Sunday, March 1, 2015

இரவச்சம்



அப்படி போய் நின்றதில்லை இதுவரை. எல்லாம் ஒருவாய் காபிக்கான ஆசை, இல்லை ஓசி காப்பிக்கான ஆசை.

மெக்டொனால்ட்சில் ஒரு வாரத்துக்கு வசந்தகாலத்தை வரவேற்று எந்த நேரம் போனாலும், எத்தனை தடவை போனாலும் காப்பி இலவசம். பெயரளவில் வசந்தகாலம். காலமாற்றத்தில் முதுமையியல்புகள் தள்ளிப்போயிருப்பதை போல, இப்போதெல்லாம் ஃபிப்ரவரி, மார்ச் தான் பனிப்பொழிவு ஊரையே வெளுத்துக்கட்டுகிறது. வெள்ளைக்காடாய் ஊர்.

என்ன பெரிய காப்பி? இதென்ன தஞ்சாவூர் காபி பேலஸ் ஃபில்டர் காப்பியா? மொட்டைத்தண்ணியாய் ஒரு காபித்தண்ணி. என்னதான் கேட்டுவாங்கி அதில் கள்ளிச்சொட்டாய் 18% பால்கொழுப்புடன் க்ரீமர் சேர்த்தாலும், வள்ளுவன் சொல்லும் ‘தெண்ணீர் அடுபுற்கை’ தான்.

இந்த காப்பிக்கு பின்னான உளவியலும், வியாபாரமும் சற்று புரிந்தது. எப்போதுமே என்னால் வெறும் காப்பிக்காக போய் நிற்க முடிந்ததில்லை. மகளை மாலை பள்ளிவிட்டு அழைத்துக்கொண்டு வருகையில், எதிரில் மெக்டொனால்ட்ஸ் தெரியும். “ஏதும் சாப்பிடறியா” என நான் கேட்க காத்திருப்பாள். “ஃப்ரைஸ்” ”மஃபின்” “குக்கீஸ்” என எதுவோ ஒன்றை சொல்வாள். அதை வாங்கித்தந்துவிட்டு “One small coffee too" என ஓசிக்காப்பியை வாங்கிவருவது. இந்த ஒரு வார டேட்டாவை வைத்து, ஏதும் அவுட்சோர்சிங் கம்பெனியை வைத்து ஆஃப்ஷோரில் Campaign Analytics ஓட்டக்கூடும்.

நேற்று மாலை எங்கோ கிளம்புவதற்கு முன் எங்கோ கிளம்பினேன். ஆணுக்கு எப்போதுமே “ஒரு பத்து நிமிஷத்துல வந்துர்றேம்மா” எங்கோகிளம்புதல்கள் உண்டு. சனிக்கிழமை என்பதால் இருவருமே பின்மதியம் சற்று தூங்கி எழுந்திருந்தோம். வெறும் ரசம், வெண்டைக்காய்க்கே அசத்தியிருந்தது.

“டீ போடனுமா” நீ போடு என்பதே தன்னிலை, முன்னிலை, படர்க்கை எல்லாம் குழப்பி இப்படி வந்திருந்தது.

பொதுவாய் நான் தான் வீட்டில் காப்பியோ, டீயோ சேர்த்து போடுவது. என்னளவுக்கு அவளுக்கு பழக்கமில்லை. இல்லாமல் கூட இருந்துவிடுவாள். ”உனக்கு வேண்ணா போட்டுக்கோ” என்பது பத்து வருடத்தில் “எனக்கும் கொஞ்சம் போடு” என்பதில் நிற்கிறது.

“இல்ல 5 மணிக்குள்ள கடை சாத்திருவான். வெளில பார்த்துக்கறேன்”

போன வேலை முடிந்து, பக்கத்தில் ஒரு எலக்ட்ரானிக்ஸ் கடையில் பராக்கு பார்த்து, மெக்டொனால்ட்ஸ்க்கு வந்திருந்தேன். வேறெதும் வாங்குவதற்கில்லை. மாலை போகுமிடத்தில் டின்னர் உண்டு. மதியசோறு இன்னமும் செரித்திருக்கவில்லை.

“What would you like to have Sir"

"Just your small coffee" அவன் பின்னே ஒட்டியிருந்த ஓசிக்காப்பி அட்டையை மெல்ல கண்ணால் ஜாடை காட்டினேன்.

“Sure. How would you like to have it?"

"Just black" உன் பால்,சர்க்கரை எல்லாம் வேணாம் என ஓசிக்காப்பி என்றாலும் என்னாலான பெருந்தன்மை.

அனு ஏதும் குடித்திருக்க மாட்டாள்.

“Wait..Can I have 1 more coffee for my wife?"

இங்கு மனைவிக்கு என்பது தேவையே இல்லாதது என்பது சொன்னபிறகே உறைத்தது.

“..Sure. How would do you like to have that?"

அவன் ஒரு வினாடிக்கும் குறைவாய் தயங்கினது போல் இருந்தது. அது என் கற்பனையா, உண்மையா தெரியவில்லை. எவ்வளவு ஓசிக்காப்பி வாங்கிக்கொள்வாய் என நினைத்தானோ? அவன் மறுத்திருந்தால் என்ன செய்திருக்கமுடியும் என்னால்? எதற்கு கேட்டு தொலைத்தேன்?

இரப்பது இறப்பதை விட கடினமானதோ? இரப்பவரது உயிர் தினமும் போய் போய் வருகிறதோ?

வெளியே வருகையில் காப்பி கோப்பைகள் கையில் அதனியல்பை தாண்டி கனமாக இருந்தது.

++++++++++++

4 comments:

  1. ஓசி காபிய கூட குடிக்க முடியல. ச்சே என்ன கொடுமை டா இது

    ReplyDelete
  2. ஓசி காபிய கூட குடிக்க முடியல. ச்சே என்ன கொடுமை டா இது

    ReplyDelete
  3. There are No free lunches. எதுவும் ஓசி இல்லை. ஓசி காபி கூட குற்றவுணர்வு சேர்த்தே வருகிறது.

    ReplyDelete

பிடித்தால் சொல்லுங்கள்..பிடிக்காட்டியும் சொல்லுங்கள்..;)