அப்போது நான் +1 சேர்ந்திருந்தேன். பத்தாவதில் மிக நல்ல மார்க். சாதாரண
அரசுப்பள்ளி தான். ஓம்பதாம் வகுப்பு வரை சுமார் மாணவனாக இருந்தவன்,
டெந்த்தில் எப்படி அந்த வேகம் வந்ததென்றே தெரியவில்லை. “டேய், படிப்பாளி
ஆயிட்டடா” நண்பர்கள் மரியாதையாய் பார்த்தார்கள். அப்பாவிற்கு நம்பிக்கை
வந்திருந்தது. +2விற்கு கேட்டதெல்லாம் வாங்கித்தரும் முனைப்பிலிருந்தார்.
தனி ஷேவிங் செட், அவரின் வேட்டிகள் அணிந்துகொள்ள, ஸ்கூட்டரை ஓட்ட,
ஸ்கூலுக்கு 1,2 ரூபாய் கைச்செலவுக்கு என பல சலுகைகள் தந்திருந்தார்.
நியாயமாய் நான் +2விலும் அதே வேகத்தோடு படித்திருக்க வேண்டும். அப்போது எனக்கு ஒரு பிரச்சனை வந்தது. இந்த நெற்றி இருக்கிறதே, அதில் ஒரு பக்கத்தில் சிறிய சிறிய, தொட்டால் சொறசொறப்பாக இருக்கும் கட்டிகள் வர ஆரம்பித்தன. முதலில் பரு போன்றது என கண்டு கொள்ளவில்லை. சூட்டுக்கட்டி தானாய் போயிடும், எண்ணெய் தேய்ச்சு குளிடா என அம்மா சொன்னாள். கையாலே சொரண்டி எடுத்துவிடலாம் பார்த்தேன். அது இன்னும் உக்கிரமானது. சனியன் கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்து வேறு வந்தது. நான் +2 வந்திருக்கையில் ஐந்து ரூபாய் காய்ன் சைசில், அதே தடிமனில் வளந்து விட்டிருந்தது. இப்போது யோசித்தாலும் எப்படி அவ்வளவு வளரவிட்டேன் என புரிபடவில்லை. சிறிய டவுனில் டெர்மடாலஜிஸ்டுக்கு எங்கே போவது? 80 வயது கிருஷ்ணமூர்த்தி டாக்டர் வேறு ப்ராக்டிசை நிறுத்தியிருந்தார். ஆயூர்வேத வேதா டாக்டர் மட்டுமே கதி. அவரின் கோரோஜன சூரணத்துக்கு வேலைக்காகவில்லை.
பசங்கள் கண்ணை பார்த்து பேசுவது குறைந்து ஒன்றரை இன்ச் மேலேயே வெறித்தனர். அது அருவருப்பாய் பட்டவர்கள் 2 நொடிக்கு மேல் என் முகத்தை பார்க்காது திருப்பிக்கொண்டனர். ’பரு மண்டையன்’ என பட்டபெயர் வேறு. சனியன் முதுகுல எங்கயாவது வந்திருக்கக்கூடாது. நெத்திலயா வரணும்? கெமிஸ்ட்ரி ராஜசேகர் சார் ”இன்னாய்யா ஆச்சு, ஆன்சர்லாம் கான்ஃபிடண்டா எழுத மாட்றியே” என மாடல் எக்சாமில் அங்கலாய்த்தார். எப்போதும் எனக்கு பின்னே வரும் சுந்தரம் என்னை முந்தத்தொடங்கினான். கார்த்தி, சீதாராமனும் கூட. பிசிக்ஸ் குமார் சார் ட்யூசனில் ராணிஸ்கூல் பிள்ளைகளை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. எங்கோ என் படிப்புக்கயிறின் கண்ணி அறுந்தது. கூட்டத்தோடு படித்தேன், படிப்பது போல் பாவ்லா. ஆனால், மனம் பருவை யோசிக்கும். சுயபச்சாதாபம் வரும். சேர்த்துவைத்து +2 ரிசல்ட்டில் காட்டியது. நினைத்த மார்க் வரவில்லை.
அப்பா உள்ளுக்குள் உடைந்திருந்தார். ஐஐடி கோச்சிங்குக்கு எல்லாம் மூவாயிரம் கட்டினேனே என அம்மாவிடம் நான் கேட்கும்படி பொருமினார். என்னை பார்க்க பிடிக்காததனாலோ என்னவோ எத்தை தின்னால் பித்தம் தெளியும் என உறவுகள் இருக்கும் ஊரில் காலேஜ் சீட், எண்ட்ரன்ஸ் என அனுப்பினார். டோட் 1 கவர்ன்மெண்ட் இஞ்சினியரிங் காலேஜ் கனவு கலைந்தது. அப்பா டோட் 2 கவுன்சிலிங்குக்கு கூட வரவில்லை. ”ஃப்ரீ சீட், அதுவும் வீட்லருந்து போயிட்டு வர்றமாதிரி காலேஜ் கிடைச்சா எடு, ஹாஸ்டலுக்கு தண்டம் அழமுடியாது” என கடுமையாக சொல்லி அனுப்பினார். தரமணி கவுன்சிலிஙில் நண்பன் என் கார்டியன் போல் கையெழுத்து போட, என் ஊரிலேயே சீட் கிடைத்தது. முதலில் ஆசைப்பட்ட கல்லூரி கிடைக்காமல், பிறகு வெயிட்டிங் லிஸ்ட்டில் அதுவும் கிடைத்தது.
ஆசைப்பட்ட பொறியியல் கல்லூரியில் சந்தோஷமாய் சேர்ந்தேன். ஆனால் அங்கு இப்படியொரு பிரச்சனை இருக்குமென முதலில் உணரவில்லை. +2 வரை பாய்ஸ் பள்ளி. முதன்முறையாக பெண் பிள்ளைகளோடு ஒரே கிளாசில், காலேஜ் பஸ்சில் ஒரு மணிநேர பயணம். நியாயமாய் சந்தோஷமான விஷயம். கலர் ட்ரெஸ், அப்பாவை அரித்து ஒரு கல்யாண மண்டப சேலில் வாங்கிய வுட்லேண்ட்ஸ் (போன்ற) ஷூவை போட்டுக்கொண்டு போகலாம். ஆனால் நெற்றியில் உள்ள 5 ரூபா காயினை என்ன செய்வது? எவ்வளவு யோசித்தும் புரிபடவில்லை. எஞ்சினியரிங் கிடைப்பதற்கு முன் சேஃப்டிக்கு சேர்ந்த ஆண்கள் கலைக்கல்லூரி பிஎஸ்சியே தேவலாமோ?
யோசித்தேன். பெரிய பக்திப்பழம் போல் கெட்டியாக விபூதியை குழைத்து பருவை மறைத்து பட்டையடித்து கொள்ள துவங்கினேன். பல படிப்பாளி பசங்கள் அப்போது பட்டை அடித்துக்கொள்வது வழக்கம் தான். அண்ணாமலை வந்த நேரம் வேறு. என்னையும் அப்படி நினைத்துக்கொள்வார்கள் என நினைத்துக் கொண்டேன். முடிக்கு எண்ணெய் வைப்பதை நிறுத்தினேன். ஃப்ரண்ட்டில் பம்பையாக நிறைய முடி வளர்த்தேன். ஒரே பக்கமாய் வகிடு எடுத்து சீவமாட்டேன். உச்சி மண்டையிலிருந்து அருவி கொட்டுவது போல் முடியை முன்நெற்றிக்கு கொண்டு வருவேன். பிறகு அதை யுடர்ன் அடித்து இன்னொரு சைடில் தள்ளி பருவை மறைப்பேன்.
ஆனால் இதற்கெல்லாம் தாங்காது. முதலில் பட்டை 11 மணி ரீசஸ் வாக்கிலேயே கரையத்துவங்கும். ஒரு பாக்கெட் கண்ணாடி வாங்கி பின்பாக்கெட்டில் வைத்திருப்பேன். பாத்ரூம் போனால் கக்கூசுக்குள் புகுந்து கொள்வேன். கண்ணாடியை எடுத்து பரு மறைந்திருக்கிறதா என பார்ப்பேன். துண்டுபேப்பரில் எக்ஸ்ட்ரா விபூதி வைத்திருப்பேன் அடுத்த ஷிஃப்ட் பட்டைக்கு. பஸ்சில் எந்த சீட்டில் உட்காருகிறோம் என்பது ரொம்ப முக்கியம். 3 சீட்டர் பக்கம் உட்காரவே மாட்டேன். ஒரு காற்றுக்கு என் குற்றால அருவி ஹேர்ஸ்டைலை இன்சமாம் லாஃப்ட் செய்வது போல் தூக்கி அஞ்சுரூபா காயினை காண்பித்து கொடுத்துவிடும். 2 சீட்டர் சைடில் தான் உட்காருவேன். ஆனால் அதிலும் ஜன்னல் பொசிஷன் ரொம்ப முக்கியம். ரொம்பவும் திறக்கமுடியாத கண்ணாடி, கொஞ்சூண்டு காத்து வரும் ஜன்னல் பெட்டர். இல்லையென்றால் இங்கும் முடியை தூக்கி கலைத்துவிடும்.
என் கிளாஸ் காயத்ரி திருச்சியில் என் வீட்டருகிலே இருந்தாள். நான் 2 பஸ் மாறி வரும் ரூட்டிலேயே அவளும் வருவாள். கூட்டம் அம்மும் கேகே நகர் 88ம் நம்பர் பஸ்சில் அவளுக்காகவோ என்னவோ தொங்கிக்கொண்டே வருவேன். அன்று நல்ல மழை நாள் என நினைவு. சொட்டச்சொட்ட நனைந்து அவள் பார்க்கும்படி தொங்கிக்கொண்டு வந்தேன். என்னவோ அவள் அன்று கூடுதலாய் என்னை கவனித்தது போல் இருந்தது. ஸ்டாப்பிங்கில் இறங்கியபிறகு காரணம் புரிந்தது. முடி முழுவதும் நனைந்து, கலைந்து என் அஞ்சுரூபா காய்ன் நெற்றிக்கண் போல் காட்டிக்கொண்டு தெரிந்தது. ஆண் முடிக்கு தண்ணீரை போன்ற அஜாதசத்ரு இல்லை.
உள்ளுக்குள் சுக்கூநூறாய் நொறுங்கினேன். காயத்ரிக்கு தெரிந்தால் ஹேமா, ஹேமாவுக்கு தெரிந்தால் தீபா, தீபாவுக்கு தெரிந்தால்..எத்தனை பேருக்கு தெரியுமோ? காயத்ரி நல்லவள் சொல்ல மாட்டாள் என நம்பினேன். ஆனால் சொல்லியிருப்பாள் போலும்.எல்லோருக்கும் தெரிந்ததிருந்தது, ஆனால் யாரும் காட்டிக்கொள்ளவில்லை. அது இன்னும் கிடந்து உறுத்தியது. அசிங்கம் அசிங்கம், இந்த முகம் அசிங்கம் என குணா கமல் அழுவதை என் போல் உலகில் யாரும் உணர்ந்து பார்த்திருக்க மாட்டார்கள். கொஞ்சநாள் கழித்து ஒரு தோழி கேட்டே விட்டாள் “எப்படி வந்துது அது? ஒன்னும் பண்ணலையா அதுக்கு”. அவள் முன் நிர்வாணமாய் நிற்பது போல் உணர்ந்தேன். என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. அவளே ’தில்லைநகர்ல ஒரு நல்ல டெர்மடாலஜிஸ்ட் இருக்காரு, வேண்ணா போய்ப்பாரு’ என சொல்லவும் செய்தாள்.
அப்பா கொடுக்கும் தினப்படி காசில் சேர்த்து, அந்த தோழியிடமே 30 ரூபாய் மேலுக்கு கடன் வாங்கி, அந்த சரும டாக்டரிடம் போனேன். ”Wartsப்பா இது, எப்படி வருதுன்னு எல்லாம் சொல்லமுடியாது. Hormonal imbalance. உபத்திரவமில்லாதது. ஆனால் மூஞ்சில வந்தது பிசகு. grafting பண்ணலாம்ப்பா. அஞ்சாயிரம் ஆகும். ஆனால் தழும்பு தெரியும். வீட்ல கூட்டிட்டு வா. இப்ப ரிசப்ஷன்ல 150 கட்டிடு” என எழுந்தார். அஞ்சாயிரமா, அப்பா ஏற்கனவே படுத்த படுக்கையாய் இருக்கும் பாட்டிக்கு வைத்தியம் பார்த்து கொண்டிருந்தார். ஏனோ அப்பாவிடம் இவ்விஷயத்தை சொல்லவேயில்லை. சொன்னால் கொடுத்திருப்பாரோ என்னவோ?
கல்லூரியில் இந்த பரு கொடுத்த அழுத்தம் தாங்கமுடியாது போய்க்கொண்டிருந்தது. கடைசிபெஞ்ச்சில் உட்கார துவங்கினேன். ஜமாவாக கூத்தடிக்கும் பசங்களோடு அல்ல. என்னை போலவே இண்ட்ராவர்ட்டாய் இருந்த சில மக்குப்பசங்களோடு. மிகச்சுமாரான மார்க்குகளோடு முதல் வருடம் தேறினேன். இரண்டாம் வருடம் கோர் க்ரூப் கோர்ஸ்களிலும் அடித்துபிடித்தே ஸ்டாம்ப் மார்க் (பாஸுக்கு 1 மார்க் கூட) வாங்கித்தேறினேன். ஒரு கோட்டு அடித்தேன். பெரிய நண்பர்கள் வட்டம் கிடையாது. காலேஜ் விட்டால் வீட்டருகில் இருந்த லெண்டிங் லைப்ரரியில் பாலகுமாரன் புத்தகம் படிப்பேன். கஷ்டஜீவனத்தில் அங்கு வேலைப்பார்க்கும் அக்காவிடம் கொஞ்சம் பேசுவேன். 2 பஸ் பிடித்து ஸ்ரீரங்கம் இஸ்கானுக்கு போய் தேமேவென உட்காருவேன். மூன்றாம் தடவை நாசூக்காய் துரத்தினார்கள்.
ஞாயிறு ஹிண்டு பேப்பரில் ”ஸெல்ஃப் கான்ஃபிடன்ஸ் & ஸ்பீக் இங்க்லீஷ்” ஓசி முதல் கிளாஸுக்கு அழைக்கும் ஹோட்டல் தேடிப்போவேன். சிறு தொழிலதிபர்கள் “ஐ ஆல்சோ காட் கான்ஃபிடண்ட். யு ஆல்சோ ஜாய்ன்” என ஆள் சேர்ப்பார்கள். செஷன் முடிந்து “டூ தவுசண்ட் ஃபைவ் ஹண்ட்ரட் கட்றீங்களா தம்பி” என கோட்சூட்டுடன் கோர்ஸ் நடத்துபவர் கேட்க மிரட்சியுடன் என் டிவிஎஸ் சாம்ப்பை தள்ளிக்கொண்டு வீடு திரும்புவேன். காவேரி தியேட்டரில் விஐபி படம் வந்திருந்ததது. என்னிடம் ஒருவரும் சொல்லாமல் காயத்ரி உட்பட என் கிளாஸ் கேர்ள்ஸ் பாய்ஸ் எல்லோரும் சேர்ந்து பார்த்த அன்று பாத்ரூமில் அழுதேன்.
“மேல ஒரு ஹோமியோ கிளினிக் வந்துருக்குறா ஸ்ரீராம். ஒரு தடவை இதுக்கு போயி பாரேண்டா” லெண்டிங் லைப்ரரி அக்கா சொன்னாள். போய்த்தான் பார்ப்போமே என போனேன். பிந்து நாயர் என ஒரு கேரளா டாக்டர். முப்பது வயது போன்ற தோற்றம். மெல்ல ஆராய்ந்தார். ரொம்ப பேச்சில்லை. பேசினால் நல்ல மலையாள வாடை. ஒரு லெட்ஜர் போன்ற நோட்டில் நிறைய எழுதினார். ஏதோ மருந்தில் ஊறவைத்த வெள்ளை இனிப்பு மாத்திரை தந்தார். 75 ரூபாய் வாங்கிவிட்டார். அப்போது எனக்கது பெரியதொகை. 2 பஸ் பிடித்து காலேஜ் போய்வருவது, வண்டி டோக்கன் என அப்பா வாரத்துக்கு 150 ரூபாய் தான் தருவார். அதில் டாக்டர் ஃபீஸுக்காக மிச்சம் பிடிக்க ஆரம்பித்தேன். எப்படியோ 10,15 நாட்களுக்கு ஒருமுறை மருந்து தீரும்போது அவரிடம் போய்விடுவேன். அதே அமைதியான ஆராய்தல், அதே லெட்ஜரில் என்னவோ எழுதுதல், அதே கசப்பு திரவத்தில் ஊறவைத்த ஜவ்வரிசி மருந்து. விடாமல் போய்விடுவேன். என்னவோ ஒரு நம்பிக்கை. என்னால் இயன்ற, என் சக்திக்கு எட்டிய ஒரே முயற்சி.
உண்மையில் இப்போது யோசித்துப்பார்த்தால் அந்த டாக்டரிடம் போன காலக்கட்டம் மஙகலாய்த்தான் நினைவில் இருக்கிறது. எப்போது நடந்தது, படிப்படியாக நடந்தததா, ஒரேடியாக நடந்ததா சரியாக தெரியவில்லை. ஒரு நாள் காலையில், என் நெற்றியில் பார்த்தால் அந்த ஐந்து ரூபாய் காய்ன் இல்லை. மற்றவர்களுக்கு இருப்பது போல் எந்த மேடுபள்ளமும் இல்லாத, சாதாரண, நேரான நெற்றி. கண்ணாடியில் அதை கண்ணெடுக்காமல் நெகிழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். பல வருடங்கள் கழித்து கீழே வழித்து சீவாமல், தூக்கி சீவினேன். புதிதாய் பிறந்தது போல் உணர்ந்தேன்.
புதிதாக தான் பிறந்திருந்தேன். பொறியியல் மூன்றாம் வருடத்தில் இருந்து என் காலம் மாறியது. சிரிக்க ஆரம்பித்தேன். ஒன்றுவிடாமல் அத்தனை இண்டர்காலேஜ் சிம்போசியம், கல்ச்சுரல்ஸ் என கலந்துகொள்ள தொடங்கினேன். தனியாக யார் உதவியுமில்லாது 500 பேர் கொண்ட சபையில் ஒரு பொறியியல் விஷயத்தை விளக்க முடிந்தது, கேட்கும் கேள்விக்கு பயமில்லாது பதில் சொல்ல முடிந்தது. 10 நிமிட பேப்பர் பிரசண்டேஷன், முதல் பரிசு, கவரில் ரெண்டாயிரம் ரூபாய் காசு. ஹோட்டலில் பனீர் பட்டர் மசாலா சாப்பிட்டுவிட்டு சீட்டியடித்து ஏசி பஸ்சில் ஊருக்கு திரும்புவேன். பசங்கள் கடன் கேப்பான்கள். கல்லூரி சேர்மன் ரூமுக்கு அழைத்து நான் வாங்கிய ட்ராஃபியோடு புகைப்படம் எடுத்துக்கொண்டார். என்னை கண்டாலே முறைத்த HOD என் பேப்பரை கெஸ்ட் லெக்சர் எடுக்கச்சொன்னார். இதெல்லாம் பெரிசில்லை. காயத்ரி என்னிடம் “என்னடா இப்படி தைரியமா எல்லார் முன்னாடியும் பேசுற, டிப்ஸ் கொடுறா” என்றாள். கடைசி வருடம் ஒரு கேட்டகரியில் சிறந்த அவுட்கோயிங் ஸ்டூடண்ட் அவார்ட். கடைசி செமஸ்டர் ப்ராஜக்ட் முடிவதற்குள்ளாகவே 3 ஆஃபர்கள். வேலை, அந்த வேலையினால் மனைவி என வாழ்க்கை நகர்ந்துவிட்டது.
என்னவோ எனக்காக கிளினிக் ஆரம்பித்ததுபோல் திடீரென பிந்து நாயர் கிளினிக்கை மூடிக்கொண்டு கிளம்பிவிட்டார். போகும் முன் அவருக்கு ஒரு ஒழுங்கான நன்றி சொன்ன நினைவில்லை. அவரை நினைக்கும்போதெல்லாம் மனதில் நமஸ்கரித்துக் கொண்டேயிருக்கிறேன். சத்தியமாய் இன்று எங்காவது அவரை பார்த்தால், நெடுஞ்சாங்கிடையாக காலில் விழுந்துவிடுவேன். அவர் அந்த கசப்பு ஜீனி மாத்திரையில் கரையில் இழுத்துப்போட்டிருக்காவிடில், வாழ்க்கை மாறியிருக்கும்.
டாக்டர்கள் உயிரை மட்டும் காப்பதில்லை. பலசமயம் நம் மானத்தையும். டாக்டர்கள் உடலை மட்டும் சரிசெய்வதில்லை. பலசமயம் நம் வாழ்க்கையையும்.
டாக்டர்கள் லேப்களோடு கூட்டு, கமிஷன், சேவை மனப்பான்மை இல்லை, ஹாஸ்பிட்டல்கள் கார்ப்பரேட் ஆகிவிட்டது என என்னன்னவோ விவாதங்கள். அவற்றில் எது உண்மை, எந்தளவு உண்மை அதெல்லாம் எனக்கு தெரியாது. அஞ்சான், ஃபேஸ்புக், காவியத்தலைவன், வீக்கெண்ட் எங்கே போகலாம், அப்ரைசல் என இன்று நம் மூளையை ஆக்கிரமிக்கும் அத்தனை விஷயங்களையும் ஒரேயொரு வியாதி, நோய்மை, ஒரு ஜலதோஷம் பின்னுக்கு தள்ளிவிடும் என்பது மட்டும் தெரியும்.
தர்க்கத்துக்கு மீறிய தொழில் மருத்துவம். கடவுள் நம்பிக்கையை போல். எனக்கு பிந்து டாக்டரை போல்.
முதுமை, தன் கடைசிக்காலங்கள் எப்படி இருக்கவேண்டும் என்ற எண்ணங்கள் முப்பதுகளில் வர ஆரம்பிக்கும். என் கனவு என் மகள் டாக்டராகி ”என்னப்பா உடம்பை கவனிக்கவே மாட்டேங்குற” என திட்டத்திட்ட அவள் கையால் வைத்தியம் பார்த்துக்கொண்ட பெருமிதத்தில் சாகவேண்டும்.
அதற்குள் ஒருமுறை டாக்டர் பிந்து நாயர் காலில் விழுந்துவிட வேண்டும்.
+++++++++
(நீளத்துக்கு மன்னிக்கவும். குறைத்தால் சொல்ல வந்ததன் ஆன்மா கெட்டுவிடும் என தோன்றியது)