Monday, September 24, 2012

மூக்கால பாடும் ராஜா சார்..


இண்டு இடுக்கில்லாமல் நிறைந்திருக்கும் அரங்கம். ஆரம்ப முஸ்தீபுகள் முடிகிறது. வெள்ளுடை தரித்த உருவம் மெல்ல நடந்து மேடை நடுவில் இருக்கும் ஹார்மோனியம் முன்பு உட்காருகிறது. முன்னே ஒரு மைக். ஒரு வார்த்தை பேசவில்லை. வணக்கமில்லை. ஹாலில் “சிவசக்த்யா யுக்தோ யதிபவதி” என சன்னமான குரல் கேட்கத் துவங்குகிறது. காத்திருந்தாற்போல் ஆர்ப்பரிக்கிறது அரங்கம்.

இதை ராஜாவின் எந்த கச்சேரி/விழாவுக்கும் நீங்கள் தொடர்புப்படுத்திக் கொள்ளலாம்.

6 மணிநேர டெலிகாஸ்ட்டை “தென்றல் வந்து” வருது வருது வந்துடுச்சு என நம்மை ஏங்கவைத்தே சம்பாதிக்கின்றன சேனல்கள்.  தோனியின் “தாவித்தாவி” கேட்டால் +2வில் மார்க் குறைந்ததெல்லாம் ஞாபகம் வந்து கண்ணீர் முட்டுகிறது. NEPV ’வானம் மெல்ல’வில் ராஜா குரல் கேட்கும்போது தான் ஆல்பம் முழுமை பெற்று “என்ன குரலுய்யா” என சிலாகிக்க முடிகிறது.

”என்னய்யா குரல் இது” எனவும் சொல்லப்பட்ட காலம் ஒன்றுண்டு என அறிவீர்களா?

அப்பாவின் சிங்கப்பூர் நண்பர் கொடுத்த சோனி 90 A,B ரெண்டு சைடும் ராஜா பாடின பாட்டாய் பதிவு செய்து, அதற்கு நான் 90 நிமிடம் அப்பாவிடம் பாட்டு வாங்கினேன் என அறிவீர்களா?

 (அதில் நான் நினைவுச்சின்னத்தில் ராஜா பாடிய “சிங்காரச்சீமையிலே” கேட்டிருக்க, கடைக்காரன் கரெக்டாய் தப்பாய் சுசிலா வெர்ஷன் பதிவு செய்த கொடுமை வேறு)

எண்பதுகளின் பின்னிறுதிகளில் ராஜா குரலுக்கான பொதுப்புத்தி கமெண்ட் ’மூக்கால பாடுறாருய்யா..இதை எஸ்பிபி பாடிருந்தா..” என அறிவீர்களா?

இத்தனைக்கும் பாட்டை ராஜா கூட பாடியிருக்கமாட்டார்.  அமரன், இல்லை இன்னொரு சகோதரர் பாஸ்கர் கூட பாடியிருக்கலாம்.

ஆனாலும், அது ராஜா வாய்ஸ் தான். மூக்கால தான்.

இப்படி ஒரு கருத்தாக்கம் இருந்ததா, எந்தளவுக்கு அக்காலத்தில் இருந்தது என்பது இக்கட்டுரையின் கருப்பொருள் அல்ல. இசையமைப்பாளர்கள் பாடினால் அது உடனடியாக கொண்டாடப்படுவதில்லை, சிலசமயம் சமகாலத்தில் ரசிக்கக்கூடப் படுவதில்லை என்ற ஆதங்கமே இப்பதிவு.

பாடுவதற்கு என்ன வேண்டும்? குரல்வளமா? ஆமெனில், நுஸ்ரத் ஃபதே அலிகான் உருவாகியிருக்க முடியாது. முறையான பயிற்சியா? ஆமெனில், SPB முதல் வேல்முருகன் வரை உருவாகியிருக்க முடியாது. பாடுவதில் உயிர் இருக்கனும். ஒரு கம்போசிஷனை தன் குழந்தையை போல் எண்ணுவதாலோ என்னவோ,  இசையமைப்பாளர்கள் பாடுகையில் தங்கள் குரல் ஒத்துழைப்பையும் மீறி ஒரு இனம்புரியா ஜீவனை பாட்டில் செலுத்துகிறார்கள் என்பது என் துணிபு.

நான் காலக்கிரமமாக எல்லாம் போகவில்லை. ஜி.ராமநாதனின் ‘எஜமான் பெற்ற செல்வமே’யில்  ஆரம்பித்தால் விண்டோவை மூடிவிட்டு போய்விடுவீர்கள். எம்மெஸ்வி, ராஜா, ரஹ்மான் போன்ற Established entities பக்கமும் போகவேண்டாம். ஜிராசொக்கபிரபாமயில்கள் நடமாடும் வனத்தில் வான்கோழியாகவோ,ஈமூவாகவோ விருப்பமில்லை.

மற்றவர்களிடம் போவோம். The God is in the details. Or with the minnows.


அக்காலத்தில் ராஜாவுக்கு டஃப் கொடுத்த (அடிக்க வராதீர்கள், டஃப் கொடுக்க ஏவிஎம் போன்றோரால் வளர்க்கப்பட்ட ) சந்திரபோசின் மொத்த கரியரையும் ‘மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு’க்குள் அடக்கிவிடுவேன். அவர்க்கும் சிலபல unique ஹிட்டுகள் உண்டு. அதில் அவர் பாடிய ’பூஞ்சிட்டு குருவிகளா’வும் ஒன்று. (டூர் போன இடத்தில் ஹேண்டிகேமில் எடுத்த கொடூர ரீமிக்சே யூட்யுப் வசம்) . டிடியின் கொடைக்கானல் ஓளிபரப்பு துவங்கிய வருடத்து தீபாவளியில் போஸ் சார் முகமெல்லாம் சிரிப்பாய் “பூஞ்சிட்டு குருவிகளா” பெர்ஃபார்ம் செய்தது இன்றும் நினைவில்.



சிலசமயம் குரல்களின் புதுமை ஒரு பாட்டுக்கு assetஆகவும் முடியும். அசடாகவும் முடியும். இங்கு சைடில் சற்று முடி இழந்த பாரா போல் இருக்கும் மரகதமணியை ஞாபகமிருக்கா? ராஜாவை முறைத்துக்கொண்ட பாலசந்தரை தன் சத்துக்கு முட்டுக்கொடுத்தவர். எப்போது கேட்டாலும், இப்போது கேட்டாலும் ‘கீரவாணி’ தெலுங்கில் ரொம்ப பாப்புலர் என்பார்கள். அவர் குரலில் இந்த வானமே எல்லை கம்பங்காடே எனக்கு மிகவும் இஷ்டம். இப்பாடலை அவர் ரொம்பவும் டைனமிக்ஸ் இல்லாது ஃப்ளாட்டாக தான் பாடியிருப்பார். ஆனால் ட்யூனின் அழகினால் உறுத்தாது.

ஆமா டைனமிக்ஸ்ங்கிறீங்களே..அதென்ன மெடிமிக்ஸ் என கேட்பவர்களுக்கு என் 2 நயா பைசா. புதிதாக கீபோர்ட் கற்றுக்கொண்ட ஒருத்தர் வெறும் ட்யூன்/நோட்சை மட்டும் அறிந்துகொண்டு 'நலந்தானா’ வாசிக்கிறார் என வைத்துக்கொள்வோம் :) ஒரு மாதிரி வெறும் நோட்சாக, டொட்டடொடடொய்ங் என மொக்கையாக கேட்குமே..எது குறைகிறது என நினைக்கிறோமோ, அந்த மசாலாவே டைனமிக்ஸ்..


அப்படியே S.A.ராஜ்குமாருக்கு வருவோம். USSR என இனிசியல்களை சேர்த்து ஏழாங்கிளாசில் நான்கு பேர் முடிந்த அழும்புகளை செய்துகொண்டிருந்தோம். கிளாசில் 3 கேர்ள்சில் ஒரே பேரழகியான ராதாவை கூட்டுச்சேர்த்து இன்றோடு ஐவராகி ’ஃப்ரேன்சீப்’ வளர்க்கலாம் என புரியவைத்த காவியம் புதுவசந்தம். அப்போது எங்கு கேட்பினும் ஜேசுதாஸ் வாய்சில் “பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா” தான். ஆனால், எனக்கு மட்டும் S.A.ராஜ்குமாரின் குரலில் “இது முதல் முதலா வரும் பாட்டு” பிடிக்கும். அவரின் முதல் படமான சின்னப்பூவே மெல்லபேசுவிலேயே ”யே புள்ள கருப்பாயி”யில் கலக்கலாய் பாடியிருப்பார்.

நெக்ஸ்ட் வித்யாசாகர். வித்யாசாகர்  எப்போதும் தன்னை undersell செய்துகொள்வதாக எனக்கு படும். கில்லி ஹிட் காலத்திலேயே கூட டிவியில் பேட்டியெல்லாம் ரொம்ப கொடுத்ததில்லை. தமிழ்ல இருப்பார், சான்ஸ் இல்லாவிடில் மல்லுவுட்டில் சத்தமின்றி பத்து படம் ம்யூசிக் போட்டிருப்பார்.
சரி, வித்யாசாகர் பாடுவார் என அறிவீர்களா? ராமன் தேடிய சீதை என்றொரு ஓடா சேரன் படம். இப்பாடலை கேளுங்கள்.  வித்யாசாகர் குரலில் இருக்கும் cry-ஐ உணர முடிகிறதா? என்ன பாட்டுடா சாமி எனத்தோணவைக்கும் பாட்டு.
(சற்றே) சற்று பாப்புலரான வேறொரு பாடலுக்கு வருவோம். குருவியில் ‘பலானது’ கேட்டுருக்கிறீர்களா? அத்னன் சாமியின் குரல் சாயலில் அது வித்யாசாகரே தான். ( அத்னன் வெறியர்கள் வாக்கிய தொடக்கத்தில் கிட்டத்தட்ட/கொஞ்சூண்டு போன்ற adjectives மனம்போல் சேர்த்துக்கவும்)  டெக்னோ மிக்சியில் குரலை போட்டு அரைத்திருந்தாலும், வித்யாசாகர் குரலில் அடிநாதமாக உள்ள peppyness-ஐ, ரகளையை குறிப்பாக சரணம் முடிவில் கவனியுங்கள்.

ரைட்டு, சிற்பி ஞாபகம் இருக்கா? நாட்டாமை ’கொட்டைப்பாக்கும்’ ஆசாமி. அதைவிடவும் பல நல்லப்பாட்டு போட்டிருக்கிறார். பாரதிராஜாவின் ‘ஈரநிலம்’ மூலமாவது இழந்த மார்க்கெட்டை பிடித்துவிடலாமென  அத்தனையையும்  கொட்டி“இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை” என இசையமைத்தார். அவுட் ஆஃப் ஃபார்ம் பாரதிராஜாவும், ஃபார்முக்கே வராத மனோஜும் படத்தை ஊத்தி மூட, பாவம் அப்படத்தின் பல நல்ல பாடல்கள் வெளியே தெரியவில்லை.
கரிசக்காட்டுக்குயிலே பாட்டில் அவர் பாடுவதை கவனியுங்கள். கூடப்பாடும் சுஜாதா என்ற ராட்சசி அளவுக்கு குரலோ, குழைவோ இல்லை தான். ஆனால் அவரது குரலின் rustiness எந்தளவுக்கு இப்பாட்டுக்கு ஜஸ்டிஸ் செய்கிறது என பாருங்கள்! எனக்கு தெரிந்து சிற்பியின் கடைசி ஹிட் பாட்டு “ரகசியமானது காதல்” (படம்: கோடம்பாக்கம்) தான். அதில், அவர் பாடிய வர்ஷன் ஒன்றுண்டு. நெட்டில் ஹரீஷ் ராகவேந்திராவின் பத்திய வெர்ஷனே கிடைக்கிறது.

கடைசியாக, நம்ம ஃபேவரைட். தேவா பற்றி பேசாமல் இக்கட்டுரை முழுமையடையாது. கரியரின் பீக்கில் கிட்டத்தட்ட பாதி பாடல்களை அவரோ, அவர் தம்பியோ பாடி விடுவார்கள். மனோ/SPBக்கு சான்ஸ் குறைந்ததுக்கு இவர் பெரிய காரணம். இவரின் 2 பாடல்கள் என்னுடைய ப்ளேலிஸ்டில் எப்பவும். ஒன்று, கவலைப்படாதே சகோதரா (காதல்கோட்டை). இதில் “யம்மா யம்மா” போது குரல் சுத்தமாக கண்ட்ரோல் இன்றி, சிங்கப்பூர் ரேசில் ஷூமேக்கரும், கார்த்திகேயனும் மோதிக்கொண்டதையொத்த விதத்தில் இருந்தாலும், அவர் குரல் காண்பிக்கும் நட்பு, ஆறுதலை வைத்து இன்றைய ஆலாப்,நரேஷ்களுக்கு கிளாஸ் எடுக்கலாம். பாடலில் emote செய்வதை பற்றி பேசுகையில், அவரது “மீசக்கார நண்பா”வை மறக்கமுடியுமா? ரொம்பவுமே unusual ட்யூன் மற்றும் வரிகள். இதை ஓகே செய்த கே.எஸ்.ரவிக்குமாருக்கும் ஷொட்டு. குறிப்பாக “அதைவிட பாசம் அதிகம்டா” பாடுகையில் தேவாவின் குரலை கவனியுங்கள். நான் விட்டால் அழுதிருப்பேன்.
இன்னொன்று, ஒரு மெலடி. No points for guessing. ’கோகுலத்து கண்ணா கன்ணா’வே  தான். SPBயும், சித்ராவும் பாந்தமான டீச்சர்களாக முதல் 2 பீரியட்களை முடித்துவிட்டு, மூன்றாவது பீரியட் கேம்சாக இருந்து அதற்கு ஒரு ரகளையான புது மிஸ் வந்தால் எப்படியிருக்கும். அந்த எஃபக்டை கொடுக்கும் இப்பாடல் அவரின் ஆல்டைம் ஜெம் என்றால் மிகையாகாது.


நன்றாக பாடுவதென்பதென்ன? ஒரு பாட்டின் மூடை, பாடல் சொல்லவரும் உணர்வை சரியாக கடத்துவது தானே. உசிரைக்கொடுத்து பாடுறது தானே..அவ்வகையில் மேற்கூறிய அனைவரும் புரஃபஷனல் பாடகர்களை விட அசத்தியிருப்பதாகவே என் சிறிய மூளைக்கும்/பெரிய இதயத்துக்கும் படுகிறது.



(தற்காலத்திய கம்போசர்கள் பாடிய பாடல்களும் போட்டு உங்களை படுத்தலாம் ;),  உங்கள் ஆதரவு பொறுத்து)