நேற்றிரவு பெரியதாக தூக்கமில்லை. அதிகாலை நான்கு மணி வரை படுக்கையில் விழித்திருந்தது நினைவிருக்கிறது. விடிந்தால் தீபாவளி என்ற மனநிலையில் ஒரு பத்து வயது சிறுவன் எப்படி இருப்பானோ அப்படி படுத்திருந்தேன். மனதுக்குள் அப்படியொரு நிலைகொள்ளாத மகிழ்ச்சி.
நேற்றிரவுக்கு முந்தைய மாலை 2015-க்கான இயல் இலக்கிய விருதுகளுக்கு முதல் தடவையாக சென்றிருந்தேன். இயல் விருதுகள் கனடா தமிழ் இலக்கிய தோட்டம் என்கிற ஒரு வெகு திவீரமான தமிழார்வல அமைப்பால் காத்திரமான படைப்புகளுக்கும், படைப்பாளிகளுக்கும் உலகளவில் வழங்கப்படுவது. குறிப்பாய் ‘இயல் விருது’ எனப்படும் முத்திரை விருது ஒரு தமிழ்ப்படைப்பாளிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதாக தரப்படுவது. அது இந்த வருடம் ஜெயமோகன் அவர்களுக்கு.
என்னைப் போன்ற ஃபேஸ்புக் பதிவனுக்கு இந்த திவீர இலக்கிய அமைப்பில் இடமோ, ஜோலியுமில்லை. எனினும், சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து வெளியிடும் பெருந்தவத்தை செய்து வரும் திருமூர்த்தி ரங்கநாதன் புண்ணியத்தில் (”நல்லா எழுதுறீங்க, நீங்க இந்த இலக்கிய சர்க்கிள்க்குள்ள வரணும்”) எழுத்தாளர் அ.முத்துலிங்கம் ஐயா அழைப்பிதழ் அனுப்பியிருந்தார். எனக்கு திருமூர்த்தி, தமிழறிவிலறிஞர் வெங்கட்ரமணன் தவிர ஒருவரையும் தெரியாது வேறு. சற்று பயந்துகொண்டே தான் விழா நடக்கும் ஹோட்டலுக்கு போனேன்.
பயந்தது போலவே தான் சூழலும் இருந்தது. விருது விழா நடந்த இடம் ஒரு மூன்று/நான்கு நட்சத்திர ஹோட்டல். விருது அழைப்பிதழில் Semi formal எனக்குறிக்கப்பட்டிருந்ததை பறைசாற்றும் வகையில் பலரும் கோட்சூட்டில் வந்திருந்ததை ரிசப்ஷனிலேயே பார்த்தேன். நான் சட்டையை இன் கூட செய்யாது போயிருந்தேன். நல்லவேளை என் அலைபேசியை காரில் மறந்திருந்தேன். அதை எடுக்க போகும்போது காரில் எதற்கும் இருக்கட்டுமென வேலைக்காக வைத்த ப்ளேசர் ஆபத்பாந்தவனாய் கைகொடுக்க, சட்டையை இன் செய்து அதை அணிந்துகொண்டு உள்ளே போனேன். பெயரை சரிப்பார்த்துக்கொண்டு சட்டையில் ஒட்டிக்கொள்ள பெயர் அட்டை எல்லாம் தந்தார்கள்.
விழா அரங்கு கிட்டத்தட்ட நிறைந்திருந்தது. எனக்கு சற்று பின்னால் தான் உட்கார இடம் கிடைத்தது. விருதுகள் கவிதை,மொழிபெயர்ப்பு என பல துறைகள் சார்ந்து தரப்பட்டுக்கொண்டிருந்தது. ராணுவ ஒழுங்கோடு ஒவ்வொரு விருதுக்கும் ஓரிரு நிமிட அறிமுகம், விருது வழங்குதல்,இரண்டு நிமிடம் தாண்டாத ஏற்புரை என விழா விறைப்பாக நடந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் agenda அச்சடிக்கப்பட்டிருக்க, அதற்கு இம்மி பிசகாமல் விழா நடக்க எனக்கு ஏக வியப்பு.
என் கண்கள் ஜெயமோகன் அவர்களை தேடியது. மேடையேறிய சிலர் “ஜெயமோகனுக்கு வணக்கம்” என கீழே முன்வரிசையை பார்த்து சொன்னது பார்த்தேன். ஆனால் அவரை பார்க்க முடியவில்லை. கடைசியாக விழாவின் முத்தாய்ப்பான இயல் விருது வழங்கும் தருணத்துக்கு வந்தது.
ஆனால் ஜெயமோகன் உடனே மேடையேறி விடவில்லை. அவரை பற்றிய ஒரு சம்பிரதாய அறிமுகம் (”இவர் நாகர்கோவிலில் ..வருடம் பிறந்தார்” போல) மற்றும் ஜெமோவின் படைப்புகளை பற்றிய ஒரு சிறப்புரை, பரிசு தர வந்திருந்த வெள்ளைக்கார எழுத்தாளரை பற்றிய ஒரு அறிமுகம், அதற்கு பின் அந்த வெள்ளைக்காரரின் உரை என தொண்ணூறுக்கும் நூறுக்கும் இடையேயான டெண்டுல்கரின் இன்னிங்ஸ் போல் சற்றே நீண்டது.
எனக்கோ தாகம். அரங்கின் பின்னால் தண்ணீர் இருக்குமா தெரியவில்லை. வெள்ளைக்காரர் எப்படியும் 2 நிமிடங்கள் பேசுவார் என தெரிந்ததால் பின்னால் போய் தாகத்தை தணித்து வந்தமரவும், ஜெமோ அவர்கள் மின்னல் போல் எங்கிருந்தோ மேடையில் தோன்றவும் சரியாக இருந்தது. அவருக்கு இயல் விருதும், கனேடிய பாராளுமன்ற விருதும் (ஆசியாவுக்கு வெளியேயான முதல் தமிழ் எம்பி ராதிகா சித்சபேசன் வழங்க) பெற்றுக்கொண்டார். சம்பிரதாய புகைப்பட தருணங்கள் முடிந்து தன் ஏற்புரையை துவங்கினார்.
மெல்லிய குரல் தான் ஜெயமோகனுக்கு. ஒரு சம்பிரதாயமான தமிழ்ப்பேச்சாளருக்கான உசத்திய குரலோ, gait அல்லது உடல்மொழியோ கிடையாது. ஆனால் அதில் என்னவோ நம்மை கட்டிப்போடும் த்வனி. மிருதுவான குரலில் மிகத்தெளிவான பேச்சு.
ஜெயமோகனின் பேச்சின் ஆதாரப்புள்ளி தன்னிறைவு, தன்முனைப்பு, தன்மகிழ்ச்சி. இதை இரு விஷயங்களை தொட்டு விளக்கினார். முதலாவதாக, எழுத்தாளர் ஆகுமுன் நாடோடியாக வடக்கு ட்ரைன்களில் செல்கையில் கிருஷ்ணமரபில், ஆட்டம்பாட்டத்தோடு, நித்யமகிழ்ச்சியோடு இருக்கும் கிருஷ்ணபக்தர்கள் தன்னை எவ்வாறு பாதித்தனர் எனக்கூறினார். பிறகு தன் பெற்றோர்களை இழந்து சிரமப்பட்ட வருடங்களில் தற்கொலை செய்துகொள்ள தண்டவாளத்தில் கிடந்த தருணத்தில், அவர் கண்ணில் பட்ட ஒரு புழு வாழ்வுக்கான அவர் பார்வையை எப்படி முற்றிலும் மாற்றியது என விளக்கினார். “ஒரு மிகச்சிறிய புழு தன் சர்வைவலுக்கான போராட்டத்தை கூர்மையாக செய்யும்போது, தன்னால் முடியாதா” என அன்றிலிருந்து ஒரு வலிந்து எடுத்த முடிவாக (conscious decision) "இனி என் வாழ்வில் துயரம் என்பது வெளியிலிருந்து இல்லை. என்னை ஒரு வெளிக்காரணி துக்கப்படுத்தவோ, சங்கடப்படுத்தவோ முடியவே முடியாது” என முடிவெடுத்து அது 25 வருடமாக எப்படி தன்னை இயக்குகிறது என அற்புதமாக விளக்கினார். தன் பழைய டைரிகளை புரட்டுகையில் எப்படி தன் ஒவ்வொரு நாளும் எவ்விதத்திலோ உருப்படியாக கழிந்திருக்கிறது, ஒன்று எழுதியிருக்கிறேன், இல்லை எழுத்துக்காக படித்திருப்பேன், பயணித்திருப்பேன் என்பதில் தனக்கு எத்தனை பெருமிதம். நான் எழுதுவதை யாரும் படிக்கவே போவதில்லையென்றாலும் எப்படி தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பேன் என்றார்.
என் எழுத்து இங்கு தோற்றுப்போகிறது. இந்த செய்தியை ஜெயமோகன் சொன்ன விதத்தில் நூறில் ஒருபங்கை கூட மேலே நான் எழுதிய பத்தி சொல்லவில்லை என நானறிவேன். அவர் பேசப்பேச அத்தனை நெகிழ்ந்தேன். கைத்தட்ட சற்றே சங்கோஜப்பட்ட கூட்டமானதால் சில இடங்களில் தொடர்க்கைத்தட்டல்களை முடுக்கி வைத்தேன். நேர்த்தியாக பெய்யும் மழையாக தொடர்ந்த அவரது பேச்சு, மழை நின்று வெயில் எட்டிப்பார்ப்பது போல் ஒரு எதிர்பாராத தருணத்தில் சட்டென முடிந்தது.
நான் திகைத்துப்போய் உட்கார்ந்திருந்தேன். இப்படியொரு அற்புத பேச்சை நான் கடைசியாய் எப்போது கேட்டேன் என நினைவில்லை.
தொடர்ந்த சுருக்க நன்றியுரையுடன் (8.30க்கு முடியவேண்டிய விழா 8.31 கூட அல்ல .8.30க்கே) முடிய கூட்டம் எழுந்து நகரத்துவங்கியது. நான் ஜெயமோகன் அவர்களின் குறுநாவல் தொகுப்பு ஒன்றை எடுத்துப்போயிருந்தேன். மேடையிலிருந்து இறங்கி கூட்டத்தோடு அளவளாவ துவங்கினார். புத்தகத்தில் கையெழுத்து வாங்குவது மட்டுமே என் குறிக்கோளாய் இருந்தது. வரிசையில் எனக்கான அவரின் கவனம் கிடைத்த போது கைகுலுக்கினேன். புன்னகைத்தார்.
“இதுல ஆட்டோகிராஃப் சார்”
இப்போது யோசிக்கையில் ஆட்டோகிராஃப் கேட்க அது அசந்தர்ப்ப தருணம். இருந்தும் பொறுமையாய் நின்றுகொண்டே போட்டார்.
“சார் நான் ரசனை ஸ்ரீராம்ன்னு”
”நீங்கதானா அது? இங்கயா டொராண்ட்டோலயா இருக்கீங்க?”
சத்தியமாய் இதை எதிர்ப்பார்க்கவில்லை நான்.
”உங்க பத்ரி சேஷாத்ரியோட புத்தக விவாதத்துல நான் கூட ஒரு பதிவு போட்டேனே. உங்களை கவனிச்சிருக்கேன்” எனத்தொடர்ந்து “இது என் வொய்ஃப் அருண்மொழி” என அறிமுகப்படுத்தினார்.
அவர் பேசப்பேச எனக்கு மகிழ்ச்சி கொப்பளிப்பு. என் இத்தனை நாள் கிறுக்கல்களுக்கான ஒரு அங்கீகாரத்தருணமாக உணர்ந்தேன். ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டு யாரிடம் எடுக்கச்சொல்ல என விழிக்க வெங்கட்(ரமணன்) அதை புரிந்து அவர் கேமராவிலேயே எடுத்தார். பின்னால் கூட்டம் நான் வழிவிட காத்திருக்க முகமன் கூறி விலகினேன்.
என்னால் இப்பொழுதும் இது நிகழ்ந்ததென நம்பமுடியவில்லை. எனக்கு வேறு யாரையும் வெகுவாய் தெரியாதென்பதால் சற்று எட்ட நின்று அவரையே கவனித்துக்கொண்டிருந்தேன். சகஜமாய் பேசுவதை வலிந்து செய்யவில்லை அவர். ஒவ்வொருவரிடமும் ஒரு சிறுகுழந்தையின் உற்சாகத்தோடு, முகபாவனைகளுடன் உரையாடிக்கொண்டிருந்தார். சுபாவத்திலேயே இயல்பானவராக, நிறைவானவராக இருக்காவிடில் இது சாத்தியமில்லை.
சற்று நேரம் கழித்து அவரை சுற்றிய கூட்டம் சற்றே விலக மெல்ல அரங்கின் நடுவில் அவர் நடந்து வர நான் நிற்கும் இடத்திற்கருகில் வந்தார். மறுபடி என்னை பார்த்து அதே புன்னகை. மறுபடி அவரிடம் பேசும் சந்தர்ப்பம்.
“சார், இங்க உங்களுக்கு எல்லாம் சௌரியமா இருக்கா? உங்களுக்கு, ஃபேமிலிக்கு என்ன வேண்ணாலும் சொல்லுங்க சார்”
இப்போதும் ஏன் இதை கேட்டேன் எனத்தெரியவில்லை. பதட்டமோ என்னவோ உளறிவைத்தேன். ஊரிலிருந்து வந்த களைப்பு இன்னமும் இருக்குமே, அவருக்கான மற்றும் அவரது மனைவிக்கான உணவு, இதர தேவைகள் எல்லாம் சரியாக நடக்கிறதா, என்னால் ஏதும் சிறிதாய் செய்யமுடியுமா என்கிற ஆவலாதி. அவல் எடுத்துக்கொண்டு போன ஒரு குசேலன் மனநிலை எனக்கு. “எல்லாம் நல்லா பார்த்துக்கறாங்க ஸ்ரீராம்” என்றார் புன்னகைத்துக்கொண்டே. தொடர்ந்து வெங்கட் அவர் வீட்டுக்கு என்னை அழைத்திருக்க, கிளம்பலாமா என கேட்க, நானும், வெங்கட்டும் ஜெயமோகன் அவர்களிடம் சொல்லிக்கொண்டு விடைப்பெற்றுக் கொண்டோம்.
ஜெயமோகன் அவர்களை நான் நிரம்ப வாசித்தது இல்லை. அறம் சிறுகதைகள், வெகுசில குறுநாவல்கள், இணைய கட்டுரைகள் தாண்டி அறிந்தது இல்லை. அவரின் ஒரு தேர்ந்த,திவீர வாசகன் மனநிலையில் நான் இயல் விருதுகளுக்கு செல்லவும் இல்லை. ஆனால் ஒருவரின் ஐந்து நிமிட பேச்சு, சுபாவம் இத்தனை நேர்மறை தாக்கத்தை உண்டாக்கும் சாத்தியம் உண்டா எனில் வெகு நிச்சயமாக ஆமென சொல்வேன்.
ஜெயமோகன் எழுத்துக்களின் பன்முகத்தன்மை, விஸ்தீரணம், அதில் உள்ள செய்திகளின் அடர்த்தி பற்றி பலருக்கு வியப்புண்டு.
ஆனால்,
எனக்கு ஜெயமோகனின் எழுத்துக்களில் உள்ள செய்தியை விட பெரிய செய்தியாக தெரிவது, அவர் வாழ்க்கையே. அவர் வாழ்க்கையை அணுகும் விதமே. வாழும் முறையே.
His life is his biggest message.
++++++++++++++++