Tuesday, October 2, 2012

காந்தி-ஜெயந்தி (சிறுகதை)

காந்தியை மறுபடி சந்திப்பேன் என கனவிலும் நினைக்கவில்லை. கனவில் நினைத்துப் பார்க்குமளவுக்கெல்லாம் அவன் ஒன்றும் விசேஷம் இல்லை என்பது வேறு விஷயம். வாழ்வில் சிலர் இருப்பார்கள், நமக்கு நண்பனாகவும் இல்லாமல், எதிரியாகவும் இல்லாமல். விட்டகுறை, தொட்டகுறையாக கூடவே வருவார்கள். காந்தி எனக்கு அந்த வகை. 

புதுக்கோட்டையின் ஒரே ஊட்டி கான்வெண்ட், மாடல் ஸ்கூல். அரசு முன்மாதிரி மேனிலைப்பள்ளி என்ற அஃபிசியல் பெயரை பொதுவாக யாரும் சொல்வதில்லை. டென்த்தில் தக்கிமுக்கி 400 எடுத்தால் போதும். பையன்கள் நுரைதப்ப மச்சுவாடி மேட்டில் சைக்கிள் மிதித்து மாடல் ஸ்கூலில் +1 சேர்வார்கள். 

அப்படி பதினொன்னாவது சேர்ந்த ஒரு சுபயோக சுபதினத்தில் அசுபமாய் காந்தியை சந்தித்தேன். பொருத்தமாய் இனிசியலோடு எம்.காந்தி. மோகன்தாஸ் இல்லை. மல்லையன் பெத்த காந்தி.

“டேய் நீ ஸ்டீராம் தான?, காந்தி டா, கீழ ரெண்டாம் வீதி, சைல்ட் ஜீசஸ்ல நாலாவது படிச்சமே” என கிட்டக்க வந்தான். கோபம் வந்தால் நோட்டின் நடுவில் எச்சி துப்பிவைக்கும் கெட்டப்பழக்கத்தை இப்போது விட்டிருக்கக்கூடும். நம்பிக்கையாய் சிரித்தேன். அப்போதே நல்ல கட்டையாய் மீசை. கருப்பாய் களையாய் புதுநெல்லு புதுநாத்து ஹீரோ ஜாடையில் இருந்தான். தலையை தூக்கி பம்மென்று சீவி, அம்சமாய் ஒரு விபூதி-குங்குமம் வைத்திருந்தான். ஆங்கில மீடியம் கம்ப்யூட்டர் க்ரூப்பில் எண்ணி 12 பையன்கள். அதில் காந்தியும் ஒருவன். பிடிக்கிறதோ இல்லையோ கூட பழகவேண்டிய சூழல். 

காந்தி அடிப்படையில் ஒரு extrovert. பேச்சு, நடவடிக்கை எல்லாமே ஆர்ப்பாட்டம். ஜவுளிக்கடையில் ஜாக்கெட்பிட் கிழிக்கும் அப்பாவை நம்பி கஷ்டஜீவனம். அதை காண்பித்துக்கொள்ளக்கூடாது என்பதற்காகவே அதட்டலாய், அலட்டலாய் இருப்பான். பாக்கெட்டில் 1 ரூபா ஐஸ் வாங்கக்கூட காசு இருக்காது. ஆனால் உரிமையாக “மாப்ள” என பிடுங்கித் திண்பான். ரொம்ப எல்லாம் படிப்பு வராது. ஆனால், படிக்கும் கோஷ்டியான எங்களுடனே சுத்துவான். ட்யூசன் எல்லாத்துக்கும் கூட வருவான். ஒன்றையும் கவனிக்கமாட்டான், முன்பென்ச் ராணிஸ்கூல் பிள்ளைகளை தவிர. 

இந்த இடத்தில் கதை சூழலுக்குள் வருவது முக்கியமாக ஆகிறது. உலகத்திலேயே காய்ந்து போன பையன்கள் புதுக்கோட்டையில் தான் இருக்கவேண்டும். ஊரில் பையன்களுக்கு இரண்டே ஹைஸ்கூல்கள். பெண்களுக்கு ராணி ஸ்கூல் மட்டும். ஊருக்கு புதிதாக வரும் சப்-இன்ஸ்பெக்டர்கள் செய்யும் முதல் வேலை ராணிஸ்கூல் தெருமுனையிலேயே பாராவுக்கு கான்ஸ்டபிள் போடுவது. இல்லாவிடில் பையன்களை கட்டுப்படுத்த இயலாது. சீட்டியடித்து விடுவான்கள். ரேப், கையைப்பிடித்து இழுத்தல் க்ரைம்ரேட்டுகள் பீகார்/உபியை தாண்டிவிடும். பொதுவாகவே நாளமில்லா சுரப்பிகள் ஓவர்டைம் பார்க்க, பையன்கள் ஒரு வெறியிலேயே இருப்பான்கள். சரோஜாதேவி புத்தகங்களுக்கு கூட ஒருமணிக்கூர் திருச்சி ஜங்சனுக்கு போகவேண்டிய துர்நிலைமை. புதுமைப்பித்தன் மொழியில் சொன்னால் “என்னவோ கோ-எட், டேட்டிங் என்று கதைக்கிறீர்களே, இதான்யா புதுக்கோட்டை !!”.

நிற்க, இக்கொடூர சூழலிலும் காந்தி முடிந்தவரை அடித்து ஆடுவான். காலை ட்யூசனில், சார் மனைவி ராணிஸ்கூல் பிள்ளை மூலம் டம்ளர் பால் கொடுத்து விட, இவன் “சாருக்கு பால் கொடும்மா” என கொடூரமாய் குரல் கொடுப்பான். பையன்கள் பேய்த்தனமாய் சிரிப்பான்கள். சரவணாவில் 11 மணி காட்சி பார்த்துவிட்டு ’சீன்’வாரியாக கதை சொல்வான். அம்மன் பூச்சொரிதல் சமயம் சூப்பர்பாய்ஸ் நடனக்குழுவில் பெண்களை தொட்டெல்லாம் ஆடுவான்.

எங்கள் பள்ளி ஒரு யூகலிப்டஸ் காட்டின் நடுவே ஏகாந்தமாய் இருந்தது. ஸ்கூலையும் தாண்டி அரை ஃபர்லாங் தூரத்தில் ஒரு டீச்சர் ட்ரைனிங் பள்ளி. இந்த டீச்சர் ட்ரைனிங் என்பது பள்ளியும், கல்லூரியும் இல்லாத ஒரு ரெண்டுங்கெட்டான் என கொள்க. 

அதில் தான் ஜெயந்தி படித்தாள்.



ஜெயந்தி அழகி. புதுக்கோட்டைக்கு பேரழகி.  மிக திருத்தமான முகம். சற்றே பூனைக்கண்கள். எவ்வித மேக்கப்பும் முகத்தில் இருக்காது. சமயத்தில் பொட்டு கூட. ஆனால் முகத்தில் ஒரு அமைதியும்,ஜொலிப்பும் எப்பவும். அப்போது பத்தொன்பது இருபது வயசு இருக்கலாம். க்ரே கலர் யுனிஃபார்ம் தாவணியில் மிக பாந்தமாய் வருவாள் போவாள். பார் இல்லாத லேடிஸ் BSA சைக்கிளில் மூச்சுமுட்ட மச்சுவாடி மேடு ஏறுவாள். நாங்கள் கர்மசிரத்தையாய் பத்தடி கேப்பில் பின்னாடி போவோம். 

அப்போது ஜெயந்தியின் பெயர் ஜெயந்தி எனக்கூட தெரியாது. பேர் தெரியாவிட்டால் என்ன, என்னவோ ஒரு பரவசத்தில் எதுக்கோ பின்னாடி போவோம். அப்படி தொடர்ந்து கொண்டிருந்த ஒரு நன்னாளில், காந்தி திடீரென “மாப்ள, இப்ப கவனி” என ஏறி மிதிக்க ஆரம்பித்தான். நாங்கள் ஒரு சேஃப்டிக்கு இன்னும் மெதுவாக மிதிக்க ஆரம்பித்தோம். வள்ளியப்பன் ”மாப்ள, நாம வேணா இந்த சந்துக்குள்ள வண்டிய விட்டுருவோம்” என உஷாரானான். 

காந்தி அவள் கிட்டே நெருங்கினான். அவள் வேகத்திலேயே அவன் சைக்கிளையும் மிதித்தான். பதபதைப்பிலோ, இல்லை பொதுவாய் சைக்கிளை மேட்டில் விடுவதாலோ, எங்களுக்கு மூச்சு வாங்கத்துவங்கியது. தலையை திருப்பி என்னவோ சொன்னான் அவளிடம். ஜெயந்தி என் ஞாபகத்தில் சுமார் 20 செகண்டுகளுக்கு திரும்பவேயில்லை. திடீரென அவளும் திரும்பி அவனைப் பார்த்தாள். என்னவோ சொன்னாள். அது காதில் விழாத தூரத்தில் நாங்கள் இருந்தது ஒரு துன்பியல் சம்பவம். 

சுமார் 2 நிமிடத்துக்கு பிறகு காந்தி வண்டியை நிதானமாக்கி எங்களுடன் இணைந்தான். ஒன்னுமில்ல மாப்ள, பேர் கேட்டேன், சொன்னா, வேறொன்னுமில்ல என முடித்துக்கொண்டான். 

அன்றிலிருந்து மிக மெதுவாக, கெமிஸ்ட்ரி லேபில் டைட்ரேஷன் சோதனை செய்வது போல், ஜெயந்தியை நெருங்கத்தொடங்கினான். என்ன எழவு மாயம் செய்தானோ, அவளும் இவனுடன் பேசத்துவங்கியிருந்தாள். சைக்கிளில் சேர்ந்தே போவான் அவளுடன். பொறாமையில் வெந்தே செத்தோம் நாங்கள். 

”டேய் லவ்ஸாடா” என கேட்பதிலேயே ஒரு கிளுகிளுப்பை உணரத்துவங்கியிருந்தோம். காந்தியும் அசராது “ஃப்ரண்சிப் டா மாப்ள” என்பான். என்னவோ ரிலேடிவிடி தியரியை அவன் விளக்கியது போல பொம்பளப்புள்ள கூட எப்டிடா ஃப்ரன்சிப்புங்கிறான் என ஆச்சர்யத்தில் வாயைப் பிளப்போம்.  ஜெயந்தி காந்தியுடன் திருக்கோகர்ண கோவிலில் பரீட்சைக்காக அர்ச்சனை செய்ததாக செய்தி வர, கார்த்தி “..க்காளி, எங்கப்பன் கூட எனக்காக வேண்டிக்கிட்டதில்லடா” என பொருமினான். 

ஒருவழியாய்  +2 முடிய, பொறியியல், மெடிக்கல்,டெண்டல் என அவரவர் சத்துக்கு படிக்கப்போக, காந்தி வாங்கிய 690 மார்க்குக்கு புதுகை ராஜாசிலேயே ஆர்ட்ஸ் சேர்ந்தான். அதன்பிறகு அவனை சந்திக்கவேயில்லை. காந்தி ஞாபக அடுக்குகளிருந்து மறைந்தே போனான், போனவருடம் சுந்தரம் ஃபேஸ்புக்கில் இழுத்துவிடும்வரை. சிங்கப்பூரில் கட்டுமான கம்பெனியில் குவாலிடி டிப்பார்ட்மெண்ட் என வாழ்வில் தாக்குப்பிடித்துவிட்டான்.

போனமாதம் புதுக்கோட்டைக்கு போன அதே சமயம் அவனும் ஊரில். வீட்டுக்கு வந்தேயாக வேண்டும் என வற்புறுத்தினான். சிங்கப்பூர் காசில் புதுகை அவுட்டரில் ஆலங்குடி ரோட்டில் சற்று எடுத்துக்கட்டிய வீடு. நாலைந்து கோழிகள் திரிய, வாசலில் வயசாளி அப்பா ஈசிசேரில் சிரிக்க, உப்பிய கன்னத்தோடு, பெரிய கண்ணாடியோடு “டேய் மாப்ள” என கட்டிக்கொண்டான். 

அவன் மனைவி எங்கே என்பது போல உள்ளே பார்க்கையில்...

அவள் வீட்டின் உள்ளேயிருந்து காபித்தட்டோடு வந்தாள்.

---------------------

முடிவு 1:

சற்று வயசான, உடல் பெருத்த, அன்று பார்த்த அழகும், வசீகரமும் சிறிதும் குறையாத ஜெயந்தி. 


நியாயமாய் இதோடு முடித்திருக்க வேண்டும். ஆனால், வாழ்வின் நிதர்சனங்கள் கதை முடிவைப்போல அழகியலோடு இருப்பதில்லை என நினைப்பீர்களேயானால் இது.


சற்று வயசான, உடல் பெருத்த, எந்தவொரு  அழகும், வசீகரமும் இல்லாத வசந்தி. 

இதில் எந்த முடிவை நீங்கள் தேர்ந்தெடுத்தாலும் கதாசிரியனாக எனக்கு பிரச்சனையில்லை. 

---------------------

முடிவு 2:

அச்சு அசலாய் காந்தியின் சாயலும், வசீகரமும் கொண்ட பத்து வயதுக்குள் சொல்லக்கூடிய ஒரு சிறுமி. 

பேரு ஜெயந்தியாம்.

---------------------