Friday, October 25, 2013

உயிர்நீப்பர் மானம் வரின்

எண்பதுகளின் கடைசி. நான் எடடாங்கிளாஸ் என நினைவு. பேண்ட்டுக்கும் டிராயருக்கும் இடையில் அல்லாடிய பருவம். நாளமில்லா/உள்ள சுரப்பிகள் ஓவர்டைம் பார்க்க ஆரம்பித்திருந்த, கொஞ்சம் உயர ஆரம்பிருத்திருந்த நேரம். அக்கால நியூஸ் ரீலில் வரும் “பீகாரில் பஞ்சம்” போல் திடீரென எனக்கு ஒரு டிராயர் பஞ்சம் வந்தது. அதை நிக்கர் என தான் சொல்வது வழக்கம். எண்ணி ரெண்டோ,மூனோ தான் போடுமளவுக்கு சைஸ்,கிழிசல்கள் இல்லாமல் தேறியது.

ரொம்பவும் ஏழ்மையான குடும்பம் இல்லைதான். 3 பிள்ளைகள், பள்ளிச்செலவுகள், தாத்தா பாட்டி மருத்துவச்செலவுகள், வேறு ஊரில் வேலை,அங்கு தங்கல் செலவுகள் என அப்பா சிரமதிசையில் இருந்திருப்பார் என இப்போது புரிகிறது. அப்போதெல்லாம் தீபாவளிக்கு தான் கடைக்கென்று போய் துணி எடுத்ததாய் நினைவு. அப்படி எடுக்கையிலும் அந்த வருடம் சட்டை பிட் எக்ஸ்ட்ராவாய் எடுத்தவன், ட்ராயர் ஒன்றோடு நிறுத்திக்கொண்டதன் பேரிடர்ப்பிழை பட்டென உறைத்தது. ஆகமொத்தம், எனக்கு டிராயர் பஞ்சம்.

எப்பவும் இல்லாது, அந்த கோடைலீவுக்கு அப்பா வசதியான பாண்டிச்சேரி அத்தை வீட்டுக்கு அனுப்புகிறார். உள்ளதில் எங்கள் குடும்பம் தான் கொஞ்சம் ஏப்பைசாப்பை, கிட்டத்தட்ட விக்ரமன் பட சூழல் என வைங்களேன். அத்தைப்பெண்ணுக்கு முன் 2 டவுசரை மாத்திப் போடுவதான்னு என இருத்தலியல் பிரச்சனை. அப்பாவிடம் புதுசு கேட்கவும் பயம். பயம் என்பதைவிட உடையெல்லாம் கேட்கும் வழக்கம் என்றைக்கும் இருந்ததில்லை. வெற்றிவிழா போக அனத்தி அடிக்கு பயந்து பாத்ரூமில் போய் ஒளிந்தது போல் ஆகிவிடக்கூடும். வாங்கித்தந்தால் அணிவது. அப்பாவுடையதோ, பெரியப்பா பையனதோ ஞாபகமில்லை, பழைய உடைகள் கொண்ட பெட்டி ஒன்று அகப்பட்டது. அதில் பெல்பாட்டம் வகையறாக்களை தவிர்த்து தேடியதில் பெல்பாட்டமுக்கும், பேகிக்கும் இடைப்பட்ட டைட்ஃபிட் பேண்ட் ஒன்று,ரெண்டு தேறியது. ஆனால் சைஸ் வேறு.  ”பேண்ட்டை பாதியா வெட்டிக்கிட்டா அது ட்ராயர் தானே” என ஒரு ஐன்ஸ்டைன் தியரி ஸ்ட்ரைக் ஆனது. உடனே என் அம்மாவை பிடுங்கி வீட்ல இருந்த தையல் மிசினிலேயே வெட்டி (எங்கம்மா என்ன ஜேசீஸ் டைலரா, பக்காவா கலர் சாக்பீஸ்ல கோடு கிழிச்சு,வெட்டி தைக்க). சுமாராக மடித்து தையல் போட்டு (வெள்ளை பேண்டுக்கு கருப்பு நூல் வேறு) டிராயர் போல் தேறியது.

இதில் தொழில் ரகசியம் என்னவென்றால், ஆல்டர் செய்தபிறகுதான் புரிந்தது, பேண்ட்டை வெட்டினால் அது ட்ராயர் ஆவதில்லை. ஒருமாதிரி தில்லானா மோகனாம்பாளில் மனோரமா போட்டுக்கொண்டு வரும் ”தில்லான் டோம்பரி டப்பாங்குத்து” ட்ராயர் போல் தொடை டைட்டாக, பின்பக்கம் மட்டும் பெரியதாய்..சரி விடுங்கள், உங்களுக்கு புரியும்.




இப்படியாக தேற்றிய டிராயர்களை ஒரு ரெக்சின் பேகில் அடைத்து பாண்டிக்கு டே எக்ஸ்பிரஸ் பிடித்தாகி விட்டது. போன சில தினங்களில் என் பேண்ட்டை சுருக்கின டிராயரை அத்தைப்பெண் கண்டுபிடிக்கவில்லை என்பதுபோலவே நினைத்துக்கொண்டேன். திடீரென ஒரு நாள் பீச்சுக்கு போகலாம் என கூட்டிக்கொண்டு போனார்கள். இருந்த ஒரு சபாரி செட்டை போட்டுக்கொண்டு போனேன் (அதில் தான் பேண்ட் உண்டு, என் சிறந்த உடை அப்போது). போன இடத்தில் செம ஆட்டம். இருட்டும்வரை ஓடிப்பிடித்து மண்ணில் விளையாடியதாய் நினைவு. மிகவும் இருட்டிவிட, மாமா ஒரு ஆட்டோவை நிறுத்த, நீ டிரைவரோடு உட்காரு என சொல்லப்பட, சைடில் ஒருக்களித்து உட்கார குனிகையில், ஆட்டோ ஹெட்லைட்டில் பேண்ட் ஜிப்புக்கு கீழிருந்து கால் வரை பாலம் பாலமாய் கிழிந்திருப்பது தெரிந்தது. துணியா, தையல் விட்டதா என்ன எழவோ தெரியல்லை.

இப்பவும் அக்கணம் நினைவிருக்கிறது. குப்பென வியர்த்தது. என்ன செய்யவென்றே தெரியாத தருணம். உடை கிழிந்ததை விட, உடை கிழிந்தது தெரியப்போகிறதே என பதறினேன். ஆட்டோவில் ஏறும் களேபரத்தில் யாரும் கவனிக்காத நினைவு. சோதனையாக அதை அப்போது கண்டுகொண்ட ஒரே ஆள் என் அத்தை மகள். நிறுத்தி நிதானமாய் என்னை சிலநொடிகள் பார்த்தாள். ஒன்றும் சொல்லவில்லை, என்னிடமோ, யாரிடமோ. உடல் முழுவதுமாய் கூசினேன். ஆட்டோ பயணம் அரைமணிக்கூர் என நினைக்கிறேன். ஒரு யுகம்போல் சென்றது. காலை அகட்டினால் வேட்டி விலகியது போல் கால் தெரிந்தது. கால்களில் முடி மெல்ல முளைக்க ஆரம்பித்த வயது. காலையும், மனதையும் குறுக்கி வீடு வந்து சேர்ந்தேன். வீடு திறந்த வேகத்தில் உள்ளே ஓடினேன். அம்மா “என்னடா இப்ப வாங்கினதை இப்படி கிழிச்சு வெச்சுருக்க” என பிறகு கேட்டாள்.

வாழ்க்கையில் இந்த மானக்கேடு என்ற விஷயம் மட்டும், எதற்கு எப்போது, யாரால், எதால் வருமென கணிக்கமுடிவதில்லை. பின்னால் யோசிக்கையில் அவை பெரிய அவமானமாக இல்லாது கூட இருக்கலாம். ஆனால், அந்த அந்த நிமிடம் தரும் வலி வாழ்வுக்கானது. ஒரு தழும்பை போல் மனதில் அது தங்கியே விடுகிறது.

அது இன்று 20 வருடங்கள் கடந்து என்னை எழுதவும் வைத்திருக்கிறது.

உணவு,உடை,உறையுள் என்பதில் பசியை முகம் காண்பிக்காது மறைத்துவிடலாம். நம் வீட்டை பலருக்கும் காட்ட வேண்டியதில்லை. ஆனால் உடை வெட்டவெளிச்சம். அது கண்ணுக்கு தெரியாத தராசாய் நம்மை மனிதர்கள் எடைபோட ஒரு பக்கம் இருந்துகொண்டே தான் இருக்கிறது. உங்களை எடைபோட உங்கள் சட்டையின் ஒரு சேஃப்டி பின் போதும். சராசரி மனிதர்களால் மயிர்நீப்பின் வாழா கவரிமானாய் உயிரையெல்லாம் விடமுடிவதில்லை. ஆனால் கண்ணுக்கு தெரியாது உதிரும் ரோமமாய் உயிரும் இச்சிறு அவமானங்களால் கொஞ்சம் உதிர்ந்துதான் போகிறது இல்லையா?

துணி இப்போதும் வியப்பு தான். என் முதல் சம்பளத்தில் வாங்கிய சட்டை இன்னும் என்னிடம். தூக்கிப்போட மனம் வருவதில்லை. பெரியப்பா அவர் அணிந்து, ரிடையராகி காலேஜுக்கென எனக் கொடுத்த சட்டை இன்றும் பத்திரமாய். அதன் பாக்கெட்டில் உள்ள ஆயிரமாயிரம் நினைவுகள் எனக்கு பொக்கிஷம். இப்போதும் காசை விசிறி வாங்கமுடிவதில்லை. விலைச்சீட்டை திருப்பிப்பார்க்கிறேன். தள்ளுபடி தேடுகிறேன். கடையில் நுழைந்தால் க்ளியரன்ஸ் இடத்திற்கு முதலில் போகிறேன். தொட்டில் பழக்கம் போல் எனக்கு டிராயர் பழக்கம் போலும்.

இப்போது என்னிடம் பெட்டி முழுக்க புதுத்துணி. என்னவோ ஒரு பழிவாங்கல் போல் வாங்கி வைத்திருக்கிறேன்.

புதுத்துணி உடுத்த, ஒரு நல்ல டிராயர் உடுத்த பேராசைப்பட்ட அந்த சிறுவனை தான் இழந்திருக்கிறேன்.

நிற்க, இன்றளவும் என் அத்தைப்பெண்ணிடம் இயல்பாய் பேசமுடிவதில்லை.