Sunday, February 22, 2015

பிள்ளைப்பருவம்



2002-ம் வருடம். அமெரிக்கா வந்த புதிது. ஏற்கனவே ஆன்சைட் வந்து செட்டிலாகியிருந்த 4 தமிழ்ப்பசங்கள் இருந்த ஒரு அப்பார்ட்மெண்ட்டில் ஐக்கியமானேன். இன்றோடு ஐவரானோம் (ஆனா மச்சி நீ ஹால்ல தான் படுத்துக்கனும்) என அவர்களும் ஏற்றுக்கொண்டார்கள்.

பொதுவாய் ஆன்சைட் பசங்கள் தங்கும் வீடுகளில் காலேஜ் போல் எல்லாரும் ஒரே வயதில் இருக்கமாட்டார்கள். அவரவர் அனுபவம், வயது, விசாவிற்கேற்ப ஆன்சைட் வந்திருப்பார்கள். என் ரூமிலும் பாரி என்று ஒருவர் மட்டும் சீனியர். அப்போதே Tech Leadஆக இருந்தார். மற்ற 4 பேரும் கிட்டத்தட்ட ஒரே வயது. பாரியை மட்டும் “வாங்க போங்க” என்றே அழைப்போம். சமைக்காவிட்டால் வடிவேலு வெ.ஆ.மூர்த்தியை வைவது போல் நாசூக்காய் “என்ன பாரி, உங்க டர்ன்கிறதை மறந்துட்டீங்களா? உங்க தால் கொடுமைய செய்யுங்க” என லைட்டாய் மானபங்கம் செய்வோம்.

ஒரு நாள் சினிமாவோ, ஒரு டிவி ஷோவை பற்றியோ லன்ச்சில் பேசிக்கொண்டிருக்கையில் ஒரு கான்சப்ட் சொன்னார். “நம்ம வாழ்க்கையை படமா எடுக்கனும்டா. இப்ப காலைல கிளம்பி ஆபீஸ் வர்றோம்ல. அப்ப ஏதோ ட்விஸ்ட் இருக்கப்போகுதுன்னு ஆடியன்ஸ் நினைப்பான். ஆனா ஒன்னும் நடக்காது. மதியம் இது மாதிரி லன்ச் சாப்பிடும்போது நமக்குள்ள ஏதோ  சண்டை வரப்போகுதுன்னு நினைப்பான், ஆனா ஒன்னும் வராது. அப்புறம் வீட்டுக்கு போனப்புறம்” என தொடர்ந்தார். அப்போது கொஞ்சம் வேடிக்கையாகவும், நிறைய மொக்கையாகவும் இருந்தாலும் பாரி என்பதால் சிரித்து வைத்தோம். எங்களில் இருவருக்கு அவ்வருடம் அப்ரைசல் செய்தார் என நினைவு.

ராதாரவி மேடைகளில் சொல்வது போல் “எதுக்காக இதை சொல்றேன்னா”, இதை அதே 2002ம் வருடம் ஒரு அமெரிக்க டைரக்டர் நடத்திக் காட்டவே ஆரம்பித்துவிட்டார். (யாரு டைரக்டர்ன்னு கேக்கிறீங்களா? I'll link later. அட அவர் பேரே லின்க்லேட்டர் தான்)

Boyhood.

2002-இல் அப்போது 6 வயதாய் இருந்த ஒரு சிறுவனை மையப்படுத்தி, அவனின் அப்பா, அம்மா, அக்கா என வெகுசில நடிகர்களோடு ஒரு படத்தை ஆரம்பித்தார். அந்த பையன் வளர வளர மெல்ல 12 வருடங்கள் படத்தை எடுத்து 2014-இல் ரிலீஸ் செய்தார். மேசன் (Mason) என்கிற அந்த சிறுவன் தன் 6 வயதிலிருந்து வளர்ந்து 18 வயதில் காலேஜ் போவது தான் கதை.

அவ்வளவே அவ்வளவு தான் கதை.  ஆனால், அமெரிக்கா உருகி உருகி இந்த படத்தை கொண்டாடியது.

படத்தின் மிகப்பெரிய USP இந்த 12 வருடம் தொடர்ச்சியாய் ஒரே நடிகர்களை வைத்து படமெடுத்த கான்சப்ட் தான் என்றாலும், அதனால் மட்டும் இப்படம் கொண்டாடப்படவில்லை.  கரெக்டாய் அமெரிக்காவை குறிவைத்து அடிக்கும் வெளிகிரக ரோபாட்கள், தாலிபான்களிடமிருந்தோ, ரஷ்யர்களிடமோ தாய்நாட்டை காப்பாற்றி கெட்டவார்த்தை பேசிக்கொண்டே சாகும் மிலிட்டரி ஹீரோ படங்களை தாண்டி, ஒரு சராசரி அமெரிக்கனின் வாழ்க்கையை அச்சு அசலாய் காட்டியதே படத்தின் தனித்தன்மை.

அமெரிக்க வாழ்வினை பற்றி நமக்கு பல கற்பிதங்கள் உண்டு. பொதுவாகவே உறவுகள்,செக்ஸ் போன்ற விஷயங்களில் ஒழுங்கீனமானவர்கள்,பெரிதாய் விழுமியங்கள் (வேல்யூஸ்) இல்லாதவர்கள்,  குடும்பம்,குட்டி பந்தபாசம் எல்லாம் குறைவு,  சுயநலக்காரர்கள் என பலப்பல.

அதில் பெரியதாய் உண்மையில்லை.

ஒரு சராசரி அமெரிக்கன் வாழ்க்கையில் எதுவுமே given இல்லை. எதையும் பிரயத்தனப்பட்டே அடைகிறான். சொகுசெல்லாம் ப்ராட் பிட், ஆஞ்சலினா ஜோலி போன்றவர்கள் குழந்தைகளுக்கு வேண்டுமானால் சாத்தியப்படலாம். ஒரு அமெரிக்கன் 10 வயதில், வீட்டில் பாத்திரம் தேய்க்க, புல் பிடுங்க, பனி தள்ள பழக்கப்பட ஆரம்பிக்கப்படுகிறான்/ள். இது பாக்கெட் மணிக்காக கூட அல்ல. “உனக்கு கூரை தருகிறேன். சோறு போடுகிறேன். நீயும் பொறுப்போடு இரு” என உணர்த்துவதற்காக. பள்ளிகளில் bullying (உடல்/மன ரீதி துன்புறுத்தல்கள்) உண்டு. ஹைஸ்கூல் வரும்போது பேட்டை பீட்சா கடையிலோ, மளிகைகடையிலோ அவர்கள் டீஷர்ட்டை போட்டுக்கொண்டு குறைந்தபட்ச ஹவர்லி ரேட் கூலிக்கு உழைப்பான். கக்கூஸ் வரை கழுவுவான். நன்கு படித்தால் அரசுக்கல்லூரியில் சல்லீசாய் படிப்பு என்பது கிடையாது. கல்லூரிப்படிப்பு வெகு காஸ்ட்லி. பெற்றோர்களுக்கு சுமாரான வேலையென்றால், தம்பி நீ காசு சேர்த்து படிச்சுக்கோப்பா என அனுப்பிவிடுவார்கள்.

அதற்காக, பெற்றோர்கள் அவர்கள் கடமையை செய்கிறார்கள் இல்லை என்பதில்லை. நாம் இப்போது சொல்லும் “ஐடில வேலை நிரந்தரம் இல்லை. பென்ஷன் கிடையாது” மோஸ்தரில் தான் அமெரிக்காவே 60,70 ஆண்டுகளுக்கு மேலாக இயங்குகிறது. கவர்ன்மெண்ட் வேலையே நிரந்தரம் கிடையாது. பிரவேட் கம்பெனி போல் அரசே திவாலாகிவிட்டது என மொத்தமாய் layoff செய்வார்கள். ஒரு அமெரிக்கன் ஸ்டூடண்ட் லோனில் வாழ்க்கையை ஆரம்பிப்பவன், கார் லோன், 30 வருடம் மார்ட்கேஜ் (வீட்டு லோன்), பிறகு கடைசிக்காலத்தில் தன் வைத்தியம், முதியோர் விடுதி, கல்லறைக்கும் சேர்த்தே பணம் கட்டிவிட்டு தனியே செத்துப்போவான்.

கஞ்சா குடிக்கியாகவோ, அக்யூஸ்டாகவோ ஆகாத ஒரு நல்ல அமெரிக்கன் தன் குடும்பத்துக்காக உழைப்பதில், குழந்தைகளை வளர்ப்பதில் நம்மைவிட எவ்விதத்திலும் குறைந்தவனல்ல. இங்கு மனைவி மட்டும் கர்ப்பம் சுமப்பவளல்ல. "We are pregnant" என்பதே பதம். நம்மை விட அவர்களின் priorities சற்றே மாறுபடலாம். தன் டாஸ்மாக் கணவனை சகித்துக்கொண்டு ஒரு பெண் இங்கு வாழ்வதை போல் நடக்காது. போடா என டைவர்ஸ் கொடுத்துவிட்டு, கௌதம் மேனனின் சிங்கிள் மதர் போல் காலையும்,மாலையுமாய் 2 வேலை பார்த்து தன் பசங்களை வளர்த்து, அதே சமயம் தனக்கான துணையையும் தேடியடைவாள் ஒரு அமெரிக்கள்.

அப்படிப்பட்ட ஒரு தாயின் வாழ்க்கையாகவும் Boyhood படத்தை காண இயலும். அவளின் உறவுச்சிக்கல்கள், மணமுறிவுகள், கிளாசிக் அமெரிக்க "Your children and my children are playing with our children" வாழ்க்கைமுறை, இதனூடே அவள் தனக்கான படிப்பு, வேலை என சுய அடையாளத்தை தேடிக்கொள்வதாகவும் படம் நகர்கிறது. முதல் கணவனின் (குழந்தைகளின் பயலாஜிக்கல் தகப்பன்) பொறுப்பற்றத்தனம், மறுகணவனின் குடிப்பழக்கம், மறுமறுகணவனின் சிற்றப்பன் கொடுமை, கணவன் கொடுமை செய்கிறான் எனத்தெரிந்தும், அவனது குழந்தைகளை காக்கமுடியாது தன் குழந்தைகளை மட்டுமே காக்க முடிந்த அமெரிக்க ‘கார்டியன்’ சட்டச்சிக்கல்கள் என இவ்வாழ்க்கை முறையின் சிக்கலான முடிச்சுகளையும் தொட்டுச்செல்கிறது படம்.

மேசனின் அக்காவாக வருபவளின் நடிப்பும், அவளின் துடுக்குத்தனமான பேச்சும், அட்டிட்யூடும், வளர்ந்த பின் தன் தம்பியின் மீதும், அம்மாவின் மீது வரும் அக்கறையுமாய் வெகு இயல்பு. ஒரு பெண்குழந்தையை இங்கு பெற்று வளர்ப்பதால் நன்கு தொடர்புப்படுத்திக்கொள்ள முடிகிறது. மேசனின் (பெற்ற) அப்பா கதாபாத்திரம் ஒரு அற்புதம். பெரிய பொறுப்பில்லாமலும், கொஞ்சம் கையாலாகத்தனத்தோடும் இருந்தாலும், குழந்தைகள் மேல் பேரன்போடு இருக்கிறான். சம்பிரதாய தகப்பன்த்தனத்தோடு இல்லாது விளையாடுகிறான், அவர்கள் மனதை படிக்கிறான். வெகு நாசூக்காய் வாழ்வை புரிய வைக்கிறான். எனக்கு என்னை திரையில் பார்ப்பது போல் இருந்தது.

படத்தில் வசனங்கள் மிகபெரிய பலம். வெகு இயல்பாகவும், அதே சமயம் எளிதில் கடந்துவிடமுடியாததாகவும் உள்ளது. பசங்களை வளர்த்து ஆளாக்கி, மகன் வீட்டை வெளியேறும் தருணத்தில் தாய் கேட்பாள் “சில மோசமான திருமணங்கள். எப்படியோ பாடுபட்டு உங்களை வளர்த்துட்டேன். இப்ப வீட்டை விட்டு போறீங்க. இனி? சாவுக்கு வெயிட் பண்ணனுமா? வாழ்க்கைன்றது அவ்வளவே அவ்வளவு தானா? இதுல என் வாழ்க்கை எங்க போச்சு?”. படத்தை pause செய்துவிட்டு பேஸ்த் அடித்தாற்போல் யோசிக்க ஆரம்பித்து விட்டேன். வெறும் 13 வருடங்கள் இங்கு வாழ்ந்து, ஒரு இரண்டுங்கெட்டான் வட அமெரிக்க வாழ்க்கை வாழும் எனக்கே இப்படியென்றால், ஒரு அமெரிக்கனுக்கு அவனையே திரையில் பார்த்துக்கொள்வது போல இருக்குமென நினைக்கிறேன்.

12 வருடங்கள் எடுத்த படமென்பதால் சுப்பாண்டி மண்டை போல் இருக்கும் ஆப்பிள் கம்யூட்டர்,காலத்துக்கேற்ப மாறும் செல்ஃபோன்கள், கார்கள், அமெரிக்க தேர்தல்கள், புஷ், ஒபாமா என மாறும் அதிபர்கள், இராக் போர், அமெரிக்க வாழ்வின் நாடித்துடிப்பான பேஸ்பால், கேம்ப்பிங் என Forrest Gump சாயலோடு காலமாறுதல்களையும் உறுத்தாது தொட்டுச்செல்கிறது.

நிதானமாய் 166 நிமிடங்கள் எந்த அவசரமும் இல்லாது ஓடுகிறது இல்லை நடக்கிறது படம். ஆனால் இன்னும் 166 நிமிடங்கள் போயிருந்தாலும் பார்த்திருப்பேன்.

நம் வாழ்க்கை முடியவேண்டும் என நாம் நினைக்கிறோமா என்ன?

+++++++++++++

6 comments:

பிடித்தால் சொல்லுங்கள்..பிடிக்காட்டியும் சொல்லுங்கள்..;)