Thursday, April 30, 2015

கவிச்சி காவியம்




டின்னருக்கு சோஷியல் மீடியாவில் கழுவி ஊற்றப்படும் உப்புமா. ஒரு இடைவெளி விட்டு செய்து சாப்பிட்டால் உப்புமாவும் அமிர்தம். சன் டிவி பார்த்துக்கொண்டே உப்புமா சாப்பிட்டு, ப்ரேக் விடும்போது கை அலம்ப எழலாம் என காத்துக் கொண்டிருக்கையில்..

புயல் போல் குஷி உள்ளே நுழைந்தாள்.

பக்கத்துவீட்டு ப்ரீத்தியோடு பார்க்குக்கு போனவள். கையில் ஒரு சிவப்புகலர் ப்ளாஸ்டிக் டிபன்பாக்ஸ் வைத்திருந்தாள். அவர்கள் பூனாக்காரர்கள். இருவீட்டுக்கும் இடையே சாப்பாடு போக்குவரத்து ஏகபோகம். சிங்க மராட்டியர் தம் ஆலுபராட்டா கொண்டு சேரத்து அவியல் பரிசளிப்போம்.

”என்னடி அதுல?” என குஷியின் அம்மா கேள்வி.

நல்லவேளை தட்டை அலம்பலை, எதுவா இருந்தாலும் இதுலயே போட்டுக்கலாம் என அமைதியாய் நான்.

“பட்டர் சிக்கன்” என சொல்லிக்கொண்டே டைனிங் ரூமின் நடுநாயகமான ஐலண்டில் பார்ஸ்டூலை இழுத்து உட்கார்ந்துகொண்டாள்.

”அம்மா ஸ்பூன் கொண்டு வா”

”அய்யிய்ய இத அங்கயே சாப்ட்டு வர்றதான”

“எனக்கு ரொம்ப புடிச்சுதுன்னு ப்ரீத்தி’ஸ் மாம் கொடுத்துவிட்டாங்க. ஸ்பூன் இல்ல ஒரு ஃபோர்க் சீக்கிரம்” மாமிசம் சாப்பிடும் வெறியில் இருந்தாள் குஷி.

“இரு அந்த ஃபோர்க் எடுக்காத, உன்னுதே தர்றேன்” என தேடியெடுத்து ஒரு ப்ளாஸ்டிக் ஃபோர்க்கை தந்தாள் மனைவி. அதென்ன லாஜிக்கோ புரியவேயில்லை.

விஷயம் இதுதான். மனைவி வெஜிடேரியன், நான் எகிடேரியன், மகள் பறப்பதில் ப்ளேனையும், ஓடுவதில் பஸ்சையும், தண்ணீரில் கப்பலையும் தவிர சாப்பிடுபவள் என ஒரு பாரதவிலாஸ் எங்கள் வீடு.

ஆனால், வீட்டில் கவிச்சி சமைப்பதில்லை. முட்டை மட்டும் அலவுட். அதற்கென ஜாதிப்ரஷ்டம் செய்யபட்ட தனி பாத்திரங்கள். எங்களுக்கு ஆம்லட் சாப்பிடும் ஆத்திரம் வந்தால் வெளியே வந்து தொம்சம் செய்துவிட்டு, மறுபடி அதன் ஈசான மூலைக்கு போய்விடும்.

எங்கப்பாரு எனக்கு சொத்தேதும் வைக்கவில்லையென்றாலும் முட்டை மட்டும் பழக்கிவிட்டுவிட்டார். ஞாயிறு மாலை மேகி கெச்சப்பை தலைகீழாய் கவுத்தி பொச்சக்கென்று ஒரு பெரிய கரண்டி விட்டுக்கொண்டு, வெங்காயம்,மிளகு தூவிய ஆம்லட்டோடு தூர்தர்ஷன் படத்தை பார்ப்பது தான் அவருக்கான அந்த வாரத்துக்கான ரீசார்ஜ். இதற்காகவே தேவுடு காத்துக்கொண்டு நானும், சகோதரிகளும் நிற்போம். நான் மதியமே முட்டை ஸ்டாக் எல்லாம் அவதானித்துக்கொண்டு, என் சைக்கிள் ஹேண்டில் பேரில் வயர்கூடை மாட்டிக்கொண்டு முக்குக்கடையில் முட்டை வாங்கி வீட்டுக்கு வருவேன். அம்மா “கணக்கு பேப்பர் குடுத்தாச்சாமேடா” என கேட்க நான் “அம்மா முட்டை வாங்கிட்டு வந்திருக்கேன்” என அசந்தர்ப்பமாய் சொல்லி அடிவாங்குவேன்.

அதுவும் தஞ்சையில் வாழ்ந்த சமயத்தில் முட்டை வெறி தறிகெட்டு ஓடியது. நாங்கள் இருந்த தஞ்சை ஸ்டேடியம் ஏரியாவில் தினமும் காலை, மாலை என இரு முட்டைகள் தருகிறார்கெளனவே வாலிபால் கேம்ப்புக்கு அண்ணந்தங்கைகள் ஃபேமிலியாய் போன குடும்பம் எங்களுது. என்னென்னவோ ஸ்ட்ரீட் ஃபுட் கேள்விப்பட்டுருப்பீர்கள். தஞ்சை மெடிக்கல் ஏரியாவில் பத்தடிக்கு ஒரு கடை என்றளவில் ஒரு ஸ்ட்ரீட்ஃபுட் கல்ச்சர் வேகவைத்த முட்டை. ஒரு இட்லி குண்டான், அதனுள்ளே சூடான வேகவைத்த முட்டைகள், எக்சிபிஷனில் வாங்கிய ஸ்லைசர் இதான் முதலீடு. 1 ரூபாய் கொடுத்தால் அவிச்ச முட்டையை ஸ்லைஸ் செய்து, அட்டகாசமான ஒரு ஜீரகப்பொடி,உப்பு,காரப்பொடி கலவையை தூவி, தினத்தந்தி பேப்பரில் (அதிர்ஷ்டம் இருந்தால் முட்டை சாப்பிட்டுக்கொண்டே ஆண்டியார் படிக்கலாம்) தருவதை, ஆவலாதி கொட்டிக்கொண்டு நெஞ்சுக்குழி பொசுக்க விழுங்கினால் ம்ம்ம் டிவைன். புதுக்கோட்டைக்கு ஜாகை மாறிய பிறகு அக்கவுண்ட் வைத்து முட்டை மாஸ் சாப்பிடுமளவுக்கு வெறி அதிகமாகிவிட்டது. தட்ஸ் அ டெலிகசி..

இப்படியாப்பட்ட எகிடேரியனான நான், ப்யூர் வெஜிட்டேரியன் சகதர்மிணியை மணந்தபோது வாரம் ஒருமுறை பியர், தோணும்போதெல்லாம் முட்டை என ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுக்கொண்டேன். சில அமெண்ட்மெண்ட்டுகளுடன் அதையேற்ற மனைவி அதற்காகவே, பழைய ஈயம் பித்தளைக்கு போடவேண்டிய கோட்டிங் போன கடாய், ஹேண்டில் உடைந்த தோசைக்கல் என முட்டை தளிகைக்கு தள்ளிவிட்டுவிடுவாள். நானும் ‘என் முட்டை என் உரிமை, ஜூஸ் கொடுப்பாங்க குடிக்காதீங்க, டின் பியர் குடிங்க’ என இளையதிலகமாய் வெள்ளி இரவு என் உரிமையை நிலைநாட்டுவேன். மனைவி இல்லாத பொழுதில் நண்பர்கள் ‘அளவளாவ’ கூடுகையில், இந்த இத்துபோன சட்டியில் எப்படி எக்புர்ஜி செய்யற என ‘நாட் ஹேப்பனிங். டெல் மீ ஹவ் டூ யூஸ் திஸ்’ என அமிதாப் போல் கேட்பார்கள். “ஈசி அங்கிள், இங்க புடிச்சுக்கனும்” என ஆம்லட்டை வாகாய் திருப்ப “ஸ்ரீராம் சர்” என வியந்துபோவார்கள்.

மகளின் கதை வேறுவிதம். பாப்பா பிறந்து 18 மாதம் வரை ”அடடே இதான் குழந்தைய வளர்க்கறதா? ஈசியா இருக்கறதே” என நினைக்க, அதுவரை ஆன்சைட் ட்ரிப்பில் இருந்த அம்மா, மாமியார் எல்லாம் திரும்பிப்போக, இருவரும் வேலைக்கு போவதால் டே கேருக்கு அனுப்பவேண்டிய சூழ்நிலை. டேகேரில் காலை உணவிலிருந்து, மதிய உணவு, மாலை ஸ்னாக்ஸ் வரை அவர்களே தந்துவிடுவர். “எங்களின் மெனு இதுதான். சரியா இல்லன்னா நீங்க கொடுத்துவிடுங்க. உங்க ஃபுட் எங்களுக்கு தெரியாது” எனசொல்ல, “உங்களுக்கு என் வைஃப் பத்தி தெரியாது” என அவர்களின் மெனுவுக்கே ஒத்துக்கொண்டேன். சரி உங்கள் மெனுவை காட்டுங்கள் என வாங்கிப்பார்த்தால், டர்க்கி திங்கள், சிக்கன் செவ்வாய், காவிய புதன் என முனியாண்டி விலாஸ் மெனுகார்டை நீட்டினார்கள். காலை ஏழரைக்கு கிளம்புகையில் எதுக்கு ஏழரை என அவர்களின் மெனுவுக்கு ஓகே சொன்னோம்.

டே கேரில் ஒரு வினோத வழக்கம். உணவு கொடுத்துவிட்டு குழந்தைகள் வாயை துடைத்துவிட மாட்டார்கள். அது இன்ஃபக்‌ஷன் ஆகிவிடுமாம். பாப்பா மீட்பால்ஸ் சாப்பிட்ட வாயோடு மாலை எங்களுக்காக காத்திருப்பாள். ஒரு கட்டத்தில் பாப்பா மண்டையை முகர்ந்து பார்த்தே ”இன்னிக்கு கோபால் கடை கேட் ஃபிஷ்ஷா, எப்படி கண்டுபிடிச்சேன் பார்த்தியா” என எங்களை நாங்களே தட்டிக்கொடுத்து கொள்வோம். இது ஒருவிதத்தில் குழந்தை வளர வளர உபயோகமானது. எங்காவது பிக்னிக், சுற்றுலா போன இடத்தில் நாங்கள் “எக்கூஸ் மீ சார், திஸ் ஹாஸ் மீட்? நோ சாசேஜ், போர்க், சிக்கன், பீஃப், மட்டன், ஃபிஷ் சாஸ்” என கடைக்காரனை காண்டாக்கி கொண்டிருக்கையில், குஷி சிம்பிளாய் ஒரு தள்ளுவண்டி hot dog உடன் செட்டிலாகி விடுவாள்.

ஹாஸ்யமாய் சொன்னாலும், எங்கள் முடிவு அல்லது உணவு சுதந்திரத்துக்கு பின்னால் ஒரு காரணம் உண்டு. குழந்தை இங்கு வளர்கிறவள். கல்லூரி,வேலைக்கு போகப்போகிறவள். ஆபீசில் கும்பலாய் ஒரு Brazilian Steak house, Asian buffetக்கு போகையில், எங்களை போல அங்கு வெஜ்ஜி ஃபுட் கிடைக்குமா,  வேறு இடம் போகலாமே என மற்றவர்களுக்கும் இடைஞ்சலாய் இருக்கும் நிலை வேண்டா. டிஸ்னிலேண்டில் களைத்துச்சுற்றி அமர்கையில் காய்ந்த சீஸ் பீட்சாவோடு பசியாறும் நிலை வேண்டா. மெக்டொனால்ட்ஸ் போன்ற இடங்களில் உருளை ஃப்ரைஸ் தவிர வேறெதும் உண்ண முடியாத நிலை வேண்டா.

மேற்கத்திய உலகில் முழு வெஜிடேரியனாக இருப்பதும் அத்தனை எளிதல்ல. நீங்கள் தேர்வு செய்து சாப்பிடும் சைவ உணவு, எதில் பொறிக்கப்பட்டிருக்கிறது, வெஜி சூப்பின் ஸ்டாக் என்ன, உங்கள் வெஜி செஷ்வானில் ஃபிஷ் சாஸ் உண்டா என ரிஷிமூலம் தேட ஆரம்பித்தால் நீங்கள் எதிர்ப்பார்க்கும் பதில்கள் வரா. பல இடங்களில் "Don't ask Don't tell" தான். ஆனால், மேற்கத்திய உலகம் வெஜிடேரியனிசத்தை மெல்ல அணைத்துக்கொண்டே வருவதையும் பார்க்க முடிகிறது. 2002இல் நான் அமெரிக்கா வந்தபோது இருந்த நிலை இன்றில்லை. ஒரு 8 பக்க மெனுவில் 4 ஐட்டங்களாவது பச்சையில் “Vegan" என குறிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

எது எப்படியோ, வெஜிடேரியனிசம் என்பது என் மகளின் தேர்வாய் இருக்க வேண்டும். எங்களின் அவளுக்கான தேர்வாய் அல்ல. அவள் வளர்ந்த பின் வெஜிடேரியனாய் மாறினால் சந்தோஷமே. மாறாவிட்டாலும் பிரச்சனையில்லை.

எனக்கு அவளின் இயல்பு வாழ்க்கை முக்கியம். அவள் தெரிவுகள் முக்கியம். உணவுப்பழக்கங்கள் அவளை எந்த இடத்திலும் கட்டுப்படுத்தக்கூடாது.

அதற்கு சிறிது பட்டர்சிக்கனை பொறுத்து கொள்ளலாம்.


+++++++++++++

Friday, April 24, 2015

கற்றதனால் ஆய பயன்





”பாலகுமாரன்”

தெளிவான, கனகச்சிதமான குரல்.

அவர் தொலைபேசியை எடுக்கவில்லை, வாய்ஸ்மெயிலுக்கான ஒலிப்பதிவேற்ற பெயர் ஒலிக்கிறது என்றே நினைத்தேன். மெசேஜ் விடலாமா, கேட்பாரா, யாரென புரியுமா..

“பாலகுமாரன்..சொல்லுங்க யாரு?”

அவர் தான் பேசுகிறார் எனத்தெரிந்து என் பதற்றம் இன்னமும் அதிகமானது. இரு நண்பர்கள் மூலம் அவரை சந்திக்கலாமா என அனுகியிருந்ததால் சட்டென யாரென புரிந்து கொண்டார்.

“நாளைக்கு ஒரு 11.30 மணி வாக்குல வாங்களேன்..ரைட்டு”

சரி.

என்ன ஒரு இருபது வருடங்களாக அவரை வாசிக்கிறேனா? கல்லூரி சமயத்தில் சென்னை நகர்ந்து, வேலை சேர்ந்து, பின் திரைகடலோடி 3 வருடங்களுக்கொரு முறை சென்னைக்கு அவர் வீட்டிற்கு அடுத்த தெருவுக்கே வந்தாலும், அவரை ஒருபொழுதும் சந்திக்க முயன்றதில்லை.

பல காரணங்கள். தயக்கங்கள். எழுத்தாளனை வாசகன் சந்தித்தேயாக வேண்டும் என்பதில்லை. படைப்பின் மூலமாகவே உரையாடல் நிகழ்ந்துவிடுகிறது என்ற கூற்று. அது சரியே. அடுத்து பலர் என்னிடம் சொன்னது “நீ வைத்திருக்கும் பிம்பம் நிச்சயம் உடையும்” அதுவும் சரியாக இருக்கலாம். “எதையும் எதிர்ப்பார்க்காதே, எதற்கும் தயாராகவே இரு”.

எல்லாவற்றுக்கும் தயாராகவே போனேன். காலையில் க்ரோம்பேட்டை போய்விட்டு நேராய் அவர் வீட்டுக்கு போவதாய் திட்டம். 7.30க்கு வரவேண்டிய சாரதி எட்டரைக்கு டாண் என ஆஜர். போன இடத்திலும் தாமதமாக, சனிக்கிழமையன்றும் டிராஃபிக் நெட்டித்தள்ள, பாலாஜி ஸ்ரீனிவாசன் அவர்களிடமிருந்து அழைப்பு. அவர் கூட போவதாய் தான் திட்டம்.

“லேட்டாறதான்னா அவரை கூப்பிட்டு சொல்லிடுங்க. பெட்டர்”. Made sense.

கூப்பிட்டு சொன்னேன். புரிந்துகொண்டு, பரவாயில்லையெனவும் நிம்மதி. நடுவில் பழம் வாங்க நிறுத்தல், பாலாஜியின் சிறுகுழந்தைக்கு போக்குக்காட்டி அவரையும் அழைத்துக்கொண்டு பாலகுமாரன் வீட்டின் முன் நிற்கும்போது நல்ல தாமதம். தப்பு மகா தப்பு என இப்போது புரிகிறது.

பதட்டத்தோடு பாலாஜியை தொடர்ந்து படியேறுகிறேன். வீட்டு ஓனர்ஸ் பெயர்ப்பலகையில் பாலகுமாரன். வீட்டுக்குள் நுழைகிறேன். அது அதன் மனிதர்களோடு, அதன் வாசனையோடு, அதன் இயல்பில் இருக்கிறது. என்னை “யார் புதுசாய்” என்பது போல் பார்க்கிறது.

எத்தனை கட்டுரைகளில் வந்த வீடு? எத்தனை படங்களில் பார்த்த வரவேற்பறை? ஒரு திரைப்படத்தையோ, வீடியோ கேமையோ பார்த்துக்கொண்டிருக்கையில், சடாரென நாமும் அக்காட்சிக்கு நடுவிலேயே நுழைந்துவிட்டது போல மனதில் தோன்றுகிறது. சுற்றும் முற்றும் ஆச்சர்யமாய் பார்க்கிறேன். பாலாஜி என் பதட்டத்தை தணிக்கும் வகையில் “உக்காரு உக்காரு” என கைக்காட்டுகிறார்.

பாலகுமாரன் அவர்கள் என் கண்ணில் படவில்லை.

“தூங்கறார்” என்கிறார் ஷாந்தாம்மா. ஒரு வினாடி திக். என்னுது கைக்கெட்டியது வாய்க்கெட்டாத ஜாதகம் என்பதால் வாய்ப்பு நழுவிவிடுமோ என பயம். ”ஆனா வந்தா எழுப்ப சொன்னார்” என உடனே என் பதட்டமறிந்து சொல்கிறார். அவரின் செல்ல தாரிணிப்பாப்பா என்னை ஏறிட்டு பார்த்துவிட்டு அவள் அன்னையோடு வெளியே கிளம்பினாள். ‘உன்னை தெரியும்டி செல்லம் எனக்கு’ என சொல்ல எத்தனித்து சொல்லவில்லை. சோபாவில் நாசூக்காய் அமர்கிறேன். என் எதிரே அவரின் பல புகைப்படங்களில் தெரிவது போன்ற அலமாரி அமைப்பு, பலதரப்பட்ட கேடயங்கள், புத்தகங்கள். நடுநாயகமாய் யோகி, பல கடவுளர், குடும்பத்தினர் புகைப்படங்கள். எனக்கு பின்னால் டைனிங் அறை. ஷாந்தாம்மா ஏதோ செய்கிறார். எதிரில் இரு படுக்கையறை இருப்பது போன்ற அமைப்பு.

திடீரென அந்த அறைகளில் ஒன்றிலிருந்து வருகிறார். அவரின் ப்ரத்யேக வெள்ளை வெளேரென்ற வேட்டி,சட்டை. புகைப்படத்தை விட நேரில் வெகு தேஜஸாய் கம்பீரமாய் இருக்கிறார். அவசரமாய் எழுகிறேன். வணக்கம் என்பது போல் பணிவுடன் ஏதோ செய்கிறேன். ஒரு மென்புன்னகையோடு அமரச்சொல்கிறார். பாலாஜி பக்கம் திரும்புகிறார்.

“ரொம்ப நாளாச்சுல்ல நாம பார்த்தே”

“கல்யாணத்தப்ப பார்த்தது”

“எப்படி நடந்துது, உனக்கென்ன பட்டது?”

“நான் எதிர்ப்பார்த்ததுக்கு நீங்க ரொம்பவே ஆக்டிவா இருந்தீங்க”

பாலாஜி சமர்த்தர். இது அவரின் சம்பாஷணைக்கான நேரமல்ல என உணர்ந்து என்னை அறிமுகம் செய்து வைக்கிறார். நானும் உரையாடலில் நுழைகிறேன். சூர்யா திருமணத்திற்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்.

“ஒன்னு சொல்லனும். பையன் கல்யாணத்துக்கு அப்புறம் பெரிய ரிலீஃப் தெரியுது உங்கக்கிட்ட. முகத்துல களைப்பு நீங்கி ரிலாக்ஸ்டா..”

என்ன உரிமையில் இதை முதலிலேயே சொன்னேன் என தெரியவில்லை. எனக்கு அவையஞ்சுதல் உண்டு. அதை அவையடக்கம் என்ற பெயரில் மறைத்துக்கொள்வேன். அதை நானே வலிந்து முறியடிக்க ஒரு உரையாடலின் ஆரம்பித்திலேயே ஐஸ்ப்ரேக்கிங் போல் எதையாவது சொல்லிவிடுவேன். இதொரு அலுவலக மீட்டிங் உத்தி.

இப்போது தான் பாலகுமாரன் மெல்ல என்னை அவதானிக்கிறார். ஆழமாய் பார்க்கிறார். வாழ்நாள் முழுதும் எத்தனையோ பேரையோ சந்தித்து, அது தந்த அனுபவத்தில் இவன் தேறுவானா என என்னை கணக்கிடுவது போல் எனக்கு தோன்றுகிறது.

“ஆமா அது உண்மை தான். பெரிய ரிலீஃப் தான் அது முடிஞ்சது”

பல பேட்டிகளில் கேட்ட, கண்ட அதே கனமான, எதையோ கடித்துக்கொண்டு பேசுவது போன்ற த்வனி.

பாலகுமாரன். என்னோடு. பேசி. கொண்டிருக்கிறார். நம்ப. முடியவில்லை.

ஷாந்தாம்மா பழரசம் கொண்டு வருகிறார். “என் வைஃப்” என அறிமுகப்படுத்தினார். மணமக்கள் எங்கு செட்டில் ஆகியிருக்கிறார்கள் என அபத்தமாய் கேட்டேன். “தோ எதுத்த ஃப்ளாட் தான்” என சிரித்தார்.

“என்னுதுல்லாம் படிச்சிருக்கீங்களா, என்னை யாருன்னு?” அடுத்த அபத்த கேள்வி.

“தெரியும் ’ரசனை’ ஸ்ரீராம், நிறைய பார்த்துருக்கேனே”

எனக்கு பயம் கொஞ்சம் விலகிவிட்டது. உரையாடல் நின்றுவிடக்கூடாதே என சற்றே தந்திரமும் எட்டிப்பார்த்தது. பாலகுமாரன் சொல்வது போல் இங்கு எல்லாமே தந்திரம். எழுத்து உட்பட.

அவரின் எழுத்தை படிக்க ஆரம்பித்த நண்பன் வீட்டு “தலையணை பூக்கள்” வாரமலர் பைண்டிங், தொடர்கதையாக தாயுமானவன், பயணிகள் கவனிக்கவும் வாசித்தது, பள்ளியிறுதி லீவில் பழைய புத்தக கடைகளில் தேடித்தேடி பல்சுவை நாவல் சேகரித்தது, கல்லூரி காலத்தில் லெண்டிங் லைப்ரரியில் பழியாய் கிடந்தது, எனக்கு மிகவும் பிடித்த ‘கடலோர குருவிகள்’..எல்லாம் இதே போல் வேகமாய் சொன்னேன்.

“புரியறது..அந்த வயசுல அப்படித்தான் தோணும்”

ஒரே வரியில் அத்தனை பாராட்டுக்களையும் ஏற்று, ‘அதற்கு நான் காரணமல்ல’ என்பதை போலியான அடக்கமின்றி, சரியான சொற்களால் மென்மையாய் மறுதலித்து முடித்துக்கொண்டார்.

பேச்சை என் பக்கம் திருப்பினார். ”டொராண்ட்டோ ஊர் எப்படி”, “ஒரு குழந்தையா” “அங்க லைஃப் எப்படி?” “நம்மாட்கள் நிறைய இருக்காங்களா?” ”இலங்கைத்தமிழர்கள் நிறையல்ல” பலதும் கேட்டறிந்தார். நிறைய சொன்னேன். இப்போது யோசித்தால் நிறைய உளறியிருக்கிறேன். என்னை பேசவிட்டு பார்த்தார்.

இந்த முக்கியமான கேள்வியையும் கேட்டுவிட்டு என் முகம் பார்த்தார்.

“இங்க திரும்பி வர்றதுக்கான ஏக்கம் இருக்கா உங்களுக்கு?”

என் பேச்சு சட்டென நின்றது. இதற்கான சரியான பதிலை சொல்லத்தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் எனை நானே கேட்கும் கேள்வியல்லவா இது. ”வந்திருவேன் சார். பொண்ணை காலேஜ்ல தள்ற வரைக்கும் அங்க இருந்துட்டு இங்க வந்துருவேன் சார்” என்றேன். மென்மையாக சிரித்தார்.

“ஏய்ய், 2 நாளா போராடி சிக்கை எடுத்துட்டேன் பாருங்க”

அவர் உதவியாளர் பாக்யலட்சுமி அங்கிருப்பதை அப்போது தான் கவனித்தேன். ஒரு chimeஇன் சிக்குகளை விடுவித்துக்கொண்டிருந்தவர். அவர் வேலை கெடுகிறதோ? முதலில் தூக்கத்தை கெடுத்தோம்.

“சரி நான் கெளம்பறேன் சார்”

சந்திப்பில் முடிவில் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நோக்கம் இருந்தது. என்னை அவரருகில் அமரச்செய்தார். புரிந்து பாலாஜி என் ஃபோனை வாங்கிக்கொண்டார். பாக்யலட்சுமியை திரும்பிப்பார்த்து என்னவோ சொன்னார். உள்ளேயிருந்து எனக்கு கொடுக்க புத்தகம் வந்தது.




”சார் உங்க கையெழுத்தும் வேணும் அதுல”

”எதுக்கு ஸ்ரீராம்” என எழுத ஆரம்பித்தார். சற்று நேரம் எடுத்துக்கொண்டது போல் தோன்றியது. முடித்துவிட்டு பார்த்தால் ஒன்றில் குதிரைப்படம். எனக்கு மிகவும் பிடித்த குதிரையை எப்படி வரைந்தார் என்ற வியப்பெனக்கு. தர்க்க அறிவு தாண்டிய விஷயமாய் உணர்ந்த தருணம் அது. இன்னொரு புத்தகத்தில் கையெழுத்திட்டு ஒரு மலையடிவார கோவில். அதற்கு அர்த்தம் கேட்க தோன்றவில்லை. வாழ்வில் சில விஷயங்களுக்கு உடனடி விளக்கம் கிடையாது. ஒருநாள் புரியக்கூடும்.





சந்தோஷமாய் என்னை அவரோடு புகைப்படம் எடுத்துக்கொள்ள செய்தார். என் குரு அவர் குருவின் புகைப்படத்துக்கு முன் நிற்கவைத்தும் புகைப்படம் எடுத்தார். நமஸ்கரித்தேன். அவர் கையை பிடிக்கத்தோன்றியது. கையை குறிப்பாய் நாடியை, உள்ளங்கையை பிடித்து மெல்ல அழுத்தினார். அத்தனை மிருதுவான பிடி. அதன் உட்கூறு என்ன தெரியாது. ஆனால் சற்றே நெகிழ்ந்திருந்த என்னை ’ரிலாக்ஸ்’ என ஆசுவாசப்படுத்தியது போல் இருந்தது.

பாலகுமாரனை நான் ஒரு உயரத்தில் வைத்து கும்பிட ஆசைப்படவில்லை. இதை எழுதும் தருணத்திலும் “’பாலகுமாரன் அவர்களை’ன்னு போடு, ’குரு’ என எழுது” என மனது கட்டளையிட்டாலும் பாலகுமாரன் என பெயர் விளிக்கிறேன். Because, he's a friend more than anything.

புதிய கல்லூரி, தெரியாத ஊர், +2வில் நினைத்த மார்க் வராததிலிருந்து அப்பாவோடு உரசல்கள், என்னை, என் தன்னம்பிக்கையை உருக்குலைத்துக் கொண்டிருந்த ஒரு நோய்ம்மை, படிச்சாலும் மார்க் வரலை எதுக்கு படிக்கனும் என குழம்பிய மனது, வயதுக்கே உரிய மனவிகாரங்கள், வீட்டின் சில தொடர்நெருக்கடிகள்,சாவுகள், நல்ல பேண்ட் சட்டை கிடையாது, நல்ல நட்பு கிடையாது என துன்ப வருடங்கள் அப்போது. அப்போது என் கைப்பிடித்து அழைத்துச்சென்றது பாலகுமாரன்.

பாலகுமாரனுக்கு எல்லாம் எழுத வரும். காதல், ஒரு பதின்ம வயது இளைஞனை மூழ்கடிக்கும் காமம், கம்யூனிசம், சமூகக்கோபம் என எல்லாம் எழுதவரும். அதோடு போயிருக்கலாம். கைப்பிடித்து இதான் வாழ்க்கை, உன்னோடு பேசு, செய்வது சரியா என நீயே கேட்டுணர், உழைத்தால் தான் எதுவும் சாத்தியம், கற்பனையில் மூழ்குவதில் பயனில்லை. ரௌத்திரம் பழகு, கோபத்தை வைராக்கியமாய் மாற்று என சொல்லவேண்டிய தேவையில்லை. சொல்லாவிட்டாலும் அவரை கொண்டாடியிருப்பார்கள். எழுத்து அப்படி. ஆனால் எதற்கோ சொன்னார்.

இன்று நம்மில் பலரும் நகர்ந்துவிட்டோம். சுஜாதா, பாலகுமாரனில் தேங்காமல் அடுத்து பலதும் படிக்கிறோம் என்கிறோம். விமர்சிக்கிறோம். ஆனால், நம்மில் பலரை வாசிப்பு சிலேட்டில் கைப்பிடித்து ’அ’ போட வைத்தவர். வாழ்வென்னும் பெருங்கடலில் ‘கடலோர குருவிகள்’ முட்டையாய் அடித்துச்செல்லப்பட்டு கொண்டிருக்கையில், சரக்கென்று ஒரு கைப்பிடித்து கரையேற்றியவர்.

இந்த நன்றி மட்டுமே நிரந்தரம். அவரிடம் கற்றதனால் ஆய பயன். நான் செய்தது எனக்கான, சுயநலமான நன்றி நவிலல். It's a thanksgiving.

”அவர் இல்லன்னா என்னவா ஆகியிருப்பேன்” தெரியாது.
ஆனால் இப்போதிருக்கும் வாழ்க்கையாய் மட்டும் அது இருந்திருக்காது என்பது மட்டும் தெரியும்.

வெளியே வந்ததும் பாலாஜி “திருப்தியா” என்றார்.

பரம.

++++++++++++


Saturday, April 18, 2015

பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை




ஊர் கிளம்பும் நாள் ஒரு கடைசிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் போல தான். அத்தனை ஓட்டம் இருக்கும்.

குறிப்பாய் ஸ்வீட்ஸ் வாங்குதல் கடைசிநாள் சம்பிரதாயம். அப்போது தான் முடிந்தவரை அதன் லைஃபை நீட்டிக்கலாம். இதயம் நல்லெண்ணெய் போல் பாரியாள் மறக்காமல் வாங்கிவரச் சொன்ன சில இனிப்புகளுக்காக ஸ்ரீமித்தாய், கிருஷ்ணா,அதென்ன ஏ ஸ்கொயர் + பீ ஸ்கொயர் இல்லை A2B என புகுந்து புறப்படல்.

”அது 850 சார் கிலோ”
“இது?”
“960”
“ஓ இது?”
“1100”
கடைசி பதில் நீ வாங்குவியா என்ற பார்வையோடு.

எனக்கு விலை ஒரு கிலோவுக்கு சொல்கிறானா, இல்ல கல்யாண ஆர்டருக்கு சொல்கிறானா என சம்சயம். ஒரு கிலோ ஸ்வீட் எப்போ 1000 ரூபா ஆச்சு? நூறுகிராம் மிக்சர் எப்போது விலை 120 ரூபா ஆச்சு?

எனக்கு இந்திய விலைவாசி சத்தியமாய் புரியவில்லை.

3 வருடங்களுக்கு ஒருமுறை வருகிறேன் தான். பணவீக்கம்,விலைவாசி ஏற்றம் எல்லாம் உண்டு தான். ஆனால் விலைவாசி என்னவோ எக்கச்சக்கத்துக்கு ஏறியது போல் தோன்றுகிறது. அதுவும் குறிப்பாய் சென்னை ஒரு தனி உலகமாய் இயங்குகிறது.

ஒரே ப்ராண்ட் சோப்போ, ஷாம்ப்பூவோ, டிவியோ, காரோ, செல்ஃபோனோ, கோக்ககோலாவோ வெளிநாட்டை விட இந்தியாவில் விலை அதிகம். ஒரு டாலர் = 60 ரூபாய் என இருந்தாலும், ஒரு டாலர் அல்லது 60 ரூபாய்க்கு வாங்கக்கூடிய ஒரு பொருள் சமமாகவும், அல்லது இந்தியாவில் காஸ்ட்லியாக படுகிறது. அமெரிக்காவில் ஓரளவு வளர்ந்த ஒரு நகரத்தில் தோட்டம்,துரவுடன் தனிவீடு 250,000 டாலருக்கு வாங்கிவிடலாம். இங்கு 3BHK 1.5 க்ரோர் என்கிறார்கள்.

குறிப்பாய் சர்வீசஸ் துறை தான் இன்னமும் ஆச்சர்யம். அப்பா சென்னைக்கு ரயில் டிக்கட்டுக்காக முட்டி மோதிக்கொண்டிருந்தார். ரயில் டிக்கட் வாங்குவதை ஸ்ட்ராடஜி போட்டு 3 மாதங்களுக்கு முன்பே ஒரு குழுவாக என் அப்பா,பெரியப்பாக்கள் செய்கிறார்கள். ஏம்ப்பா, ஆம்னி பஸ்ல போகமுடியாதா? ஒருத்தருக்கு ஆயிரம் ரூபா கேப்பாம்ப்பா, அதும் வீக்கெண்டுன்னா இன்னும் மேல. ரயில் தான் சௌரியம்+சீப் என்கிறார். சென்னை - திருச்சி வெறும் டோல் மட்டும் 450 ரூபாய். நான் அப்போது 45 ரூபாய்க்கு சென்னையிலிருந்து போவேன். வாஷிங்டன் ஒபாமா வீட்டருகில் உள்ள மாரியாட்டில் 50$க்கு ஒரு ரூம் எடுக்கமுடியும். சென்னையில் பாடாவதி ஹோட்டலிலும் 3000 ரூபாய்.

வந்து இறங்கிய அன்று வெறுமன 2 இட்லி வடை,காப்பி சாப்பிட்டேன். 100 ரூபாய் ஒரு சாதாரணமான ஹைவே ஹோட்டலில். தங்கை மருமகன் நெய்ரோஸ்ட்டை மீதம் வைத்தால் அப்பாவுக்கு கோபம் வருகிறது. 200 ரூபாப்பா என அங்கலாய்க்கிறார். இதுவே ஒரு நல்ல பஃபே என்றால் ஈச் 1500 + வாட் + சர்வீஸ் டாக்ஸ் என்கிறார்கள். என் ஊரில் 8 டாலருக்கு 40 ஐட்டத்தோடு சாப்பாடு போடுவான். ஒரு டெம்போ ட்ராவலர் வைத்துக்கொண்டு 100-150 கிலோமீட்டர் போய்விட்டு வந்தால் 6000 காலி. காருக்கு டிரைவர் மட்டும் போட்டாலே ஒரு நாளுக்கு கிட்டத்தட்ட 2000 ரூபாய். சலூனில் தாடி ட்ரிம்மிங்க்கு போனால் ‘சார் மசாஜ், ஃபேசியல்? ஒன்லி 2000 சார்’. ஒன்றுமில்லை, மதுரை கோவில் அருகே கட்டண கழிப்பிடத்தில் யூரின் தான்பா என்றால், நீ ஃபாரினுக்கு வேண்ணாலும் போ, 10 ரூபா என்கிறார்கள். ஆத்திரத்தை மட்டும் அடக்கிக்கொண்டேன்.

ஃபாரின் என தெரிந்து கோவில் டொனேஷனுக்கு நீட்டுபவர்களுக்கு குறைந்தது ஆயிரம் போடாவிட்டால் மதிப்பில்லை. சிறப்பு தரிசனம் 150 சார். என்கிட்ட 1000 குடுங்கோ. நானே அழைச்சுட்டு போயி தரிசனம் செஞ்சுவைக்கிறேன். குட்டிப்பசங்களுக்கு 500 ரூபாய் வெச்சுக்கொடுத்தால் எடுபடுவதில்லை. ஆயிரமாவது கொடுத்தால் தான் ‘1000 பக்ஸ்’ என பசங்களிடம் சிரிப்பு எட்டிப்பார்க்கிறது. இதில் சில இடங்களில் தெரியாமல் கம்மியாய் கொடுத்துவிட்டோம் என பிறகு தான் உறைக்கிறது. லைனாய் அத்தை,பெரியம்மாக்களுக்கு புடவை வாங்கிக்கொடுக்கலாம் என்றால் என்ன 1000 ரூபாய்க்கு பார்க்கிற என்கிறார்கள். கூடிய சீக்கிரம் 1000 ரூபாய் 100 ரூபாய் ரேஞ்சில் புழங்கப்படுமென தோன்றுகிறது.

முன்பெல்லாம் இந்தியாவில் பணம் சேர்க்க, சொத்துவாங்க ஃபாரின் போகவேண்டியுள்ளது. இப்போது இந்தியாவில் செலவழிக்கவே ஃபாரின் போகவேண்டுமென நினைக்கிறேன்.

ஆனால் பொதுவாய் அங்கிருப்பவர்கள் இந்த விலைவாசியை கண்டுகொள்ளாது சுபிட்சமாய்த்தான் இருக்கிறார்கள். 3 டாஞ்சூர் ஆர்ட் 1L ஆச்சு என தன் வீட்டு ஹாலை காட்டுகிறார்கள். கிச்சன்லாம் Ikea இம்போர்ட்டட். 10 லாக்ஸ்ஆச்சு என்கிறான் கசின். என் பையன் ஸ்கூல் ஆட்டோவுக்கு மந்த்லி 9000 ஆகிறது என்கிறார்கள். இங்க டொனேஷன் கம்மி தான் என 75000 கட்டுகிறார்கள்.

கிளம்புமுன் ஒன்றுவிட்ட சகோதரன் ‘OMRல ஹீரநந்தானி 70L தான். நான் ஒன்னு போட்டுருக்கேன். நீயும் இன்வெஸ்ட் பண்றியா’ என்றான். என் வெஸ்ட்டை கழட்டி கோவில் வாசல்ல தான் உட்காரனும் என நினைத்துக்கொண்டேன்.

2002-ல் டெலிவரி மேனேஜர் அமெரிக்கா போறியா என்றபோது பல்லிளித்திருக்கப்படாது.

+++++++++++++