Saturday, June 13, 2015

எச்சத்தாற் காணப்ப படும்



ஒரு கையகல அட்டை. போஸ்ட்கார்ட் அளவில். குட்டிகுட்டியாய் ஸ்டாம்ப் குத்த ஏதுவாய் கட்டங்கள். பொக்கிஷமாய் இதை தன் ஸ்கூல் பேகின் குட்டி zipக்குள் வைத்திருப்பாள் குஷி.

பொதுவாய் இதை கையில் இறுக்கமாய் பிடித்திருப்பாள். இங்கு இன்னமும் கோடை காலம் சரியாய் வராத, மிதமான குளிரும், சிலுசிலுவென காற்றும் நிறைந்த காலைவேளைகள்.

எங்கள் வீட்டையும், பள்ளியையும் பிரிக்கும் பெரிய பார்க்கின் ஊடே நடக்கையில் பறந்துவிடப்போகிறதே என பயம் எனக்கு. பைக்குள்ளே வைத்திருந்து, பள்ளி வந்தவுடன் எடுத்துத்தருகிறேன் என்றால் கேட்பாளில்லை.

பள்ளியின் க்ரில்கம்பி போட்ட காம்பவுண்டுக்குள் நுழையும்போதே பரபரப்பாவாள். கண்கள் ஸ்டாம்ப் கேர்ளை தேடும். தேடிக்கண்டுக்கொண்டவுடன் எனை மறப்பாள். ‘வர்றேன்ப்பா’ ‘பை’ கூட வராது. பல பொடிசுகள் சூழ நிற்கும் சிறுமி கர்மசிரத்தையாக ஒவ்வொருத்தரிடமும் அட்டையை வாங்கி, ஒரு முத்திரையை குத்துவாள். ஜென்ம சாபல்யம் அடைந்தாற்போல் குழந்தைகள் தத்தம் கிளாசுக்கு போகும்.

எதற்கிந்த கூத்து? பள்ளி குழந்தைகள் நடந்து பள்ளிக்கு வருவதை ஊக்குவிக்க. குறிப்பாய் குளிர், உறைபனிகாலத்தில் பள்ளிச்சாலையில் வரிசையில் நின்று குழந்தையை இறக்கிவிடுவதற்குள் அத்தனை கார்க்கூட்டம் இருக்கும். கோடையிலாவது நெரிசல் குறையட்டுமே, குழந்தைகள் நடக்கட்டுமே என ஒரு அட்டையை கொடுத்து, நடந்துவரும் அன்றெல்லாம் ஒரு ஸ்டாம்ப் கிடைக்கும்.

சரி, மொத்தமாய் அட்டை முழுதும் ஸ்டாம்ப் கிடைத்தால் என்ன பரிசு கிடைக்கும்? ஒன்றுமில்லை. நல்லவேளை, குஷிக்கு அந்த கேள்வி வருவதேயில்லை.

முடிந்தவரை, காலை மீட்டிங் இல்லாத நாட்களில் அவளை கூட்டிக்கொண்டு பள்ளிக்கு நடப்பது வழக்கம். அவள் கந்தாயத்தில் என் உடற்பயிற்சி வாட்ச்சில் 2 கிமீ நடைப்பயிற்சி கணக்கு ஏறும் என்பதால் எனக்கும் உவப்பே.

பத்தாதற்கு அவளுடன் பேசிக்கொண்டே போகலாம். நமக்கு மிகச்சிறியதாய் தோன்றும் விஷயங்களை, கண்கள் விரிய ஆச்சரியத்தோடு பேசிக்கொண்டே வருவாள். “Don't you know about the Earth project? Seriously" என பெரியமனுஷித்தனத்தோடு எதையாவது சொல்லிக்கொண்டே வருவாள். நான் கேட்டுக்கொண்டே, அவளின் பின்க் கலர் பேகை லஜ்ஜையின்றி என்னவோ அதற்காகவே ஜென்மம் எடுத்தாற்போல் என் முதுகில் மாட்டிக்கொண்டு நடப்பேன். சந்தோஷ மனநிலையில் இருந்தால் மெலிதாய் துள்ளிக்குதித்துக் கொண்டே வருவாள். எதற்கோ ஒரு ஸ்கிப்பிங் கயிறு போன்ற ஒன்றையும் எடுத்துவருவாள். தெருவில் துள்ளிக்குதித்து நடப்பது நின்ற வயதில் நாம் பெரியவர்களாகிறோம்.

பல நாட்கள் பள்ளிக்கு நடந்து போனாலும் ஸ்டாம்ப் கிடைக்காது. பல இடையூறுகள். பள்ளிக்கு வகுப்பு வாரியாக பல வாயில்கள் என்பதால், ஸ்டாம்ப் கேர்ள் எங்காவது போய் நின்றிருப்பாள். குஷி தன் தோழி யாரையாவது ஆள் சேர்த்துக்கொண்டு அவளை தேடுதேடு என தேடுவாள். நான் அங்கேயே மருகுவேன். ‘நீ கிளம்பு’ என்பதுபோல் பார்ப்பாள். குஷி பள்ளிக்குள்ளே போகும்வரை எனக்கு நிம்மதியில்லை.

இல்லை, சில நாட்கள் ஸ்டாம்ப் கேர்ள் இருக்கமாட்டாள். அல்லது நாங்கள் கொட்டுவாயில் பள்ளிக்கு போய் சேர்ந்திருப்போம். நேரமாகிவிட்டது என வகுப்புக்கு கிளம்பியிருப்பாள். குஷி உன்னால் தான் நான் தாமதமாய் வந்தேன் என என்னை முறைப்பாள். அவள் ஏழரை மணி வரை தூங்கியது, பாத்ரூமில் கனவு கண்டது, ஒரு டம்ளர் பாலை அரைமணிக்கூர் குடித்தது போன்றவற்றை சொல்வதில்லை நான். அன்பிற்குரியவர்களிடம் தர்க்கம் தேவைப்படுவதில்லை.

நேற்றும் இப்படித்தான். 8.25 ஆகிவிட்டது. இனி பள்ளிக்கு நடந்துசெல்ல வாய்ப்பில்லை. ஆனால் குஷி அன்று நடந்து செல்வதை வெகுவாக எதிர்ப்பார்த்திருந்தாள். அவள் அட்டை நிரம்ப அவளுக்கு தேவை ஒரேயொரு ஸ்டாம்ப். முதல்நாள் இரவிலிருந்தே அதை பற்றிய நினைப்பு . இன்று நடந்து செல்வது சாத்தியமில்லை என உணர்ந்தவுடன் அழத்தயாராய் இருந்தாள். கண்கள் சட்டென கலங்கிவிடும் இயல்பினள்.

“சரி, அப்பா உன்ன ஸ்கூல் பின்னாடி இருக்குற இடம் வரை பாதி தூரம் கார்ல கொண்டுவிடுவார். அங்கருந்து நடந்துபோவியாம். நேரத்துக்கு போயிடலாம். நடந்தமாதிரியும் இருக்கும்” மனைவி எனக்கு ஜாடை கொடுத்துக்கொண்டே சொன்னாள். பலநேரங்களில் ஆபத்பாந்தவனாய் காத்துவிடுவாள்.

குஷி அரைமனதாய் சம்மதித்தாள். ஒரு கிலோமீட்டர் தான் என்பதால் சடுதியில் காரை பள்ளி மைதானத்தை பார்த்துக்கொண்டிருக்கும் தெரு முக்கு ஓரத்தில் நிறுத்திவிட்டு நடக்க ஆரம்பித்தோம். அதுவரை பள்ளிக்கு நடந்து வந்தவர்கள் வரும் பாதையில் நாங்களும் இணைந்தோம். பள்ளி காம்பவுண்டுக்குள் நுழைந்தோம். பரவாயில்லை நேரத்துக்கு வந்தாயிற்று. 

எப்போதும் போலான காலை எட்டரை மணி பரபரப்பு. ரெயின்கோட் அணிந்துகொண்டு, பள்ளிக்கு வரும் கார்களை திறந்துவிட்டு ‘ஜருகண்டி’க்கொண்டிருந்தனர் ஆசிரியர்கள். ”சீக்கிரம் சீக்கிரம்”என நடத்திக்கூட்டிக்கொண்டு வரும் பெற்றோர்கள். ஆங்காங்கே விளையாடிக்கொண்டு, அரட்டை அடித்துக்கொண்டும், பள்ளிக்குள்ளே நுழையும் கடைசி நிமிடம் வரை விளையாடும் ஆசையில் குழந்தைகள்.
ஸ்டாம்ப் கேர்ள் இன்னமும் இருந்தாள். குஷியின் கண்களில் திடீர் மலர்ச்சி. "There she is" என ஓட்டமாய் ஓடினாள். நான் அவள் பையை தூக்கிக்கொண்டு பின்னாலேயே நடந்தேன். ஸ்டாம்ப் சிறுமியிடம் என்னவோ பேசினாள், சிரித்தாள்.

அப்போது தான் ஸ்டாம்ப் அட்டையை மறந்துவிட்டாளே என உறைத்தது. நான் ஸ்கூல்பேகை திறந்து அந்த அட்டையை எடுத்து குஷியையும், அந்த சிறுமியையும் நெருங்கினேன்.

”வெயிட்..அதெதுக்கு? உள்ள வைப்பா” என சற்றே கடுக்கடுத்து குஷி அவளிடமிருந்து விலகினாள். ”அவள் என் கிளாஸ் தாம்ப்பா. அதான் போய் பேசினேன்”

”சரி ஸ்டாம்ப் வாங்கிக்கலையா குஷி?”

“நான் தான் இன்னிக்கு முழுசா நடக்கலையே”

குழந்தைக்கு நேர்மையை கற்றுத்தர வேண்டாம் நாம்.
இருப்பதை..

குஷி பள்ளிக்குள்ளே போய்விட்டிருந்தாள். நான் அவள் போன திசையை பார்த்துக்கொண்டிருந்தேன்.

+++++++

3 comments:

  1. Great Sir, good lession. Even we were also like kushi in our childhood

    ReplyDelete
  2. மகிழ்ச்சியோடு இருக்கும் தருணங்களில் குழந்தையின் நடையில் இருக்கும் துள்ளல் அற்புதமானது. என் மகன் அந்த வயதைக் கடந்து கொண்டிருக்கிறான்.the innocence and the simplicity of their world is truly beautiful. அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  3. மகிழ்ச்சியோடு இருக்கும் தருணங்களில் குழந்தையின் நடையில் இருக்கும் துள்ளல் அற்புதமானது. என் மகன் அந்த வயதைக் கடந்து கொண்டிருக்கிறான்.the innocence and the simplicity of their world is truly beautiful. அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

    ReplyDelete

பிடித்தால் சொல்லுங்கள்..பிடிக்காட்டியும் சொல்லுங்கள்..;)