Tuesday, October 2, 2012

காந்தி-ஜெயந்தி (சிறுகதை)

காந்தியை மறுபடி சந்திப்பேன் என கனவிலும் நினைக்கவில்லை. கனவில் நினைத்துப் பார்க்குமளவுக்கெல்லாம் அவன் ஒன்றும் விசேஷம் இல்லை என்பது வேறு விஷயம். வாழ்வில் சிலர் இருப்பார்கள், நமக்கு நண்பனாகவும் இல்லாமல், எதிரியாகவும் இல்லாமல். விட்டகுறை, தொட்டகுறையாக கூடவே வருவார்கள். காந்தி எனக்கு அந்த வகை. 

புதுக்கோட்டையின் ஒரே ஊட்டி கான்வெண்ட், மாடல் ஸ்கூல். அரசு முன்மாதிரி மேனிலைப்பள்ளி என்ற அஃபிசியல் பெயரை பொதுவாக யாரும் சொல்வதில்லை. டென்த்தில் தக்கிமுக்கி 400 எடுத்தால் போதும். பையன்கள் நுரைதப்ப மச்சுவாடி மேட்டில் சைக்கிள் மிதித்து மாடல் ஸ்கூலில் +1 சேர்வார்கள். 

அப்படி பதினொன்னாவது சேர்ந்த ஒரு சுபயோக சுபதினத்தில் அசுபமாய் காந்தியை சந்தித்தேன். பொருத்தமாய் இனிசியலோடு எம்.காந்தி. மோகன்தாஸ் இல்லை. மல்லையன் பெத்த காந்தி.

“டேய் நீ ஸ்டீராம் தான?, காந்தி டா, கீழ ரெண்டாம் வீதி, சைல்ட் ஜீசஸ்ல நாலாவது படிச்சமே” என கிட்டக்க வந்தான். கோபம் வந்தால் நோட்டின் நடுவில் எச்சி துப்பிவைக்கும் கெட்டப்பழக்கத்தை இப்போது விட்டிருக்கக்கூடும். நம்பிக்கையாய் சிரித்தேன். அப்போதே நல்ல கட்டையாய் மீசை. கருப்பாய் களையாய் புதுநெல்லு புதுநாத்து ஹீரோ ஜாடையில் இருந்தான். தலையை தூக்கி பம்மென்று சீவி, அம்சமாய் ஒரு விபூதி-குங்குமம் வைத்திருந்தான். ஆங்கில மீடியம் கம்ப்யூட்டர் க்ரூப்பில் எண்ணி 12 பையன்கள். அதில் காந்தியும் ஒருவன். பிடிக்கிறதோ இல்லையோ கூட பழகவேண்டிய சூழல். 

காந்தி அடிப்படையில் ஒரு extrovert. பேச்சு, நடவடிக்கை எல்லாமே ஆர்ப்பாட்டம். ஜவுளிக்கடையில் ஜாக்கெட்பிட் கிழிக்கும் அப்பாவை நம்பி கஷ்டஜீவனம். அதை காண்பித்துக்கொள்ளக்கூடாது என்பதற்காகவே அதட்டலாய், அலட்டலாய் இருப்பான். பாக்கெட்டில் 1 ரூபா ஐஸ் வாங்கக்கூட காசு இருக்காது. ஆனால் உரிமையாக “மாப்ள” என பிடுங்கித் திண்பான். ரொம்ப எல்லாம் படிப்பு வராது. ஆனால், படிக்கும் கோஷ்டியான எங்களுடனே சுத்துவான். ட்யூசன் எல்லாத்துக்கும் கூட வருவான். ஒன்றையும் கவனிக்கமாட்டான், முன்பென்ச் ராணிஸ்கூல் பிள்ளைகளை தவிர. 

இந்த இடத்தில் கதை சூழலுக்குள் வருவது முக்கியமாக ஆகிறது. உலகத்திலேயே காய்ந்து போன பையன்கள் புதுக்கோட்டையில் தான் இருக்கவேண்டும். ஊரில் பையன்களுக்கு இரண்டே ஹைஸ்கூல்கள். பெண்களுக்கு ராணி ஸ்கூல் மட்டும். ஊருக்கு புதிதாக வரும் சப்-இன்ஸ்பெக்டர்கள் செய்யும் முதல் வேலை ராணிஸ்கூல் தெருமுனையிலேயே பாராவுக்கு கான்ஸ்டபிள் போடுவது. இல்லாவிடில் பையன்களை கட்டுப்படுத்த இயலாது. சீட்டியடித்து விடுவான்கள். ரேப், கையைப்பிடித்து இழுத்தல் க்ரைம்ரேட்டுகள் பீகார்/உபியை தாண்டிவிடும். பொதுவாகவே நாளமில்லா சுரப்பிகள் ஓவர்டைம் பார்க்க, பையன்கள் ஒரு வெறியிலேயே இருப்பான்கள். சரோஜாதேவி புத்தகங்களுக்கு கூட ஒருமணிக்கூர் திருச்சி ஜங்சனுக்கு போகவேண்டிய துர்நிலைமை. புதுமைப்பித்தன் மொழியில் சொன்னால் “என்னவோ கோ-எட், டேட்டிங் என்று கதைக்கிறீர்களே, இதான்யா புதுக்கோட்டை !!”.

நிற்க, இக்கொடூர சூழலிலும் காந்தி முடிந்தவரை அடித்து ஆடுவான். காலை ட்யூசனில், சார் மனைவி ராணிஸ்கூல் பிள்ளை மூலம் டம்ளர் பால் கொடுத்து விட, இவன் “சாருக்கு பால் கொடும்மா” என கொடூரமாய் குரல் கொடுப்பான். பையன்கள் பேய்த்தனமாய் சிரிப்பான்கள். சரவணாவில் 11 மணி காட்சி பார்த்துவிட்டு ’சீன்’வாரியாக கதை சொல்வான். அம்மன் பூச்சொரிதல் சமயம் சூப்பர்பாய்ஸ் நடனக்குழுவில் பெண்களை தொட்டெல்லாம் ஆடுவான்.

எங்கள் பள்ளி ஒரு யூகலிப்டஸ் காட்டின் நடுவே ஏகாந்தமாய் இருந்தது. ஸ்கூலையும் தாண்டி அரை ஃபர்லாங் தூரத்தில் ஒரு டீச்சர் ட்ரைனிங் பள்ளி. இந்த டீச்சர் ட்ரைனிங் என்பது பள்ளியும், கல்லூரியும் இல்லாத ஒரு ரெண்டுங்கெட்டான் என கொள்க. 

அதில் தான் ஜெயந்தி படித்தாள்.ஜெயந்தி அழகி. புதுக்கோட்டைக்கு பேரழகி.  மிக திருத்தமான முகம். சற்றே பூனைக்கண்கள். எவ்வித மேக்கப்பும் முகத்தில் இருக்காது. சமயத்தில் பொட்டு கூட. ஆனால் முகத்தில் ஒரு அமைதியும்,ஜொலிப்பும் எப்பவும். அப்போது பத்தொன்பது இருபது வயசு இருக்கலாம். க்ரே கலர் யுனிஃபார்ம் தாவணியில் மிக பாந்தமாய் வருவாள் போவாள். பார் இல்லாத லேடிஸ் BSA சைக்கிளில் மூச்சுமுட்ட மச்சுவாடி மேடு ஏறுவாள். நாங்கள் கர்மசிரத்தையாய் பத்தடி கேப்பில் பின்னாடி போவோம். 

அப்போது ஜெயந்தியின் பெயர் ஜெயந்தி எனக்கூட தெரியாது. பேர் தெரியாவிட்டால் என்ன, என்னவோ ஒரு பரவசத்தில் எதுக்கோ பின்னாடி போவோம். அப்படி தொடர்ந்து கொண்டிருந்த ஒரு நன்னாளில், காந்தி திடீரென “மாப்ள, இப்ப கவனி” என ஏறி மிதிக்க ஆரம்பித்தான். நாங்கள் ஒரு சேஃப்டிக்கு இன்னும் மெதுவாக மிதிக்க ஆரம்பித்தோம். வள்ளியப்பன் ”மாப்ள, நாம வேணா இந்த சந்துக்குள்ள வண்டிய விட்டுருவோம்” என உஷாரானான். 

காந்தி அவள் கிட்டே நெருங்கினான். அவள் வேகத்திலேயே அவன் சைக்கிளையும் மிதித்தான். பதபதைப்பிலோ, இல்லை பொதுவாய் சைக்கிளை மேட்டில் விடுவதாலோ, எங்களுக்கு மூச்சு வாங்கத்துவங்கியது. தலையை திருப்பி என்னவோ சொன்னான் அவளிடம். ஜெயந்தி என் ஞாபகத்தில் சுமார் 20 செகண்டுகளுக்கு திரும்பவேயில்லை. திடீரென அவளும் திரும்பி அவனைப் பார்த்தாள். என்னவோ சொன்னாள். அது காதில் விழாத தூரத்தில் நாங்கள் இருந்தது ஒரு துன்பியல் சம்பவம். 

சுமார் 2 நிமிடத்துக்கு பிறகு காந்தி வண்டியை நிதானமாக்கி எங்களுடன் இணைந்தான். ஒன்னுமில்ல மாப்ள, பேர் கேட்டேன், சொன்னா, வேறொன்னுமில்ல என முடித்துக்கொண்டான். 

அன்றிலிருந்து மிக மெதுவாக, கெமிஸ்ட்ரி லேபில் டைட்ரேஷன் சோதனை செய்வது போல், ஜெயந்தியை நெருங்கத்தொடங்கினான். என்ன எழவு மாயம் செய்தானோ, அவளும் இவனுடன் பேசத்துவங்கியிருந்தாள். சைக்கிளில் சேர்ந்தே போவான் அவளுடன். பொறாமையில் வெந்தே செத்தோம் நாங்கள். 

”டேய் லவ்ஸாடா” என கேட்பதிலேயே ஒரு கிளுகிளுப்பை உணரத்துவங்கியிருந்தோம். காந்தியும் அசராது “ஃப்ரண்சிப் டா மாப்ள” என்பான். என்னவோ ரிலேடிவிடி தியரியை அவன் விளக்கியது போல பொம்பளப்புள்ள கூட எப்டிடா ஃப்ரன்சிப்புங்கிறான் என ஆச்சர்யத்தில் வாயைப் பிளப்போம்.  ஜெயந்தி காந்தியுடன் திருக்கோகர்ண கோவிலில் பரீட்சைக்காக அர்ச்சனை செய்ததாக செய்தி வர, கார்த்தி “..க்காளி, எங்கப்பன் கூட எனக்காக வேண்டிக்கிட்டதில்லடா” என பொருமினான். 

ஒருவழியாய்  +2 முடிய, பொறியியல், மெடிக்கல்,டெண்டல் என அவரவர் சத்துக்கு படிக்கப்போக, காந்தி வாங்கிய 690 மார்க்குக்கு புதுகை ராஜாசிலேயே ஆர்ட்ஸ் சேர்ந்தான். அதன்பிறகு அவனை சந்திக்கவேயில்லை. காந்தி ஞாபக அடுக்குகளிருந்து மறைந்தே போனான், போனவருடம் சுந்தரம் ஃபேஸ்புக்கில் இழுத்துவிடும்வரை. சிங்கப்பூரில் கட்டுமான கம்பெனியில் குவாலிடி டிப்பார்ட்மெண்ட் என வாழ்வில் தாக்குப்பிடித்துவிட்டான்.

போனமாதம் புதுக்கோட்டைக்கு போன அதே சமயம் அவனும் ஊரில். வீட்டுக்கு வந்தேயாக வேண்டும் என வற்புறுத்தினான். சிங்கப்பூர் காசில் புதுகை அவுட்டரில் ஆலங்குடி ரோட்டில் சற்று எடுத்துக்கட்டிய வீடு. நாலைந்து கோழிகள் திரிய, வாசலில் வயசாளி அப்பா ஈசிசேரில் சிரிக்க, உப்பிய கன்னத்தோடு, பெரிய கண்ணாடியோடு “டேய் மாப்ள” என கட்டிக்கொண்டான். 

அவன் மனைவி எங்கே என்பது போல உள்ளே பார்க்கையில்...

அவள் வீட்டின் உள்ளேயிருந்து காபித்தட்டோடு வந்தாள்.

---------------------

முடிவு 1:

சற்று வயசான, உடல் பெருத்த, அன்று பார்த்த அழகும், வசீகரமும் சிறிதும் குறையாத ஜெயந்தி. 


நியாயமாய் இதோடு முடித்திருக்க வேண்டும். ஆனால், வாழ்வின் நிதர்சனங்கள் கதை முடிவைப்போல அழகியலோடு இருப்பதில்லை என நினைப்பீர்களேயானால் இது.


சற்று வயசான, உடல் பெருத்த, எந்தவொரு  அழகும், வசீகரமும் இல்லாத வசந்தி. 

இதில் எந்த முடிவை நீங்கள் தேர்ந்தெடுத்தாலும் கதாசிரியனாக எனக்கு பிரச்சனையில்லை. 

---------------------

முடிவு 2:

அச்சு அசலாய் காந்தியின் சாயலும், வசீகரமும் கொண்ட பத்து வயதுக்குள் சொல்லக்கூடிய ஒரு சிறுமி. 

பேரு ஜெயந்தியாம்.

---------------------

76 comments:

 1. படம் கர்ட்டசி: இளையராஜா..அவர்க்கு என் நன்றிகள்..

  ReplyDelete
 2. நான் முதல் ஆப்ஷனை கிளிக் பண்ணிக்கிறேன் ;)))

  ReplyDelete
 3. ஹை :) நான் கதை முழுசா படிச்சிட்டேன்ன்ன்ன் :)

  யார் சார் இந்த காந்தி? :)))

  ReplyDelete
 4. வார்த்தை கோர்வைகள் அருமை. உதாரணத்திற்கு இது அசத்தல் --> // என்னவோ ரிலேடிவிடி தியரியை அவன் விளக்கியது போல பொம்பளப்புள்ள கூட எப்டிடா ஃப்ரன்சிப்புங்கிறான் என ஆச்சர்யத்தில் வாயைப் பிளப்போம் //.
  கதையின் முடிவைப் பொறுத்தவரை இரண்டு ஆப்சன்கள் கொடுத்திருந்தாலும், காந்தியைப்போன்ற நண்பர்களை சந்தித்திருப்பதாலும், அழகியல் மட்டுமே வாழ்க்கை தருவதில்லை என்ற நிதர்சனத்தாலும் நிச்சயமாய் காந்தி வீட்டிலிருந்து வெளிவந்தது வசந்திதான் என அவதானிக்கிறேன். மத்தபடி எடிட்டிங் கொஞ்சம் அவசியமாய்ப்படுகிறதோ என தோன்ற வைக்கிறது. நன்றி. :-)

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிப்பா கருப்பு..கால் இன்ச் மட்டும் விட்டுவிட்டு சம்மர்கட் செய்திருக்கிறேன் முடிந்தவரை ;)

   Delete
 5. டாப்பிகலாக இன்று ரிலீஸ் செய்திருக்கிறீர்கள். நன்றாக இருக்கிறது. :-)

  வாசகரோடு நேரடியாக உரையாடும் உத்தியெல்லாம் ஓகே. ஆனால் கரு ரொம்பவுமே பழசு. இன்னும் க்ரிஸ்பாக, புதுமையாக செய்யலாம் நீங்க.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஸ்ரீதர்..மேலே சொன்னது தான். முடிந்தவரை கதையின் ஆன்மா கெடாத வகையில் சுருக்கியிருக்கேன்..மத்தபடி சட்டில இருந்தாத்தானே ஆப்பைல வரும் ;)

   Delete
 6. இளையராஜாவின் ஓவியத்தை போல அழகாக உள்ளது உங்கள் கதை :-) சொந்த அனுபவம் என்றும் நினைக்கத் தோன்றுகிறது :)

  amas32

  ReplyDelete
  Replies
  1. ஊக்கத்திற்கு மிக்க நன்றி மா :)

   Delete
  2. ஹஹா..எல்லாரும் சொல்றது தான். ஆனா நிஜமா என் சொந்த அனுபவம் இல்ல. பொதுவா, எல்லா கதையும் புனைவும் இல்ல, நிஜமும் இல்ல, சுஜாதா சொல்றாப்ல ;)

   Delete
 7. நல்ல முயற்சி, வாழ்க, வளர்க!

  ReplyDelete
 8. நன்றி தலைவா..:)

  ReplyDelete
 9. புதுக்கோட்டைக் களம் என்பதால் மட்டுமே பிடித்தது :)

  ReplyDelete
  Replies
  1. என்ன நுட்பமா அடிக்கிறீங்க :)

   Delete
 10. This comment has been removed by the author.

  ReplyDelete
 11. அருமையான நடை!

  முடியும்போது ஙே!

  ReplyDelete
  Replies
  1. முடிவு எடுபடலையா?

   Delete
  2. எதிர்பார்த்ததோ, எடுபடாததோ. ஆனா, பெரியாட்கள் வந்து தப்பு/சரின்னு சொல்லும்போதே தெரிஞ்சிக்கிங்க, நீங்களும் பெரியாள் ஆகிட்டீங்க

   Delete
  3. அவ்வ்..அந்த பெரியாள் நீங்களா :) ஆனா, நீர் பெரியாள் தான். அந்த பரிசல் போட்டிக்கதை இன்னும் நினைவில்..

   Delete
 12. விவரணை சூப்பர் நட்டு (இது இங்க (இந்த வலைப்பூவில்))க்ளீஷேவா?
  ஸ்ரீதரண்ணன் சொன்ன மாதிரி கரு ரொம்ப் ரொம்ப பழசு..

  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராஅம்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸ்ரீ..விவரணைகள் தானே மூலதனம். சம்பவங்கள், கதை முடிச்சுக்கள் யோசிக்கும் திராணியில்லை :)

   Delete
 13. இந்தக்கதையை முழுக்க முழுக்க நாஞ்சிலாருக்கு டரைபியூட் என்கிற வகையில் நீங்கள் எழுதியிருந்தால், அவரின் கதைகளில் தொனிக்கும் கட்டுரைத்தன்மை இதிலும்..
  இதை நாஞ்சிலார் போலவே உள்ளது என பாசிட்டிவாகவும் சொல்லலாம்..கதைபோலல்லாமல் கட்டுரை போலுள்ளது என நெகட்டிவாகவும்...

  அப்புறம்,கதையிலுள்ள சின்னச்சின்ன நுணுக்கமான டீடேயிளிங்குகள் வியக்க வைக்கின்றன.
  நிறைய விஷயங்களை கவனிக்கிறீர்கள்..பால்யத்தில் நடந்த நிறைய விஷயங்களை இணைக்கிறீர்கள்.. அவையனைத்தையும் ஒரு கதைக்கருவில் கொண்டுவர நினைக்கையில் சொல்லவந்ததை விட்டு ஆங்காங்கே அலைந்துதிரிவது போல் தோன்றுகிறது- கதையோட்டம் எங்குமே போரடிக்கவில்லையெனினும்.

  மற்றபடிக்கு சாட்சாத் அந்த சரஸ்வதி தேவியே உங்கள் எழுத்தில் வந்து தாண்டவமாடுகிறாள் என சொல்வது சம்பிரதமானதாய் இருப்பினும் வேறு வழியில்லை. சொல்லித்தான் ஆக வேண்டியிருக்கிறது. சில வார்த்தை பிரயோகங்கள் வசீகரிக்கின்றன. அனாயசமான எழுத்து நடை. பரிசலார் சொன்னதுபோல் எழுத்து உங்கள் சொல்பேச்சு கேட்க ஆரம்பித்து விட்டது- இனியெல்லாம் சுகமே.. ஜமாய்ங்க அண்ணா :-)))

  ReplyDelete
  Replies
  1. இவ்வளவு விரிவான கருத்துக்கு நன்றி குணா..நாஞ்சிலாருக்கு ட்ரிப்யுட், கதையில்லாமல் கதை எழுத வருகிறதா என பார்க்கவே யாம் இதை எழுதினோம் ;)

   Delete
 14. //அவன் மனைவி எங்கே என்பது போல உள்ளே பார்க்கையில்...//


  கதையை நான் இங்கயே முடித்து கொண்டேன்.
  -rAguC

  ReplyDelete
  Replies
  1. நுட்ப கமெண்ட்..என்னான்னு யோசிக்கிறேன்..

   Delete
 15. நான் கூட அந்த பெண் குழந்தையின் பெயர் ஜெயந்தின்னு சொல்லுவிங்களோன்னு நினைச்சேன். #வாழ்க_தமிழ்_சினிமா

  ReplyDelete
  Replies
  1. அட நல்ல மூன்றாவது ஆப்ஷனா இருக்கே :))

   Delete
  2. நல்ல சுவாரச்யமான கதை.தொடர்ந்து எழுதுங்கள். சுஜாதா தெரிகிறார்...
   முடிவு இரண்டாவது எனக்கு ஓகே...
   நடராஜன் சொன்னதும் ஓகேதான்...இரண்டாவது ஆப்ஷந்தான் பெட்டர்...
   இது நாஸ்டால்ஜியா கதை.இங்கு வெகுசமீபத்தில் வந்த பானாகாத்தாடி அதர்வா ஒப்பீடுதான் துருத்திக் கொண்டிருக்கிறது..

   வாழ்த்துகள்...
   -தமிழ்ப்பறவை

   Delete
  3. நன்றி பரணி..அந்த துருத்தலை புரிந்துகொள்கிறேன்..

   Delete
  4. துருத்தலை எடுத்துவிட்டேன்.

   Delete
 16. சுவாரஸ்யம்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சார்..ஃபர்ஸ்ட் டைம் வர்றீங்களோ?

   Delete
 17. ஹஹஹா வசந்தி வந்ததுதான் உண்மை... அப்டி இருத்தலே எதார்த்தமும் கூட :))

  ReplyDelete
  Replies
  1. கரெக்டு..வருகைக்கு நன்றி :)

   Delete
 18. //வாழ்வில் சிலர் இருப்பார்கள், நமக்கு நண்பனாகவும் இல்லாமல், எதிரியாகவும் இல்லாமல்.//

  உங்க ப்ளாக் அருமை.. நிறைய படிச்சா நிறையா ட்வீட்ஸ் தேத்தலாம் போல.. :P

  வாழ்துக்கள் :-)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், ஊக்கத்திற்கும் நன்றி :)

   Delete
 19. //அது காதில் விழாத தூரத்தில் நாங்கள் இருந்தது ஒரு துன்பியல் சம்பவம். //
  நல்ல கதைசொல்லியாய் உருவாகி வாரீங்க வாழ்த்துகள் கதையை முடிக்காமல் ரகு சொன்ன மாதிரி தொக்கி விட்டுருந்தால் ஒரு
  எதிர்பார்ப்பில் படிக்கறவர்களுக்கு கற்பனையை தூண்டிருக்கும் நல்ல டைமிங் ஸ்டோரி ரிலீஸ்

  சும்மா கேட்குறேன் முடிஞ்சா சொல்லுங்க எவ்ளவு நேரம் ஆச்சு

  ReplyDelete
  Replies
  1. நன்றி வினோ..இந்த முடிவு உத்தி என ஆரம்பித்தே எழுதினது.
   காந்தி ஜெயந்தி அன்று தான் திடீர்ன்னு தோனிய ஐடியா..ஹ்ம்ம், 3 ஹவர் ஆச்சு எழுத..டிங்கரிங் 1 மணிநேரம் மேபி..

   Delete
 20. பின்னவீனத்துவ நுட்பங்களின் விட்டுப்போன எச்சங்களைக் கதைக்குள் கரைத்துக் கலக்கும் கற்பனை வளத்தை பாரட்ட வேண்டும். எழுத்தும் ஓட எண்ணங்களும் ஓட அதையும் தாண்டி வேகமாக காந்தியும் ஓட, ஓட முடியாத ஜெயந்தி ஒடுங்கிப் போனதைச் சொல்லியிருக்கிறீர்கள். உங்களுக்கு இளைய இராவணன் பட்டம் குடுக்கலாம். :)

  ReplyDelete
  Replies
  1. ஜெயந்தி ஒடுங்கி போயிட்டாளா :0 இது எனக்கே செய்தியா இல்ல இருக்கு ;) அதாரு மூத்த ராவணன்?

   Delete
 21. கதை கிடக்குது சார் கழுத.. நல்ல ஞாபகசக்தி உங்களுக்கு. உங்க வர்ணனைக்கு தான் காசே!தூள்!! (வசூல்ராஜா)அண்ணா.. சின்ன வயசு பாப்புவ அப்புடியே உரிச்சு வச்ச மாதிரி சொல்றண்ணா ;-)) எல்லா கதைலயும் கூட வர்ற எடுப்பு பாத்திரமாவே இருக்கிங்களே.. நீங்க எப்போ ஹீரோ ஆகப்போறேள்?

  ReplyDelete
 22. நீங்க வந்தாத்தான் களை கட்டுது..கதைல ஹீரோ கதை நம்ம கதையா இருக்கப்படாதா ஹிஹி..”டியர் டாக்டர், என் நண்பனுக்கு” என கடிதம் எழுதும் பயபுள்ள தானே நாம..

  ReplyDelete
 23. காந்தி ஜெயந்தி சிறுகதை படித்தேன். அரசு பள்ளியில் படித்த அனைவருக்கும் காந்தி போல ஒரு நண்பன் பெரும்பாலும் உண்டு. இக்கதையில் உங்கள் வர்ணனைகளை மிகவும் ரசித்தேன். நீங்கள் பாலகுமாரன் ரசிகர் என்பதன் தாக்கம் அதில் தெரிகிறது. சிறிதே கதை நீளம் அதிகம் எனத் தோன்றினாலும், படித்தபின் அது தேவைதான் என்றே தோன்றுகிறது. முடிவு வசந்தியாக இருந்தால்தான் சரியாக இருக்கும் என்பது என் கருத்து. மேன்மேலும் இது போல பல கதைகள் எழுத வாழ்த்துகள். கதைக்கு அந்த நீளம் தேவை. என் அரசு பள்ளி ஞாபகங்களை திரும்ப வரவழைத்ததற்கு நன்றி. Keep Rocking :))))

  R. Saravanan (vrsaran)

  ReplyDelete
  Replies
  1. ஊக்கத்திற்கு மிக்க நன்றி சரவணன் :) கதையின் நீளம் பற்றி பலர் சொன்னார்கள். உங்கள் கருத்தே என்னுதும்.

   Delete
 24. என்னுடைய ஸ்டேட்டஸ் மெசேஜ்களுக்கும் உங்களுக்கும் ஏதோ விகுதொகு இருக்கலாம். நண்பர் ஒருவர் ’The one you love and the one who loves you are never, ever the same person’ என்று போட்டிருந்தார். அதை, What if I love me and me love the I? என்று பகடி செய்து நான் ஒரு அகாகீ போட்டிருந்தேன். படித்து முடித்ததும் நான் எப்போதும் மூன்றாவது நாலாவது முடிவுகளை எடுப்பவன் எனத் தோன்றியது.

  3. என்னடா பாக்கறே.. இது ஜெயந்தியோட தங்கச்சி ஷாந்தி...

  4. சற்று தொலைவே என்னைத் தள்ளிக்கொண்டு சென்றவன், ‘ஆனா, மனசு ஓரத்துல இன்னும் ஜெயந்தியத் தாண்டா நெனச்சு வாழ்ந்துக்கிட்டுருக்கேன். அவளும் அப்படித் தான்... என்ன மாதிரியே, வேற ஒருத்தருக்கு வாழ்க்கப்பட்டு.. ஆனா, என்ன மன்னிச்சிடுறா.. உன்னயே நெனச்சுகிட்டு வாழ்ந்திகிட்டிருக்கா..’

  5.
  6.
  :) :)

  (பதிவிலேயே இளையராஜாவுக்கு நன்றி கூறியிருக்கலாமே.)

  ReplyDelete
  Replies
  1. விகுதொகு? அகாகீ? புது வார்த்தைகளா இருக்கே :)

   சொல்லியிருக்கலாம், மறந்து போய்விட்டது.

   Delete
 25. அண்ணே... வழக்கம் போல கலக்கல். பிடிச்சது.

  ReplyDelete
 26. சுவாரசியமான கதை. நன்றாக இருந்தது :)

  ReplyDelete
 27. WOW...nice read oorz but hated the option in the end. come on, just give ONE damn ending, no more options :P btw, i dont read tamil books much but have read Ramanichandran novels, and an addict, and i say u r upto par with her on entertainment level :D

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஊர்ஸ்..ரமணி சந்திரன் மாதிரி எழுதுறேனா, ஹஹா..Is it a comment or a compliment :D

   Delete
 28. 1. " டேய் நீ ஸ்டீராம் தான'2. கெமிஸ்ட்ரி லேபில் டைட்ரேஷன் சோதனை செய்வது போல். 3."நாங்கள் ஒரு சேஃப்டிக்கு இன்னும் மெதுவாக மிதிக்க ஆரம்பித்தோம்'.
  naan migavum rasitha varigal :)nalla nadai :)
  shaan_64

  ReplyDelete
  Replies
  1. ஊக்கத்திற்கு நன்றி :)

   Delete
 29. விகுதொகு - விட்ட குறை தொட்ட குறை
  அகாகீ - நநிகீ போல அதைகாலைக் கீச்சு :)

  ReplyDelete
 30. வழக்கமான டெம்பிளேட் கதைதான் என்றாலும் சில விவரணைகள் பிடித்திருந்தது... நான் உங்ககிட்ட இன்னும் பெட்டரா எதிர்பார்க்கிறேன் பாஸ் :)

  ReplyDelete
 31. நன்றி திரு. முடிந்தவரை பெட்டராக எழுதுகிறேன்.

  ReplyDelete
 32. nice story! இதை போல எல்லார் வாழ்க்கையிலும் நடந்துள்ள்து. thanks for reminding. Kovai /Tiruppur side no bad book stuff! (none that I have heard off! )

  ReplyDelete
  Replies
  1. நன்றி விஜயசங்கர்..

   Delete
 33. நல்ல சூப்பரா எழுதறீங்க தல :)) அருமையான நடை. வாழ்த்துகள் !!!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி டுபுக்கு..Am honored :)

   Delete
 34. சாரே சிறுகதை - சூப்பர். நெறைய படிப்பிங்கபோல - வீட்டுக்கு வந்தா புக் நெறைய வாங்கிட்டு போகலாம் போல!

  Suresh

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா சுரேஷ் :)

   Delete
 35. லக்கியின் எழுத்தை போல.. பர பரவென பத்திகள்... செம சுவாரஸ்யம்.. முதல் தடவையாக உங்க எழுத்தப் படிக்கிறேன்.... இனிமே ரெகுலராகிடுவேன்

  ReplyDelete
  Replies
  1. நன்றி சார்..முடிந்தால் மத்த பதிவுகளையும் படியுங்களேன்..
   ஆமா, எப்படி என் பதிவுக்கு வந்தீர்கள்? ட்விட்டர் வழியாகவா?

   Delete
 36. ரொம்ப லேட்டா கமெண்ட் எழுதறேன். கதை பத்தி பெரிசா தோணல, ஆனா புதுக்கோட்டை சைல்ட் ஜீசஸ் ல படிச்ச, பல்லாங்குளம் முதல் தெருல இருந்தவன்கிறதனால, களத்தோட விவரிப்பு பிடிச்சிருந்தது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி செந்தில்..நான் ஒரே ஒரு வருடம் சைல்ட் ஜீசஸ்..3வது..

   Delete
 37. விழிகள் அடுத்த வரிக்கு தாவி தாவி படிக்குது .. எளிய சொல்லாளுமை ..!

  ReplyDelete
 38. மிக அருமையான நடை...

  ReplyDelete
 39. Child Jesus, Model School ...ellamey en life la irunthathu antha Teacher Training Jayanthi thavira ;)

  ReplyDelete

பிடித்தால் சொல்லுங்கள்..பிடிக்காட்டியும் சொல்லுங்கள்..;)