Monday, July 14, 2014

வெற்றி வேண்டுமெனில்

சமூக வலைத்தளங்கள், ட்விட்டர் போன்றவை பொதுவாக இடையறாத அரட்டைக்கச்சேரி என்றாலும் சில நேரங்களில் சில மனிதர்களால் சில நன்மைகளும் உண்டு.

இது நடந்து 2 வருடம் ஆகியிருக்கும். அப்போது இந்தியா போயிருந்தேன். பார்க்கும் நண்பர்களுக்கெல்லாம் குரு பாலகுமாரனின் ‘கடலோர குருவிகள்’ நாவலை அளித்துக் கொண்டிருந்தேன். அவ்வளவு பிடிக்கும் அந்த நாவல். குறிப்பாய் அதன் கடைசி 20 பக்கங்களில் உள்ள வாழ்க்கைப்பாடத்தை பற்றி ட்விட்டரில் பேச்சு வந்தது.

“வெற்றி வேண்டுமெனில் படிச்சிருக்கீங்களா” என கேட்டார் ஒரு பெண் நண்பர். தேர்ந்த படிப்பாளி.

”இல்லியே நாவலா, கட்டுரை தொகுப்பா?”

”கட்டுரை டைப் தான்”

“தேடிக் கண்டுகொண்டேன், என்னை சுற்றி சில நடனங்கள் மாதிரி வேற ஒன்னை நினைச்சுட்டு இதை சொல்றீங்களா?”

குருவின் ஆன்மீக நாவல்களில் நான் வீக். ஆனால் சமூக நாவல்கள், கட்டுரை தொகுப்புகளில் என் பரிச்சயம் மேல் ஒரு சிறுகர்வம் உண்டு. ‘தாமோதரன் பால்பண்ணை வெச்சு முன்னேறுற கதை தானே?’ ‘அமுதவல்லி மச்சினனுக்கு பொண்ணு பார்க்கிற கதை தானே’ என கேட்டுவிடுவேன்.

“இல்ல ‘வெற்றி வேண்டுமெனில்’ன்னே ஒரு புத்தகம் இருக்கு. தலைப்பு தான் சப்ஜக்ட்” என விளக்கினார் அந்த நண்பர்.

அய்யோ படிக்கனுமே..”முடிஞ்சா அனுப்ப முடியுமா, நான் 2,3, நாள்ள கனடா கிளம்பிருவேன்” அல்பம் போல் கேட்டுவிட்டேன்.

“பார்க்கிறேங்க. நான் இப்ப கொஞ்சம் பிசியா இருக்கேன்” என்பது போல் ஏதோ சொன்ன ஞாபகம். முகவரி வாங்கிக்கொண்டார். புத்தகம் ஏதும் வரவில்லை. நான் கனடா திரும்பிவிட்டேன்.

ஆனால் அனுப்பியிருக்கிறார். புத்தகம் வந்ததாக மாமியார் வீட்டிலிருந்து தகவல். அதை இங்கு வசிக்கும் ஒரு உறவினர் மனைவியிடம் கொடுத்தனுப்ப, அவர் அதை வாகாய் மறக்க, அங்கே இங்கே சுத்தி ஒன்றரை வருடம் கழித்து என்னிடம் வர, நான் அப்போது வீடு மாற, ஒரு பெரிய புத்தகத்தின் நடுவில் இது போய் மறைய, நான் தொலைந்துவிட்டது என்று நினைக்க..இந்த வாரயிறுதி ஒழித்தலில் கிடைத்தது. உடனே படிக்க உட்கார்ந்தேன்.

திருக்குறள் அதிகாரங்கள் போல் சோம்பல் அறுத்தல், கோபம் தவிர்த்தல் என்பது போல் 21 கட்டுரைகள். ஒவ்வொன்றும் நேரடியாக கத்தி பாய்ச்சும் வகையறா. என்னவோ என்னை கூட இருந்து வளர்த்தவர் போல், எனக்கே எழுதியது போல் இருக்கிறது ஒவ்வொரு கட்டுரையும். மிக எளிமையான, புரியும்படியான ’உருப்படனும்னா சொல்றத கேளு’ குட்டுக்கள், டு த பாய்ண்ட் சொல்லாடல்கள், உதாரணங்கள். கல்யாண விருந்து போல் ஆசையாய் உண்டு முடித்ததை, இப்போது மனமும், புத்தியும் மெல்ல ஜீரனித்துக்கொண்டிருக்கிறது. குறிப்பாய் குரு பூர்ணிமா நாளன்று இதெனக்கு படிக்கக்கிடைத்தது யதேச்சை இல்லை. இங்கு காரணமில்லாது எதுவும் நடப்பதில்லை.

புத்தகத்தை அனுப்பிய ட்விட்டர் தோழி @devaseema ( www.twitter.com/devaseema ) யார், அவர் பெயர், ஊர், எப்படியிருப்பார் எதுவும் தெரியாது. ஆனால் ஆயுசுக்கும் அவரிடம் கடன்பட்டிருக்கிறேன்.

வாழ்க்கை நமக்கான பாடங்களை யார் மூலமாகவோ, எப்படியோ காட்டியேதான் விடுகிறது. பாடம் படிப்பதென்னவோ நம் பொறுப்பு.

படித்தேனா என்பதை காலம் சொல்லும்.

(புத்தக வெளியீடு: விசா பதிப்பகம்)