Monday, February 16, 2015

0ºF

 (சீரோ டிகிரி ஃபேரன்ஹீட்)



அந்த ட்வீட்டை பார்த்திருக்கக்கூடாது. எல்லாம் அதில் ஆரம்பித்தது. பிழைத்துக்கிடந்தால் முதலில் ட்விட்டரையே தலைமுழுகனும். ஃபேஸ்புக்கையும் சேர்த்து. ஏன் இணையத்தையே. பிதற்ற ஆரம்பித்திருந்தேன்.

ஒரு சோகையான ஞாயிற்றுக்கிழமையாகத்தான் நாள் ஆரம்பித்தது. அனு வாரயிறுதிகளில் மட்டும் ஏதாவது வக்கனையாக சமைப்பாள். அவளை நேரில் கண்டால் ’ஞாயிறு மட்டுமா’ எனக்கேட்டு, ஒரு விவாகமுறிவுக்கு காரணமாகாதீர்கள். பிசிபேளாபாத் + உருளைக்கறி என தமிழக சைவர்களின் சம்பிரதாய சண்டே சமையல். சாப்பிட்டவுடன் நினைத்தது போல் சிறுதூக்கம் போட்டிருக்க வேண்டும். போடாது ட்விட்டரை எட்டிப்பார்த்ததில் ஆரம்பித்தது வினை.

”திருவாதிரை களி & கூட்டு  pic.twitter.com/K9CBaivBUh”

நிலாமகள் போட்ட ட்வீட். அதாவது சமைத்ததை படமெடுத்து போட்டது. களி குழையாது திரிதிரியாய் படத்தில் பார்க்க நன்றாகத்தான் இருந்தது.

நிலாமகள் உண்மையான பெயர் என்னவாக இருக்கும்? அது இருக்கட்டும். இன்னைக்கு திருவாதிரையா?

நிலாமகளுக்கு மென்ஷன் செய்து கேட்டதில் ஆமாம் என பதில். அம்மாவுடன் இருந்தவரை திடீரென ஒரு நாள் சம்பிரதாய சமையல் இல்லாது அசட்டுத்தித்திப்புடன் ஒரு களியும், ஏழுகறி கூட்டும் சமைத்தால் அன்று திருவாதிரை. அனு எப்படி மறந்தாள்? பொதுவாய் இது போன்றவற்றை மறப்பாளில்லை. என்னை விட பக்திக்காரி. ஆனால் கேட்க இயலாது. வேலையும், குழந்தையுமாய் என்னைவிட அவளுக்கு நெருக்கடி ஜாஸ்தி.

அட, திருவாதிரை என்றால் கோவிலில் ஆருத்ரா தரிசனம் இருக்குமே?

தஞ்சாவூர் ஜில்லாக்காரர்களுக்கு இயல்பாகவே சிவனிடம் ஒரு வாஞ்சை உண்டு. சிவன் சற்று கடுகடு சாமி. முருகா, கணேசா, கிருஷ்ணா என கொஞ்ச முடியாது. ஏண்டாப்பா படுத்தற என்ற உரிமைமீறல்கள் செய்ய இயலாது. ஆனால் உள்ளுக்குள் நெக்குருக வைக்கும் சாமி.

”நான் ஈவினிங் கோவிலுக்கு போறேண்டி”

“நான் வரமுடியாது. வந்து..”

”புரியுது. நான் போறேன்”

“சிவசத்தியநாராயணாவா, கற்பக விநாயகரா?”

“சிவசத்தியநாராயணா கோயில் தான்”

வசிப்பது டொராண்ட்டோ, புலம்பெயர் தமிழர்களின் தலைநகரம் என்றபடியால் கோவில்களுக்கு பஞ்சமில்லை. வசித்த பேட்டையிலேயே சாமிக்கு ஒன்றாய், இனக்குழுவுக்கு ஒன்றாய் கோவில். வட இந்திய ராம் மந்திர் ராமநவமிக்கு, சதுர்த்தி என்றால் கற்பகவிநாயகர், எல்லா சாமிக்கும் வேகமாய் சலாம் போட்டு லட்டு பிரசாதம் என்றால் குஜராத்தி ஹிந்து சபா என இந்த ஊர் ஒரு அகண்ட பாரத விலாஸ்.

சிவசத்தியநாராயணா கோவில் நம்மூர்க்காரர் கோவில். சந்துரு குருக்கள் என்ற வேலூர் பக்க ஐயர் ஒருவர் முதலில் தான் வந்து காலூன்றி, கரணம் போட்டு ஒரு குடவுன் கட்டடத்தை கோவிலாக மாற்றி, இளையாண்குடி ஆதீனத்திலிருந்து சல்லீசாய், ரிலீஜியஸ் ப்ரீஸ்ட் விசாவில் 2 பையன்களை வரவைத்து மைக்கில் சத்தமாய் ருத்ரம் சொல்லவைத்து, ‘அர்ச்சனா ஸ்பான்ஸர்ஸ் ப்ளீஸ் பய் டிக்கட் இன் ஆபீஸ்’ என கல்லா அவர் கண்ட்ரோலில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளும் கோவில்.  உள்ளே நுழைந்தால் நம்மூர் கோவில் போலவே இருப்பதால் எனக்கு பிடித்தம்.

ஆறுமணி நடைதிறப்புக்கு கிளம்புவதற்குள் இருட்டி விட்டிருந்தது. மணி ஐந்தரை கூட ஆகியிருக்கவில்லை. கனடாவின் குளிர்காலத்துக்கென ஒரு குரூர முகம் உண்டு.

”ஸ்னோ பெய்யறது வெளில. எப்படி போவ?”

“ரொம்பல்லாம் இல்ல. அப்படியே போயிடுவேன். இன்னிக்கு ட்ராஃபிக் இருக்காது”

“அப்படியே வர்றப்ப வால்மார்ட்ல வாங்கிடு” என லிஸ்ட் வந்தது. 

முக்கால்வாசி பாப்பாவுக்கான பள்ளி உணவுத்தேவைகள். பாப்பாவுக்கென்றால் தட்டிக்கழிப்பதில்லை. “என்ன பாப்பா பாப்பான்னுட்டு? எட்டு முடியப்போகுது” என்பதையும் சட்டை செய்வதில்லை.  

அவசரமாய் கிளம்பியதில் உடனே கவனிக்கவில்லை. சற்றுப்போன பிறகே காரின் பெட்ரோல் இண்டிகேட்டர் கடைசிக்கோட்டுக்கும் வெளியே விட்டுவிட்டு ஒளிர்வது தெரிந்தது. விட்டுவிட்டு ஒளிர்வது பிரச்சனையில்லை. தொடர்ச்சியாக ஒளிர்ந்தால் தான் ஓடும் ஆயுசு கம்மி.

பெட்ரோகனடா அட்டை என்ற வஸ்து கையில் இருந்தததால் அவர்கள் பன்க்கை தேடிக்கொண்டே ஓட்டினேன். லிட்டருக்கு 3 செண்ட் சேமிக்கலாம். அதாவது இந்த ஊர் 3 பைசா. மொத்தமாய் 50 லிட்டர் போட்டால், ஒன்றரை டாலர். ஒரு ப்ளாக் காப்பிக்காச்சு. சாலையின் நான் போகும் பக்கத்தில் ஒரு பெட்ரோகனடாவும் தென்பட காணோம். வேறு சில கம்பெனிக்காரர்கள் பன்க் தான் கண்ணில் பட்டது. வேண்டாம், ஒரு லிட்டருக்கு 3 செண்ட். ஒரு வரக்காப்பியாச்சே. 

கோவிலுக்கு போய்விட்டு வரும் வழியில் ஒரு பெட்ரோகனடா பார்த்த ஞாபகம். அதுவரை தாங்கும். என் காரை பற்றி எனக்கு தெரியும். ஒரு நண்பனை போல், வாழ்க்கைத்துணையை போல், வண்டியும் பழகிவிடுகிறது. தேவைகள், அதீத அழுகைகள், எச்சரிக்கைகளை புரிந்துகொள்ள முடிகிறது. புரிந்து உதாசீனப்படுத்தவும் முடிகிறது.

கோவிலில் மிதமான கூட்டம். ஆருத்ரா தரிசனம் முடிந்துவிட்டிருந்தது. ஒரு தேர்ந்த பொம்மலாட்டகாரன் ஆட்டுவிப்பது போல், மக்கள் சாமி கும்பிட்டு விட்டு, பிரகாரம் சுற்றிவந்து, நவக்கிரகம் சுற்றி, உண்டியலில் காசு போட்டு, பிரசாதம் வாங்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள். கழுகுப்பார்வையில் ஒருநாள் எந்த கோவிலையாவது கவனிக்க வேண்டும். மனம் ஏன் இப்படி கண்டதும் யோசிக்கிறது? இன்று சிவனை கவனிப்போம்.

சிவலிங்கத்துக்கு பட்டுவேட்டி கட்டியிருந்தார்கள். கொஞ்சம் நன்றாகவே வேண்டிக்கொண்டேன். போனவருடம் பட்ட பாடு அப்படி. வாழ்க்கை கடுமையாக மாறமாற மனம் எந்த உதவியையும் ஏற்க தயாராகிவிடுகிறது. கடவுளிடம் இறைஞ்சுதல் அதில் முதன்மையாய் போய்விடுகிறது. கோவிலை விட்டு கிளம்புகையில் பிரசாதத்துக்கு வைத்த களியை கொஞ்சம் வாயில் போட்டுக்கொண்டேன்.

”சௌக்கியமோன்னோ”

கோவில் ஆபிசில் சந்துரு குருக்கள் தென்பட்டார்.

“சௌக்கியம் மாமா”

“வர்றதில்லையே ரொம்ப. வேலையோ?”

“ஆமாம் மாமா, சரி கெளம்பறேன்”

“ம்ம்ம்”

சந்துரு குருக்கள் தொடர்ச்சியாய் சத்தியநாராயணபூஜை, ஆஞ்சநேயருக்கு வடமாலை, வைகுண்ட ஏகாதசி, அபிஷேகம் என பலதுக்கும் 50,100 டாலர் என உபயதாரராய் இருக்கச்சொல்லிக்கேட்டு சலித்திருந்தார். என் கோவில் செலவுகள் 2, மிஞ்சிப்போனால் 5 டாலரை தாண்டுவதில்லை. முழு அபிஷேகத்தை உட்கார்ந்து இருமணிக்கூர் பார்க்கவும் பொறுமையில்லை. இவனால் கோவிலுக்கு பெரியதாய் பிரயோஜனமில்லை என நினைத்தோ என்னவோ, ரொம்ப சௌஜன்யமாய் சிரிப்பதில்லை இப்போதெல்லாம்.

யோசித்தபடி வண்டியை கிளப்பினேன். அடுத்தது வால்மார்ட். இல்லை பெட்ரோல். ஒரு கிலோமீட்டரில் டாம்க்கன் ரோடு சந்திப்பில் ஒரு பெட்ரோகனடா உண்டு. காரின் வயிற்றை ரொம்ப காயப்போடக்கூடாது. ஏற்கனவே வண்டியை பெரியதாய் பராமரிப்பதில்லை. சரியாய் துடைப்பது கூட இல்லை. ஆனா பாவம், ஒரு பழகிய குதிரை போல் அமைதியாய் இழுத்த இழுப்புக்கெல்லாம் வருகிறது.

இப்போது கார் தானாய் மெதுவாகச் செல்ல தொடங்கியிருந்தது. என்ன நடக்கிறது என நொடியில் புரிந்தது. 

“டேய், இப்போ வேணாம். பாலத்தை தாண்டினா..”

வண்டி கேட்பதாயில்லை. விக்குவது போல சற்று அலைந்து, ஆக்சிலேட்டரை தாண்டிய சுதந்திரத்தோடு மெல்ல ஊர்ந்து நின்றே விட்டிருந்தது. சிறிது தூரத்தில் பெட்ரோகனடா ஒளிர்ந்தது. பாலம் ஏறியிருந்தால் பன்க். அடச்சை..

மனம் வேகமாய் யோசித்தது. ஒளிர்ந்து அமிழும் எமர்ஜென்சி லைட்டை முதலில் போட்டேன்.  கும்மிருட்டில் பின்னால் வேகமாய் வந்த கார்க்காரர்கள் இடிப்பது போல் வந்து, சுதாரித்து, மனதுக்குள் திட்டி, முறைக்க ஒளியில் என் முகம் தேடி, அடுத்த லேனுக்கு நகர்ந்துகொண்டிருந்தார்கள். யாரும் நிறுத்தவில்லை, என்ன ஏது என கேட்கவில்லை. ரோட்டில் ஈ,காக்கா இல்லை. அருகில் ஒரு சாலையோர விளக்கு கூட இல்லை.

ஹீட்டர் ஃபேன். அந்த சனியன் தான் காரணம். என் கணிப்பில் இன்னும் 5 கிலோமீட்டராவது ஓடவேண்டியது. வண்டியின் ஹீட்டர் ஃபேன் பெரியதாய் வைத்து அது மிச்சமிருந்த பெட்ரோலை வேகமாய் குடித்திருக்கிறது. 
வண்டியின் அத்தனை லைட்களையும் அணைத்தேன். சாவியை திருப்பி மறுபடி இயக்க முற்பட்டேன். கொஞ்சம் ஓடினால் போதும். ம்ஹூம் கார் கிளம்புவதாயில்லை.

வெளியே பனி சற்றே தடித்த வெண்துகளாய் சீராக பெய்து கொண்டிருந்தது. குளிரை பொருட்படுத்தாது வண்டியை விட்டுவிட்டு பன்குக்கு நடக்கலாம். ஆனால் காரை அப்படியெல்லாம் விட்டுவிட்டு போகக்கூடாது. போனாலும் நம்மூர் போல் 2லிட்டர் கோக் பாட்டிலில் பிடித்து தரமாட்டான்கள். யாரையேனும் அழைத்தேயாகவேண்டும். ஒழுங்காய் வருடாந்திர கார் ரோட்சைட் சர்வீஸ் எடுத்துத்தொலைத்திருக்கலாம். இப்போது கூப்பிட்டால் வந்து ஒரு லிட்டர் பெட்ரோல் தர 50, 60 டாலர் தாளித்துவிடுவார்கள். ஒன்றரை டாலர் சேமிக்க ஆசைப்பட்டு 60$ செலவு..

நண்பர்கள் யரரையாவது அழைக்கலாமா என ஃபோனை நிமிண்டினேன். சட்டென கணேஷின் ஞாபகம் வந்தது. இப்படியாவது எனக்கு முதல்முறையல்ல. முன்பொரு முறையும் இதே போல் வண்டி நின்று உதவியிருக்கிறான். என்னத்துக்கோ வீட்டில் ஒரு கேனில் 5 லிட்டர் பெட்ரோல் வைத்திருப்பான். கொஞ்சம் கறாராய், முன் ஜாக்கிரதையாய் வாழ்பவன்.

“மச்சி சொல்லுடா”

”வீட்லதான் இருக்கியா? கேஸ் தீர்ந்து போச்சு வெளீல. வெச்சுருக்கியா?”

“அடப்பாவி மறுபடியுமா? ஒரு 2 லிட்டர் இருக்கும். எங்க இருக்க?”

“சிவசத்தியநாராயணா கிட்டக்க. டாம்கன் ரோடு பாலத்துக்கு கொஞ்சம் முந்தி”

“சிவா டெம்பிளா? அங்கதான் கெளம்பிட்டிருக்கோம்”

”ஓ எப்போ வர்ற?”

”சித்ரா குழந்தைகளை கிளப்பிட்டிருக்கா. அங்கயே இரு ஸ்ரீ. ஒரு 15 மினிட்ஸ்குள்ள வந்துருவேன். பரவாயில்லைல?”

”மச்சி கொஞ்சம் சீக்கிரம் வாடா”

சற்று உயிர் வந்தது. பிரச்சனைகளுக்கு அருகிலேயே தீர்வுகளும் ஒளிந்திருக்கிறன.

ஆனால் தீர்வுகளுக்கு நம்மை முடிந்தவரை சோதிக்க பிடிக்கும் போலும்.

வண்டியை மொத்தமாய் அணைத்திருந்த படியால் மெல்ல உள்ளே குளிர் ஊடுருவ தொடங்கியிருந்தது. குளிரில் 15 வருடம் இருந்து பழகிப்பழகி குளிரை அலட்சியப்படுத்த தொடங்கியிருந்தேன். கோவிலில் எளிதாய் கழட்டுவதற்கு தோதான தேசலான ஷூவை போட்டுக்கொண்டு வந்தது பிசகு. முதலில் கால்விரல்கள் விறைக்கத் தொடங்கின. உஷ்ணம் வேண்டி ஷூவுக்குள் கால்விரல்களை உராய்ந்தேன். பொதுவாய் இதுபோன்ற குளிர்கால காத்திருத்தலில் ஒன்றுக்கு வேறு வந்துவிடும். இன்று பரவாயில்லை.. இல்லை அதை யோசிக்கக்கூடாது. யோசித்தால் வந்துவிடும். ஆமாம், அதெப்படி யோசித்தால் வந்துவிடுகிறது? ஷுகர் ஏதும் இருக்குமோ?

டேய்..வந்து தொலைடா சீக்கிரம்.

சொன்ன 15 நிமிடங்கள் ஆகியிருந்தது. அலைபேசியின் கடிகாரத்தை பார்த்துக்கொண்டே இருந்தது மனதும், கண்ணும். மனம் பதினைந்தாவது நிமிட முடிவில் ஒரு தீர்வை எதிர்பார்த்திருந்தபடியால், அதற்கு மேல் தாங்கமுடியாது பரபரக்க தொடங்கியிருந்தது. குளிர் தாங்கமுடியாது போய்க்கொண்டிருந்தது. உடம்பை குறுக்கிக்கொண்டேன்.

டேய்..வந்து தொலைடா சீக்கிரம்.

வெளியே -18 டிகிரி செல்ஷியஸ் காட்டியது அலைபேசி. -18 டிகிரி செல்சியஸ் என்றால் 0 டிகிரி ஃபேரன்ஹீட் வருமே? F = 9/5C + 32, C = (F-32)5/9 இந்த இரு ஃபார்முலாக்களும் மறப்பதேயில்லை ஏனோ.

டேய்..வந்து தொலைடா சீக்கிரம்.

இருபத்தைந்து நிமிடங்கள் ஆகியிருந்தது. ஜாக்கெட்டில் இருந்த தலையை மூடும் ‘ஹூடி’யை இழுத்துவிட்டுக்கொண்டேன். குளிர் தாங்கமுடியாது போய்க்கொண்டிருந்தது. க்ளவ்ஸை தாண்டி கைவிரல்கள் குளிரில் வலிக்கத்துவங்கியிருந்தன. உடல் தானாய் நாய் மேல் தண்ணீர் பட்டவுடன் சிலிர்த்துக்கொள்வது போல் சீரான இடைவெளியில் சிலிர்த்து அடங்கியது. எதிர்வழியில் வரும் ஒவ்வொரு காரின் ஒரு நொடி வெளிச்சத்திலும் கணேஷின் காரை கண்கள் தேடியது.

டேய்..வந்து தொலைடா சீக்கிரம்.

வீட்டிற்கு போனவுடன் அனு என்ன சொல்வாள்? அவளிடம் சொல்லலாமா? சொல்லாது இருக்கமுடியுமா என்ன? கோவிலில் எத்தனை நேரம் இருப்பேன், வால்மார்ட்டில் எப்போது இருப்பேன் எல்லாம் ஒரு கணக்கில் வைத்திருப்பாள். அவளிடம் எதுவும் மறைக்க முடிவதில்லை வரவர. மனதில் நினைப்பதை கூட சொல்லிவிடுகிறாள்.

”அப்பவே சொன்னேன், ஸ்னோல போகாதன்னு”

“அப்பவே சொன்னேன் ஒழியுது 70 டாலருக்கு ரோட்சைட் சர்வீஸ் வாங்குன்னு”

“அப்பவே சொன்னேன் கேஸ் போட்டுக்கோன்னு”

”அப்பவே சொன்னேன்..”

அவள் திட்டினால் கூட பரவாயில்லை. சனியன் வீட்டுக்கு போகவேண்டும். இங்கேயே உறைந்து சாவதற்கு அது பரவாயில்லை. எவனோ ஒரு சைனீஸ்காரன் குடும்பத்துக்காக ஒரேகானில் 3 நாட்கள் குளிரில் அலைந்து செத்தானே? இப்போது மூக்கில், உதட்டில் இருக்கும் ஈரப்பதமும் உறைய ஆரம்பித்திருந்தது. மூக்கை உறிஞ்சினால் ஐஸ் கெட்டித்துப் போய் கர்கர்ரென ஒலி வந்தது. உடல் தனக்கு தேவை வேப்பம், அதை எப்படியாவது கொணர் என சமிக்ஞையாய் சொல்கிறது.

டேய்..வந்து தொலைடா சீக்கிரம்.

எதிர்பக்க சாலையில் ஒரு கார் வந்து நின்றது. கணேஷ் தலை தெரிந்தது. வெகுவேகமாய் இறங்கினேன். வெளியில் காற்றோடு சேர்த்து இன்னும் ஏகத்துக்கு குளிர்ந்தது. சாலையை கடந்து அவன் காரை அடைந்தேன். அவனும் இறங்கி காரின் ட்ரன்க்கை திறந்திருந்தான். ஒரு கேனை எடுத்து நீட்டினான்.

“மச்சி, 2 லிட்டர் இருக்கும்னு நினைக்கிறேன். இனி நீ பார்த்துப்பல்ல? இல்ல இருக்கனுமா?”

உள்ளிருந்து சிறிய வெளிச்சத்தில் சித்ரா புன்னகைக்க முற்பட்டாள். குழந்தைகள் கார் நின்றது தெரியாது விழித்தன. அவர்களை இதற்குமேல் படுத்தக்கூடாது.

“இல்ல பார்த்துப்பேன். நீ கெளம்புடா. ரொம்ப தேன்க்ஸ்”

அதற்குப்பின் ரோட்டை கடந்து, என் காரின் டேன்க்கை திறந்து, கேனில் இருந்த பெட்ரோலை கொட்டி, டேன்க்கை மூடி, காரை உயிர்ப்பித்தது கனவு போலவே நிகழ்ந்தது. ’இர்றா, வழிய வழிய உனக்கு ஊத்தறேன்’ என கறுவிக்கொண்டே பெட்ரோகனடாவுக்கு வந்து, மேல் பத்திகளில் பிரசித்திப்பெற்ற 3 பைசா சேமிப்பு அட்டையை தேய்த்தால் ஸ்க்ரீன் கிறீச்சிட்டு உள்ளே கடையில் ஆளை பாரு என்றது. 

இத்தனை கஷ்டப்பட்டதுக்கு அந்த 3 பைசாவை விடுவதாயில்லை. ‘பே இன்சைட்’ தேர்வு செய்து காரின் பெட்ரோல் டான்க்கை திறந்து, அதன் வாயில் பம்ப்பை திணித்தேன். கையில் பம்ப்பை இறுகப்பிடித்திருந்த ஒவ்வொரு நொடியும் குளிரில் கை விறைத்தது. அதை உணராது வண்டி அதன் பாட்டுக்கு 1,2 என மெல்ல 55 லிட்டரை நிதானமாய் குடித்து, நிரம்பியவுடன்  ஏப்பம் போல் ஒரு சிறு ஒலியோடு குடிப்பதை நிறுத்திக்கொண்டது. டான்க்கை மூடி பன்க்குக்கு நடுவாந்திரமாய் இருந்த சிறுபொட்டிக்கடைக்கு வேகமாய் குளிரில் நடந்தேன். 

“பெட்ரோகனடா கார்டு ஆகலை வொர்க்” 

கோர்வையாய் பேசமுடியவில்லை. குளிரில் உடல் சிலிர்த்து சிலிர்த்து அடங்கியது. 

”ஆமா ப்ராப்ளம் இருக்கு. ஆனா உள்ள வேலை செய்யும். நம்பர் 7 தானே? பிரச்சனையில்ல. இங்க பே பண்ணிடுங்க”

தெளிவான ஆங்கிலத்தில் சொன்னான் கடையில் இருந்தவன்.

சரியென வெளியேற எத்தனித்தேன். கிளவுஸ்க்குள்ளேயும் விரல்கள் விறைத்து கதவை திறக்க சிரமப்பட்டேன்.

”இருங்க. அந்த vent கீழ நில்லுங்க ஒரு நிமிஷம்”

”என்ன?”

“இல்ல சூடா காத்து வரும் அதுக்கு கீழே”

கடையில் இருந்தவனை இப்போதுதான் முழுதாய் பார்த்தேன். வட இந்தியனா, பாகிஸ்தானியா என சொல்லமுடியாத ஒரு தெற்காசியன். இளைஞனாக இருந்தான். இங்கு படிக்கிறான் போலும்.

“கைய தூக்கி அந்த வெண்ட் கிட்ட காட்டுங்க. இன்னும் பெட்டர்”

“இல்ல வெளில கொஞ்சநேரத்துக்கு குளிர்ல இருந்தேன். அதான் தாங்கமுடியலை”

புன்னகைத்து “ரிலாக்ஸ் மை ஃப்ரெண்ட்” என்றான்.

சொன்னதுபோல் கையில் நேரடியாய் உஷ்ணக்காற்று பட்டவுடன் அதற்காகவே காத்திருந்தாற்போல் விரல்கள் தன்னிச்சையாக விரிந்து சூட்டை வாங்கிக்கொண்டது.

”குளிர் இப்போ பரவால்லியா” ஹிந்தியில் கேட்டான்.

“ரொம்ப. உயிரே வந்தது போல இருக்கு” என்றேன் புன்னகைத்தபடி.

இப்போது உரையாடல் அறுபட்டு ஒரு அடர்த்தியான மௌனம் நிலவியது. அதற்கு மேல் ஒரு பெட்ரோல் கடைக்காரனிடம் என்ன பேச? க்ரெடிட்கார்ட் மிஷினின் சிறுசத்தம் கூட பெரிதாய் கேட்டது. பெட்ரோலுக்கு காசு தந்து கிளம்ப எத்தனித்தேன்.

“இப்போ என் ஷிஃப்ட் முடியற நேரம்” என மௌனத்தை கலைத்தான்.

இதை எதற்கு என்னிடம் சொல்கிறான் எனத் தெரியவில்லை.

“என்ன?”

“இல்ல என் ஷிஃப்ட் முடியற நேரம். இனிமே கடை இருக்காது. வெளில கேஸ் ஸ்டேஷன் மட்டுந்தான்”

“நல்லது குளிருக்கு இதமாய் வீட்டுக்கு போய் தூங்கு” சின்னதாய் சிரித்தேன்.

“உடனே எங்க போறது? வெளில குப்பையை மூட்டைக்கட்டி, சாமானை உள்ள வெச்சுட்டு, கொஞ்சம் ஸ்னோ க்ளியர் செஞ்சு, பஸ்சை பிடிச்சு…” என்னோடு பேசிக்கொண்டே வெளியே வந்தான்.

“ஹ்ம்ம்..சரி பார்ப்போம்” என என் காருக்கு நடந்தேன். 

வெளியில் விற்பனைக்கு அடுக்கியிருந்த இஞ்சின் ஆயில் கேன்களை ஒவ்வொன்றாய் கடைக்குள்ளே கொண்டு போக தொடங்கினான். விழுந்திருந்த பனியை காற்று புழுதி போல பறக்கவிட்டுக்கொண்டிருந்தது. காற்றின் வேகத்துக்கு கடையின் கண்ணாடி கதவை அவன் அழுத்தி திறக்கவேண்டியிருந்தது ஒவ்வொரு முறைக்கும். திறந்த வேகத்தில் அவன் கேனோடு உள்ளே நுழைவதற்குள் காற்றில் படார் என சாத்திக்கொண்டது

அவனை நோக்கி நடந்தேன்.

அவனோடு நானும் சில இஞ்சின் ஆயில் கேன்களை எடுத்து உள்ளே வைக்க ஆரம்பித்தேன்.

குளிர் இப்போது அவ்வளவாக தெரியவில்லை.

++++++++++


(ஜனவரி மாத ‘தமிழ்’ மின்னிதழில் வெளிவந்த என் சிறுகதை இது)


5 comments:

  1. ”எவனோ ஒரு சைனீஸ்காரன் குடும்பத்துக்காக ஒரேகானில் 3 நாட்கள் குளிரில் அலைந்து செத்தானே?” என சொல்லியிருப்பது இந்த செய்தியே - http://news.cnet.com/James-Kim-found-deceased/2100-1028_3-6141498.html

    ReplyDelete
  2. அருமை.. கிட்டத்தட்ட இதே மாதிரி - கார் மக்கர், மனைவி திட்டுவது, அறிமுகமற்றோர் உதவி - நடந்திருக்கிறது. பல நல்ல உள்ளங்கள் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள் என்று அறிந்துகொள்ளும் தருணங்கள் இவை. எதையும் (நன்றி கூட) எதிர்பார்க்காமல் உதவக் கற்றுக்கொள்ள வேண்டும் (இன்னும் இல்லை) என்று உணர்ந்த தருணங்களும் இவையே. தொடர்ந்து எழுதுங்கள் நண்பா..

    ReplyDelete
  3. அருமை... கூடவே பயணிக்க வைக்கும் எழுத்து....
    வாழ்த்துக்கள்... :)

    ReplyDelete
  4. அப்பவே படிச்சு இருந்தாலும், இப்பவும் ஒருமுறை வாசிச்சேன். நடை அப்படியே ஸல்லுன்னு வழுக்கிட்டுப்போகுது பனிச்சறுக்கு போல!

    இங்கே எங்க நகரில்தான் ஒரே ஒரு கோவில். அங்கேயே சிவன்,பார்வதி, புள்ளையார் ஒரு பக்கம், ராமர் சீதை ஹனுமன் (லக்ஸ் கிடையாது) இன்னொரு பக்கம். ராதையும் க்ருஷ்ணனும் ஒருபக்கமுமா, ஒரே மேடையில்! ஸ்வாமிநாராயண் கோவில். இதாவது இருக்கேன்னுதான். சரி. கோவிலுக்குப் போயிட்டு வர்றேன்:-)

    ReplyDelete

பிடித்தால் சொல்லுங்கள்..பிடிக்காட்டியும் சொல்லுங்கள்..;)