Tuesday, January 27, 2015

மணவாசம்

குஷி எழுந்திருந்தாள். எழுந்தவுடன் உடனே படுக்கையை விட்டு எழமாட்டாள். சற்றுநேரம் சும்மா படுத்திருப்பாள். ஏதோ யோசிப்பாள். இன்றும் நினைத்ததுபோல் எழுந்துவிட்டாள். மெல்ல நெருங்கினேன். இப்போதெல்லாம் கனமாகிவிட்டாள். ஒன்பது வயது முடியப்போகிறது. 

மெல்ல தூக்குவது போல் தூக்கி ”இந்தா உன் கிஃப்ட்” என்றேன். 

“பத்து வருஷமா இதையே சொல்லு. கிஃப்ட்டை மாத்தாதே” அனு சிரித்தாள்.

ஹேப்பி அன்னிவெர்சரி.

பத்து வருடங்கள் போனதே தெரியவில்லை. கல்யாணம், தனிக்குடித்தனம், சிறிய அப்பார்ட்மெண்ட், சினிமா முடிந்து தியேட்டர் வாசலில் “நாள் தள்ளிப்போயிருக்கு”, கையில் பூவாய் குஷி, சுற்றிய ஊர்கள், ஊர்/நாடு நகர்தல்கள், முதல் தனி வீடு என ஒரு புத்தகத்தின் நூற்றுக்கணக்கான பக்கங்களை விரல்களால் விர்ர்ரென நகர்த்துவது போல் காலம் நகர்ந்திருக்கிறது. 

பெரிய ஒத்த ரசனைகள் கிடையாது. நான் ராஜா அவள் ரஹ்மான், நான் மணிரத்னம் அவள் ஷங்கர் என்றெலாம் பிரித்துப்பார்க்குமளவுக்கு கூட அவளுக்கு பல விஷயங்களில் அபிப்பிராயம் கிடையாது. She's just indifferent. என்னை மணந்தபின் அபிப்பிராயம் உருவான விஷயங்களிலும் பெரிய ஒற்றுமையில்லை. நான் விசு,வீ.சேகர் படங்கள் பார்ப்பேன். ஆங்கிலத்திலும் chickflicks எனச்சொல்லப்படும்  பெண்களுக்கு குறிவைத்து எடுக்கப்படும் ரொமான்ஸ் படங்கள் பார்ப்பேன். அவள் சில்வஸ்டர் ஸ்டலோன் படத்தையோ, ஒரு பேய்ப்படத்தையோ பார்த்துக்கொண்டிருப்பாள். ஃபேண்டசி படங்கள் பிடிக்கும். நான் அவதார் படத்தில் தூங்கியவன். சாப்பாடும் அதே. நான் இட்டலி போனாலும் “இங்கு இட்டிலி கிடைக்குமா” கேட்பேன். வீட்டுல தயிர்சாதம் இருக்குல்ல என ஊர்ஜிதம் செய்வேன். அவளுக்கு தேடித்தேடி மற்றநாட்டு உணவகங்கள் செல்ல பிடிக்கும். ஆனால் ஒரு நெடுந்தூர பயணத்தில் ராஜா ஃபோல்டரில் நான் தேடும் செவ்வந்தி பூவிது ஆரம்பித்து நான் “பெண் மானோ என் யோகந்தான்” என்றால் “பெண் தானோ சந்தேகம் தான்” என தன்னிச்சையாக தொடருமளவுக்கு பேசிக்கொள்ளாத ஒரு ரசனைக்கோடு எங்களுக்குள் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. 

ரசனை என்பதையெல்லாம் தாண்டி அவள் இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. பல சமயங்களில் காரணமோ, காரணமின்றியோ “லட்ட்டூ” என இறைவேன் (பெயர் சொல்லி அழைப்பதில்லை). “கண்ணு எங்க பின்னாடியா இருக்கு” என ஃபோனோ,பேனாவோ, ஐடிகார்டோ எடுத்துத்தருவாள். அவள் திட்டுவது பிரச்சனையில்லை. அவளை கூப்பிடனும். அவள் திட்டினாலும் கேட்கனும். பலதடவை சும்மா கூப்பிடுவேன். “என்ன எப்ப பார்த்தாலும் லட்டு,லட்டுன்னு” என்பாள். ஆனால் அதை விரும்புகிறாள் எனத்தெரியும்.

என் மகளுக்கும் அப்படித்தான். அவள் இல்லையென்றால் வண்டி ஓடாது. நான் மகளிடம் அதிகப்படியாக உருகுவேன். ஆனால் உட்காரவைத்து கணக்கு சொல்லித்தர தெரியாது. அவளுக்கு பிடித்த வகையில் போர்ன்விட்டா செய்யத்தெரியாது. அவளுக்கு அம்மா வேணும். எனக்கும். “She is my Laddoo..Mine" செல்ல இல்லை நிஜச்சண்டைகள் தினக்கூர் நடக்கும்.

அனுவின்றி ஓர் அணுவும் அசையாது எனக்கு.

நல்லதோ, கெட்டதோ அவளிடம் சொல்லிவிடவேண்டும். சுயநலமாய் என் பாரம் குறைகிறதென்று அவள் பாரம் ஏற்றுவேன். தாங்குவாள்.  “பாஸ் ரொம்ப படுத்தறாடி. வேலைக்காகாது போலருக்கு” அணைத்துக்கொண்டே சொல்வேன். “இவ்ளோ ஸ்ட்ரெஸ் எடுத்துக்காத. விட்டுரு” என ஆற்றுப்படுத்துவாள்.  நான் போனவருஷம் வேலை மாறினேனே எதுக்குன்னு நினைக்கிற, அதே பிரச்சனை தான் என விளக்கி என்னை சகஜமாக்குவாள். ஆனால் அது நடந்தபோது அவள் பிரச்சனைகளை என்னிடம் சொன்னதில்லை. ”எம்பிஏ பண்ணனும்டி” “தாராளமா பண்ணு. நான் கஞ்சி ஊத்தறேன் உனக்கு” என சிரித்துக்கொண்டே சொல்வாள். 

அவள் எனக்கு தேவை. அவளுக்கு நான் தேவையா தெரியாது. சுயநலமாய் யோசித்தால் அதற்காவது நான் முதலில் போய்விடவேண்டும். அவள் கெட்டிக்காரி, சமாளித்துவிடுவாள். எனக்கு ஒருநாள் கூட வண்டி ஓடாது. உடன்கட்டை ஏறினாலும் ஏறிவிடுவேன் என நினைக்கிறேன். 

ரசனை, கெட்டிக்காரத்தனம், அன்பு, பாசம், காதல் எல்லாம் தாண்டி திருமணம் என்பது மனசு காரியம். நம் வாழ்க்கையை, ஆசையை, கனவை, கோபத்தை, வருத்தத்தை, சிரிப்பை உள்ளது உள்ளபடி புரிந்துகொள்ளும் ஒரு சக உயிர்க்கான தேடல். என் முதலும், கடைசியுமான தேடல் அனு.

பத்து வருடங்களில் நிறைய மாறியிருக்கிறோம். மாறியிருக்கிறேன். நான் அடிப்படையில் ஒரு குழப்பவாதி. எங்கள் மேத்ஸ் வாத்தியார் என்னை “குழப்பவாதி” என்பார். ஒரு கணக்கை நேராய் பார்க்காமல் இது ஏன் இப்படி இருக்கனும் என யோசிப்பேன். தேவையில்லாது நிறைய யோசிப்பேன். எதை எடுப்பது, விடுப்பது என குழப்பம் அதிகம். கடையில் 2 சட்டை பிடிக்கும். இன்றுவரை ரவாதோசையா, ரோஸ்ட்டா என குழம்புவேன். ரவா என போய்விட்டு அடுத்த டேபிளில் மொறுமொறுவென கொண்டுவந்து வைக்கும் ரோஸ்ட்டை ஆசையாய் பார்ப்பேன். 

அனு பார்த்தாள். புரிந்துகொண்டாள். எளிய தீர்வு கண்டாள். “நீ ரவா சொல்லு, நான் ரோஸ்ட் சொல்றேன். பாதி பாதி சாப்பிடலாம்”. 

இன்றுவரை அப்படித்தான் சாப்பிடுகிறோம். 

இனியும்.