” பிடிக்கும். அவரின் முதல் படமான சின்னப்பூவே மெல்லபேசுவிலேயே ”யே புள்ள கருப்பாயி”யில் கலக்கலாய் பாடியிருப்பார்.

நெக்ஸ்ட் வித்யாசாகர். வித்யாசாகர்  எப்போதும் தன்னை undersell செய்துகொள்வதாக எனக்கு படும். கில்லி ஹிட் காலத்திலேயே கூட டிவியில் பேட்டியெல்லாம் ரொம்ப கொடுத்ததில்லை. தமிழ்ல இருப்பார், சான்ஸ் இல்லாவிடில் மல்லுவுட்டில் சத்தமின்றி பத்து படம் ம்யூசிக் போட்டிருப்பார்.
சரி, வித்யாசாகர் பாடுவார் என அறிவீர்களா? ராமன் தேடிய சீதை என்றொரு ஓடா சேரன் படம். இப்பாடலை கேளுங்கள்.  வித்யாசாகர் குரலில் இருக்கும் cry-ஐ உணர முடிகிறதா? என்ன பாட்டுடா சாமி எனத்தோணவைக்கும் பாட்டு.
(சற்றே) சற்று பாப்புலரான வேறொரு பாடலுக்கு வருவோம். குருவியில் ‘பலானது’ கேட்டுருக்கிறீர்களா? அத்னன் சாமியின் குரல் சாயலில் அது வித்யாசாகரே தான். ( அத்னன் வெறியர்கள் வாக்கிய தொடக்கத்தில் கிட்டத்தட்ட/கொஞ்சூண்டு போன்ற adjectives மனம்போல் சேர்த்துக்கவும்)  டெக்னோ மிக்சியில் குரலை போட்டு அரைத்திருந்தாலும், வித்யாசாகர் குரலில் அடிநாதமாக உள்ள peppyness-ஐ, ரகளையை குறிப்பாக சரணம் முடிவில் கவனியுங்கள்.

ரைட்டு, சிற்பி ஞாபகம் இருக்கா? நாட்டாமை ’கொட்டைப்பாக்கும்’ ஆசாமி. அதைவிடவும் பல நல்லப்பாட்டு போட்டிருக்கிறார். பாரதிராஜாவின் ‘ஈரநிலம்’ மூலமாவது இழந்த மார்க்கெட்டை பிடித்துவிடலாமென  அத்தனையையும்  கொட்டி“இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை” என இசையமைத்தார். அவுட் ஆஃப் ஃபார்ம் பாரதிராஜாவும், ஃபார்முக்கே வராத மனோஜும் படத்தை ஊத்தி மூட, பாவம் அப்படத்தின் பல நல்ல பாடல்கள் வெளியே தெரியவில்லை.
கரிசக்காட்டுக்குயிலே பாட்டில் அவர் பாடுவதை கவனியுங்கள். கூடப்பாடும் சுஜாதா என்ற ராட்சசி அளவுக்கு குரலோ, குழைவோ இல்லை தான். ஆனால் அவரது குரலின் rustiness எந்தளவுக்கு இப்பாட்டுக்கு ஜஸ்டிஸ் செய்கிறது என பாருங்கள்! எனக்கு தெரிந்து சிற்பியின் கடைசி ஹிட் பாட்டு “ரகசியமானது காதல்” (படம்: கோடம்பாக்கம்) தான். அதில், அவர் பாடிய வர்ஷன் ஒன்றுண்டு. நெட்டில் ஹரீஷ் ராகவேந்திராவின் பத்திய வெர்ஷனே கிடைக்கிறது.

கடைசியாக, நம்ம ஃபேவரைட். தேவா பற்றி பேசாமல் இக்கட்டுரை முழுமையடையாது. கரியரின் பீக்கில் கிட்டத்தட்ட பாதி பாடல்களை அவரோ, அவர் தம்பியோ பாடி விடுவார்கள். மனோ/SPBக்கு சான்ஸ் குறைந்ததுக்கு இவர் பெரிய காரணம். இவரின் 2 பாடல்கள் என்னுடைய ப்ளேலிஸ்டில் எப்பவும். ஒன்று, கவலைப்படாதே சகோதரா (காதல்கோட்டை). இதில் “யம்மா யம்மா” போது குரல் சுத்தமாக கண்ட்ரோல் இன்றி, சிங்கப்பூர் ரேசில் ஷூமேக்கரும், கார்த்திகேயனும் மோதிக்கொண்டதையொத்த விதத்தில் இருந்தாலும், அவர் குரல் காண்பிக்கும் நட்பு, ஆறுதலை வைத்து இன்றைய ஆலாப்,நரேஷ்களுக்கு கிளாஸ் எடுக்கலாம். பாடலில் emote செய்வதை பற்றி பேசுகையில், அவரது “மீசக்கார நண்பா”வை மறக்கமுடியுமா? ரொம்பவுமே unusual ட்யூன் மற்றும் வரிகள். இதை ஓகே செய்த கே.எஸ்.ரவிக்குமாருக்கும் ஷொட்டு. குறிப்பாக “அதைவிட பாசம் அதிகம்டா” பாடுகையில் தேவாவின் குரலை கவனியுங்கள். நான் விட்டால் அழுதிருப்பேன்.
இன்னொன்று, ஒரு மெலடி. No points for guessing. ’கோகுலத்து கண்ணா கன்ணா’வே  தான். SPBயும், சித்ராவும் பாந்தமான டீச்சர்களாக முதல் 2 பீரியட்களை முடித்துவிட்டு, மூன்றாவது பீரியட் கேம்சாக இருந்து அதற்கு ஒரு ரகளையான புது மிஸ் வந்தால் எப்படியிருக்கும். அந்த எஃபக்டை கொடுக்கும் இப்பாடல் அவரின் ஆல்டைம் ஜெம் என்றால் மிகையாகாது.


நன்றாக பாடுவதென்பதென்ன? ஒரு பாட்டின் மூடை, பாடல் சொல்லவரும் உணர்வை சரியாக கடத்துவது தானே. உசிரைக்கொடுத்து பாடுறது தானே..அவ்வகையில் மேற்கூறிய அனைவரும் புரஃபஷனல் பாடகர்களை விட அசத்தியிருப்பதாகவே என் சிறிய மூளைக்கும்/பெரிய இதயத்துக்கும் படுகிறது.(தற்காலத்திய கம்போசர்கள் பாடிய பாடல்களும் போட்டு உங்களை படுத்தலாம் ;),  உங்கள் ஆதரவு பொறுத்து)

Tuesday, July 3, 2012

தேசி என்றொரு இனமுண்டு“650 ஸ்கொயர்ஃபீட்  50 லட்சமாம் வெஸ்ட் மாம்பலத்துல”

“நம்ம டௌண்டவுனை விட காஸ்டிலியா இருக்கே ரேட்டு”

“அட 2 பெட்ரூம் வாடகை இருபத்தஞ்சாயிரம் சொல்றானாம் சார் அதுவும் OMRல எங்கியோ..”

”ரெண்டு பேரு ஹோட்டல்ல சாப்பிட ஆயிரம் ரூபா ஆயிடுதாம்”

“ஒன்னுமில்ல ஒரு காபி 35 ரூவாவாம் சரவணபவன்ல”

"ஒரு இட்லி, ஒரே ஒரு இட்லி நாப்பது ரூபாயாம் முருகன் இட்லில”

”தங்கறது? டீசண்ட் ஹோட்டல்ன்னா நாலாயிரம் ஆகுது ஒரு நைட்டுக்கு.. இங்க 40 டாலருக்கு ஹாலிடே இன்னே கிடைக்குது”  

 “சம்பளக்காரங்க சமாளிச்சுடறாங்க..பென்ஷனர்ஸ் பாவம் சார்..எங்கப்பால்லாம் அல்லாடுறாரு”

 ”ஆமா சார்..பாலு, காய்கறி, பருப்பு எல்லாம் ஏறிப்போச்சு சார்”

“கேஸ் சிலிண்டருல்லாம் எங்கியோ நிக்குது”

“பெட்ரோலு கேக்கவே வாணாம். பியர் பெட்ரோலை விட சீப்புன்னு ஃபேஸ்புக்ல ஜோக்கடிக்கிறாங்க”

“ட்ரைன் டிக்கட்லாமும் ஏறிப்போச்சு..கிடைக்கவே மாட்டேங்குதாம்”

“ட்ரைனை விடுங்க..இந்த ஆம்னி பஸ்சு..கொள்ளை..லீவுநாள்ன்னா ஆயிரம் ரூவா கேக்குறாங்களாம் திருச்சி-மெட்ராசுக்கு”

 ”டாக்சி என்னங்க வாழுது..ஒரு நாளுக்கு எடுத்தாலே ஏழாயிரம், எட்டாயிரம் ஆகுதுங்க”

”ஆட்டோ? 100 ரூவாக்கு கம்மியா அடுத்த தெரு கூட போகமுடியாதாம்”
 “பத்து, இருவதுக்கெல்லாம் மதிப்பே இல்லாம போச்சு சார்..”

“அட பிச்சைக்காரனே பத்து ரூவாக்கு கம்மியா வாங்கமாட்றான் சார்”

“அவன் செல்போனே வெச்சுருக்கான் சார்”

 ”படிப்பு? எல்கேஜிக்கு டெர்ம் ஃபீஸ் அம்பதாயிரமாம்”

 “இங்கயே தேவலாம் போலருக்கே..அட்லீஸ்ட் ஸ்கூலு ஃப்ரீ..”

“காலேஜு ஃபீசுல்லாம் நினைச்சுக்கூட பார்க்கமுடியல சார், பத்து லட்சத்துக்கும் மேல போகுது என்ஜினியரிங்ல்லாம் இப்பவே”

“இப்பவே இப்படின்னா நாம ரிடையர் ஆறதுக்குள்ள விலைவாசி எங்கியோ போய்டும் சார்..”

“திரும்ப இண்டியா போயி செட்டிலாற ஐடியால்லாம் விட்டுறுங்க..நமக்கு இனி இங்க தான்”

“ஆமா சார், ஒரு சொந்தக்காரனும் ஒட்டுறவா இல்ல..வாங்கிட்டுப்போற கிஃப்ட்ட வாங்கிட்டு ஒருவாய் சோறு கூட போடுறதில்ல”

‘இந்தியால நமக்கு இனி ஒன்னுமில்ல சார்..இனிமே அங்க ஒட்டாது நமக்கு” 

“ பசங்க கல்யாணமாச்சும் இண்டியால செய்யனும் சார்..அதுக்கு மினிமம் பத்து லட்சம் தேவை போலருக்கே”

  ”நம்ம பசங்க வளர்றதுக்குள்ள கோடில நிக்கும் சார்..இப்ப என் மச்சான் கல்யாணத்துக்கே கேட்டரர் 6 லட்சம் கேக்குறான்”

“எப்ப சார் கல்யாணம்? நீங்க போறீங்களா”

“எவ்ளோ சார் ஆச்சு  டிக்கட்?

“எந்த ஏர்லைன்ஸ் ஜெட்டா, எதிஹாடா,லுஃப்தான்சாவா?”

”ஹ்ம்ம்..நான் போயி 4 வருசம் ஆச்சு சார், எப்ப சார் போறீங்க?”

“என்ன சார் 4 வீக்ஸ் லீவா..என் மேனேஜர் லீவு கேட்டதுக்கு அப்புறம் போன்னுட்டான்.. ”

“மெட்ராசா சார் போறீங்க? பிளாக்ல இட்லிவிலாஸ்ன்னு ஒரு ரெஸ்டாரண்ட் பார்த்தேன். அள்ளிட்டுபோவுதாம் டேஸ்டு..அங்கல்லாம் போங்க சார்”

“ஆகஸ்டுல 4 வாரம் போறேன் சார்..கல்யாணத்தோட திருச்சி, கும்மோணம், பிள்ளையார்பட்டி, மதுரை, திருப்பதின்னு பெரிய ரவுண்டு”

”சூப்பர் சார்..என்ன இருந்தாலும் நம்மூரு மாதிரி வராது சார்”.

Wednesday, June 20, 2012

தொண்ணூறுகளின் டப்பிங் படங்கள் (பாகம் 2): ராஜசேகர் ஸ்பெஷல்

பாகம் 1 (விஜயசாந்தி ஸ்பெஷல்): ( இங்கே) 


தெலுங்கு டப்பிங் படங்களில் விஜயசாந்தியை சொல்லிவிட்டு டாக்டர் ராஜசேகரை பற்றி ’சொல்லாட்டி போனா’,  இந்த பிளாகே கொந்தளிப்பாகி “லா அண்டு ஆர்டர்” கெட்டுப் போய்விடும்.
 1989 டிசம்பரில் தான் ‘இது தாண்டா போலிஸ்” என்ற அதிசயம் நிகழ்ந்தது.

ஒரு unique டைட்டிலா, தூர்தர்ஷனில் 10 நிமிஷத்துக்கு ஒரு முறை வந்த ‘ஹேய்ய்ய்ய்ய், இதுதாண்டா ப்ப்ப்ப்ப்ப்ப்ப்போஓஓஓலிஸ்” விளம்பரமா, பொங்கல் ரிலீஸ் காத்திருப்பில் சினிமா வெறியர்களுக்கு இது ஸ்டாப்கேப் படமாக பட்டதா என தெரியவில்லை. மெல்லிசாய் சீறி, பின் பட்டையை கிளப்பும் 5000 வாலாவாக, சடசடவென தமிழ்சினிமாவில் ராஜசேகர் எரா துவங்கியது.


ராஜசேகர் யாரென சுருக்கமாக பார்த்துவிடுவோம். அடிப்படையில் தமிழர். சென்னைவாசி. டாக்டருக்கு படித்து அமிஞ்சிக்கரையில் ப்ராக்டிஸ் செய்தவர். பாரதிராஜாவின் புதுமைப்பெண்ணில் அறிமுகமாகி,  தமிழர்கள் கைவிட, மனவாடுகளால் மனதார ஏற்றுக்கொள்ளப்பட்டவர். ஒரு களையான முகம் என்பதை தவிர  எந்த பெரிய காந்தமும் இல்லைதான். ஆனால் ஒரு பொறி இருக்கும். அசமஞ்சத்தனம் இருக்காது. கோபத்தை அச்சு அசலாக பிரதிபலிப்பார். எம்ஜியார் போல் உதட்டு ரத்தம் வரும்வரைக்கும் எல்லாம் நோ வெய்ட்டிங். மான்புமிகுவோ, மாமூலான ரவுடியோ/போலீசோ, பொளேரன்று முதல் அடி இவருடையது தான்.

ராஜசேகர் ஆக்சன் ஹீரோவாகினும் பாடி பில்டரெல்லாம் கிடையாது. குறைந்தபட்ச ஆர்ம்ஸ் கூட கிடையாது. நெஞ்சை விடைத்து, கையை புடைத்து ஒரு பயில்வான் ஃபீல் கொண்டு வந்துவிடுவார். மூஞ்சை மூஞ்சூரு போல் முறுக்கி  முறைத்து ஒரு அறச்சீற்றத்தையும் வெளிப்படுத்தி விடுவார். நடை கந்தன் கருணை சிவாஜி ரேஞ்சுக்கு, எலக்ட்ரிக் ட்ரைன் சுவர் நோட்டிசில் உள்ள வியாதிகள் வந்தது போல், காலை அகட்டி வீரமாக நடந்தால் தியேட்டரில் ரசிகன் புல்லரிப்பான்.

அவர் குரல் இருக்கிறதே..அடடா..காந்தர்வ குரல். சாய்குமார் என்பவர் இதற்கென்றே பிறவி எடுத்திருப்பார்.  தமிழை சுந்தரத்தெலுங்கில் பேசியிருப்பார். ராஜசேகரே டபுள் பேமெண்ட்டுக்கு ஓவராக்டியிருக்க, இவர் டப்பிங்கில் இன்னும் உணர்ச்சிவசப்படுவார். பின் சாய்குமாரே, அடப்போங்கடா என ஹீரோவாக மாறினார். அந்தப்புரத்தில் சௌந்தர்யா ஜோடியாக வருவாரே..அவரே தான்.

டப்பிங் படங்கள் genre என்ற வகையில் ராஜசேகர் ஒரு ட்ரெண்ட் செட்டர்.
ராஜசேகர் படங்கள் நாளன்னைக்கு புரட்சி வந்துவிடும் என்ற லெவலிலேயே இருக்கும்.அவர் படங்களின் படி, தொண்ணூறுகள் ஆரம்பத்தில் ஆந்திராவில் கொடூரமான அரசியல்/சமூக சூழல் நிலவியிருக்கவேண்டும். கிரேப்ஜூஸ் குடிப்பது போல ரேப்ஸ் நடந்திருக்கவேண்டும். “ஸ்பாட்டு வைப்பது, மர்டர் செய்வது” போன்ற கோர்ஸ்களை முடித்து, ஐடி கம்பெனி போல இளைஞர்கள் அடியாளாய் சேர்ந்திருக்க வேண்டும். எம்ஜியார் இறப்புக்கு பிறகு தமிழ் அரசியலும் சட்டசபை அடிதடி என சிலாக்கியமாக இல்லாதது வசதியாக போய்விட்டது.  வெட்டி ஆபிசர்கள் காலை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்துவிட்டு, மதியம் ராஜசேகர் படம் பார்த்துவிட்டு, மாலை தலைவலியோடு வீட்டுக்கு வந்து, இரவு 4  “ஏய் அரசே” கவிதை எழுதுவான்கள் (எழுதியிருக்கிறேன் :)). சுருக்கமாக, ”எல்லாரும் ஃப்ராடுங்க சார்” என்ற யுனிவர்சல்  கோபத்தை நன்கு  முதலீட்டாக்கியது ராஜசேகர் படங்கள் எனக்கொள்ளலாம்.


ராஜசேகர் படங்களில் டெக்னிக்கலாக ரொம்ப மெனக்கெடல்கள் எல்லாம் கிடையாது. படம் அழுக்காக, எடிட்டிங்லாம் “இங்கே வெட்டிங், அங்கே ஒட்டிங்” லெவலிலே தான் இருக்கும். பாடல்கள் பொதுவாக நாராசம். ராஜாவை முறைத்துக்கொண்ட, ரஹ்மான் வராத காலக்கட்டத்தில் வைரமுத்து “என் கிரகம் இங்க வந்து மாட்டிக்கிட்டேன்” லெவலில் தெலுங்கு வாயசைப்புக்கு பாடல் எழுதிருப்பார்.

கதைகள், கேரக்டர்கள் ஒரே டெம்ப்ளேட் தான். ராஜசேகர் போலீஸ்கார், ஆர்மிக்கார், நேவிக்கார் என ஏதோ ஒன்று. மூக்கின் மீது கோவம். பார்க்கிறவனையெல்லாம் 2 தட்டு. நல்ல/கெட்ட அரசியல்வாதி, மனைவி சாவு, பழிவாங்கல், ஜெய்ஹிந்த் என படம் ஒவர்.  அமைச்சர் தேசியக்கொடியை தலைகீழாக தொங்கவிட்டு  போகிறாரா? காரை நிறுத்தி சட்டையப்பிடி. போலீஸ் ஸ்டேஷனில் மிரட்டலா? கண்ணை உருட்டி 2 அறை விடு. ப்ராப்ளம் சால்வ்ட்.

கேரக்டர்கள் எனப்பார்த்தால் பஞ்சகச்சம் கட்டிக்கொண்டு சிலபல அரசியல்வாதிகள், மாவா மோவாயில் வழிய ‘ஸ்பாட்டு’ வைக்கும் தாடி அடியாள், சகட்டுமேனிக்கு மெயின் வில்லனை ஓட்டும் காமெடி வில்லன் (குறிப்பாய், இப்படத்திலிருப்பவரை ஒய்.ஜி.ம்ஹேந்திரா வாய்சில்  கண்டிப்பாக பார்த்திருப்பீர்கள்),  வேவு பார்த்து சாவும் ஒரு ஜோல்னா ஜர்னலிஸ்ட், ”உங்க கோவத்தை கண்ட்ரோல் பண்ணுங்க” என சொல்ல ஒரு காக்கி சூட் DIG, வில்லனால் சாவதெற்கென்றே ஒரு மனைவி (முக்கால்வாசி ஜீவிதா), ஒரு செல்லமகள் அவ்வளவே. ரொம்பக்காலத்துக்கு 2 சீன் வந்து செத்துபோற ஹீரோயின் தானே என தன் மனைவி ஜீவிதாவை வைத்து ஒப்பேற்றினார். லெவல் கூடியபிறகு அமலா, மீனா என தன்னை ”அம்மாடி அம்மோவ்” என துரத்திக் காதலிக்க ஆள் சேர்த்துக்கொண்டார்.

இந்த இடத்தில் டப்பிங் படங்களில் அவர் கரியர் கிராஃபை பார்ப்போம்.
அடிப்படையில் இதுதாண்டா போலீஸ் ஒரு மொக்கை கதை. முதல் காட்சியிலிருந்தே ஒரு நல்ல முதல்வரை கவிழ்க்க நினைக்கும் நம்பர் 2. நம்பர் 2 என்றால் மலச்சிக்கல் இல்லை. மனச்சிக்கல் தரும் ஒரு ஹோம் மினிஸ்டர். சிஎம்மின் பழைய மாணவனான ’இன்ஸ்பெக்டர் விஜய்’ அவரை உயிரைக்கொடுத்து காத்து ‘அ டெடிகேசன் டு சின்சியர் போலீஸ் ஆபிசர்ஸ்’ என ஸ்லைடு போட்டு சுபம். அவ்வளவே அவ்வளவு தான் கதை. ஆனால் குத்துமதிப்பாய் போரடிக்காது போகும்.

எதுக்கோ தமிழில் பேயோட்டம் ஓடியது இப்படம். அங்குசம் என தெலுங்கில் ஹிட்டடித்து, ராஜசேகர் உட்பட பலருக்கு டப்பிங் பொறி தட்ட, உடனே பொட்டியை தூசு தட்ட, அது சொப்பனசுந்தரி காராய் பலருக்கு மாறி, கடைசியில் ராஜசேகரே டப் செய்து செம கல்லா கட்டினார். டிசம்பரில் வந்து பொங்கல் படங்களையெல்லாம் தாண்டி ஓடியது. பொங்கலும் நடுவுல இல்லைன்னா கோடில சம்பாதிச்சுருப்பேன் என ஒரு சமீப பேட்டியில் பெருமூச்சு விடுகிறார்.

இங்கு ஒரு செய்தி. நாம் அனைவரும் சிலாகிக்கிறோமே ரமணாவின் புள்ளிவிவர டயலாக். அது அச்சு அசலாய் “நூத்துக்கு 40 பேரு சாகிறாங்க” கடைசி லைன் உட்பட இதுதாண்டா போலீசில் முதல்வர் கேரக்டர் சொல்வது !

இ.தா.போ ஓடினாலும் ஓடியது..தேன்கூட்டை கலைத்தது போல், அவர் நடித்த அத்தனை திராபை படங்களும் அடுத்தடுத்து வர ஆரம்பித்தன. என்னவோ நேரடி தமிழ்ப்படம் வருவது போல விகடனில்  இரண்டாவது படமான “மன்னிக்க வேண்டுகிறே”னுக்கு பெரிய கவரேஜ். பிறகு ‘நான் மந்திரியானால்’, ‘மீசைக்காரன்’, ‘ஆம்பளை’, ‘எவண்டா உங்க MLA” என லைன்கட்டி ஒன்றரை டஜன் ராஜசேகர் படங்கள் வந்தன.

என்ன மேட்டரென்றால், இதில் பல படங்கள் செம போங்கு. ஒன்று அவரது ஆரம்பக்கால ஓடாப்படங்கள். இல்லை, அரைவேக்காடுகள். அதிலும் குறிப்பாக மீசைக்காரன். ராஜசேகர் ஒரு குமுதம் இதழை “தயாரிக்க” அதில் கவர்ஸ்டோரி போட்டு பெப் ஏற்றப்பட்ட படம். ராஜசேகரும் தன் பட்ஜெட் லெவல் ஏறியதில் அந்நாள் நடிப்பு சூறாவளியான பேபி ஷாமிலியை தன் மகளாக 4 நாள் கால்சீட்டில் பிடித்துப்போட்டு எடுத்தார். ஒரு சேதி என்னவென்றால் போஷாக்கான சரத்குமார் ராஜசேகரிடம் பல்பு வாங்கும் ஒரு சிரிப்பு போலீசாக இப்படம் நெடுக வருவார்.
அடித்து பிடித்து படம் பார்க்க போன ரசிகன் பாதிப்படத்துக்கு ராஜசேகர் 'இல்லாட்டி போயி’ டரியலானான். ஒரு நல்ல அமைச்சர் “தேக்கோ தேக்கோ சாரே ஜஹான்சே அச்சா, ஆண்டவன் இயற்கை அன்னைய படைச்சா(ன்)” என்று பாடி(?), டூர் போய் கடத்தப்படுவதையே வைத்து பாதி படம் ஒப்பேற்றினார்கள்.

விஷயம் என்னவென்றால், ராஜசேகருக்கு செம ஆக்சிடண்ட் படத்தில். 75 வருட இந்திய சினிமா வரலாற்றில் இல்லாத வகையாக, திடீரென ஒரு சேசிங்கில் ஸ்க்ரீன் ஃப்ரீஸ் ஆகி ஜூம் ஆகும். “டாக்டர் ராஜசேகருக்கு ஆக்சிடெண்ட் ஆன நாள், இடம் இது தான்” என ஒரு ஹைதிராபாத் முட்டுச்சந்தை காட்டுவார்கள். அப்புறம், ஒன்னுமே நடக்காதது போல் படம் திரும்ப ஆரம்பிக்கும். என் கணிப்பில் எஸ்.ஏ.சிக்கு “இந்த பாடலை பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் விஜய்”க்கு இதுவே இன்ஸ்பிரேசனாக இருந்திருக்க வேண்டும். ஒரு சீனில் தலை நரைத்த கெட்டப், இன்னொன்றில் இளமையாய் என மீசையை தவிர மீசைக்காரனில் எந்த கண்டினியுடியும் இருக்காது. இவ்வளவு இருந்தும் மீசைக்காரன் திண்டிவனத்தில் 75 நாள் ஓடியது என கார்க்கி மூலம் அறிகிறோம்.

பின் பலப்படங்கள் பல்ப் வாங்க, கொஞ்சம் கேப் விட்டு ரிலீஸ் செய்த “எவனாயிருந்த எனக்கென்ன” அவருக்கு கடைசியாக ஒரளவுக்கு ஓடிய படமாக இருக்கவேண்டும். பின் மெய்க்காப்பாளன், போனவருடம் இதுதாண்டா போலீஸ் 2 (வந்ததாவது தெரியுமா உங்களுக்கு) என அதற்குப்பிறகு தமிழில் இன்று வரை வெற்றி கைக்கூடவில்லை.

இன்று ராஜசேகரின் சினிமா கரியர் அல்மோஸ்ட் ஒவர். ஆட்சியை காப்பாற்றுவதை விட்டுவிட்டு மீரா ஜாஸ்மினோடு ’மருதாணி’ என தங்கை சப்ஜெக்ட் எடுக்கிறார். அதையும் டப் செய்து பார்க்கிறார். தெலுங்கிலேயே தூக்குடுவை நேரடியாய் பார்க்கும் தமிழன், ராஜசேகர் படத்தை கண்டுக்கொள்வதில்லை. அரசியலில் முட்டிமோதுகிறார். கிட்டத்தட்ட எல்லா கட்சியிலும் இருந்துவிட்டார். இப்போது ஜெகன்மோகன் கட்சி என ஏஜன்சி செய்தி. சிரஞ்சீவியை ஏதோ சொல்லப்போய், இவர் சினிமாவில் குத்தும் ஊமைக்குத்தை இவருக்கே குத்திவிட்டார்கள் மெகாஸ்டாரின் ஃபேன்வாடுகள். சிரஞ்சீவி வீட்டுக்கே போயி நியாயம் கேட்டு, அவரும் நமுட்டு சிரிப்போடு தன் ரசிகர்களை அமைதிக்காக்க சொன்னார். இவர் போறாத காலம், நடிகை சோனா முதற்கொண்டு “கண்டமனூர்க்காரர் என்னை கண்டம் பண்ணிட்டார்” என புழுதி தூற்றுகிறார்கள். வயதாக ஆக, தன் மரியாதையை காப்பாற்றிக்கொள்ளும் விதத்தில் சற்று சறுக்கிவிட்டார் என்றே சொல்லலாம்.

எது எப்படியோ, ரைஸ்மில்லில், வெங்காயமண்டியில் வந்த பணத்தில் ராஜசேகரின் படத்தை டப் செய்து அவரால் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் என அந்தஸ்தும், லாபமும் அடைந்த பலரும் இன்றும் அவர்க்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கக்கூடும்.

அதைவிட முக்கியம், ராமாநாயுடு, NTR, நாகேஸ்வர ராவ், அல்லு அரவிந்த் என 3,4 குடும்பங்களின் பிடியில் பெண்ணெடுத்து, பெண் கொடுத்து, படம் எடுத்து, படம் கொடுத்து இன்று வரை உழலும் தெலுங்கு சினிமாவில், ஸ்டேட் விட்டு ஸ்டேட் சென்று தனியாளாய் ஜெயித்த தமிழன் என்ற வகையில் ராஜசேகருக்கு அவர் க்ளைமேக்சில் அடிக்கும் விறைப்பான சல்யூட் உரித்தாகட்டும்.

(அடுத்து  ஸ்டைலிஷான ’உதயம்’ எரா படங்கள், அதுக்கு நேர் காண்ட்ராஸ்ட்டான அல்லுடு மஜாக்கா வகைகளை பார்ப்போம்) 

முடிந்தால் ஒரு வரி பிடித்திருக்கா, இல்லையா என சொல்லுங்கள். Feedback is important for my கலைச்சேவை  you know ;-)

Tuesday, May 29, 2012

தொண்ணூறுகளின் டப்பிங் படங்கள் ( பாகம் 1)


அடுத்து என்ன எழுதுவது என மண்டையை பிய்த்துக்கொண்டது விஜய் டிவிக்காரனுக்கு எப்படி தெரிந்ததென தெரியவில்லை. நேற்று (திங்கள்) இதுதாண்டா போலிஸ் போட்டிருப்பது செட்டாப் பாக்சை மேய்கையில்  கண்ணில் பட்டது. ரைட், கிடைச்சுடுச்சு..யோகி பி போல ஃபண்டாஸ்டிக், எக்சலண்ட், சூப்பர், பலே என மடைதிறந்து போகலாம்.

தொண்ணூறுகளின் ஆரம்ப காலம் தெலுங்கு மொழிமாற்ற (டப்பிங்) படங்களின் பொற்காலம் என சொல்வேன்.

தமிழ் ரசிகர்களின் கலையார்வத்துக்கு அப்போதைய ‘பிக் சிக்ஸ்’ ரஜினி, கமல், பிரபு, கார்த்திக், விஜயகாந்த், சத்யராஜ்களின் ’சப்ளை’ போதவில்லையோ, அல்லது ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ போன்ற மொக்கைப்படங்களில் ராமராஜன் நடிக்க ஆரம்பித்துவிட்டதாலோ, என்ன எழவோ, அந்தக்காலக்கட்டத்தில் அவ்வளவு டப்பிங் படங்கள் வரும். அப்போதைய தமிழ்சினிமா மார்க்கெட் டைனமிக்சை பதிந்துவைக்க பிளாகோ, கேபிள் சங்கர் போன்றவர்கள் இல்லாததால் காரணம் தெரியவில்லை. ஆனால், இன்று முப்பதுகளின் முற்பாதியில் (சொன்னா நம்பனும்) இருக்கும் என் தலைமுறையின் பதின்ம வயதுகள், டப்பிங் படங்களின் தாக்கம் இல்லாது வளரவில்லை என்பது நிதர்சனம்.

 இன்றும் நினைவிருக்கிறது தஞ்சை ராஜா கலையரங்கத்தில் ஹவுஸ்ஃபுல்லில் வியர்வை கசகசக்க வைஜயந்தி ஐபிஎஸ் பார்த்தது. டப்பிங் படங்களை பொறுத்தமட்டில் வைஜெயந்தி ஐபிஎஸ் ஒரு ட்ரெண்ட் செட்டர் என அறுதியிட்டு சொல்லலாம்.

தமிழன் அதற்கு முன்பும் தெலுங்கு டப்பிங் படங்களுக்கு தன் பேராதரவை நல்கியிருக்கிறான். சலங்கை ஒலி, (நான் ரொம்ப காலத்துக்கு நேரடி தமிழ்ப்படம் என நம்பிக்கொண்டிருந்த) சிப்பிக்குள் முத்து என பலவும் டப்பிங் தான். அதற்கும் முன்னால் சென்றால், ஜெயமாலினி,ஜோதிலட்சுமி போன்ற பேரிளம் பெண்கள்,கருப்புச்சட்டிக்குள் காலைவிடும் குட்டிச்சாத்தான், பூஞ்சையான ராஜா கவுன் ஹீரோ என விட்டலாச்சார்யா கல்லா கட்டலாச்சார்யாவாக கோலோச்சின காலமும் உண்டு. ஆனால், ஜெயமாலினி/ஜோதிலட்சுமிகள் மோட்டாரு என்றால் விஜயசாந்தி,ராஜசேகர்கள் காட்டாறு என்பதை ஃபிலிம்நியூஸ் ஆனந்தனே தன் குங்குமப்பொட்டின் மீது சத்தியமாக ஒத்துக்கொள்வார்.

இந்த இடத்தில் விஜயசாந்தி என்ற ஆளுமையை பற்றி விவரிக்காவிடில், “அம்மாடி அம்மோவ்” என்ற வார்த்தை இல்லாத டப்பிங் படம் போல, இந்த கட்டுரை முழுமை பெறாது. பூ ஒன்று புயலானது தான் அவர் ராஜபாட்டையை ஆரம்பித்தது என அவதானிக்கிறேன். அது வரும்போது நான் பால்குடி பாலகன் என்பதால் மேலதிக விவரங்கள் இல்லை.  கம்பன் வழியில் சொன்னால் தென்னிந்திய ஐந்து மொழிகளில், ஐந்தில் ஒன்றில் (தமிழில்) அறிமுகமாகி, ஐந்து படம் நடித்து/ ஊத்தி மூடி, ஐந்திலே ஒன்றை (தெலுங்கு) தாவி,  (இருபத்)ஐந்து பாலகிருஷ்ணா படங்களில் ஊர்க்கார மாமன் பொண்ணாக, ராஜமுந்திரி ஏரியா திராட்சை தோட்டத்தில் டூயட் பாடும்போது அவருக்கு சலிப்பு தட்டியிருக்கவேண்டும்.

இந்த இடத்தில் ஒரு உண்மையை நீங்கள் உணர வேண்டும். வைஜெயந்தி IPSக்கு முன்பும் அவர் சக்சஸ்ஃபுல் தான். கிட்டத்தட்ட தலா 20 படங்களில் ராகவேந்திர ராவ், கோதண்டராமி ரெட்டி போன்ற ஸ்டார் டைரக்டர்களின் கொடூர மசாலா, மழை சாங் வெறிக்கு ஆளாகி,  சிரஞ்சீவி, பாலகிருஷ்ணாவோடு தெலுங்கானா ஸ்லாங்கில் பேசி, டூயட் பாடி வெற்றிகரமாக இருந்தவர் தான்.

விஜயசாந்தியின் கிளாமர்(?) இனி எடுபடாது போகக்கூடும் என்ற பேருண்மை ஒரு தெலுங்கு S.A.சந்திரசேகருக்கோ, அல்லது அவருக்கே புரிந்துதான் வைஜெயந்தி IPS வரலாற்றில் நிகழ்ந்திருக்க வேண்டும்.


எந்த பெரிய சத்தமோ, ஓப்பனிங்கும் இன்றி தான் 1990யில் வைஜெயந்தி IPS வந்தது. ஏற்கனவே கர்த்தவ்யம் என்ற பெயரில் தெலுங்கில் ஹிட்டான படமே. எனக்கு தெரிந்து இப்படத்திற்கு முதல் ஓரிரு வாரங்களில் பெரும் வரவேற்பு எல்லாம் இல்லை. ஆனால் அதற்கு பிறகு கிட்டத்தட்ட சம்சாரம் அது மின்சாரத்திற்கு பிறகு தமிழ்ச்சினிமாவில், ஒரு வைரல் ஃபினாமினாவாக பார்த்தேயாக வேண்டிய ஒரு படமாக உருமாறியது. போட்ட இடமெல்லாம் கூட்டம் அம்மியது, கலெக்‌ஷன் அள்ளியது.

இன்று யோசித்து பார்த்தால், வைஜெயந்தி IPS ஒன்றும் பெரிய அப்பாடக்கர் திரைப்படமல்ல. அதன் வெற்றிக்கு காரணிகள் எனப்பார்க்கப்போனால் எனக்கு தோன்றுபவை இவை.

1. முதலில், ஒரு போரடிக்காத திரைக்கதை. ஒரு வீரமுள்ள Protagonist வெகுண்டெழும் மிகச்சுலபமான கதை தான். ஆனால், சரியான விகிதத்தில் செண்டிமெண்ட், சமூகக்கொடுமைகள் கலந்த ரேசி ஸ்க்ரிப்ட். இளம்நடிகை மீனாவின் ரேப் இன்றும் ரத்தக்கண்ணீரை வரவழைக்கும் (கவனிக்க, கண்ணீர் என்றேன்) . எஞ்சோட்டு வாலிபர்கள்(?), வீறுகொண்டு இன்னொரு விண்டோவை ஓப்பன் செய்து அந்த ஜெயப்பிரகாஷ்-மீனா சீனை யூட்யூபில் தேடுமுன், ஒரு வார்த்தை. அது யுட்யூபில் இல்லை !

2. இரண்டாவது, முதன்முதலாக ஒரு பெண் போலீஸ் திரையில் போடும் சண்டைகள் பார்க்க கொடூரமாக இல்லாது இருந்தன. வெய்ட், சண்டை அளவுக்கு போகவேண்டாம். முதன்முதலில், ஒரு பெண் போலிஸ் திரையில் பார்க்க கொடூரமாக இல்லாது இருந்தார். போலீஸ் அகாடமிக்கும், தமிழ் நடிகைகள் அனாடமிக்கும் ஏழாம் பொருத்தம். அம்பிகா, ஜீவிதா (நான் தேடும் செவ்வந்தி போலிஸ் ட்ரெஸ் ஞாபகம் இருக்கா) போன்ற பாடியோ, லேங்குவேஜோ, பாடி லேங்குவேஜோ சுத்தமாக இல்லாத நடிகைகளை போலீஸ் ட்ரெஸ்ஸில் பார்த்து டரியலான ரசிகனுக்கு, டர்ரான ரியலான போலீசாக விஜயசாந்தியை திரையில் பார்த்தபோது விசிலடித்தே திரையை கிழித்தான். அதற்கு அவரின் இயற்கை உடல்வாகா, பின்னிருபதுகளின் மெல்லிய முதிர்ச்சியா என துல்லியமாக காரணம் சொல்ல முடியவில்லை.

அந்தக்கால ஜாகுவார் தங்கம்,சூப்பர் சுப்பராயன் “சார், 1..2..நீங்க அடிக்கிறீங்க, மேடம் ப்ளாக் பண்றாங்க” டைப் சண்டைகளிலும் ஒரு பெர்ஃபக்‌ஷன் காண்பிப்பார். காவல் நிலைய ரைட்டர் டேபிளின் மீது சிறு குட்டிக்கரணங்கள், இரு அடியாட்கள் இவரை அடிப்பதை விட்டுவிட்டு பாங்காய் லெஃப்ட், ரைட்டில் பிடித்துக்கொள்ள, சம்மர்சால்ட் அசால்ட்டாய் அடிப்பார். இந்த குதி குதிக்கிறாரே..பேண்ட் கிழிந்துவிடுமோ என்ற ’கிலி’கிளுப்பு ரசிகனுக்கு ஏற்படாத வகையில் இருக்கும் அவரது உடல்வாகும், சண்டைகளும். பத்தாததுக்கு அவர் படப்பிடிப்புத்தளத்தில் கையை கிழித்துக்கொண்ட செய்தியை ஃபிலிமாலயா சிறப்பு நிருபர் 2 பக்கங்களில் கவர் செய்து ரசிகனுக்கு பெப் ஏற்றுவார்கள்.

3. குரல். ஒரு முரட்டு போலீஸ் கதாபாத்திரத்துக்கு சாஃப்ட்டான நடிகை சரிதாவின் குரல் செட்டாகும் என கண்டுப்பிடித்தவனுக்கு தாதா சாஹேப் விருதோ, உயிர்ம்மை சுஜாதா விருதோ கொடுக்கப்படாமலிருப்பது காலக்கொடுமை. விஜயசாந்தி வாயில் இருந்து தேனாய் “இல்லாட்டி போனா, உன்ன இங்கியே அடிச்சு மர்டர் செஞ்சு” என சரிதா பேசினால், அவ்வளவு பாங்காய் ஒத்துப்போகும்.

விஜயசாந்தியின் போலீஸ், சண்டைப்படங்கள் எல்லாமே கிட்டத்தட்ட ஒரே டெம்ப்ளேட் தான். முதல் 4 ரீலில் அவர் ஒரு விக்ரமன் டைப் குடும்பத்தில் குதூகலமாக இருப்பார். காலேஜ் போவார், அல்லது IAS/IPS தேர்வுக்கு படிப்பார். உடற்பயிற்சி தேர்வுக்கு ஜாகிங் போவார். குனிந்து நிமிர்ந்து எக்சர்சைஸ் செய்வார்.

ஒரு முக்கிய இடைச்செருகல் இங்கே. போலீஸ் ட்ரெஸ்சை விடுவோம். இந்த ட்ராக் சூட் என்று ஒரு வஸ்திரம் இருக்கிறதே, அதில் அவ்வளவு பாங்காய் இருப்பார். வெளிர்மஞ்சள் ட்ராக் சூட்டில், முழுக்கையை முக்கால் கைக்கு தள்ளிவிட்டுக்கொண்டு, ஒரு குதிரைவால் (அதான் ponytail) போட்டுக்கொண்டு, அல்லக்கை ஹீரோவோடு ஜாகிங் போகும் அழகிலேயே ரசிகன் சொக்கிப்போவான். ட்ராக் சூட் வீரியம் அறிந்தோ என்னவோ, டைரக்டர் ஒரு சண்டையை ட்ராக் சூட் காஸ்ட்யூமில் வைத்திருப்பார். காலை அகட்ட இன்னும் வாகான ட்ரெஸ் ஆனதால், விஜயசாந்தியும் ஃபைட்டர்ஸ்களை பறக்க விடுவார்.

நிற்க, சாவதற்கென்றே பிறவி எடுத்த பேக்கு புரபசர்/நீதிபதி அப்பாவுக்கு, தன் மகள் ஒரு அல்லக்கை ஹீரோவை லவ்வப்போவதும் தெரியாது, நாலாவது சீனில் வில்லன்அவரை கவ்வப்போவதும் தெரியாது. செத்தும் கொடுத்தான் சீதக்காதி போல செத்து, சிலபல குடும்ப,சமூக பிரச்சினைகளை விஜயசாந்தி தலையில் திணிக்க, அவர் சட்டத்தை கையில் எடுத்தோ, லத்தியில் அடித்தோ, காலில் பிரட்டியோ ஆந்திரவாடுகளின் மத்தியில் நியாயத்தை நிலைநாட்டுவார்.

விஜயசாந்தி படத்தில் ஹீரோவாக நடிப்பது, ஒருவர் தன் சினிமா கரியரை கந்துவட்டிக்கு அடமானம் வைப்பதற்கு ஒப்பானது. போனது போனது தான். படையப்பாவில் வருவது போல, ப்ரொட்யூசர்கள் “படத்துல ஹீரோ நீங்க தான். ஆனா போடற ஃபைட்டு உங்களது இல்ல” என்ன சொல்லியே ஹீரோக்களை புக் செய்வார்கள் என நினைக்கிறேன்.

அல்லக்கை ஹீரோ ரோலுக்கென்றே பிறவி எடுத்த வினோத்குமார் என்ற நடிகர் உண்டு. வைஜெயந்தி IPS முதற்கொண்டு பலப்படங்களில் ”ஹீரோ” அவர்தான். விஜயசாந்தி டீஃபால்ட்டாய் இவரை காதலித்து விடுவார். என்னத்துக்கோ தன் பெண்மையை நிரூபிக்க இவரோடு ராஜ்கோட்டி இசையில் ஒரு டூயட்டும் பாடிவிடுவார்.
ஒன்று, விஜயசாந்தி சண்டை போடவேண்டுமே என லாஜிக்காய் டைரக்டர்கள் ஹீரோவை ஜெயிலுக்கு அனுப்பிவிடுவார்கள், இல்லை கையை காலை உடைத்து ஆஸ்பத்திரியில் படுக்க வைத்து விடுவார்கள். வினோத்குமார் 1999 வரை இந்த ஹீரோ பொழப்பை ஓட்டியிருக்கிறார் என விக்கிப்பீடியா சொல்கிறான்.அவரின் ஒரு புகைப்படம் கூட இணையத்தில் கிடைக்காதது அவர் கரியர் கிராஃபின் பதத்துக்கு ஒரு சோறு.

சத்ரு படத்தில் விஜயசாந்திக்கு செகண்டு ஹீரோ இப்போதைய தெலுங்கு சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான விக்டரி வெங்கடேஷ். எப்படியோ சுதாரித்து, இன்னும் ஒரு படமோ என்னவோ கூட நடித்து (சூரியா IPS என நினைக்கிறேன்) கழண்டு கொண்டாரோ  ’விக்டரி’ வெங்கடேஷ் ஆனார்..இல்லை, ஈநாடு டிவி கலக்கப்போவது யாருடுவில்  ’மிமிக்ரி’ வெங்கடேஷாக இன்று இருந்துருக்கக்கூடும். நம் சரத்குமார் கூட ராஜஸ்தான் என்ற தமிழ்/தெலுங்குப்படத்தில் செகண்ட் ஃபிடில் வாசித்திருக்கிறார் விஜயசாந்திக்கு. படத்தின் ரிசல்ட் மன்னன் நீரோ ஃபிடில் வாசித்த கதையாக போனது வேறு விஷயம். உடல் பெருத்த ராம்கியும், தடயம் படத்தில் பம்மென்ற தன் ஹேர்ஸ்டைல் கலையாது சண்டை போட்டு, விஜயசாந்திக்கு ஆதரவு கொடுத்ததை வரலாற்றில் பார்க்கிறோம்.

வைஜெயந்தி IPSஐ தொடர்ந்து சத்ரு, லட்சியம், போலீஸ் லாக்கப், லேடி பாஸ் என விஜயசாந்தி மொழிமாற்றப்படங்கள் வரிசை தொடர்ந்தது. குண்டா கர்தி என ஹிந்திக்கும் போய்ப்பார்த்தார். போனி கபூரை கல்யாணம் செய்துகொண்டு தங்களை அம்போவென விட்டுவிட்டுப்போன ஸ்ரீதேவிக்கு ஈடாக இன்னொருவரை சவுத் சைடை சப்புக்கொட்டிக்கொண்டு சப்பாத்தி பையாக்கள் பார்க்க,  சப்ஜாடாக அத்லெட்டிக் விஜயசாந்தியை நிராகரித்தனர். இந்த கூத்துக்களுக்கு இடையில், மன்னனில் சாந்தி தேவியாக, கெத்து குறையாமல், ரஜினியை சஜஸ்ஷன் ஷாட்டாக பின்னாடியிலிருந்து அறைந்து எல்லாம் வெயிட்டு காட்டினார் விஜயசாந்தி.

பெர்சனலாக விஜயசாந்தி எரா படங்களில் என் ஃபேவரைட் சத்ரு, லட்சியம் தான்.என் நினைவடுக்குகளில் பட கதை,வசனங்கள் ‘இல்லாட்டி போனாலும்”, அப்படங்கள் கொடுத்த கிளர்ச்சி, சமூகக்கோபம், அறச்சீற்றம் இன்றும் நினைவில்.

வைஜெயந்தி  IPS அளவுக்கு ஏனைய படங்கள் வெற்றி இல்லையென்றாலும், ஆருர்தாசுக்கு வசனத்துக்கும், மருதகாசிக்கும், மனோ-சித்ராவுக்கும் தெலுங்கு மீட்டரில் பாட்டு எழுத/பாட கொடுத்த பணத்துக்கும் பழுதில்லை. All good things have to end என்பது போல அவரை வயதும், அரசியலும் பீடிக்க கிட்டத்தட்ட கிபி இரண்டாயிரத்தோடு தெலுங்கிலேயே முடிந்தது அவர் சகாப்தம்.


எது எப்படியோ, இன்று அரசியலில் ரோஜா அளவுக்கு விஜயசாந்தி டம்மியாகாமல்  தாக்குப்பிடிக்க, அவரது வைஜெயந்தி ஐபிஎஸ் கால ரசிகன் ஒரு தூணாக இருக்கிறான் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

(இந்த சீரீசின் அடுத்த பதிவுகளில் ராம்கோபால் வர்மா-நாகார்ஜுனா ஜானர் படங்கள், சிரஞ்சீவியின் அல்லுடு மஜாக்காக்கள் என போக நினைக்கிறேன்..உங்கள் நல்லாதரவை பொறுத்து..)

நன்றி நன்றி நன்றி..

சத்தியமாக இவ்வளவு வரவேற்பை எதிர்ப்பார்க்கவில்லை என் முதல் பதிவுக்கு, ஆயிரத்துக்கும் மேல் ஹிட்டுமாய், சிலபல மோதிரக்குட்டுமாய், பற்பல ட்விட்டுமாய்...நன்றி நன்றி நன்றி..முடிந்தவரை அடுத்த பதிவுகளில் உங்கள் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்கிறேன் என மட்டும் சொல்லி..

Friday, May 18, 2012

கார்த்திண்ணா


”நம்ம மூத்தமவன் சார்..பேரு மாக்சிம் கார்த்தி, லீவுக்கு வந்துருக்கான்” என்றார் செல்லப்பா.

கார்க்கி எப்படி கார்த்தி ஆனது என கேள்விகள் வராத, அறிஞர் அண்ணாவை தவிர வேறு அறிஞரை அறியாத வயது, காலக்கட்டம் அது. 

கேட்ட ரெண்டாவது நொடி என் அப்பாவிடமிருந்து “நீங்க க்ரிஸ்டீனா சார்?” என்ற கேள்வி வந்தது.

மூனாவது நொடியில் “உங்களுக்கு எய்ட்ஸா” என்று கேட்டது போல “அய்யிய்யோ, இல்ல சார், அது கம்முனிஸ்ட் நேமுங்க. நாங்க சைவப்பிள்ளமார். கவுச்சில்லாம் இல்லைங்க எங்கூட்ல”எனப் பதறிய செல்லப்பா எங்கள் புது ஹவுஸ் ஓனர்.

செல்லப்பாக்கு தோராயமா 55 வயசு இருக்கலாம். எம்பதுகளின் நீள/கட்டை கிருதா, எழுபதுகளின் பெல்பாட்டம். அறுபதுகளின் செதுக்கிய மீசை. வழுக்கையை மறைக்க ஒரு பாலுமகேந்திரா கேப் என ஒரு மார்க்கமாக இருந்தார். கறம்பக்குடி மிடில் ஸ்கூலில் சயின்ஸ் வாத்தியார்.

நிற்க, இது செல்லப்பாவின் கதை அல்ல.

பிறகு?

கார்த்தியின் கதை. எனக்கு கார்த்திண்ணா. இந்த சம்பாஷணை நேரத்தில் கார்த்திண்ணா ஒரு ஹைஹிப் பேண்ட்டும், விஜய் “ஊர்மிளா” பாட்டில் போட்டுவருவது போன்ற ப்ரவுன் டிசைன் சட்டையும், என் அப்பா “அதுல்லாம் உழைக்காது” என்று மறுத்த பாலியஸ்டர் இழை வெள்ளை பெல்ட்டும், வெள்ளையும் சிவப்புமாய் ஒரு ஃபீனிக்ஸ் ஷூவுடன் என் ஆதர்ச உடையில் நின்று கொண்டிருந்தது. “ஆத்தங்கர மரமே”வில் ஊர் திரும்பும் விக்னேஷ் கணக்காய் நடுவகிடு எடுத்து ஸ்டைலாக இருந்தது. கண்ணில் ஒரு குறும்பும் கூடவே.

பார்த்த நொடியில் கார்த்திண்ணாவை எனக்கு ரொம்ப பிடித்துவிட்ட்து. மீசை வராமல் வந்தும், பருக்கள் வந்தும் வராமலும், வாழைமரத்து ஜவுளிக்கடையில் 1.60 கட்பீசில் எடுத்த குதிகால் தெரியும் கால் சராயுடன் என் நிலையைக்கண்டு கூச்சமும், அப்பா மேல் இனம்புரியா கோவமும் வந்தது.

“கார்த்தி பொன்னமராவதில ITI முடிச்சிருக்கு. இப்ப டீவியெஸ்ல அப்ரண்டிசா மெட்ராஸ்ல இருக்கு”.

ஃப்ரெண்ட்ஸ் வடிவேலு அப்பரசண்டி என அதை கேலி வழக்காக கொண்டு வராத காலம். கட்டினா இந்த புள்ளைய கட்டுவேன் என்று சபதம் எடுப்பது போல், என்ன ஏது என தெரியாமல், பெருசாகி சென்னையில் அப்ப்ரசண்டிஸ் ஆவேன் என சபதம் எடுத்தேன்.

“தம்பி பேரு என்ன” என்னை நினைவுக்கு கொண்டு வந்தார் செல்லப்பா.

“ஸ்ரீராம் சார். பிரகதாம்பால இங்க்லீஷ் மீடியத்துல டென்த்து போட்டுருக்கேன்” அப்பா.

“சிர்ராமா..நல்ல பேரு..நல்லா படிக்கோணும், கார்த்திட்ட கேட்டு நடந்துக்க”ன்னார் செல்லப்பா. இதை எதுக்கு சொன்னார் என இன்று வரை தெரியவில்லை. ஆனால் கார்த்தியை கேட்டு நடக்கவேண்டும் என இரண்டாம் சபதம் எடுத்துக்கொண்டேன்.

“ஹாய் சிர்ராம்” என்று வாயை முதன் முதலாய் இந்த சம்பாஷணையில் தொறந்தது கார்த்திண்ணா. நம்பினால் நம்புங்கள். அந்த நாள் வரை என்னிடம் யாரும் “ஹாய்” சொன்னதில்லை. ஹல்லோ ஓண்ணு ரெண்டு உண்டு, ”வணக்கம் பாஸு” “வாங்க ஃப்ரெண்டு” உண்டு. ஆனால் ஹாய் இல்லை. பம்மிப்பதறி “ஹ ஹாய்ண்ணா” என் வரலாற்றில் முதல் ஹாயை பதிவு செய்தேன். செல்லப்பாவும், எங்கப்பாவும் பிறகு அட்வான்சை பற்றிக்கதைக்க தொடங்க கார்த்திண்ணா உள்ளே போய்விட்ட்து.

இந்த இடத்தில் வீட்டைப்பற்றி சொல்லவேண்டும். ஒரு பழையகாலத்து ரேழி,கொல்லை வெச்ச வீட்டை, முன்பக்கத்தை மட்டும் கிளிப்பச்சை கலரில் மச்சுவீடு போல் எழுப்பி, உச்சியில் விகாரமான ஃபாண்ட்டில் “வீனஸ் இல்லம்”என்று எழுதி (செல்லப்பா ஒரு ஜோசியப்பிரியர்) , மொசைக், நாலு டீப்லைட்,ஃபேன் போட்டு எங்களிடம் ஆயிரம் ரூவா வாடகைக்கு விட்டிருந்தார். பின்பக்க ஓட்டு வீட்டு போர்ஷனில் ஓனர்.

அப்பாக்கு திரும்பினா கீழராஜவீதி காங்கிரஸ் ஆபிஸ் எதிரே பேங்க்கு என்பதை தவிர பெரிய சவுகரியம் இல்லாத ஒரு வீடு.
இருந்தும் எனக்கு வீடு பிடித்துவிட்ட்து. காரணம், எனக்கே எனக்கேயென்று ஒரு ரூம். அப்பா போனஸ் ஆஃபராக “புள்ளை படிக்கனும் சார்..பப்ளிக் எக்சாம்” என பிட்டை போட்டு மச்சில் இருந்த ரெண்டு ரூம்பில் ஒன்றை எனக்கு துண்டு போட்டு பிடித்திருந்தார். ஒரு க்ரில் கேட்டு போட்டுத்தடுத்த பக்கத்து ரூம் ஒனருக்கு.

வீட்டுக்கு குடிவந்த முதல் 3 மாசம் கார்த்திண்ணா ஊரில் இல்லை. திடீரென்று ஒருநாள் தொட்டியில் இறங்கி நல்லதண்ணி பிடித்துக்கொண்டிருந்த அதிகாலையில் ரெக்சின் பேக்,சூட்கேசோடு வந்திறங்கி, அரை இருட்டிலும் 2 செகண்டு என்னை பார்த்து “நல்லாருக்கியா ஜெயராமு” எனப் புன்னகைத்தது. “நான் ஸ்ரீர்..” என சொல்வதற்குள் உள்ளே போய்விட்டது. மதியம் ஸ்கூல்விட்டு வந்து சாப்பாடு பரிமாறுகையில் அம்மா “கார்த்திக்கு கெரகம் சரியில்லையாம். தூரத்துல கஷ்டப்படவேணாம்ன்னு டீச்சரு இங்க வரசொல்லிட்டாங்களாம், இனிமே இங்கயே இருக்குமாம்” என சொன்னதை கேட்டு ஏனோ ஒரு சின்ன சந்தோஷம்.

கார்த்திண்ணாவுக்கு நண்பர்கள் அதிகம். பால்கார ராஜகோபாலு முதல் எதிர்த்தவீட்டு கண்ட்ரக்டர் மாமா வரை எல்லோரும் சினேகிதம்.
யாருடனோ, எதுக்கோ கையத்தட்டி சத்தமா சிரிக்கும் வாசலில். கக்குவான் இருமல் டாக்டர் வீட்டு விஜிக்கா டைப்ரைட்டிங் கிளாஸ் போக மாலை 6 மணிக்கு வீட்டை கடக்கையில் மட்டும் சைலண்டாகிவிடும். தன் சில்வர் ப்ளசை சைடு ஸ்டேண்டு போட்டு நிறுத்தி அதில் சாய்ந்து நின்று தினத்தந்தியை புரட்டும். கார்த்திண்ணா விஜிக்காவை நோக்க, விஜிக்கா கார்த்திண்ணாவை நோக்க, நான் சயின்ஸ் புஸ்தகத்தை நோக்காமல் இவர்களை நோக்குவேன். மத்தநேரம் முச்சூடும் கார்த்திண்ணா மாடி ரூமிலேயே கிடக்கும். எப்பவும் டேப்ரிக்கார்டரில் பாட்டு. அதென்னவோ “மயங்கினேன் சொல்ல தயங்கினேன்”,“வெள்ளி கொலுசுமணி” ரெண்டும் ரொம்ப இஷ்டம். எத்தேச்சையாக இருவரும் ரூமை விட்டு வெளியே வரும்போது சினேகமாய் சிரித்து, கொஞ்சம் என் படிப்பைப்பத்தி கேக்கும்.

கார்த்திண்ணா வேலைக்கெல்லாம் போனதாய் தெரியவில்லை. செல்லப்பா வாத்தியார் எங்கப்பாவிடம் பேன்க்குல பியூனாவது கிடைக்குமா என கேட்டது ஞாபகம் இருக்கிறது. உழைப்பாளி முதல்நாள் ரசிகர் மன்ற டிக்கட் செல்லையா டீஸ்டாலில் கிடைக்கும் என்றறிந்து அங்கு போக, வெளியே கார்த்திண்ணா சிகரட் பிடித்துக்கொண்டிருந்தது. முதல் தடவை பார்க்க ஒருமாதிரியாக இருந்தாலும், பிடிப்பதிலும் ஒரு ஸ்டைல் இருந்தது. “செல்லா, நம்மூட்டு பையன், என் அக்கவுண்ட்ல எழுதிக்க” என எங்கூட வந்த அஞ்சு பேருக்கும் சேர்த்து டீ சொன்னது. வீட்டுக்கு எதிரில் முள்ளுக்காடாய் இருந்த அய்யங்குளத்தை தெருப்பசங்களை விட்டு வெட்டச்செய்து கிரிக்கெட்டு விளையாட வைத்தது. “டெந்த்துல இது தேவையாண்ணேன்” என்ற அப்பாவின் உறுமலையும் மீறி அவ்வபோது ஓடுவேன் அய்யங்குளத்துக்கு. மிகசுமாராய் விளையாடும் நான், ஒருநாள் கார்த்திண்ணா பவுலிங் என்றதும் எதையோ நிரூபிக்க வீறு கொண்டு அய்யங்குளம் கரையில் வெட்டப்படாத முள்ளுச்செடிக்கு தூக்கியடித்து கிராண்ட்டட் சிக்ஸ் அடித்து, அண்ணா “பரவால்லியே, விள்ளாடறியே” என சொன்னதும் அவ்வளவு பெருமிதம்.

“இனிமேட்டு வியாளக்கெளமை பிருந்தாவனம் ஆஞ்சநேயர் கோயிலுக்கு போவோமுடா. சாமி கும்பிடுறோம், அந்த வாரத்துக்கு படிக்க டைம்டேபிள் போடுறோம்” என திடீரென்று என் உயிர்நண்பன் ஒரு தீர்மானத்தை முன்வைத்தான். ஒரு சிறிய ஆஞ்சநேயர் சன்னிதியும், பின்னாடி பிருந்தாவனம் என்ற பெயரில் நந்தியாவட்டை,செம்பருத்தி செடியுமாய் ஒரு சிறு தோட்டமும் நிறைந்த கோயில். ஒரு வியாழக்கிழமையில் பிரகாரத்தை சுற்றுகையில் கார்த்திண்ணாவை விஜிக்காவோடு பார்த்தேன். நல்லவேளை இருட்டில் என்னை பார்க்கவில்லை, அல்ல, நான் அப்படி நினைத்தேன். நார்த்தாமலை பூச்சொரிதலை முன்னிட்டு சூப்பர்பாய்ஸ் நடனக்குழுவுக்காக காத்திருக்கும் ஒரு பின்னிரவில், கார்த்திண்ணாக்கும் விஜிக்காக்கும் எப்படி லவ்வு என கார்த்திண்ணாவின் பங்காளிப்பய ஜோதி விவரித்ததை கிளுகிளூப்பாக கேட்டோம். திடீரென்று ஒரு நாள் விஜிக்காக்கு அறந்தாங்கியில் மாமன் உறவில் கல்யாணம் எனப்போய்விட்டது. அன்று ஏன் செல்லப்பா வீட்டில் இருந்து எங்களுக்கு பாயாசம் வந்தது என அன்று புரியவில்லை.

சயின்ஸ் டூசனில் கூடவரும் ராணிஸ்கூல் கோமதி எங்களுக்கு அடுத்த தெரு எனத்தெரிந்த பிறகு சும்மானாச்சிக்கு குறுக்கும் நெடுக்கும் அத்தெருவில் சைக்கிளில் போக ஆரம்பித்தோம். அந்த தெருவில் இருக்கும் மூவேந்தர் ஒயின்சின் உள்ளே ஒரு நாள் கார்த்திண்ணாவை பார்த்தேன். பக்கென்று இருந்தது. நான் கவனிக்குமுன் அது என்னை கவனிக்கக்கூடாதேயென்று என சைக்கிளை ஏறி மிதித்தேன். தர்மரின் தேர்ச்சக்கரம் டக்கென்று தரையில் விழுந்ததுபோல், கார்த்திண்ணாவின் மேல் இருந்த ஆதர்ச பிம்பம் உடைய ஆரம்பித்தது அன்றே. அதன்பிறகு, இரவு மட்டும் கார்த்திண்ணா ரூமில் இருந்து வரும் ஒரு மாதிரியான தம் வாசனை வருவதன் காரணத்தை யூகிக்க முடிந்தது.

அந்த நாளை என்னால் மறக்க முடியாது. அப்பா எட்டரை மணிக்கு நியுஸ் பார்த்துவிட்டு சாப்பிடலாமான்னு கேட்டுவிட்டு உட்கார்ந்த நேரம். எங்கள் பின்கதவில் நங்கென்று ஒரு பாத்திரம் இடித்து விழும் சத்தம். அப்பாவுக்கு முன்பே விஷயம் தெரியுமோ என்னவொ, ஏனோ கதவை திறக்கவில்லை. ஆனால் ஒரு ஒட்டுக்கேக்கும் தோரணையில் கதவின் அருகில் நின்றார். அவர் பின்னே நாங்கள். சீரிய இடைவெளியில் இன்னும் சில பாத்திரங்கள் வந்து விழுந்தன. செல்லப்பா வாத்தியார் “கார்த்தி, டேய்..கேசியர் வூட்ல இருக்காருடா..வேண்டாம்டா” என கெஞ்சலாக சொல்லிக்கொண்டிருந்தார். திடீரென்று உரத்தகுரலில் கார்த்திண்ணாவின் ஓலம். “மெட்ராஸ்லயே இருக்கன்னு சொன்னேன் கேட்டியா..இந்த வரப்பட்டிக்காட்டுல ஒரு வேல கிடைக்கல. நான் பாட்டுக்கு செவனேன்னு அங்கன கிடந்தேன்” என்று ஒரு அழுகையான குரல். புலம்பல் சற்று எல்லை மீற, அப்பா “மாடிக்கு போய் படிங்க சொல்றேன்” என எங்களை விரட்டிவிட்டார். அடுத்த நாள் காலை செல்லப்பா வாத்தியார், அப்பாவிடம் சன்னமான குரலில் “சாரி சார், லவ்ஃபெய்லியர்ல இப்படி பண்றான்” என மன்னிப்பு கேட்க, அப்பா “அதெல்லாம் சரி சார், ஃபேமிலி இருக்குற இடமா இல்லியா”என்பதும் நடந்தது.

பகலில் கார்த்திண்ணா அவ்வளவு பாங்காய் போகும், வரும். என் அப்பா, அம்மாவை கூச்சத்தில் ஏறெடுத்தும் பார்க்காது. ஆனால் ராத்திரியில் வேறு முகம் காட்டும். நைட்டு ஒன்னுக்கிருக்கலாம் என ரூமை விட்டு வெளியே வந்த ஒரு நாள் என்னைப்பிடித்துக்கொண்டது. அன்றைய கோலம் பார்க்க அவ்வளவு சிலாக்கியமாக இல்லை.”சிர்ராமு, உனக்கு புடிச்சதை படி, புடிச்ச வேலைக்கு போ, அப்பா,அம்மா யார் பேச்சையும் கேட்டுறாதே” என்றது. பயத்தில் ஒன்னுக்கிருக்காமல் ரூமுக்குள் திரும்பி போய்விட்டேன்.

ஒரு வேலை செய்தால் தெளிந்துவிடும் என ரெண்டு மாட்டை வாங்கி பின்னாடி கட்டிப்போட்டு, பால்கார ராஜகோபாலுடன் பார்ட்னர்சிப்பில் இரு என்றார்கள். அது கார்த்திண்ணாக்கும் வலித்தது, எனக்கும் வலித்தது. பலூன் பேகிஸ், ஃபன்க் விட்டு, ஸ்போர்ட் ஷூ போட்ட என் கார்த்திண்ணா இப்போது கொல்லைப்புற மாட்டுச்சந்து வழியாக மடித்துக்கட்டிய லுங்கியோடு மாட்டை தள்ளிக்கொண்டு வருவது காணச்சகிக்கவில்லை. பின்னிரவில் “இப்படி மாட்ட மேய்க்க விட்டுட்டீங்களேடா” என புலம்பும்.

சோசியல் பப்ளிக் பரிட்சைக்கு கிளம்பிக்கொண்டிருந்த ஒரு புதன்கிழமை கார்த்திண்ணாவை திருச்சி காஜாமலை டீயடிக்சன் செண்ட்டருக்கு கூட்டிக்கொண்டு போனார்கள். ”அங்கன ட்ரீட்மெண்ட்டு 3 மாசம்” என வூட்டுக்காரம்மா சொன்னதாக அம்மா சொன்னார்கள்.

அப்பாவுக்கு மாற்றல்,வேறு ஸ்கூல் என அதன்பிறகு நான் கார்த்திண்ணாவை பார்க்கவேயில்லை.

போன வருடம் லீவுக்கு ஊருக்கும் போகும் வரை.

குலதெய்வம் கோயிலுக்கு போகும் வழியில் ஊருக்கு போனோம். வடக்குராஜவீதி ராதா கபேயில் டிபனுக்கு நின்றோம். நாங்கள் இருந்த வீட்டுக்கு அடுத்த தெரு அது. ”சாப்பிட்டுட்டே இரும்மா, தோ வர்றேன்” என நாங்கள் இருந்த வீட்டுப்பக்கம் ஓட்டமாய் நடந்தேன். வீட்டு வாசல் தெரியும்போதெ வாசலில் சற்று கனத்த உருவமாய் ஒருவர். அது கார்த்திண்ணா என பார்த்தவுடன் யூகிக்க முடிந்தது. என்னை பார்த்தவுடன் லுங்கியை இறக்கிவிட்டு “சிர்ராமு தானே” என்று கண்கள் சிரிக்க சொன்னது. உள்ள வா என்றது. இல்லண்ணா இருக்கட்டும், வீட்டை ஆசையா பாக்கவந்தேன் என்றேன். முடி பரவலாய் கொட்டியிருந்தாலும், உடல் கனத்திருந்தாலும், கண்ணில் அந்த குறும்பு, spark போகவில்லை. கூட்டுறவு பேன்க்கில் பியூனாக இருப்பதாகவும், தனக்கு திருமணமாகி ரெண்டு குழந்தைகள் என்றும், செல்லப்பா வாத்தியார் சொந்த கிராமத்துக்கு சென்றுவிட்டார், தங்கச்சி ஈசுக்கு கல்யாணம் ஆனது பலவும் சொன்னது.

”நேரமாச்சுண்ணா, கெளம்புறேன்” என்றேன். சரி என்றது கார்த்திண்ணா.

வாசல் தெருவுக்கு வந்தபிறகு கார்த்திண்ணாவின் “ஒரு நிமிசம்” என்ற குரல். திரும்பி என்ன என்பது போல பார்த்தேன்.

“இப்ப எல்லாத்தையும் விட்டாச்சு சிர்ராமு”

கார்த்திண்ணா முகத்தில் எதையோ நிரூபித்த திருப்தி.

“சரிண்ணா” எனப் புன்னகைத்தேன். அதன் பிறகு வார்த்தை வராமல் திரும்பி நடக்க ஆரம்பித்தேன்.

உண்மையில் மனம் சற்று நிம்மதியாக உணர்ந்தது.

டிபனை முடித்து, சாந்தாரம்மன் கோயிலில் பூசை சாமான் வாங்கிட்டு போவோம் என வண்டியை திருப்பினோம். மூவேந்தர் ஒயின்ஸ் இருந்த இடத்தில் இப்போது கரும்பச்சை நிற போர்டில் டாஸ்மாக். சைடு சந்தில் கர்ட்டன் போட்டு பார் போல இருக்கும் போல.

கர்ட்டன் திறந்த ஒரு நொடியில் உள்ளே கார்த்திண்ணா போல ஒரு உருவம்.

சடாரென்று பார்வையை திருப்பினேன். அது கார்த்திண்ணாவாக இல்லாமலே போகட்டும்.

சிலசமயம் நமக்கு பிடித்தவர்களை, பிடிக்காத கோலத்தில் பார்க்க மனசுக்கு பிடிப்பதில்லை.

++++++++++++++