Tuesday, March 24, 2015

ரச(னை)வாதம் 03/24/2015


வண்ணதாசனை மிக தாமதமாய் தான் கண்டறிந்தேன். ஃபேஸ்புக் வாயிலாக. 

ஆனால் கல்யாண்ஜி என்னும் கவிஞரை தெரியும். அவர் கண்ணதாசா, வண்ணதாசா என பிறகே தெளிந்தேன். வண்ணதாசனின் ஃபேஸ்புக் படைப்புகளுக்கே பெரும் ரசிகன் நான். கவிதை ஃபார்மட்டில் எனக்கு பெரிய ஆழம் இல்லையெனினும், ஒரு கவிதையின் உயிர் பற்றி எனக்குள் ஒரு மானி உண்டு. அவ்வகையில் வண்ணதாசன் (கல்யாண்ஜி) கவிதைகள் நிரம்பவே பிடிக்கும். மனதையும் தைக்கும். ஒரு கணித சமன்பாடு போல் சொற்கச்சிதமும் கொண்டது.

சமீபத்தில் படித்த அவரின் சிறுகதை தொகுப்பு, தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள். வெகு எளிய கதைகள், கதைமாந்தர்கள். 70/80கள் காலக்கட்டத்தில் சிறுநகர சூழலில் எழுதப்பட்டவை. சிறுநகர பின்னணியில் வளர்ந்தவன் என்ற முறையில் எனக்கதன் மேலும், குறிப்பாய் 80/90கள் காலக்கட்டத்தின் மீதும் பெரும் மயக்கம் உண்டு.

பத்தாவதுக்கு பாண்டி வீட்டில் படித்துக்கொண்டிருப்போம். அவன் அப்பா கவர்ன்மெண்ட் ஆபீஸ் வேலையை முடித்து,வீடு வந்து, கைகால் அலம்பி, சாப்பிட்டு,கொஞ்சம் ரேடியோ கேட்டு, ஈசிசேரில் சாய்வார். தெம்பிருந்தால் முனைக்கடை வரை போய் சொசைட்டி பால்கடையில் பணங்கல்கண்டு பால் சாப்பிட்டு, எங்களுக்கு தூக்கில் டீ வாங்கி வருவார். பின் தூங்கிவிடுவார். சுந்தரம் பதிவாய் “ச்சே ஜாலில்ல.. உங்கப்பாவுக்கு படிக்கவே வேணாம்ல” என்பான். வேலை, அப்ரைசல், EMI, அவசரம், ஓட்டமில்லாத எளிய வாழ்வு. வண்ணதாசனின் கதைகளும் அவ்வகையே. கடந்த 15 ஆண்டுகளில் நாம் வாழ்வை கடினமாக்கிக்கொண்டு விட்டோம் என தோன்றுகிறது.

எனக்கு அவர் கதைகளின் மூலம் கிடைத்த பெரிய revelation, ஒரு கதைக்கு கதை தேவையில்லை என்பதே. வளர்ந்த,வாழும் சூழலில் பெரும் சம்பவ வறட்சி கொண்ட நான், சிறுகதைகள் எழுத சம்பவங்களுக்கு அலைபாய்வேன். வண்ணதாசன் கதைகளில் பெரிய நீண்ட சம்பவங்களோ, O.Henry, Jeffrey Archer வகை முடிவுச்சுருக்குகளோ இல்லை. சில கதைகளில் கதைமாந்தரின் இயல்பையோ, சூழலையோ விளக்க வர்ணனைகள் நீள்வதாய் தோணலாம். ஆனால் கதை முடித்த தருணத்தில் அவையனைத்தும் relevant-ஆய் தோன்றும்.

’தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்’ என்ற டைடிட்ல் கதையில் ஒரு அப்பா கைக்குழந்தையை தூக்கிக்கொண்டு மாமனார் வீட்டிற்கு போகிறான். அவனுக்கு அங்கு ஒரு நல்ல “வாங்க” கிடைப்பதில்லை. கொழுந்தியாள் முதற்கொண்டு “அக்கா வரல?” என்கிறார்கள். துணுக்குற்று திரும்ப வருகிறான். அவ்வளவே அவ்வளவு தான் கதை. ஆனால் அவன் கூடவே பயணிப்பது போல் ஒரு உணர்வு.

ஒரு கதையில், எப்போதும் ஃபேனை ஐந்தில் வைக்கச்சொல்கிறார் ஒரு அலுவலர். அடுத்ததில், பணம் வைத்த டிபன்பாக்சை அரசு அலுவலகத்தில் மறந்துவிட்டு இரவில் எடுக்க செல்கிறாள் ஒரு பெண். அவளுக்கு எதுவும் ஆவதில்லை. பணம் பத்திரமாக இருக்கிறது. அவள் பத்திரமாய் இருக்கிறாள். அந்நேரத்திலும் டைப் சத்தம் கேட்டு, அதை அடிப்பவர் வீட்டிற்கு போகவேண்டும் என நினைக்கிறாள். அவ்வளவே. ஆனால் இவற்றிலெல்லாம் ஒரு கதையை கண்டிருக்கிறார் வண்ணதாசன். வண்ணதாசன் கதைகளுக்கு Spoiler தரவே இயலாது போல.

பழம்புடவையை போர்த்திக்கொண்டு தூங்கும் ஒரு குடும்பத்தில், மனைவி முதன்முதலாய் ஒரு போர்வையை வாங்குகிறார். நாள் முழுவதும் அதை தன் கணவன் போர்த்திக்கொள்வதை பற்றி கற்பனை. அவனோ அன்று வீட்டுக்கு வந்த விருந்தாளிக்கு அதை கொடுத்துவிடுகிறான். இதில் யார் சரி,தவறு, யார் நல்லவர் கெட்டவர்?

‘என் காதில் விழுவதை சொல்கிறேன். சொல்வதை பாசாங்கின்றி சொல்வதே என் தொடர்ந்த முயற்சியாய் இருக்கிறது’ என்கிறார் முன்னுரையில். அவர் முன்வைக்கும் உலகிலும், மனிதர்களிடத்தும் பாசாங்கில்லை.

வண்ணதாசனின் புகைப்படங்களை கண்டால் அவர் முகத்தில் ஒரு நிம்மதி தெரியும். அதை நமக்கும் கடத்த முடிவதே அவரின் பெரும் சாதனையாக இருக்கக்கூடும்.

+++++++++++++++++


தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்
வண்ணதாசன்
சந்தியா பதிப்பகம்1 comment:

  1. இந்தியா போன போது நிறைய புத்தகங்கள் வாங்கினீங்க போல இருக்கு. வண்ணதாசன் கதைகள் போல உங்கள் விமர்சனமும் எளிமை. அம்மா எப்படி இருக்காங்க?

    ReplyDelete

பிடித்தால் சொல்லுங்கள்..பிடிக்காட்டியும் சொல்லுங்கள்..;)