Friday, March 20, 2015

சிறுகை அளாவிய கூழ்




வீட்டில் ஊர்ப்பட்ட அலமாரிகள். எல்லா அறையிலும் படுக்கைக்கு இருபுறம், உயரமாய், ட்ரெஸ்சரோடு சேர்ந்தது என. என் பெற்றோர் இங்கு வந்து தங்கிய போது உபயோகித்த அறையின் அலமாரிகளை ஒழித்துக் கொண்டிருந்தேன். அப்பாவின் விபூதி, டாபர் ஆம்லா கேசதைலம் வாசனை இன்னமும் அங்கங்கே.

அம்மாவின் படுக்கைக்கு பக்கத்தில் 2 ஷெல்ஃப் கொண்ட ஒரு சிறிய Nightstand உண்டு. மேல் அடுக்கில் சில காலாவதி மாத்திரை ஸ்ட்ரிப்புகள், மங்கையர் மலர்கள், அவள் விகடன் 30 வகை குழம்புவகைகள், ஒரு ரமணிசந்திரன், நீரிழவு நோயாளிகளுக்கான கையேடு என கலந்துக்கட்டி இருந்தது. எல்லாவற்றுக்கும் அடியில் ஒரு புத்தகத்திலிருந்து கிழிக்கப்பட்டது போல் சில அச்சடித்த காகிதங்கள். என்னவென்று குனிந்து படித்தேன்.

‘யம பயத்தை போக்கும் ஸ்லோகங்கள்’. கருடபுராணம் புத்தகத்திலிருந்து கிழிக்கப்பட்டிருந்தது என தெரிந்தது.

ஒரு நிமிடம் சற்று தூக்கிவாரிப்போட்டது. எப்போது, எதற்காக இதெல்லாம் சொல்லஆரம்பித்தாள்?

அம்மா எளியவள். அவள் உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறவள் இல்லை. 3 குழந்தைகளை வளர்த்து, நாள்தோறும் சோறுபொங்கி, எப்போதேனும் LTC போய், 10 வருடம் படுக்கையில் இருந்த மாமியாருக்கு மலஜலம் துடைத்து, சற்று கடுமையான மாமனாரை சமாளித்து தன் காலத்தை ஓட்டியவள். அனு இருக்காளா, குஷி என்ன பண்றா, பேசச்சொல்லு, வீடு வாங்கறியா பார்த்து செய் என்பதோடு கடந்த 10 வருடங்களாக தொலைபேசி உரையாடல்கள் முடிந்துவிடும். ரொம்ப போனால் ஜெயா டிவியில் மார்கழி உத்சவம் பார்க்கச்சொல்வாள்.

அப்படி நிறைய பேசிய தருணங்கள் பெரும்பாலும் சண்டையாகவே இருந்திருக்கின்றன. சரிக்கு சமமாய், நம்மை விட அதிகமாய் உழைக்கும் மனைவியிடம் சத்தம்போட இயலுவதில்லை. அம்மாவிடம் அதிக உரிமை எடுத்துக்கொண்டு விடுகிறோம். இங்கு போனவருடம் வந்த போதும். உண்மையிலேயே உப்பு பெறாத விஷயம் தான். அம்மா பார்த்து பார்த்து சமைப்பதை நாங்கள் அக்கறையாய் உண்பதில்லையாம். பேச்சு வளர்ந்து எங்கோ வந்து நின்றது. அப்பா அமைதியாய் பார்த்துக்கொண்டு இருந்தார்.

தனியாய் கூப்பிட்டு “அம்மாவுக்கு முன்ன மாதிரி ஹெல்த் இல்லப்பா. ஷுகர்ங்கிறா, கொஞ்சம் நடந்தா உக்கார்றா, எங்க போனாலும் நான் வரலை கால் வலிக்கும்கிகிறா. அதனால கூட மூட் சேஞ்சஸ் இருக்கும்ப்பா. நம்மதான் பார்த்துப் போகனும். ஏதோ ஓடுதுன்னு வெச்சுக்கோயேன்” என்றார். அம்மாவின் வேலைக்கு போகும் ஆசையெல்லாம் நிறுத்தி முழுமையாக தன் ஆளுமையில் வைத்திருந்தவர். காலம் எல்லோரையும் கனிய வைக்கிறது.
அம்மாவுக்கு எங்கோ மனதின் ஆழத்தில் தன் உடல்நலத்தை பற்றி, தன் மாமியார் போல் தானும் ஆகிவிடுவோமா என பயம் வந்திருக்க வேண்டும். அந்த காகிதத்தை பார்த்ததிலிருந்து அம்மாவிடம் கத்துவது குறைந்து போயிருந்தது.

நேற்றுவரை திடமாய் எந்த முடிவும் இல்லை. ஆகஸ்ட்டில் ஒரு விசேஷத்துக்கு குடும்பத்தோடு போவதாகதான் ப்ளான். ஒரு சின்ன யோசனை மனதில் ஓடிக்கொண்டிருந்தது. மனைவியிடம் பகிர்ந்துகொள்ள அவள் என்னை விட ஆர்வமாய் இறங்கினாள். கூடவே ’பத்து நாளுக்கு மேல போகாத. பாப்பாவும் நானும் கஷ்டப்படுவோம்’. என்னென்னவோ தேடினாள். நானும். நான் குழப்பவாதி. ’எல்லாம் காஸ்ட்லியா வருதுடி’ என கிட்டத்தட்ட கைவிட்டேன். குஷி "போகலியா சாரிப்பா” என்றாள். அனு பொறுமையாய் தேடினாள். தொலைபேசினாள். பல தெரிவுகளை முன் வைத்தாள்.

ஏப்ரல் 2 அன்று என் அம்மாவின் பிறந்தநாளுக்காக யாருக்கும் சொல்லாமல், 14000 கிலோமீட்டர் 26 மணி நேரம் பாதி உலகம் பறந்து, அவள் முன் போய் நிற்கப்போகிறேன்.

எங்கள் சிறிய திருச்சி வீட்டில் அம்மா,அப்பா,இரு தங்கைகள் குடும்பம்,அவர்கள் கணவர்கள், குழந்தைகள்,மாமியார் என குழுமியிருக்கும் காலைவேளையில் போய் நிற்கையில் எப்படி என்னை எதிர்கொள்வார்கள் என இப்போதே மனது சிறகடிக்கிறது. எண்ணமே சந்தோஷத்தை தருகிறது.
அம்மா “ஏண்டா செலவழிச்சிண்டு வந்துருக்க” என கேட்கக்கூடும். என் மனமே ஒரு பக்கம் என்னத்துக்கு இந்த சர்ப்ரைஸ், டிராமா எல்லாம் என கேட்காமலில்லை.

குறைந்தபட்சம், நான் கூட இருக்கும் 10 நாட்கள் கருட புராணத்தை மறப்பாள் அல்லவா?

+++++++++++++

பி.கு: "மண் பார்த்து பொங்கியது பொங்கல் - வண்ண 
நிறம் பார்த்து பொங்கியது மனசு”

இந்த பதிவுக்கு பொருத்தமான படத்துக்கு யோசித்தேன். இந்த வீடியோவை விட பொருத்தமாக எதுவும் தோன்றவில்லை. என அதையே வைத்துவிட்டேன். இந்த விளம்பரம் மனதுக்கு அத்தனை நெருக்கம். ஒவ்வொரு தடவையும் இந்த வரி வரும்போது கண்கள் உகுக்கும்.

2 comments:

  1. கொடுத்து வைத்த அம்மா! :-) நெகிழ்ந்து உருகிடுவாங்க... வாழ்த்துகள் உங்களுக்கும் அம்மாவுக்கும்!

    ReplyDelete
  2. தல. நெகிழ வெச்சுட்டீங்க. எனக்கும் சேர்த்து அம்மாவுக்கு ஒரு hug குடுங்க.

    ReplyDelete

பிடித்தால் சொல்லுங்கள்..பிடிக்காட்டியும் சொல்லுங்கள்..;)