Tuesday, December 24, 2013

பீலிபெய் சாகாடும்



எங்கெங்கோ நாள்முழுக்க கால்வலிக்க சுற்றிவிட்டு, எப்படியோ சரியாக அங்கு வந்துவிட்டிருந்தோம். இரவு ஒன்பது மணி இருக்கும். சுற்றிலும் ஜனத்திரள். உலகின் மிகமுக்கியமான, மிகப்பெரியதுமான ஒரு தீம்பார்க்கின் மைய இடம் அது. அங்கு ஒரு பெரிய கோட்டை வெள்ளையும்,பின்க்குமான நிற கிருஸ்மஸ் விளக்குகளால் தகதகத்தது. கோட்டைக்கு முன்னால் ஒரு மேடை. ஒம்பது மணிக்கு ஏதோ கிருஸ்மஸ் ஷோவாம்.

கிடைத்த இடத்தில் துண்டை விரித்து ஜனம் உட்கார்ந்திருந்த விதம் சபரிமலையை ஏனோ ஞாபகப்படுத்தியது. அடுத்தமுறை இந்தியா செல்கையில் கண்டிப்பாய் மலைக்கு போகவேண்டும். ஒரு எதிர்பாராத தருணத்தில் மேடையில் காட்சி ஆரம்பித்தது. மேடை நன்கு தெரியவேண்டுமென மக்கள் எழ ஆரம்பிக்க, கல் விழுந்த குளமாய் சடசடவென ஒவ்வொரு வரிசையாக எல்லோரும் எழுந்து நின்றுவிட்டனர்.

“அப்பா” மகள் சன்னமாய் கூப்பிட்டாள். இருட்டில் சுற்றிலும் உயரமாய் ஜனத்தலைகளை கண்ட மிரட்சி அவள் கண்ணில். அப்பனை போல் claustrophobicஆக இருக்கலாம்.

“என்னடா?”

“Would you mind holding me so that I can watch the show too?"

அப்பனிடம் கூட would you mind, thanks for doing this என அலுவல் தொனியில் பேசும் மேற்கத்திய சூழலில் வளர்பவள். டாடி இல்லாது அப்பா மட்டும் எப்போதும் தமிழில். அந்தமட்டுக்கு சந்தோஷம்.

“ஷ்யூர் டா" என தூக்கிக்கொண்டேன். குஷி கடந்த சிலமாதங்களில் ரொம்பவும் வளர்ந்துவிட்டாள். 60 பவுண்டு இருப்பாள் என நினைக்கிறேன். கொஞ்சம் பளுதூக்குவது போல் என்னை நிலைநிறுத்தி அவளை இறுக்கமாய் தூக்கி இருகைகளையும் அவள் விழுந்துவிடாது கட்டிக்கொள்கிறேன். அவள் என் கழுத்தை இறுக்குகிறாள்.

நான் அடியார்க்கு அடியன், ஐந்தரை அடியன். என் உயரம் பத்தவில்லை போல குழந்தைக்கு. பக்கத்தில் ஒரு ஆஜானுபாக அமெரிக்கன் தன் மகனை தோளில் தூக்கி வைத்திருக்கிறான். குஷி அதை திரும்பிப்பார்க்கிறாள்.

“Can you hold me like that on your shoulders?" கேள்வி வருமென தெரியும்.

“ஓகே டா" என அவளை முடிந்தளவுக்கு தம் கொடுத்து தூக்கி, அவள் முதலில் ஒரு காலை தோளில் வைத்து, பின் தடுமாறி இருகாலையும் மாலையாக என் தோளில் போட்டுக்கொள்கிறாள். இனியெல்லாம் சுகமே..இல்லை. பின்னங்கழுத்தில் கைவைத்தால் சற்றுப்புடைத்துக்கொண்டு ஒரு எலும்பு தென்படுமே. அது எனக்கு விண்ணென்று வலிக்கத்தொடங்குகிறது. எடை, தூக்கியவிதம் எங்கோ பிசகு. அந்த வலி கீழே முதுகுத்தண்டில் தரையில் கொட்டிய தண்ணீர் போல் பரவுகிறது. சற்று எக்கி குஷியை பார்க்க எத்தனிக்கிறேன். இறக்கிவிடவேண்டியது தான்.

“Jingle bells Jingle bells, Jingle all the way.."

அவ்வளவு தூரத்திலும் மேடையில் மிக்கியும், டொனால்டுமாய் வேடம் போட்டிருக்கும் மனிதர்களின் ஈடுபாடு,உற்சாகம் தெரிகிறது.  குஷியும் என் தோளில் உற்சாகமாய் பாடிக்கொண்டிருக்கிறாள். வேண்டாம்,இப்போது இறக்கிவிட்டால் ஏங்கிப்போய்விடுவாள். என்ன செய்தால் வலி குறையும் என மூளை தனிச்சையாக யோசிக்கிறது. தலையை, தோளை முடிந்தளவு சரிசெய்யப்பார்க்கிறேன். தலையை குனிந்தால் கொஞ்சம் வலி குறைந்தாற்போல் உள்ளது. குனிந்துகொள்கிறேன். ஒரு குதிரை சுற்றியிருப்பது பற்றி எந்த பிரக்ஞையும் இல்லாது கீழே குனிந்து ஒரு வித மோனநிலையில் இருப்பது போல் இருக்கிறேன். இனி நான் மேடையை பார்க்க முடியாது. பரவாயில்லை.

”Feliz Navidad.."

மேடையிலிருந்து ஒலிக்கிறது. என் கண்கள் கீழே இருட்டைப்பார்க்கிறது. கீழே தென்படும் ஒரு சிறிய வெளிச்சப்புள்ளியில் என் கண்கள், மனதை குவிக்கிறேன். மனது அப்புள்ளியிலும் வலியையே குவிக்கிறது. வலிசார்ந்தே என்னன்னவோ யோசிக்கிறது. ஒரு படத்தில் ரவீந்தர் சிலுக்கு சுமிதாவை தோளில் வைத்துக்கொண்டு ஆடுவாரே. என்ன பாட்டு அது? மேகம் கொட்டட்டும்..சே அதில்லை, வேற ஒன்று அதே போல.. எப்படி ஆடியிருப்பார், எத்தனை டேக்கு போயிருக்கும்? எவ்வளவு வலித்திருக்கும்? ஒரு எஸ்ரா வாக்கியம் உண்டே “வாழ்க்கைங்கிறது வலி. அதுல சந்தோஷம் அப்பப்போ வந்துட்டு போகும்” பாபா தானே அது? இந்த ஷோ எப்போது முடியும்?  மனம் எங்கெங்கோ அலைகிறது.

தலையை குனிந்தே வைத்திருப்பது அசூயையாக இருக்கிறது. ஆனால் வலி பழகிவிட்டது இப்போது. இப்போது வலி வலியாக தனியாக வலிக்கவில்லை. வலி என் இயல்பாய், என் உடம்பின் ஒரு அங்கமாய்,தன்னிருப்பை வெளிக்காட்டாத ஒரு அவயம் போல் ஆகிவிட்டது.

“We wish you a Merry Christmas and a happy new year"

பொதுவாய் இப்பாடல் வந்தால் முடியப்போகிறது என அர்த்தம். ஆனால், ஷோ முடியவேண்டும் என மனம் இப்போது நினைக்கவில்லை. மனம் வலியோடு வலிந்து ஒரு இருத்தலியல் சினேகம் செய்துகொண்டதாகவே பட்டது. ஷோ சிலவாணவேடிக்கைகளோடு முடிந்தது. குனிந்து குஷியை தோளிலிருந்து மெல்ல இறக்கினேன்.

“Thanks a lot ppa"

எப்போதும் செய்வது போல் அவள் தலையில் கலைப்பது போல் செய்து சிரித்தேன். ஒரு கட்டத்துக்கு மேல் பெண் குழந்தையை ரொம்ப கொஞ்ச முடிவதில்லை.

வலி பெரிதில்லை. என் வலியை குஷி உணர்ந்திருக்கவும் மாட்டாள். சிலர் தரும் வலியை அவர்கள் உணர்வதில்லை. போகட்டுமே, அவர்களுக்கு தெரியவேண்டுமா என்ன? பலநேரம் வலியை நாம் விரும்பியே சுமக்கிறோம். கொட்ட கொட்ட தேளை கரையில் விடும் முனிவனின் மிச்சம் நம் எல்லோரிடமும் உண்டு. வலி சுமப்பது இயல்பு. என் அடிப்படை இயல்புக்கான கர்வம். கெடுதல் வரும் என தெரிந்தும் குருவின் தூக்கத்துக்காக தேளின் குடைச்சலை தாங்கும் கர்ணனின் வைராக்கியம். சில வலிகளால் மன அச்சு முறிவதில்லை. மாறாய் இன்னும் உரம் பெறுகிறது.

சற்றுத்தள்ளி நின்றிருந்த மனைவி அருகே வந்தாள். குஷியை தோளில் வைத்திருப்பதை பார்த்திருப்பாள் போலும். வாஞ்சையாய் சிரித்தாள்.

இருவரையும் அணைத்துக்கொண்டு நடந்தேன்.

இப்போது வலிக்கவில்லை.

Friday, October 25, 2013

உயிர்நீப்பர் மானம் வரின்

எண்பதுகளின் கடைசி. நான் எடடாங்கிளாஸ் என நினைவு. பேண்ட்டுக்கும் டிராயருக்கும் இடையில் அல்லாடிய பருவம். நாளமில்லா/உள்ள சுரப்பிகள் ஓவர்டைம் பார்க்க ஆரம்பித்திருந்த, கொஞ்சம் உயர ஆரம்பிருத்திருந்த நேரம். அக்கால நியூஸ் ரீலில் வரும் “பீகாரில் பஞ்சம்” போல் திடீரென எனக்கு ஒரு டிராயர் பஞ்சம் வந்தது. அதை நிக்கர் என தான் சொல்வது வழக்கம். எண்ணி ரெண்டோ,மூனோ தான் போடுமளவுக்கு சைஸ்,கிழிசல்கள் இல்லாமல் தேறியது.

ரொம்பவும் ஏழ்மையான குடும்பம் இல்லைதான். 3 பிள்ளைகள், பள்ளிச்செலவுகள், தாத்தா பாட்டி மருத்துவச்செலவுகள், வேறு ஊரில் வேலை,அங்கு தங்கல் செலவுகள் என அப்பா சிரமதிசையில் இருந்திருப்பார் என இப்போது புரிகிறது. அப்போதெல்லாம் தீபாவளிக்கு தான் கடைக்கென்று போய் துணி எடுத்ததாய் நினைவு. அப்படி எடுக்கையிலும் அந்த வருடம் சட்டை பிட் எக்ஸ்ட்ராவாய் எடுத்தவன், ட்ராயர் ஒன்றோடு நிறுத்திக்கொண்டதன் பேரிடர்ப்பிழை பட்டென உறைத்தது. ஆகமொத்தம், எனக்கு டிராயர் பஞ்சம்.

எப்பவும் இல்லாது, அந்த கோடைலீவுக்கு அப்பா வசதியான பாண்டிச்சேரி அத்தை வீட்டுக்கு அனுப்புகிறார். உள்ளதில் எங்கள் குடும்பம் தான் கொஞ்சம் ஏப்பைசாப்பை, கிட்டத்தட்ட விக்ரமன் பட சூழல் என வைங்களேன். அத்தைப்பெண்ணுக்கு முன் 2 டவுசரை மாத்திப் போடுவதான்னு என இருத்தலியல் பிரச்சனை. அப்பாவிடம் புதுசு கேட்கவும் பயம். பயம் என்பதைவிட உடையெல்லாம் கேட்கும் வழக்கம் என்றைக்கும் இருந்ததில்லை. வெற்றிவிழா போக அனத்தி அடிக்கு பயந்து பாத்ரூமில் போய் ஒளிந்தது போல் ஆகிவிடக்கூடும். வாங்கித்தந்தால் அணிவது. அப்பாவுடையதோ, பெரியப்பா பையனதோ ஞாபகமில்லை, பழைய உடைகள் கொண்ட பெட்டி ஒன்று அகப்பட்டது. அதில் பெல்பாட்டம் வகையறாக்களை தவிர்த்து தேடியதில் பெல்பாட்டமுக்கும், பேகிக்கும் இடைப்பட்ட டைட்ஃபிட் பேண்ட் ஒன்று,ரெண்டு தேறியது. ஆனால் சைஸ் வேறு.  ”பேண்ட்டை பாதியா வெட்டிக்கிட்டா அது ட்ராயர் தானே” என ஒரு ஐன்ஸ்டைன் தியரி ஸ்ட்ரைக் ஆனது. உடனே என் அம்மாவை பிடுங்கி வீட்ல இருந்த தையல் மிசினிலேயே வெட்டி (எங்கம்மா என்ன ஜேசீஸ் டைலரா, பக்காவா கலர் சாக்பீஸ்ல கோடு கிழிச்சு,வெட்டி தைக்க). சுமாராக மடித்து தையல் போட்டு (வெள்ளை பேண்டுக்கு கருப்பு நூல் வேறு) டிராயர் போல் தேறியது.

இதில் தொழில் ரகசியம் என்னவென்றால், ஆல்டர் செய்தபிறகுதான் புரிந்தது, பேண்ட்டை வெட்டினால் அது ட்ராயர் ஆவதில்லை. ஒருமாதிரி தில்லானா மோகனாம்பாளில் மனோரமா போட்டுக்கொண்டு வரும் ”தில்லான் டோம்பரி டப்பாங்குத்து” ட்ராயர் போல் தொடை டைட்டாக, பின்பக்கம் மட்டும் பெரியதாய்..சரி விடுங்கள், உங்களுக்கு புரியும்.




இப்படியாக தேற்றிய டிராயர்களை ஒரு ரெக்சின் பேகில் அடைத்து பாண்டிக்கு டே எக்ஸ்பிரஸ் பிடித்தாகி விட்டது. போன சில தினங்களில் என் பேண்ட்டை சுருக்கின டிராயரை அத்தைப்பெண் கண்டுபிடிக்கவில்லை என்பதுபோலவே நினைத்துக்கொண்டேன். திடீரென ஒரு நாள் பீச்சுக்கு போகலாம் என கூட்டிக்கொண்டு போனார்கள். இருந்த ஒரு சபாரி செட்டை போட்டுக்கொண்டு போனேன் (அதில் தான் பேண்ட் உண்டு, என் சிறந்த உடை அப்போது). போன இடத்தில் செம ஆட்டம். இருட்டும்வரை ஓடிப்பிடித்து மண்ணில் விளையாடியதாய் நினைவு. மிகவும் இருட்டிவிட, மாமா ஒரு ஆட்டோவை நிறுத்த, நீ டிரைவரோடு உட்காரு என சொல்லப்பட, சைடில் ஒருக்களித்து உட்கார குனிகையில், ஆட்டோ ஹெட்லைட்டில் பேண்ட் ஜிப்புக்கு கீழிருந்து கால் வரை பாலம் பாலமாய் கிழிந்திருப்பது தெரிந்தது. துணியா, தையல் விட்டதா என்ன எழவோ தெரியல்லை.

இப்பவும் அக்கணம் நினைவிருக்கிறது. குப்பென வியர்த்தது. என்ன செய்யவென்றே தெரியாத தருணம். உடை கிழிந்ததை விட, உடை கிழிந்தது தெரியப்போகிறதே என பதறினேன். ஆட்டோவில் ஏறும் களேபரத்தில் யாரும் கவனிக்காத நினைவு. சோதனையாக அதை அப்போது கண்டுகொண்ட ஒரே ஆள் என் அத்தை மகள். நிறுத்தி நிதானமாய் என்னை சிலநொடிகள் பார்த்தாள். ஒன்றும் சொல்லவில்லை, என்னிடமோ, யாரிடமோ. உடல் முழுவதுமாய் கூசினேன். ஆட்டோ பயணம் அரைமணிக்கூர் என நினைக்கிறேன். ஒரு யுகம்போல் சென்றது. காலை அகட்டினால் வேட்டி விலகியது போல் கால் தெரிந்தது. கால்களில் முடி மெல்ல முளைக்க ஆரம்பித்த வயது. காலையும், மனதையும் குறுக்கி வீடு வந்து சேர்ந்தேன். வீடு திறந்த வேகத்தில் உள்ளே ஓடினேன். அம்மா “என்னடா இப்ப வாங்கினதை இப்படி கிழிச்சு வெச்சுருக்க” என பிறகு கேட்டாள்.

வாழ்க்கையில் இந்த மானக்கேடு என்ற விஷயம் மட்டும், எதற்கு எப்போது, யாரால், எதால் வருமென கணிக்கமுடிவதில்லை. பின்னால் யோசிக்கையில் அவை பெரிய அவமானமாக இல்லாது கூட இருக்கலாம். ஆனால், அந்த அந்த நிமிடம் தரும் வலி வாழ்வுக்கானது. ஒரு தழும்பை போல் மனதில் அது தங்கியே விடுகிறது.

அது இன்று 20 வருடங்கள் கடந்து என்னை எழுதவும் வைத்திருக்கிறது.

உணவு,உடை,உறையுள் என்பதில் பசியை முகம் காண்பிக்காது மறைத்துவிடலாம். நம் வீட்டை பலருக்கும் காட்ட வேண்டியதில்லை. ஆனால் உடை வெட்டவெளிச்சம். அது கண்ணுக்கு தெரியாத தராசாய் நம்மை மனிதர்கள் எடைபோட ஒரு பக்கம் இருந்துகொண்டே தான் இருக்கிறது. உங்களை எடைபோட உங்கள் சட்டையின் ஒரு சேஃப்டி பின் போதும். சராசரி மனிதர்களால் மயிர்நீப்பின் வாழா கவரிமானாய் உயிரையெல்லாம் விடமுடிவதில்லை. ஆனால் கண்ணுக்கு தெரியாது உதிரும் ரோமமாய் உயிரும் இச்சிறு அவமானங்களால் கொஞ்சம் உதிர்ந்துதான் போகிறது இல்லையா?

துணி இப்போதும் வியப்பு தான். என் முதல் சம்பளத்தில் வாங்கிய சட்டை இன்னும் என்னிடம். தூக்கிப்போட மனம் வருவதில்லை. பெரியப்பா அவர் அணிந்து, ரிடையராகி காலேஜுக்கென எனக் கொடுத்த சட்டை இன்றும் பத்திரமாய். அதன் பாக்கெட்டில் உள்ள ஆயிரமாயிரம் நினைவுகள் எனக்கு பொக்கிஷம். இப்போதும் காசை விசிறி வாங்கமுடிவதில்லை. விலைச்சீட்டை திருப்பிப்பார்க்கிறேன். தள்ளுபடி தேடுகிறேன். கடையில் நுழைந்தால் க்ளியரன்ஸ் இடத்திற்கு முதலில் போகிறேன். தொட்டில் பழக்கம் போல் எனக்கு டிராயர் பழக்கம் போலும்.

இப்போது என்னிடம் பெட்டி முழுக்க புதுத்துணி. என்னவோ ஒரு பழிவாங்கல் போல் வாங்கி வைத்திருக்கிறேன்.

புதுத்துணி உடுத்த, ஒரு நல்ல டிராயர் உடுத்த பேராசைப்பட்ட அந்த சிறுவனை தான் இழந்திருக்கிறேன்.

நிற்க, இன்றளவும் என் அத்தைப்பெண்ணிடம் இயல்பாய் பேசமுடிவதில்லை.

Tuesday, September 3, 2013

காக்கா வந்து சொல்ச்சாவும், ஒரு அப்பனும் பின்னே ஞானும்..


பொதுவாய் சினிமா விமர்சனம் எழுதுபவனில்லை. இது விமர்சனமுமில்லை.
நாளை நான் இல்லாது போகலாம். தங்கமீன்களை பார்த்த ஒரு அப்பன்காரன் இருந்தான், அத்திரைப்படம் அவனை என்ன செய்தது என உரக்கச் சொல்லவே இப்பதிவு.

கூடடைதலே வாழ்க்கை.எல்லா பயணங்களும் வீடு திரும்பலுக்காகவே என்பதென் நம்பிக்கை. எனக்கு இரவு வீடு திரும்பவேண்டும். மனைவி என் தோளில் பொதிந்து கோழிக்குஞ்சாய் உறங்கவேண்டும். அன்றைய கந்தாயத்துக்கு என் மகளின் உச்சந்தலையில் முத்தமிட்டுவிட வேண்டும்.

2008 கடைசி என நினைவு. அமெரிக்க இந்தியர்கள் வாழ்வில் பாலும்,தேனும் ஓடாத காலக்கட்டம் அது. ரிசஷன், ஐடி டவுன் என்றார்கள். எனக்கு ப்ராஜக்ட் போனது. ‘தம்பி,உனக்கு சம்பளம் வேணும்னா வேற ஊருக்கு போய்த்தான் ஆகனும்’ என மிரட்டியது கம்பெனி. அதுவும் ஒருமாத,இருமாத அலைச்சல் சிறு கன்சல்டிங் ப்ராஜக்டுகள். வேலை பார்க்கும் மனைவி, 2 வயது மகளை -30 டிகிரி போகும் ஊரில் தனியே விட்டு பொட்டியை தூக்கினேன். ஓரிரு வாரத்துக்கு ஒரு முறை ஊருக்கு வந்துவிடுவேன் தான். ஆனால், அதற்கும் இருப்புக்கொள்ளாது.

போன ஊரில் ஏதோ ஒரு இந்தியன் ரூம்மேட்டுடன் சிக்கனக்குடித்தனம். “வாங்க பாஸ்”த்தன நண்பரில்லாத நண்பர்களுடன் அளவளாவல்,தரையில் நியூஸ்பேப்பர் விரித்து சாப்பாடு என்றானது வாழ்க்கை. ஒரு வெள்ளிக்கிழமை என நினைக்கிறேன். அறையில் பெட்டியை எடுத்துக்கொண்டு ஃப்ளைட் பிடிக்கும் அவசரத்தில் நான். கையில் தனியே 2 ப்ளாஸ்டிக் பேகுகள்.

“என்ன பாஸ் அது தனியா ப்ளாஸ்டிக் பேக்ல?” ப்ராஜக்ட் இல்லாது வெறுமனே படுத்துக்கொண்டிருந்த ரூம்மேட் கேட்டான்.

“அது வந்து..சும்மா ஸ்னாக்ஸ் பாஸ். குழல் வடகம்..என் பொண்ணுக்கு பிடிக்கும், இங்க இண்டியன் ஸ்டோர்ல கிடைக்குது, எங்கூர்ல கிடைக்கறதில்ல”

நம்மூர் பெட்டிக்கடைகளில், மஞ்சள் நிறத்தில்,விரக்கடை அளவில் பொறித்து பாக்கெட்டில் விற்கப்படுவதை பார்த்திருப்பீர்கள்.

“அதையும் தான் பேக்ல வைங்களேன், தனியா எதுக்கு ப்ளாஸ்டிக் பேகை போய் ஏர்போர்ட்ல தூக்கிக்கிட்டு?”

“இல்ல, எம்பொண்ணு அஞ்சுவிரல்லயும் மோதிரம் போல போட்டுக்கிட்டு சாப்பிடுவா. பைல, பொட்டில வெச்சா நொறுங்கிருது, கைலயே எடுத்து போயிருவேன் பாஸ்”

அப்போது அந்த ரூம்மேட் பார்த்த பார்வையில் வியப்பா, குழப்பமா, பரிதாபமா என தெரியவில்லை.  பட்டென்று எதுவோ அறுந்தது உள்ளுக்குள். என்னவோ தொண்டையடைக்கும் துக்கம். கரைபுரண்ட கழிவிரக்கம். பாத்ரூமுக்குள் சன்னமாய் அழுதேன். வாராவாரம் அமெரிக்காவின் கிழக்கு,மேற்கு முனைகளுக்குமாய், இரண்டு ஃப்ளைட் பிடித்து, டைம்சோன்கள் மாறிமாறி உடலும், மனமும் களைப்புமாய், மகள் இரவு தூங்குவதற்குள் ஊர்ப்போய் சேரவேண்டும் என்பது புரியாது “இன்னும் லேட்டாய் தான் போயேன்” என்ற மேனேஜரை சமாளித்து, 2 வயது குழந்தையோடு தனியே மனைவி சிரமப்படுகிறாளே என்ற தவிப்புமாய் எல்லாம் சேர்ந்த அழுகை.

அந்த அழுகையை,தவிப்பை எனக்கு மீட்டெடுத்துக் கொடுத்திருக்கிறது தங்க மீன்கள்.

அடிப்படையில் தங்கமீன்கள் ஒரு தோற்றவனின் கதை. “செய்யவேண்டிய வயதில் ஒன்னையாவது ஒழுங்கா செஞ்சிருக்கியா” என கேட்கப்படுவனின் கதை. இங்கு எல்லா தேடல்களும்,வேட்டைகளும்,அப்பன்காரன்களின் பயணங்களும் தன் பெண்டு,பிள்ளைகளுக்கான சோத்துக்கும்,பாதுகாப்புக்கும் தான். நிதானமான வேலை,நேரத்தில் வீடுதிரும்பல் என்ற வாழ்க்கையை தான் பலரும் விரும்புகிறோம். அப்படியான comfort zone-இல் வாழும் ஒருவனை, வாழ்வு அதற்கு வெளியே நெட்டித்தள்ளுகிறது. அவனது உயிருக்குயிரான மகளை பிரியவைக்கிறது. அதை அவனும், மகளும் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதே தங்கமீன்கள்.

எங்கேயும் எப்போதும்-க்கு பிறகு இதை தமிழின் உருப்படியான படமாக பார்க்கிறேன். இப்படி ஒரு களத்தை எடுக்கத் துணிந்ததற்காக, எடுத்த முயற்சிக்காக, ஹேட்ஸ் ஆஃப் ராம், கௌதம் மேனன் & டீம் !

படத்தின் முதல் காட்சியிலிருந்தே நான் கரையத் தொடங்குகிறேன் (சொல்லப்போனால் இயல்பான புகைப்படங்கள் கொண்ட டைட்டிலில் இருந்தே). சிலகாட்சிகளில் என் கண்ணாடியை தாண்டி மீசை வரை கண்ணீர் வழிய, வழியும் கண்ணீரை துடைத்தால் மனைவி பார்த்துவிடுவாளோ என துடைக்காது விடுகிறேன். மனைவிக்கு முன் அழமுடியாது போகும் ஆம்பளை சோகங்கள்.  

ஒரு நல்ல படம் இன்னதென்று எனக்கு சொல்லத்தெரியவில்லை. என்னை முழுதும் உள்ளிழுத்தால், நான் என்னை மறந்தால், என்னை திரையோடு ஒரு கண்ணுக்கு தெரியாத கயிறோடு பிணைத்தால், என் மனதை கரைத்தால், என்னை கொஞ்சம் நல்லவனாக்கினால் அப்படம் பிடிக்கிறது. இப்படத்தின் கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம்,எடிட்டிங்,லைட்டிங்,ஷாட் கம்போசிஷன்,குறியீடுகள்,இசை, BGM, நடிப்பு எதுவுமே எனக்கு தனியாக புலப்படவில்லை. கல்யாணி, செல்லம்மா என்ற இருவருக்கான வாழ்வில் இரண்டரை மணிக்கூர் ஒரு அங்கமாகிப்போனேன். 

இப்படத்தின் கடைசியில் கல்யாணி சொல்வதாய் ஒரு வசனம் வரும். “எல்லாருமா சேர்ந்து அவகிட்ட இருந்த குழந்தையை கொன்னுட்டீங்களே”
பொதுவாய் அப்பன்காரர்கள் குழந்தைக்கு பெரிதாய் ஏதும் செய்வதில்லை. உணவு ஊட்டுவதில்லை. ஆய் அலம்புவதில்லை, தூங்கப்பண்ணுவதில்லை.ஹோம்வர்க் செய்ய உதவுவதில்லை. நானும் தான். 

ஆனால் ஒன்றை மட்டும் செய்கிறார்கள்.  தன் குழந்தைக்கு முதல் தோழனாக இருக்கிறார்கள், அது மகனாக இருப்பினும், மகளாக இருப்பினும்.  
தன் குழந்தையை குழந்தையாய் வைக்க குழந்தையாகவே மாறுகிறார்கள்.

அப்படி வாழ்ந்த ஒரு அப்பனின் வாழ்க்கையே தங்கமீன்கள். 

அப்படி ஒரு அப்பனே நானும். 

குஷியிடம் இன்னும் கொஞ்சம் நல்ல அப்பாவாய் இருப்பேன். படம் எனக்கு சொல்வதும், செய்ததும் அதை தான். 

என் விமர்சனம் அவ்வளவே.

*

நிற்க, இத்திரைப்படத்துக்கான சில கருத்துக்களுக்கான என் 2 நயாபைசா. 

  • இத்திரைப்படம் melodrama, மிகை,அதீதம் என்ற விமர்சனங்களை காண்கிறேன். நினைவுகள் (memories) என்பதே நம் வாழ்வில் நடந்த மிகைசம்பவங்களின் கோர்த்தல் தானே? நேற்றைய டிபன் என்ன என்பதில்லையே? என்றுமில்லாத செவ்வானமும், பளீர் நிலவும் தானே உங்கள் இன்ஸ்டாகிராமுக்குள் போகிறது? செல்லம்மாவும், கல்யாணியும் எவ்வித கவித்துவமுமின்றி,கரைதலுமின்றி பல நாட்களை கடந்துபோயிருக்கக்கூடும். அவைகளை ராம் திரையில் காட்டவேண்டிய அவசியமில்லையே? எனக்கு தெரிந்து படத்தில் ஒரு கலைப்படத்துக்கான பாசாங்கோ, உங்களை அழவைத்தே ஆகவேண்டும் என்ற வலிய முனைப்போ இல்லை.  
  • ”இப்படி ஒரு அப்பன்காரன் இருப்பானா? பொண்ணு ஒன்னு கேட்டுச்சுன்னா இப்படியா அலைவான்” என்ற கேள்வி. உங்களுக்கான சிம்பிளான பதில், ஆம் நல்ல அப்பன் தன் சத்துக்கு முடிந்தவரை அலைவான். இயலாமையை மனைவியிடம் சொல்லலாம், குழந்தையிடம் முடியாது. அது பெரிய வலி. இப்படத்தின் இரண்டாம் பாதியை கடத்தும் மகள் ஆசைப்படும் அப்பொருள், வெறும் பொருளல்ல. அதனை தன் அத்துணை பள்ளி பிரச்சனைகளுக்கான ஒரு escape routeஆக, ஒரு சர்வரோக நிவாரணியாகத்தான் அக்குழந்தை பார்க்கிறது. 
  • கல்யாணியாக வரும் ராம், செல்லம்மாவாக வரும் சாதனாவின் நடிப்பு கொஞ்சம் மிகை என்பது. செல்லம்மா போல் இரண்டாம் கிளாஸ் படிக்கும் மகள் எனக்குண்டு. மிகை குழந்தைக்கான இயல்பு. அதீத முகபாவங்கள், வெடிச்சிரிப்புகள் கொண்டதே குழந்தை. அது மட்டுப்பட தொடங்கும் நொடியில் அவர்கள் குழந்தைகள் இல்லை. போலவே, ராமினுடைய நடிப்பும் மிகையில்லை. காசில்லாதவனின் கெஞ்சல்,கையறுநிலை அழுகைகள் அப்படித்தான் இருக்கும். 
  • பரோட்டா மாஸ்டருக்கு 18000 கிடைக்கிறது, வெறும் 4000 ரூபாய் செக்யூரிட்டி வேலைக்கு வெளியூர் போகிறான் என்ற இணைய கருத்துக்கள். உங்கள் வேலை போனால், நீங்கள் பரோட்டா தட்டுவீர்களா, அராத்து? இவ்வருடம் BE முடித்த இளைஞர்கள் ஏன் 6000ரூ கால் செண்டர் வேலைக்கு போகிறார்கள்? பரோட்டா தட்டலாமே? எது வருமோ, முடியுமோ அதைத்தான் செய்யமுடியும். இன்றைய தேதியில், எவ்வித பெரிய பயிற்சியும் தேவைப்படாத, ஓரளவுக்கு எளிதில் கிடைக்கும் வேலை செக்யுரிட்டி வேலை தான். 
  • ”டேய், உனக்கு பொண்ணுடா, நீ ’அப்பா’வா படத்தை ரசிச்சிருக்க” என்றார் ஒரு சகோதரி. இல்லைக்கா, அப்படியில்லை. தாரே சமீன் பர் இஷான் அவஸ்தி பெண் இல்லையே. அவனுக்கு இதைவிடவும் கண்ணீர் உகுந்தேன். அப்பனாகும் தகுதி கூட இல்லாத வயதில் அஞ்சலி பாப்பாவுக்கும் அழுதேன். இப்படம் ஒரு அனுபவம். அவரவர் கண்ணீர் அவரவர்க்கு. அவரவர் இளகுதல் அளவு அவரவர்க்கு. ஒரு இழவுக்கு எல்லாருமா ஒரே அளவு அழுகிறார்கள்?

கொசுறு: இப்படத்தை படம் வெளிவந்த சனிக்கிழமை மாலை டொராண்ட்டோ நகரின் பெரிய இந்தியத்திரைப்பட காம்ப்ளெக்சில் வெறும் நான்கு பேரோடு பார்த்தேன். அனைத்து வெகுஜன படங்களுக்கும் கெட்ட கூட்டம் வரும் ஊர் இது. இதுபோன்ற முயற்சிகளை பார்த்துவிட்டாவது திட்டுங்கள் தமிழர்களே :-(



Monday, August 26, 2013

ராஜா என்கிற ஆர்.டி.பர்மன்

இது இசைஞானி இளையராஜாவின் மேகா பாடல்களை பற்றிய விமர்சனம் அல்ல. விமர்சிக்க எனக்கு தகுதியில்லை.




பாலிவுட்டில் ஆர்.டி.பர்மன் என்றொரு இசை லெஜண்ட். 60களில் அறிமுகமாகி ஹிந்தி இசையுலகின் ஜாம்பவான் 70களில். ஆர்.டி.பர்மன் பாடலை, கிஷோர்குமாரின் வெண்கல குரலில், தலையை ஆட்டிக்கொண்டு பாடிய ராஜேஷ்கண்ணாவை, இந்திய திரையுலகின் முதல் ‘சூப்பர்ஸ்டார்’ஆக்கி அழகு பார்த்தான் ரசிகன்.  ‘பஞ்ச்சம்’என செல்லமாக அழைக்கப்பட்ட ஆர்.டி.பர்மனின் எனக்கு பிடித்த ஒரு பாடல்  இது.

நிற்க,ஆர்.டி.பர்மன் 80களில் திடீரென மார்க்கெட் இழந்தார்.பப்பிலஹரி கால டிஸ்கோ எராவில் காணாமல் போனார். ஒருபடம் விடாது அவரை புக் செய்த ப்ரட்யூசர்கள், ஆளை மாற்றினர். கயாமத் சே கயாமத் தக் போன்ற படங்களுக்கு புக் செய்து கழட்டிவிட்ட கதைகள் உண்டு. ஆனால், பேட்டிகளில் அவரை லெஜண்ட் என்றனர் (கமல் ஞாபகம் வந்தால் கம்பெனி பொறுப்பல்ல).

அப்படிப்பட்ட ஆர்.டி.பர்மன், ஃபீல்ட் அவுட்டான 10 வருடங்களுக்கு பிறகு, 1994இல் 1942 லவ் ஸ்டோரி என்ற பீரியட் படத்துக்கு இசையமைக்கிறார். பாடல்கள் பெரிய ஆரவாரம் இன்றி வெளிவருகிறது. ஒவ்வொரு பாடலும் சொல்லிவைத்தாற்போல் அத்துணை புதிதாய், அமர்க்களமாய். கிறுகிறுத்துப் போகிறான் ரசிகன். ட்யூனாகட்டும், இசைக்கோர்வையாகட்டும், தாளக்கட்டாகட்டும்..கிறங்கிப்போகிறான் ரசிகன்.

ஆனால் படம் வெளிவரும் முன், ஆர்.டி.பர்மன் இறந்து போகிறார். ஒரு அசுர சாதனை செஞ்சுட்டு அதுக்கான பலனை பார்க்கறதுக்கு முன்ன செத்துப்போறான் மனுஷன் ! ஃபிலிம்ஃபேர் எப்போதுமில்லாத பழக்கமாய் posthumousஆக 3 அவார்டுகள் கொடுத்து அவரை கௌரவிக்கிறது. தன்னை ஒதுக்கிய பாலிவுட்டுக்கு தன்னை நிரூபித்து விட்டே இவ்வுலகை விட்டு மறைகிறான் ஒரு மகா கலைஞன்!

எனக்கு மேகா அவ்வுணர்வை தந்தது. Raja is back. ராஜா ஆர்.டி.பர்மன் ஆகவேண்டாம். நீடூழி வாழ்ந்து இன்னும் குறைந்தது 25 ஆண்டுகள் தன் புதிய ராஜபாட்டையில் பயணிக்கட்டும்.

எனக்கு ராஜாவை மிகவும் பிடிக்கும். பின் எழுபதுகளில் பிறந்த யாருக்கு பிடிக்காது? ஆனால் 2000த்திற்கு பிறகான அவர் பாடல்களை எவ்வளவு ரசித்தேன் என சொல்லத்தெரியவில்லை. வால்மீகி,ஸ்ரீராமஜெயம் எனத்தேடிதேடி கேட்டாலும் எங்கோ ஒரு சிறுகயிறு அறுந்தது. நீ தானே என் பொன்வசந்தம் எல்லாம் அந்நியமாக அறிமுகமாகி, மெல்ல மனதில் குடியேறிக்கொண்டது வேறு கதை.

ராஜா மேகாவில் ஆடியிருப்பது இசை தாண்டவம். விண்டேஜ் ராஜா. ராஜா காலத்தோடு சேர்ந்து பயணிக்கவில்லை என்றெல்லாம் அவரின் பின்னடைவுக்கு காரணமாக சொல்வார்கள். அதெல்லாம் கப்சா. அடிப்படையில் ராஜாவிடம் ரசிகன் ரசித்தது அவர் ட்யூன்களை. அதிலுள்ள உருக்கத்தை. ஆர்க்கெஸ்ட்ரா, இண்டெர்ல்யூடில் 100 வயலின் போன்ற ஜரிகைகள் எல்லாம் பிறகு. மேகாவில் ராஜா அவ்வகையில் தன்னை மீட்டெடுத்திருக்கிறார். அடிப்படையான ட்யூன்கள் ஒவ்வொன்றும் நின்று விளையாடுகிறது, புகுந்து புறப்படுகிறது.

போலவே, இசைக்கோர்வைகள். கேட்டுப்பழகின ‘அட இந்தப்பாட்டு மாதிரி இருக்கே’இசைத்துணுக்குகள்..ஆனால் எவ்வித துருத்தலுமின்றி, இக்காலத்துக்கான மோஸ்தரில் அந்த ரசவாதம் நிகழ்ந்திருக்கிறது. இசையை விவரிப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. பாடல்களை பட்டியல் போட்டு, இது பாஸ், ஆவரேஜ் எனப்போவதில்லை. பாடல்களை கேட்டு, உங்கள் முத்தை நீங்களே எடுங்கள். எனக்கான முத்துக்கள் ‘ஜீவனே’ மற்றும் ‘முகிலோ மேகமோ’ (ராஜா பாடியது, ராஜா குரலுக்கான bias உண்டெனக்கு). சொல்லப்போனால் ஆல்பத்தில் உள்ள 5 புதிய தனிப்பாடல்களில் ‘கள்வனே’ தவிர மற்ற எல்லாமே நல்முத்துக்கள். Who knows, that might grow on me too..

ராஜா பாடல்களில் ரசிகன் ரசிப்பது ராஜாவை இல்லை. தன்னை. தன் ரசனையை. அவரின் இசை தன் வாழ்வானுபவங்களோடு போடும் முடிச்சுகளை, தன் கிளறும் நினைவுகளை, குழந்தை கையில் உள்ள முடிக்கமுடியாத ஐஸ்க்ரீமாய் உள்ளங்கையில் உருகி ஓடும் மனதினை. அவ்வகையில் மேகா ஒரு உச்சக்கட்ட தனிமனித அனுபவம். ஜன்னல் ஓர விரைவுப்பேருந்தின் காற்றில் எங்கோ, ஏதோ ஞாபகங்களில் நெகிழ்ந்துருகி, தன்னை இழக்கும் தருணம்.

மேகாவுக்கான ஒரு டீசரில், ராஜா கடைசியில் “You got it?" என கேட்பார்.

யெஸ் ராஜா, வீ காட் இட் !

Wednesday, May 15, 2013

அரைக்கிழவனின் வியாக்கியானம்


ஆச்சு. இந்த மே முப்பதுடன் வயது முப்பத்தைந்து. ஏழுகடாமாடு வயசாகிறது.(அப்ப ஒரு கடாமாடு என்பது 5 வயசா?). படிவங்களில் வயதை டிக்கடிக்க வேண்டிய டப்பா மாறுகிறது. குறுந்தொப்பை நிரந்தரம். Midlife crisisக்கான அறிகுறிகள் லேசுபாசாய் தென்படுகிறது.

இது ஒரு taking stock of life பதிவு. இந்த 35 வயதில் நான் கற்றதும்,பெற்றதும் என்ன?


35 வயதில் என்ன சாதித்தாய் என்றால் ஒன்றுமில்லை. கொஞ்சம் செட்டில் ஆகியிருக்கிறேன் (touch wood). அமெரிக்காவில் ஊர் ஊராய் ஓடி, திரவியம் தேடி, தங்கைகள் திருமணத்துக்கு தோள் நின்று, களைத்து, வடக்கே கனடாவில் ஒதுங்கி, வீடு வாங்கி, நல்லது/கெட்டதுக்கு 4 நட்புக்கள் சேர்த்து, செந்திலை புரிந்திருக்கும் கரகாட்டக்கார கவுண்டமணியாய் ஒரு மனைவியும்,  ”தங்கமீனாய்” ஒரு மகளும், குடியுரிமைக்கு (டாஸ்மாக் அல்ல) காத்திருத்தலுமாய் வாழ்க்கை ஓடுகிறது.

கரியர்,வேலை என லௌகீக விஷயங்களில் ஒரு தெளிவு வந்த்திருக்கிறது. நான் 'சுந்தர் பிச்சை' மெட்டிரியல் இல்லை என உணர்கிறேன். ”எங்கப்பா என்னை படிப்புக்கப்புறம் வேலைக்கு போக சொன்னாரு, PhDயா படிக்கவெச்சாரு?” என சப்பைக்கட்டு கட்டுகிறது மனசு, IIT நுழைவுத்தேர்வில் பரம கோட்டு அடித்ததை மறந்துவிட்டு. ஆனால், பொதுவாய் கூடப்படித்தவர்களின் linkedin பக்கங்களை அவதானிக்கையில், ரேசில் பின் தங்கிவிடவில்லை என நிம்மதி.

பணம் இன்னும் அந்நியமாய் போய்விடல்லை. தேவைகளும் குறைந்தபாடில்லை. அதுக்கு சுஜாதா போல் 70 வயது ஆகியிருக்கனுமோ என்னவோ? ஆனால் வாத்தியார் சொல்வது போல் priorities மாறியிருக்கிறது.
காலையில் களைப்பின்றி எழுந்து நிம்மதியாய் வெளியே போனால் சுகம் என சொன்னதன் அர்த்தம் புரிகிறது. பணத்தைவிட நிம்மதி முக்கியம் என உணர்கிறேன். நேரம்,நோக்கம் ஏதுமின்றி சனிக்கிழமை காலை மனைவி/மகளை கட்டிக்கொண்டு சும்மா படுத்திருக்க பிடித்திருக்கிறது.

உடல்நலம் பெரிதாய் பாதகமில்லை. இதுவரையில். ஆனால், 8 மணி ட்ரைனுக்கு 7.55க்கு பார்க்கிங்கில் இருந்து ஓடமுடிவதில்லை. மூச்சிரைக்கிறது. மசால்வடை அவ்வளவு எளிதில் ஜீரணமாவதில்லை. இளைத்தபின் போடுவேன் என்ற பேண்ட்டுகள் சிரிக்கின்றன. தலைவாரிய பின் பேசினில் கிடக்கும் முடிகள் பீதியை கிளப்புகின்றன.

உடலை கவனிக்கனும் என புத்திக்கு தெரிகிறது. ஆனால் 15 டாலர் பஃபேக்கு போன வயிற்றுக்கோ, பார்ட்டிக்கு போன மனசுக்கோ தெரிவதில்லை. திடீரென வீறுகொண்டு 8 கிலோமீட்டர் நடக்கிறேன். முளைக்கட்டின பயிரை உண்கிறேன். பின்னிரவில் பசித்து குர்குரேவயும் தின்கிறேன். இடும்பைக்கூர் என் வயிறும்,நாக்கும்.

ரசனை சார்ந்த விஷயங்களிலும் முன்போல் பரவலாக தொடர முடிவதில்லை. புதிதுபுதிதாய் வரும் பாடகர்களை அடப்போங்கடா என விட்டு விடுகிறேன். எம்பி3 தேடி அலைவதில்லை. ஐட்யூனில் ஆர்கனைஸ் செய்வது நேரவிரயமாக தெரிகிறது. கேடிபில்லா கில்லாடி ரங்காக்களை மிகச்சரியாய் பத்து நிமிடங்களில் அணைத்துவிட முடிகிறது. நமக்கென்று ஒரு ஃபோகஸ் இசை, புத்தக விருப்பத்தை எடுத்துக்கொண்டு அதில் உழன்றுவிட விழைகிறேன். ராஜா,கம்பர் என வேலிப்போட்டுக்கொண்ட சொக்கன்களை பொறாமையோடு நோக்குகிறேன்.

கேட்ஜட்ஸ் இன்னும்  மோசம். Tab வகையறாக்களை பாவிக்க பிடிப்பதில்லை. லேப்டாப் ஏதேஷ்டம். 5 வருடங்களில் லேப்டாப்பே இருக்காதாமே என்பது கிலியாக இருக்கிறது. வாட்சாப் புரியமாட்டேங்கிறது. புரிய என்ன இருக்கிறது என்றார் ஒருத்தர். ஹ்ம்ம், இல்லை, இப்பவும் புரியலை.


இளைஞர் என்ற நிலை கிட்டத்தட்ட(!) போயாகிவிட்டது. நிறைய பேர் பொதுவாய் சின்னவர்களாய் தெரிய ஆரம்பிக்கிறார்கள். குறிப்பாக சமூகவலைதளங்களில். ட்வீட்டு, FB ஸ்டேடஸ்களின் தொனியை வைத்தே பொடிப்பசங்களை கணிக்கிறேன் (Thala Ajith is Mass வகையறாக்கள்).  துள்ளுபவர்களை கமல் போல் “பொடிப்பசங்களா..யார்கிட்ட” என கடக்க முடிகிறது. இணக்கமான இளையர்களிடம் உரிமையில் ஒருமையில் இயல்பாய் தாவ முடிகிறது. சமவயதினரிடம் “கொண்டக்கடலை ஊறவெச்சு சாப்பிடனுமா, ஊறவெச்ச கொண்டக்கடலைய சாப்பிடனுமா” என டயட் பேச்சுக்கள் அதிகரிக்கிறது.  சமூகவிழாக்களில் “பொண்ணுக்கு கல்யாணம்ங்கிறது பெரிய பொறுப்பு சார்” க்ரூப்பிலும், முதல்/இரண்டாம் குழந்தை பெற்ற நண்பனை கொஞ்சம் லேசுபாசாய் ரசாபாசமாய் ஓட்டும் க்ரூப்பிலும் இரண்டிலுமாய் பால்மாறி பேசமுடிகிறது.

மனதும்,புத்தியும் பக்குவப்படவில்லை. ஆனால் கொஞ்சம் நிதானத்துக்கு வந்திருக்கிறது. பிரச்சனை நேரங்களில் ”என்ன இப்ப” என சற்று விலகி சாதக,பாதகங்களை அலசமுடிகிறது. மானம், மரியாதைக்கு எங்காவது பங்கம் வந்தால் சுர்ரென்று கோபம் வருகிறது. குறிப்பாக உறவுகளிடம். இன்னமும் விவரம் கேட்பீர்கள்யேயானால் குறிப்பாக மாமியார் வீட்டு உறவுகள் ;-)



காமம் ஆசாபாசங்கள் சற்று மட்டுப்பட ஆரம்பித்திருக்கிறது. இவ்வளவு தானா இது, அடப்போங்கடா என்ற இடத்துக்கு வந்தாயிற்று. உழைத்துக் களைத்து தூங்கும் மனைவியை தொந்தரவு செய்ய முயலுவதில்லை. யதேச்சையாக செய்வது போல் அவள் தோளை பிடித்துவிடுகிறேன். உடல் தாண்டி, அவளுக்கிருக்கும் பிரச்சனைகள், முன் நரைகள்,உணர்வுகள், ஸ்ட்ரெஸ், மோசமான அதிகாரி, கனவுகள் எல்லாம் சேர்த்ததுதான் மனைவி என புரிகிறது. அதற்காக வாரயிறுதி இரவுகள் இல்லாமலும் இல்லை.

தீவிர கடவுள் தொழல்கள், தத்துவ தேடல்கள் ஆரம்பித்திருக்கிறது. எதற்கும் சக்திவிகடனில் குருப்பெயர்ச்சி பலன் கும்பத்துக்கு என்ன போட்டுருக்கான் என பார்த்து விடுகிறேன்.  எனக்கான ஒரு கொழுகொம்பை தேடி பிடித்துக்கொள்ள வேண்டும் என புரிகிறது. கர்மா, முக்தி என தத்துவகுழப்பங்கள் தாண்டி சிம்பிளாய் நல்லவனாய் இருந்துவிடுவது ஈசியாக படுகிறது. பொதுவாய் நமக்கு பிடித்தமானவர்களிடம் ஒரு உண்மையான வாஞ்சை,அக்கறை தோன்றுகிறது. நண்பனுக்கு பிரச்சனை என்றால் அடடா என ஒரு பதட்டம் வருகிறது. மெய், மெய்நிகர் இரண்டு உலகிலேயும் அந்த அக்கறை இயல்பாய் வருகிறது. ஒருத்தரை புண்படுத்தி,குழிபறித்து ஓரெழவும் ஆகப்போவதில்லை என புரிகிறது.

சாவை பற்றிய பயம் இன்னும் வரவில்லை. ஆனால், பொட்டுன்னு போனால் மனைவி/மகள் என்ன செய்வாள், என் உடலை ஐஸ்பொட்டியில் ஃப்ளைட் ஏத்த ஆள் வருமா என்ற பயம் உண்டு. இன்ஷ்யூரன்ஸ் ஏஜண்டுகளை முன்போல் சூச்சூ என விரட்டுவதில்லை . வெள்ளைக்காரன் போல் Will (உயில்) எழுதிவைத்துவிடலாமா என திவீரமாய் யோசிக்கிறேன். எங்கு ரிடையர்மெண்ட் வாழ்க்கை (”ஃப்ளோரிடால ஷாந்தினிகேதன்னு ஒரு தேசி கம்யுனிட்டி இருக்காமே”, “என் கட்டை புதுக்கோட்டை கீழரெண்டாம் வீதில தான் வேகும்”) என்பதான சம்பாஷனைகள் அவ்வபோது நடக்கின்றன.

ஆகக்கூடி, என் வாழ்க்கை கிளாசில் தண்ணீர் இப்போது நட்டநடுவில். அதை Half empty அல்லது Half full என இருவாறாக பார்க்கலாம்.

நான் இரண்டுமின்றி தண்ணீரும்,காற்றும் சந்திக்கும் கோட்டினை உற்று நோக்குகிறேன். மெதுவாய் குறையும் அப்புள்ளியில் உண்மையாய் வாழ்ந்துவிட பார்க்கிறேன்.

ஏதோ எனக்கு தெரிந்த ஜென்.

சாப்பிட்டா கீழ மொய் எழுதனும்..பொண்ணப்பெத்தவன் பாருங்க ;-)